பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - சவாலே சமாளி - ச. சுந்தரதாஸ் - பகுதி 25

.
பொன்விழா ஆண்டில் இந்த படங்கள்என்ற இந்தப் பதிவு சென்ற ஆண்டில் வந்திருக்க வேண்டிய பதிவாகும். சில தாமதங்கள் காரணமாக அதை இந்த வருட ஆரம்பத்தில் பகிர்ந்து கொள்கின்றோம். அதற்காக எழுத்தாளருக்கு தமிழ் முரசின் மனமார்ந்த வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
திரு சுந்தரதாஸ் அவர்கள் சிட்னியில் வசிக்கின்ற ஒரு எழுத்தாளர் கட்டுரைகள் படங்கள் பற்றிய பார்வைகள், சினிமா சம்பந்தமான விடயங்கள் என்று இங்கே இருந்து கொண்டு பல பத்திரிகைகளுக்கும் எழுதி வருகின்ற ஒருவர். நீண்ட காலமாக தமிழ் முரசு அவுஸ்திரேலியாவிற்கு தொடர்ந்து எழுதி வருகின்ற ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் என்ற தலைப்பிலே கடந்த இருபத்தைந்து வாரங்களாக தொடர்ச்சியாக எழுதி இருக்கின்றார். வெள்ளி விழா காணும் இந்த எழுத்துக்கும் அதை தருகின்ற சுந்தரதாஸ் அவர்களுக்கும் எங்களுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். ஒரு சிறு பத்தியை , விமர்சனத்தை அல்லது பார்வையை எழுதுவதற்கு நேரம் ஒதுக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்ற இந்த எந்திர உலகிலே இவர்களைப் போன்ற எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக தான் சார்ந்த சமூகத்திற்கு, தான் அறிந்ததை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்வதற்காக எழுதிக் கொண்டிருப்பது நம்மையெல்லாம் பெருமைப் படுத்துகின்றது. அவருக்கு தமிழ் முரசு சார்பிலும் தமிழ் முரசு வாசகர்கள் சார்பிலும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றோம்
ஆசிரியர் குழு


எந்த வேடத்தை கொடுத்தாலும் நடித்து தள்ளி விடக் கூடிய அசாத்திய திறமை கொண்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.இவருடைய 150வது படமாக 1971ல ் வெளிவந்த படம்தான் சவாலே சமாளி.மல்லியம் புரடக்சன்ஸ் சார்பில் மல்லியம் ராஜகோபால் இப் படத்துக்கு கதை வசனம் எழுதி தயாரித்து...
 
எந்த வேடத்தை கொடுத்தாலும் நடித்து தள்ளி விடக் கூடிய அசாத்திய திறமை கொண்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.இவருடைய 150வது படமாக 1971ல் வெளிவந்த படம்தான் சவாலே சமாளி.மல்லியம் புரடக்சன்ஸ் சார்பில் மல்லியம் ராஜகோபால் இப் படத்துக்கு கதை வசனம் எழுதி தயாரித்து இயக்கியும் இருந்தார்.நடிகை லட்சுமியை திரை உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கே உண்டு.பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பரான இவர் வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர்.சினிமா மீதான ஆசையால் கதாசிரியராக இவர் ஜீவனாம்சம் என்ற வெற்றி படத்தை உருவாக்கி லட்சுமியை திரை உலகிற்கு அறிமுகம் செய்தார்.பின்னர் லட்சுமி சிவகுமார் நடிப்பில் கஸ்தூரி திலகம் படத்தை இயக்கினார்.அதனைத் தொடர்ந்தே சிவாஜியின் 150வது படத்தை உருவாக்கும் வாய்ப்பு இவருக்கு கிட்டியது.கிடைத்த சந்தர்ப்பத்தை தவற விடவில்லை ராஜகோபால்.தன் திறமையை பயன் படுத்தி சவாலே சமாளி என்று படத்தை தயாரித்திருந்தார்.

படத்தின் கதை ஒன்றும் புதியதல்ல .ஏற்கெனவே எம் ஜி ஆர் நடித்து வெளிவந்த பெரிய இடத்துப் பெண் படத்தின் சாயலைக் கொண்ட பணக்கார ஆணவம் பிடித்த பெண்ணை கிராமத்து இளைஞன் அடக்கி ஆளும் கதைதான்.ஆனால் படத்தின் திரைக் கதையை அருமையாக அமைத்து அதற்கு ஏற்றாப் போல் கருத்துள்ள வசனங்களை எழுதி திறமையாக இயக்கி இருந்தார் ராஜகோபால். அது மட்டுமன்றி கதாப்பாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்ததிலும் அவரின் ஆற்றல் வெளிப்பட்டது.

