உலகச் செய்திகள்

 சீன இராணுவ ஊடுருவல்; தாய்வான் கடும் எதிர்ப்பு

இங்கிலாந்து குடிவரவு குடியகல்வு சட்டம்; இந்தியர்களுக்குத் தளர்வு

கசகஸ்தான் பதற்றம்: ரஷ்யா தலைமை துருப்புகள் விரைவு

பாகிஸ்தான் எல்லை வேலி: தலிபான் எதிர்ப்பு

வடகொரியா ஏவுகணை வீச்சு

ரஷ்யப் பிரதமர் இந்தியா வருகை

பங்குச் சந்தை பெறுமதி: அப்பிள் நிறுவனம் புதிய சாதனை

இராணுவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து சூடான் பிரதமர் இராஜினாமா



சீன இராணுவ ஊடுருவல்; தாய்வான் கடும் எதிர்ப்பு

சீனாவுடனான வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு தாய்வான் ஜனாதிபதி ட்சாய் இங் வென் தனது புத்தாண்டு உரையில் அழைப்பு விடுத்தார். சீனா தனது இராணுவ சாகசங்களை விரிவுடுத்துவதை கட்டுப்படுத்தும்படியும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சீனாவின் இராணுவ ஊடுருவல்களுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட ட்சாய் அது பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பாதுகாக்காது என்றும் குறிப்பிட்டார்.

ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை தொடர்வது ஒரு குற்றமில்லை என்றும் ஹொங்கொங் தொடர்பான தமது ஆதரவு நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் கூறியதாக என்.எச்.கே செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.  

2021இல் தாய்வான் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் 950 சீனா விமானப்படை விமானங்களின் ஊடுருவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.    நன்றி தினகரன் 




இங்கிலாந்து குடிவரவு குடியகல்வு சட்டம்; இந்தியர்களுக்குத் தளர்வு

இந்திய சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் தொழில் வாண்மையாளர்களுக்கு மலிவானதும் எளிதானதுமான விசாக்களை வழங்கும் வகையில் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களில் தளர்வுகளை ஏற்படுத்த இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது.

இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேற்கொள்ளும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள சூழலில், இங்கிலாந்தின் சர்வதேச வர்த்தக செயலாளர் அன்னே மாரி ட்ரெவெல்யான், இம்மாதம் புது டில்லிக்கு விஜயம் செய்யவுள்ளார்.   நன்றி தினகரன் 




கசகஸ்தான் பதற்றம்: ரஷ்யா தலைமை துருப்புகள் விரைவு

கசகஸ்தானில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் கடுமையாக முடக்கப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டு ஜனாதிபதியின் கோரிக்கையை அடுத்து ரஷ்யா தலைமையிலான படையினர் கசகஸ்தனை வந்தடைந்துள்ளனர்.

எரிபொருள் விலை அதிகரிப்பினால் கடந்த சில நட்களாக இடம்பெற்று வரும் ஆர்ப்பட்டங்கள் மற்றும் பதற்ற சூழலில் பொலிஸார் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டது தொடர்பில் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை இரவும் மிகப்பெரிய நகரான அல்மட்டியில் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அனைத்து தரப்புகளும் வன்முறைகளை நிறுத்தும்படி ஐ.நா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளன.

ஆயுதமேந்திய குற்றவாளிகள் என்று வர்ணிக்கப்பட்ட 26 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாக கசக் உள்துறை அமைச்சு நேற்று தெரிவித்தது. இதில் மேலும் 3,000க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறைகளில் 18 பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டிருப்பதோடு 748 பேர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகளே இந்த பதற்றத்திற்கு காரணம் என்று ஜனாதிபதி காசிம் ஜொமார்ட் டொகாயேவ் குற்றம்சாட்டியபோதும் அதற்கான ஆதாரம் எதனையும் அவர் வெளியிடவில்லை.

