எழுத்தும் வாழ்க்கையும் அங்கம் 75 வணங்கச்சென்றவிடத்தில் குறுக்கே வந்த தெய்வம் ! தாயகத்திலிருந்து விடைபெற்ற அந்தக்கணங்கள் !! முருகபூபதி

.

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

எழுத்தாளர் முருகபூபதி அவர்களின் எழுத்தும் வாழ்க்கையும் அங்கம் 75 இந்த வாரம் பிரசுரமாகின்றது.  தொடர்ந்து 75 வாரங்களாக எழுதிக்கொண்டிருக்கும் திரு முருகபூபதி அவர்களை தமிழ் முரசு ஆஸ்திரேலியாவின் சார்பிலும் தமிழ்முரசு ஆஸ்திரேலியா வாசகர்கள் சார்பிலும் வாழ்த்துகின்றோம். மெல்பேர்ண் நகரில் வசித்துக் கொண்டிருக்கின்ற எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் எத்தனையோ சிறுகதைகளையும், நாவல்களையும் விமர்சனகளையும் எழுதியவர் உலகப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் போன்றவைகளுக்கு எழுதிக் கொண்டிருக்கும் ஒரு மூத்த எழுத்தாளர். தொடர்ச்சியாக எழுத்துப்பணி இவரது வாழ்க்கையாக கொண்டிருக்கின்ற ஒரு எழுத்தாளர். தமிழ்முரசு ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து எழுத்தாளராக இருக்கின்ற திரு முருக பூபதி அவர்களுக்கு இந்த நேரத்தில் நாம் நன்றிகளை கூற விரும்புகின்றோம். இந்த நாட்டிலே முன்னெடுக்கப்பட்டு தமிழர்களுக்காக வாரம்தோறும் ஒரு பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ் முரசை ஊக்குவிக்க வேண்டும், தான் அறிந்ததையும் தனக்கு தெரிந்த வற்றையும் மக்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற நல்லெண்ணம் கொண்ட இவர் தமிழ்முரசு அவுஸ்திரேலியா விற்காக கடந்த 12 வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறார் இந்த எழுத்து ஊழியனின் எழுத்து சேவையை நாங்கள் மட்டுமல்ல அவுஸ்திரேலிய வாழ் தமிழர்கள் நிச்சயமாக பாராட்டியாக வேண்டும் இந்த 75ஆவது அங்கத்திலே அவரை பாராட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். நீடூழி வாழ வேண்டும் தொடர்ந்தும் தமிழ்ப் பணியாற்ற வேண்டும் என்று வாழ்த்துகின்றோம் .

ஆசிரியர் குழு


வீரகேசரியில் பணி முடிந்து, ஆமர்வீதி சந்தியில் பஸ் ஏறி,நீர்கொழும்புக்குத் திரும்புவதற்கு சுமார் ஒரு மணிநேரம்போதும்.  சிலாபம், புத்தளம்,  குளியாப்பிட்டி, செல்லும் பஸ்களில் தொற்றி ஏறிவிட்டால்தான் இது சாத்தியம்.

ஆமர் வீதியும் மகா வித்தியாலய மாவத்தை என்ற முன்னர் பாபர் வீதி என அழைக்கப்பட்ட வீதியும் இணையும் நாற்சந்தியைப்பற்றி அறிந்திருப்பீர்கள்.

அங்கிருக்கும் வீதிப்போக்குவரத்திற்கு வழிகாட்டும் சமிக்ஞை விளக்கில் சிவப்பு ஔிரும்போது , அத்தருணம் அவ்விடத்திற்கு புறக்கோட்டையிலிருந்து வந்து மெதுவாகத்  தரிக்கும் எங்கள் ஊர் பாதையில் செல்லும் பஸ் ஏதாவது ஒன்றில் தொற்றி ஏறிக்கொள்வேன்.

அவ்வாறு ஏறிச்செல்வதற்கு சாமர்த்தியம் வேண்டும்.  அந்தப்பழக்கத்தினால் வந்த வழக்கம்  1987 ஜனவரி 31 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்தது.

சுமார் ஒரு மணி நேரத்தில் நான் நீர்கொழும்பு பஸ் நிலையத்தில் வந்திறங்கியிருந்தாலும், வீடு சென்றடைய இரண்டு மணிநேரம் பிடிக்கும்.