கிராமத்து பண்ணையாருக்கு பணத்திமிர் பிடித்த சகுந்தலா என்ற மகளும் மூர்க்கனான ராஜவேலு என்ற மகனும் உள்ளனர்.பண்ணையாரிடமும் அவர் குடும்பத்திடமும் அடிமையாக சேவகம்செய்கிறார் அய்யாக்கண்ணு . அவரின் மகன் மாணிக்கமோ சுயமரியாதை உள்ளவன்.பண்ணையார் குடும்பத்துக்கு அடங்காதவன்.இதனால் சகுந்தலாவும் ராஜவேலுவும் அவனை பழிவாங்க துடிக்கிறார்கள்.ஆனால் மாணிக்கமோ தேர்தலில் பண்ணையாரை எதிர்த்து போட்டி இடுகிறான். தான் தோற்றால் தன மகள் சகுந்தலாவை மாணிக்கத்துக்கு திருமணம் செய்து வைப்பதாக சின்னப்ப பண்ணை சிங்காரத்தின் தூண்டுதலில் மக்கள் முன் ஒப்புக்கொள்கிறார் பண்ணையார் . தேர்தலில் மாணிக்கம் வெற்றி பெற நிலைமை சிக்கலாகிறது .


 
இப்படி அமையும் படத்தின் கதைவிறுவிறுப்பான காட்சிகள் மூலம் நகர்கிறது .அதற்கு வசனங்கள் அருமையாக துணை நிற்கின்றன.நடித்தவர்களோ பாத்திரமாகவே மாறிவிட்டார்கள் எனலாம்.

சிவாஜியின் முகபாவம் அதனோடு சேர்ந்து வரும் வசன லயம் பண்ணையார் குடும்பத்திடம் அவர் காட்டும் அலட்சியம் சகுந்தலாவிடம் தன் மனா உணர்வை வெளிப்படுத்தும் பாங்கு என்று படம் முழுதும் சிவாஜி பின்னி எடுத்திருந்தார்.அவருடன் படம் முழுதும் சண்டை போடும் சகுந்தலாவாக ஜெயலலிதா தன் பங்கை குறை இன்றி நிறைவேற்றி இருந்தார்.நம்பியார் என்றாலே வில்லன்தான்.இதில் அவருடைய கொடூரம் அதிகம்தான்.பண்ணையாராக வரும் டீ கே பகவதி அளவோடு நடிக்க அவர் மனைவியாக வரும் எஸ் வரலக்ஷ்மி பாந்தமாக நடித்திருந்தார் .பிற்காலத்தில் பிரபல நடிகையான காந்திமதிக்கு இந்த படத்தில் தான் முதல் தடவையாக அழுத்தமான வேடம் கிட்டியது.மாணிக்கத்தின் தாயக நடித்திருந்தார் அவர் அதே போல் பண்ணையாரிடம் அடங்கியும் மகனிடத்தில் மோதியும் பாசத்தையும் இயலாமையும் ஒருங்கே காட்டி இருந்தார் வி எஸ் ராகவன்.படத்தை நகர்த்த அச்சாணியாக வருகிறார் நாகேஷ்.தில்லானா மோகனாம்பாள் வைத்திக்கு பிறகு அவருக்கு கிடைத்த அருமையான வேடம் .அசத்தலாக நடித்திருந்தார் அவர்.இவர்களுடன் முத்துராமன்,விஜயகுமாரி,ஏ வீரப்பன், கனகதுர்கா ஆகியோரும் நடித்தனர்.படத்தொகுப்பை ஆர் தேவராஜன் கவனித்தார்.வண்ணப் படமான இதனை ஏ வின்சென்ட் ஒளிப்பதிவு செய்தார்.

படத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்து கவிஞர் கண்ணதாசன்,மெல்லிசை மன்னர் எம் எஸ் விசுவநாதன்,டீ எம் சௌந்தரராஜன்,பி சுசிலா,எல் ஆர் ஈஸ்வரி ஆகியோரின் சேர்க்கை. இப் படத்தில் இடம் பெற்ற சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பட்டு தென்றலே உனக்கேது சொந்த வீடு என்ற பாடல் சுசிலாவின் குரலில் இனிமையாக ஒலித்து அகில இந்திய சிறந்த பாடகி என்ற விருதை அவருக்குப் பெற்றுக்கொடுத்தது. அதே போல் டீ எம் எஸ் குரலில் ஒலித்த நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே என்ற பாடல் கருத்தாழத்துடன் அமைந்து இன்றும் ரசிகர்களை ஈர்க்கின்றது.தமிழில் வெளிவந்து பெரு வெற்றி பெற்ற சவாலே சமாளி பின்னர் ஹிந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் சிங்களம் என்று பல மொழிகளிலும் வெளியாகி வெற்றி கண்டது. இப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து முன்னணி இயக்குநராகத் திகழ்ந்திருக்க வேண்டிய மல்லியம் ராஜகோபால் எனோ அந்த இலக்கை எட்டாமல் போய் விட்டார்.

ஆனாலும் சிவாஜியின் படங்களில் சவாலே சமாளிக்கும் ஒரு இடம் உண்டு என்பது நிச்சயம்

இத்துடன் இவ்வாண்டுக்கான பொன் விழாவில் இந்தப் படங்கள் என்ற ஆக்கம் நிறைவுக்கு வருகிறது.அனைவருக்கும் நன்றி!
No comments: