இருக்கும் வரைக்கும் படிப்போம் அன்புக் கதை”
https://www.youtube.com/watch?
ராமகிருஷ்ணராஜா இசையில் இந்த அழகான பாடலை இலங்கை வானொலியின் பொற்கால யுகத்தில் கேட்டு மகிழ்ந்தோர் மறந்திருக்க மாட்டார்கள்.
SPB பாடகன் சங்கதி நூலின் இறுதிக் கட்ட வரைபை மீளப் படித்துக் கொண்டிருக்கும் போது தான் அடடா இந்தப் பாடலை எப்படி மறந்தேன் என்று நினைத்துச் சேர்த்துக் கொண்டேன்.
இந்த இனிய பாடலுக்குப் பின்னால் சுவாரஸ்யமானதொரு விடயமும் இருக்கின்றது. குறித்த பாடல் இடம்பெற்ற “புதிய சங்கமம்” படத்தின் இயக்குநர் வேறு யாருமல்ல கமல்ஹாசனின் மூத்த சகோதரரும் நடிகருமான சாருஹாசன் தான். தன் மகள் சுஹாசினியை நாயகியாக்கி இயக்கிய இந்தப் படத்துக்குப் பின்னால் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் “புதிய சங்கமம்” படத்தின் தயாரிப்பாளர் பழம் பெரும் நாயகன் எம்.கே.ராதா. இவர் பற்றி அதிகம் தெரியாத 2கே கிட்ஸ்க்கு ஒரு துணுக்குத் தகவல். எம்.ஜி.ஆர் அறிமுகமான “சதிலீலாவதி” படத்தின் நாயகன் எம்.கே.ராதா தான். தன்னுடைய மூத்த சகோதரனாகவே எம்.கே.ராதாவைப் போற்றியவர் எம்.ஜி.ஆர். இப்போது போய் நீங்கள் கூகிளிட்டால் எம்.கே.ராதாவின் காலில் விழும் எம்.ஜி.ஆர் படத்தைப் பார்க்கலாம். சரி மீண்டும் சாருஹாசனிடன் வருவோம்.
சாருஹாசன் “புதிய சங்கமம்” படம் தவிர IPC 215 என்ற படத்தையும் இயக்கியது குறிப்பிடத்தக்கது. இவரை இயக்குநராக்கி அழகு பார்க்க வேண்டும் என்று துடித்தவர் புகழ் பூத்த தயாரிப்பாளர் எல்.வி.பிரசாத் என்ற தகவலை நேற்று சாருஹாசன் எழுதிய “அழியாத கோலங்கள்’ நூலைப் படித்த போது தான் தெரிந்தது. ஆனால் சாருஹாசனுக்கும், எல்.வி.பிரசாத்துக்குமான சந்திப்பு மோதலில் தான் தொடங்கியிருக்கிறது.
“மரோ சரித்திரா” படத்தை ஹிந்தியில் “ஏக் துஜே கேலியே” ஆக எடுப்பதற்கு எல்.வி.பிரசாத் முனைந்த போது கே.பாலசந்தர் & கமல்ஹாசன் சார்பில் ஒப்பந்தப் போடப் பணிக்கப்பட்டவர் சாருஹாசன். அப்போது கமல் மூன்றரை லட்சம் சம்பளம் வாங்கிய காலகட்டத்தில் எல்.வி.பிரசாத்தோ ஒரு லட்சம் தான் தருவேன் என்று அடம் பிடித்தாரம். பேச்சு வளர்ந்து கொண்டு போகவே ஒரு கட்டத்தில் “சரி இப்படிச் செய்வோம், முதலில் இருவருக்கும் முன் பணமாக ஐம்பதாயிரம் கொடுங்கள், படம் 175 நாள் ஓடிய பின் மீதி மூன்று லட்சத்தைக் கொடுங்கள்” என்றாராம் சாருஹாசன்.
எல்.வி.பிரசாத்துக்கோ சாருஹாசன் மீது எள்ளல் பார்வை.
ஆனால் ஜெயித்தது சாருஹாசன் தான். படம் 175 கடந்தது, எல்.வி.பிரசாத்தும் சொன்ன வாக்குறுதியைக் காப்பாற்றினாராம்.
“நல்ல நடிப்பைப் பார்த்தால் பாலச்சந்தர் துள்ளிக் குதித்துப் பாராட்டுவார் ஆர்.சி.சக்தி கண்ணீர் விட்டே அழுவார்”
போன்ற நெகிழ்வான அனுபவங்களோடு,
அன்னக்கிளி படத்தின் படத்தின் முதல் பாடல் பதிவு நடக்கிறது தன் நண்பர் இளையராஜா இசையமைக்கிறார் தன்னால் வர முடியாத சூழல் என்று கமல் சாருஹாசனை அனுப்புகிறார். சாருஹாசனுக்கோ அல்லது அந்தப் பாடல் பதிவு நடக்கும் ஏவிஎம் இல் இருந்த நாயகன் சிவகுமாருக்கோ இளையராஜாவைத் தெரியாது, சாருஹாசன் அந்த ஒலிப்பதிவுக் கூடத்தில் ஆர்மோனியத்தோடு தரையில் இருந்தவரைக் கடந்து போய் வாத்தியக்காரர்களை வேலை வாங்கியவரைக் கை குலுக்கி
“மிஸ்டர் இளையராஜா...மை நேம் இஸ் சாருஹாசன்...பிரதர் ஆஃப் கமல்” என்று கைகுலுக்கி வாழ்த்துப் பெற்றவர் கங்கை அமரனாம் பின்னர் தான் அந்தத் தரையில் இருந்த ஆர்மோனியக்காரர் இளையராஜா என்று புரிந்ததாம்.