இடையில் கடைத்தெரு வீதியில் சில முதலாளிமார் எனக்காக காத்திருப்பார்கள். அவர்கள் என்னிடமிருந்து மறுநாள் வீரகேசரியில் வெளிவரவிருக்கும் செய்திகளை சுடச்சுடக் கறந்துவிட வேண்டும் என்பதற்கான காத்திருப்புத்தான் அது.


பிரதான கடைவீதியில் பவாணி விளாஸ் உரிமையாளர், என்னை அழைத்து தேநீரும் தந்து உபசரித்து புதினம் கேட்பார். இடையில் பல நண்பர்கள், அன்பர்கள் எதிர்ப்படுவர்.  நின்று செய்தி கேட்பார்கள். அங்கிருந்து அஸரப்பா வீதியால் நடந்து கடற்கரை வீதிக்கு வந்தால், - அந்த வீதியில்தான் தமிழ்மக்கள் செறிந்து வாழ்கிறார்கள் – அங்கும் சிலர் எதிர்ப்பட்டு பேசத் தொடங்குவர்.

மூன்று கோயில்கள்,  பிரபல்யமான கல்லூரி, இந்து இளைஞர் மன்றம், சில சுருட்டுக்கைத்தொழில் நிறுவனங்கள் இந்த வீதியில் இருப்பதனால், அங்குள்ள அனைவரும் எனக்கு நன்கு தெரிந்தவர்களே.  அவர்கள் எதிர்ப்பட்டு புதினம் கேட்டுவிட்டு நகருவார்கள்.  இதனால் எனக்கு எனது குடும்பத்தில் சில பட்டப்பெயர்களும் சூட்டப்பட்டன.

1960 களில் எங்கள் ஊரில் மாடு பூட்டப்பட்ட வண்டிலில் குடி தண்ணீரும் வந்தது. மண்ணெண்ணையும் வந்தது.  அவை வீட்டுக்கு வீடு தரித்து நிற்கும். அவ்வாறு நானும் வேலை முடிந்து வீடு திரும்புகையில் தரித்து தரித்து வருவதனால், என்னையும் அந்த வண்டிகளுடன் ஒப்பிட்டு பேசிச்சிரிப்பார்கள்.

கடற்கரை வீதியில்  ஒரு அழகிய நாற்சார்வீட்டுக்குச் சொந்தக்காரரான இராஜரட்ணம் அவர்கள், எங்கள் ஊர் இந்து இளைஞர் மன்றத்திலும் அங்கம் வகித்தவர்.  அவர் சிறந்த கரப்பந்தாட்ட வீரருமாவார். அவரது துணைவியர் கணேஸ்வரி அவர்கள் எங்கள் ஊர் மகளிர் மன்றத்தில் இணைந்திருந்தவர். எமது இந்து இளைஞர் மன்றம் வருடாந்தம் வரும் தமிழ் – இந்து பண்டிகைகளின்போது, நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகளுக்கும் சிற்றுண்டிகள் எடுத்துச்சென்று வழங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமாகவும் இயங்கியது. இந்தப்பணிகளில் இராஜரட்ணம் தம்பதியரும் எம்மோடு இணைந்திருந்தனர்.

1972 காலப்பகுதியில் மாவை சேனாதிராசா, முத்துக்குமாரசாமி,


மண்டுர் மகேந்திரன், ஆகியோர் உட்பட   பல தமிழ் இளைஞர்கள் நீர்கொழும்பு சிறையிலிருந்தனர். அத்துடன் அந்நியசெலாவணி மோசடிக் குற்றச்சாட்டில் கைதாகியிருந்த பிரபல வர்த்தகர் பகவன்தாஸ்  ஹைதராமணியும் அங்கிருந்தார்.

சிறைச்சாலையில் ஒரு கிருஷ்ணர் கோயிலும் இருக்கிறது.  அந்தக்கோயிலில் பண்டிகை காலங்களில் எமது மன்றம் ஐயரை அழைத்துச்சென்று பூசையும் நடத்தி தமிழ்க்கைதிகளுக்கு சிற்றுண்டி பிரசாதங்களும் வழங்குவோம். அதனை எமது ஊரின் தமிழ் முன்னோர்கள் அமைத்தனர்.  சாமிசாத்திரியார் என்ற பெரியவர், அக்காலப்பகுதியில் சிறைச்சாலைக்குச்சென்று கைதிகளுக்கு நற்போதனைகள் வழங்குவார்.

