மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா
அன்புடனே அணைத்திடுதல் அனைவருக்கு மவசியம்
முகமலர வைத்திடுதல் முழுவாழ்வி னவசியம்
இவை மனதிலிருத்திடல் என்றுமே அவசியம்
வாழ்நாளைக் கணிப்பதற்கு வழியின்னும் பிறக்கவில்லை
வாழ்நாளைக் கூட்டுதற்கும் வழிவகைகள் தெரியவில்லை
வாழ்கின்ற நாளினிலே மனமுடையச் செய்யாமல்
வாழ்கின்ற நாள்வரைக்கும் வாழ்த்தியே மகிழ்ந்திடுவோம்
வாழ்நாளில் பண்டிகைகள் வந்தபடி இருக்கிறது
வரவேற்று மகிழ்ந்திடவே மனமெல்லாம் துடிக்கிறது
சூழ்நிலைகள் மகிழ்வதனை துண்டாட முயல்கிறது
துவழாத மனநிலையை எழுந்துவிடச் செய்திடுவோம்
தொலைக்காட்சி பத்திரிகை தொலைதூரச் செய்தியெலாம்
வலையாகி சிந்தனையை வதைத்தபடி இருக்கிறது
காலநிலை மாறுபட்டு நோயதனைப் பெருக்கிறது
பிரிவுபடல் வேற்றுமைகள் பெருகிவிடப் பார்க்கிறது
முன்னுரைத்த பெரியோர்கள் கருத்துக்களை மனமெண்ணி
முன்செல்ல நினைப்பதுதான் முக்கியமே எனநினைப்போம்
அனுபவத்தில் வந்தவர்கள் உரைத்தமொழி அத்தனையும்
அனைவர்க்கும் கைகொடுக்கும் அருமருந்து ஆகுமன்றோ
அவருரைத்த கருத்துக்களை அகமிருத்தி வாழ்ந்திட்டால்
ஆறுதலும் தேறுதலும் அகவாழ்வில் அமைந்திடுமே
1 comment:
அருமையான கவிதை.வாசிக்கும் போது மனம் மகிழ்கிறது.வாழ்த்துகள்.அழகான கவிதைக்கு,மலர்ந்த புத்தாண்டுக்கும் உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.நன்றி.
Post a Comment