சினிமா, அரசியல், வாழ்வியல் அவ்வப்போது கமல் (கமல்ஹாசன் பிறந்த போது மூத்த அண்ணன் சாருஹாசன் வயது 23) என்று எல்லாமே கலந்து கட்டி சாருஹாசனால் வெகு சுவாரஸ்யமான நடையில் எழுதப்பட்ட வாழ்வியல் அனுபவங்கள் “அழியாத கோலங்கள்” என்ற நூல் சூரியன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. ஐந்து வருடங்களுக்கு முன் நீங்கள் தீவிர ஃபேஸ்புக் போராளியாக இருந்திருந்தால் அப்போது மிகத் தீவிரமாக ஃபேஸ்புக்கில் கலக்கிய சாருஹாசனை மறந்திருக்க மாட்டீர்கள். அவரின் தேர்ந்தெடுத்த எழுத்துகள் குங்குமம் வார இதழில் வந்து பின்னர் இவ்விதம் நூலுருக் கொண்டது. இந்த எழுத்துகளைப் படிக்கும் போது சுஜாதாவுக்குப் பின் ஒரு வெகுஜன எழுத்துக்காரர் தாமதமாக எழுத வந்துவிட்டாரோ என்ற ஏக்கமும் மெல்ல எழும்.
“இந்தாளுதாண்டா நம்ம தலைவருக்குப் பொண்ணு
கொடுக்கமாட்டேன்னு சொன்ன துரோகி!”
என்று தளபதி ரஜினி ரசிகர்களிடம் தான் வாங்கிக் கட்டிய அனுபவத்தை சாருஹாசன் சொன்னது போலவே என்னுடைய சாபத்தையும் இவர் இன்னொரு படத்துக்காக வாங்கியிருக்கிறார்.
நான் சிறுவயதில் பயந்து பயந்து பார்த்த “அழகிய கண்ணே” என்ற மகேந்திரன் இயக்கிய ஆவிக் கதையில் சாருஹாசன் தான் கொடூரச் சாமியார். அந்தச் சின்ன வயசிலேயே நான் இவருக்கு ஏகப்பட்ட சாபம் கொடுத்தேன் அப்போது. ஆனால் பின்னர் என்னை ஆற்றுப்படுத்தியது “மீண்டும் ஒரு காதல் கதை” படத்தில் சாருஹாசன் மிஷனரியின் தலைமை ஆசிரியராகத் தோன்றிய அந்தக் குறும்பு நடிப்பில் தான்.
சாருஹாசன் தன்னுடைய 48 வயதில் தான் “உதிரிப் பூக்கள்” படத்தில் நடிக்க வந்த போதும் அவருக்குச் சில முத்திரை பதித்த வேடங்கள் கிடைத்திருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் தலையாயது அவருக்கு 1986 இல் சிறந்த நடிகராகத் தேசிய விருது கொடுத்த “தபரானே கதே” கன்னடப் படத்தை இயக்கியவர் இலேசுப்பட்டவர் அல்ல. இந்திய சினிமாவின் மிக முக்கிய ஆளுமை கிரிஷ் காசரவள்ளி அவர்.
ஒரு அரசு அதிகாரி ஓய்வு பெற்ற பின்னர் தன் ஓய்வூதியத்துகாக அலையும் அலைச்சல், அந்தப் பணம் கிடைத்தால் தான் தன் மனைவிக்கான மருத்துவச் செலவைக் கட்ட முடியும் என்ற நிர்ப்பந்தம், கடைசியில் ஓய்வூதியம் கிடைத்தால் மனைவி அதற்கு முன்பே இறந்து விடுவாள் இதுதான் “தபரானே கதே” சொல்லும் கதை.
இன்று 90 வயதைத் தொட்டிருக்கும் சாருஹாசனிடம் படிப்பதற்கு நிறைய விடயம் உள்ளது. வக்கீல் தொழிலில் 30 ஆண்டுகள் தீவிரமாக ஈடுபட்டு விட்டுத்தான் 48 வயதில் சினிமாவுக்கே வந்தவர்.
80 வயதில் தான் தன் அனுபவங்களை எழுத வந்தவர்.
ஆகவே சாதிக்க வயது தடை இல்லைத்தானே?
சாருஹாசன் நோய் நொடியின்றிப் பல்லாண்டு காலம் வாழட்டும்.
கானா பிரபா
05.01.2022
No comments:
Post a Comment