அவர் 1950 களில் மன்றத்தின் ஊடாக ஏற்படுத்திய அந்த நல்லுறவு  இன்றளவும் தொடருகிறது. இந்தச்சிறைச்சாலை பற்றி எனது சொல்ல மறந்த கதைகள் நூலில் ஏற்கனவே விரிவாக எழுதியுள்ளேன்.

இராஜரட்ணம் அவர்கள் நீர்கொழும்பில் கடற்றொழில் இலாகாவில் பணியாற்றியவர்.  காங்கேசன்துறையைச்சேர்ந்த அவருக்கு அரசியலும் தெரியும்.  தந்தை செல்வநாயகம் மற்றும்  அவரை எதிர்த்து ஒரு இடைத்தேர்தலில் போட்டியிட்ட தோழர் வி. பொன்னம்பலத்தையும் தெரியும். அவர் தமது நாற்சார் வீட்டு வாசலில் தினமும் எனக்காக காத்து நிற்பார்.


அவருக்கு நாளையதினம் வெளிவரவுள்ள செய்திகளை சொல்லத் தொடங்கினால், அவர் தனது அரசியல் விமர்சனங்களையும் முன்வைப்பார்.  நமது  ஈழத் தமிழர்கள் அரசியல் பேசுவதில் தனித்தன்மை கொண்டவர்கள்.

இராஜரட்ணம் தம்பதியருக்கு பிறந்த அனைவரும் ஆண் பிள்ளைகள். அதனால், பஞ்சபாண்டவர் குடும்பம் என்று ஒரு பெயர் அங்கு உலாவியது.  அவர்களில் ரஞ்சன் என்ற வைத்தியநாதனை தவிர ஏனையோர் 1980 காலப்பகுதியில் வெளிநாடுகளுக்கு தொழில் – கல்வி முதலான காரணங்களினால் புலம்பெயர்ந்து சென்றுவிட்டனர்.

வைத்தியநாதன் இலங்கை கடற்படையில் சேவையாற்றிவிட்டு,  நீர்கொழும்பிற்கு வரும் வெளிநாட்டு உல்லாசப்பயணிகளின் தேவை கருதி அவர்களின் சுற்றுலாக்களுக்கு உதவும் வேலைகளில் ஈடுப்பட்டார்.  அவரும் ஒரு கட்டத்தில் திருமணமாகி அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டார்.

இவர்தான் தற்போது மெல்பன் ரொக்பேங்கில் எழுந்தருளியிருக்கும் குன்றத்து குமரன் ஆலயத்தின் ஸ்தாபகர் .  மற்றவர்  இவரது தம்பி , மெல்பனில் வதியும் சமூகப்பணியாளர் சிவநாதன்.  இவர் இங்கிலந்துக்கு மேற்கல்விக்காக சென்று, அங்கிருந்து அவுஸ்திரேலியா வந்து மெல்பன் வாசியாகியிருந்தார்.

ஏனைய மூன்று பிள்ளைகளும்  ஏற்கனவே வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டிருந்தனர்.

பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்ட, இராஜரட்ணம்


தம்பதியர் எங்கள் ஊரில் இந்து இளைஞர் மன்றம் , இந்து மகளிர் மன்றம் முதலானவற்றின் சமூகப்பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டனர்.

தினமும் என்னை மாலை வேளையில் தனது வீட்டு வாசலில் தரித்து நிறுத்தி,  புதினம் கேட்கும் அன்பர் இராஜரட்ணம் அவர்களுக்கு 1987 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி காலையில் ஒரு அதிர்ச்சியை தந்தேன்.

அன்று மதியம் நான் நாட்டை விட்டுப்புறப்படும் நேரம் நெருங்கிவிட்டது.   அந்நாட்களில் தினமும் அழுதுகொண்டிருந்த எனது அம்மா, அன்றைய தினம் காலை எழுந்ததும், சுவாமி அறையில் வணங்கிவிட்டு வந்து எனக்கும் திருநீறு பூசி ஆசிர்வதித்துவிட்டு,  “ தம்பி, போவதற்கு முன்னர், மூன்று கோயில்களுக்கும் போய்வா  “ என்று அனுப்பினார்கள். கையில் மூன்று தேங்காய்களும் தந்து அனுப்பினார்கள்.

வெளியூர் பயணங்கள், வெளிநாட்டுப்பயணங்கள் வரும்போது அம்மா சொல்லும் இந்தக்கட்டளையை எங்கள் குடும்பத்தில் அன்று  எவரும் மீறமாட்டோம்.


இந்தத் தேங்காய் அடிக்கும் சமய மரபு பற்றியும், தேங்காய் மகத்மியம் என்ற எனது கட்டுரையில் ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். ( பார்க்க: சொல்லத்தவறிய கதைகள் நூல் )

அன்றைய தினம் நான் தேங்காயுடன் சென்ற முதலாவது இடம் அம்மன்கோயில் .  காலை எட்டு மணியிருக்கும். இராஜரட்ணம் அய்யா தனது சைக்கிளில் வந்து எதிர்ப்பட்டார்.

 “ என்ன தம்பி… இன்று வேலைக்குப் போகவில்லையா..? 

 “ இல்லை அய்யா…இன்று அவுஸ்திரேலியாவுக்கு புறப்படுகிறேன்.  

 “ அப்படியா…? அங்கும் ஏதும் மகாநாடா..? 

அவருக்கு 1985 இல் நான் சோவியத் சென்று திரும்பியது தெரியும்.

 “ இல்லை அய்யா, வேலையை விட்டுவிட்டுத்தான் போகிறேன்.  இனி என்ன நடக்குமோ தெரியவில்லை  “ என்றேன்.

 “ எங்கே சிட்னியா, மெல்பனா…?       எனக்கேட்டார்.

 “ மெல்பன் அய்யா 

 “ நல்லது. கோயிலைக் கும்பிட்டுவிட்டு வாரும்.  எனது மகன்மார்


ரஞ்சன், சிவா எல்லோரும் மெல்பனில்தான் இருக்கிறார்கள். நான் வீட்டுக்குப்போகின்றேன். ஒருக்கால் வந்துவிட்டுப்போம். ரஞ்சனின் அட்ரஸ், போண் நம்பர் தருகின்றேன்  “ என்றார்.

நான் கும்பிடச்சென்றது அம்மனை. ஆனால், குறுக்கே வந்தது இராஜரத்தினம் என்ற நல்ல உள்ளம்.  அவர் ஏன் அன்று அந்த இடத்தில் என்னை சந்திக்கவேண்டும்…?  அவ்வாறு சந்தித்திருந்தாலும், எதற்காக என்னை தனது வீட்டுக்கு அழைக்கவேண்டும்…?

எனக்கான விதி இவ்வாறுதான் பல சந்தர்ப்பங்களில் எழுதப்பட்டுவருகிறது.

திரும்பிவரும்போது அம்மா தந்துவிட்ட இதர தேங்காய்களையும் முறையே பிள்ளையார் கோயில், காளி கோயில் முன்றல்களில் அடித்து வணங்கவிட்டு, இராஜரட்ணம் தம்பதியரின் அந்த நாற்சார் வீட்டுக்கு வருகின்றேன்.

அவர்கள் இருவரும் இன்முகத்துடன் என்னை வரவேற்றனர். திருமதி கணேஸ்வரி இராஜரட்ணம் அம்மையார் எனக்கு தேநீர் தந்து உபசரித்துவிட்டு, தனது கையாலேயே தமது மகன் ரஞ்சன் என்ற வைத்தியநாதனின் முகவரியையும் தொலைபேசி இலக்கங்களையும் எழுதித்தந்தார்.

எனது புகலிட வாழ்வில் இவர்களை நான் மறக்கவே முடியாது.  அதுபற்றி இனிவரவிருக்கும் எனது இந்த எழுத்தும் வாழ்க்கையும் தொடரின் இரண்டாம் பாகத்தில் மேலும் எழுதுவேன்.

 “ இவருக்கு இனி நாட்டுப்புதினங்களை யார் வந்து சொல்லப் போகிறார்கள். ரேடியோ, ரெலிவிஷன் செய்திகளை இனிக்கேட்கவேண்டியதுதான்  “ என்றார் அம்மையார்.

   தம்பி நீர் எடுத்த முடிவு சரியானது.  இனிமேல் இங்கே நிலைமை மோசமாகலாம்.  எங்களையும் பிள்ளைகள் அழைக்கிறார்கள். இந்த வீட்டை என்ன செய்வது என்பதுதான் தெரியவில்லை.  பார்ப்போம். முன்னர் ஊரில் இருந்தோம். பின்னர் இடமாற்றம் கிடைத்து,  இந்த ஊருக்கு வந்து நிரந்தரமானோம். அடுத்து வேறு எங்காவது போகவேண்டியிருந்தால், போகத்தானே வேண்டும்.    இராஜரட்ணம் அய்யா தனது இடப்பெயர்வுகள்  பற்றிச் சொன்னார்.

வேர்பிடித்து வாழ்ந்த மரங்களும் தாவரங்களும், பிறிதோர் நிலத்தை நோக்கி, பலவந்தமாக பிடுங்கி எடுத்துவரப்பட்டு, நடப்படும்போது, குறிப்பிட்ட புதிய தரையின் சுவாத்தியம் எவ்வாறிருக்கும் எனத் தெரியாது!

அந்த நிலத்திற்கேற்றவாறு  இசைவாக்கம் பெற்று, தழைத்து வளர்ந்து பயன்தரும் மரங்கள், தாவரங்களையும் பார்த்திருக்கின்றோம். அதே சமயம்,  சுவாத்தியம்,  மண்ணின் தன்மையின் வேறுபாடுகளினால் பட்டுப்போன – செத்துப்போன மரங்கள் – தாவரங்களையும் பார்த்திருப்போம்.

மனிதர்களும் விலக்கல்ல.  புகலிடம் வந்து செழிப்போடும் சமூகப்பயன்பாட்டோடும் வாழ்ந்தவர்களையும்,  மாற்றான் சொத்தை சீட்டுப்பிடித்தல் , வீடு கட்டுதல் முதலான செயல்களின் ஊடாக அபகரித்து சீரழிந்தவர்களையும்  சமூகவிரோதச்செயல்களை புரிந்து  தலைமறைவானவர்களையும்   பார்க்கின்றோம்.

பாடசாலையில் படிக்கின்ற காலத்தில்,  அவுஸ்திரேலியா குறித்து எனக்கு இரண்டு சித்திரங்கள்தான் மனதில் பதிவாகியிருந்தன. ஒன்று இங்கே ருசியான அப்பிள் பழம் கிடைக்கும். இரண்டாவது: இந்த நாடு கிரிக்கட் துறையில் மிகவும் பிரபல்யமானது.

நான் இந்த நாட்டுக்கு வந்து அப்பிள் பழத் தோட்டத்தில் பழம் பறிக்கப்போகின்றேனா..? அல்லது கிரிக்கட் மெட்ச் பார்க்கப்போகின்றேனா…?

அன்று வீடு திரும்பியதும்,  புறப்படுவதற்கு தயாரானேன்.  அக்கா, தங்கை, தம்பி குடும்பத்தினர் வீட்டில் நிறைந்துவிட்டனர்.

குழந்தைகளை விட்டுப்பிரியும் நேரம் வந்தபோது, மிகவும் சிரமப்பட்டு கண்ணீரை அடக்கினேன்.

முதல் நாளே வந்துவிட்ட நண்பர் ராஜஶ்ரீகாந்தன்,  “ பூபதி… இனித்தான் நீங்கள் தைரியமாக இருக்கவேண்டும்.  அங்கே சென்றதும் விரைவில் குடும்பத்தையும் அழைக்கப்பாரும்.  அடிக்கடி கடிதம் எழுதுங்கள். சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்துவிட்டீர்கள்.   “ என்று தேறுதல் சொன்னார்.

அக்காலப்பகுதியில் அவரது குடும்பத்தினர் வடமராட்சியில் வதிரியில் வசித்தனர். அங்கு போர் மேகம் சூழ்ந்திருந்தது . அவரும் தனது குழந்தைகளைப்பார்த்து பல மாதங்களாகியிருந்தது.

அரியாலைக் குஞ்சியம்மாவும்,     அவுஸ்திரேலியா நல்ல நாடு.  போய்ச்சேர்ந்ததும், கெதியா குடும்பத்தை அங்கே அழைக்கப்பாரும். அதுவரையில் இங்கிருந்து உமது குடும்பத்தை நானும் பார்த்துக்கொள்ளுவேன்  “ என்று ஆறுதல் சொன்னார்.

தினமும் காலையில் நான் தண்ணீர் அள்ளிக்குளிக்கும் கிணற்றை பார்க்கின்றேன்.  அது வற்றாத கிணறு. அருகில் பூவரசு மரமும் தென்னை மரமும் அதற்கு நிழல் பரப்பிக்கொண்டிருந்தன.

இனி அவற்றை எப்போது பார்க்கப்போகின்றேன். நான் செல்லவிருக்கும் நாட்டின் மாநிலத்தில்  கிணறும் பூவரசும், தென்னை மரமும் இருக்குமா..?

இங்கே என்னைச்சுற்றியிருக்கும் சொந்த பந்தங்கள், நண்பர்கள் வட்டத்தை அங்கே  காணமுடியுமா..?

செல்லும் நாட்டில் நிரந்தரமாக வாழநேரிட்டால்தான் இத்தகைய உறவுகளை அங்கே தேடமுடியுமோ..?!

ஒரு வாகனத்தில் எனது குடும்பத்தினர் என்னை வழியனுப்புவதற்கு விமான நிலையம் வந்தனர்.

மதியம் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து பேங்கொக்கை நோக்கிப்புறப்படும் தாய் ஏயார் வேய்ஸ் விமானத்தில் ஏறினேன்.

அந்த இராட்சதப்பறவை என்னையும் பல பயணிகளையும் சுமந்துகொண்டு  தாய்லாந்தை நோக்கிப்பறக்கத் தொடங்கியது.

நீர்கொழும்பு கடலை அது கடந்து பறக்கும்போது,  கரையில் வந்து  மோதும் அலைகள் பிரசவிக்கும் வெண்நுரையும் வானத்தின் வெண்மேகங்களும் கண்களுக்கு விருந்து படைத்தன.

எழுதி முடிக்கவேண்டிய கதாநாயகிகள் தொடர்கதையின் இறுதி அத்தியாயங்களை விமானத்திலிருந்து எழுதத் தொடங்கினேன்.

அந்த விமானத்தின்  பணிப்பெண்கள் சிலர் அருகே வந்து,  நான் விரைந்து எழுதும் லாவகத்தையும், எமது தமிழ் எழுத்தின் வரிவடிவங்களையும் ரசித்துப்பார்த்தனர்.

அருந்துவதற்கு பானங்களும், உண்பதற்கு உணவும் வந்தவேளைகளில் மாத்திரம் எழுதுவதை நிறுத்தினேன்.

அந்த விமானம் பேங்கொக்கை வந்தடையும்போது மாலையாகிவிட்டிருந்தது.  அங்கே இறங்கி, மறுநாள்  முற்பகல் மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத் தலைநகர் பேர்த்துக்கு செல்லும்  மற்றும் ஒரு விமானத்தில் நான் ஏறவேண்டும்.

அன்றைய இரவை பேங்கொக் விமானநிலையத்திலேயே கழித்தேன்.  கையிலிருந்து அமெரிக்கன் வெள்ளியை மாற்றினேன்.   வீட்டுக்கும்  கடிதம் எழுதி,  முற்றுப்பெற்ற கதாநாயகிகள் தொடர்கதையின் இறுதி அத்தியாயங்களையும்   தபால் நிலையத்தில் கடிதவுரையும் அஞ்சல் தலையும் வாங்கி வீட்டுக்கும் வீரகேசரிக்கும் அனுப்பினேன்.

ஒரு ஆசனத்தில் அமர்ந்து கண்ணயர்ந்தபோது, ஒரு டாக்ஸி சாரதி வந்து தட்டி எழுப்பினான்.

வெளியே சென்று வரலாம். உங்கள் அடுத்த விமானத்திற்கு இன்னும் நேரம் இருக்கிறது. வெளியே பார்ப்பதற்கு பல இடங்கள் இருக்கின்றன. என்று சொல்லி கண்ணைச்சிமிட்டினான்.

எனக்கு அந்தக்கண்சிமிட்டல் புரிந்தது.

நான் மறுத்துவிட்டு,  கண்களை இறுக மூடிக்கொண்டேன்.  குடும்பமும் குழந்தைகளும்தான் மனக்கண்ணில் தோன்றினார்கள்.

நான் செல்லவிருக்கும் தேசத்திற்கு அவர்களும் வந்து சேர்ந்துவிடல் வேண்டும் என்று மனதிற்குள் பிரார்த்தித்தேன்.

( முதல் பாகம் முற்றிற்று )

1 comment:

Unknown said...

எனக்கு சில பாகங்கள்தான் வாசிக்கக் கிடைத்தது.இந்தப் பாகத்துடன் இலங்கை வாழ்வு முற்றுப் பெறுவதால் அவுஸதிரேலியாவிலிருந்து தொடங்கும் வாழ்வின் எழுத்துக்களை.ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.நன்றி.