இந்நிலையில் சுமார் 2,500 வெளிநாட்டு படையினர் கசகஸ்தான் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. ரஷ்யா தலைமையிலான கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பினாலேயே இந்தத் துருப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் படையினர் அமைதிகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் என்றும் அரச மற்றும் இராணுவ நிலைகளை பாதுகாக்கும் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த படையினர் பல நாட்கள் அல்லது வாரங்கள் அந்நாட்டில் நிலைநிறுத்தப்படும் என்று ரஷ்யாவின் ஆர்.ஐ.ஏ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கசகஸ்தான் வடக்கில் ரஷ்யா மற்றும் கிழக்கில் சீனாவுடன் எல்லைகளைப் பகிர்ந்துள்ளது. இது மேற்கு ஐரோப்பா அளவிலான ஒரு பெரிய நாடு, மத்திய ஆசியாவில் உள்ள பிற முன்னாள் சோவியத் குடியரசுகளின் நிலப்பரப்பில் இது சிறியது.

எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிரான கலவரங்கள் அரசாங்கத்தை உலுக்கியுள்ளன. இதன் விளைவாக உயர்மட்டத்தில் உள்ளவர்களின் இராஜிநாமாக்களை எதிர்ப்பாளர்கள் கோரி போராட்டத்தை தீவிரப்படுத்தி வருவதால் அவர்களை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 




பாகிஸ்தான் எல்லை வேலி: தலிபான் எதிர்ப்பு

டூரன்ட் லைன் எல்லை பகுதியில் பாகிஸ்தான் வேலி அமைக்க இடமளிக்கப்போவதில்லை என்று ஆப்கானில் ஆட்சியில் உள்ள தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையே தற்போது நிலவிவரும் எல்லை வேலி தொடர்பான பதற்றத்திற்கு மத்தியிலேயே இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

'எந்த நேரத்திலும், எந்த அமைப்பிலும் வேலி அமைப்பதற்கு நாம் (தலிபான்) அனுமதிக்கப்போவதில்லை' என்று தலிபான் குழுவின் கட்டளைத் தளபதி மௌலவி சனாவுல்லா சங்கின் தெரிவித்தார்.   நன்றி தினகரன் 




வடகொரியா ஏவுகணை வீச்சு

பலிஸ்டிக் ஏவுகணை என்று சந்தேகிக்கப்படும் ஏவுகணை ஒன்றை வடகொரியா தனது கிழக்கு கடற்கரையில் இருந்து ஏவி இருப்பதாக ஜப்பான் மற்றும் தென்கொரியா தெரிவித்துள்ளன.

ஜப்பான் கடலோரக் காவல் படையினரே இந்த ஏவுகணையை முதல் முறை அவதானித்து தகவல் அளித்துள்ளனர். “கடந்த ஆண்டு தொடக்கம் வட கொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீசுவது மிகக் கவலைக்குரியது” என்று ஜப்பான் பிரதமர் பியுமியோ கிசிடா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த ஏவுகணை சுமார் 500 கிலோமீற்றர் பறந்து ஜப்பானிய பிரத்தியோ பொருளாதார வலயத்திற்கு அப்பால் விழுந்ததாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் நபுவோ கிஷி தெரிவித்தார்.

இது பலிஸ்டிக் ஏவுகணையாக இருக்கலாம் என்று ஜப்பானால் தெரிவிக்கப்பட்டாலும், இதுவரை ஏவுகணை பற்றிய உறுதிசெய்யப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனுடைய ஏவுகணைகள் மற்றும் பலிஸ்டிக் ரக ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்ய ஐ.நா தடை விதித்துள்ளது. 2022இல் இது வடகொரியாவுக்கு முதல் ஏவுகணை சோதனையாகும். பொருளாதாரத்தை சீரமைப்பதற்கே இந்தாண்டில் தேசியளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் இந்த ஏவுகணை சோதனை நிகழ்ந்துள்ளது. வடகொரியாவின் அண்மைய ஏவுகணை நடவடிக்கை குறித்துத் தென்கொரியாவும் அமெரிக்காவும் விரிவான ஆய்வை நடத்தி வருகின்றன.   நன்றி தினகரன் 



ரஷ்யப் பிரதமர் இந்தியா வருகை

ரஷ்ய பிரதமர் மிகைல் மிசுஸ்டின் வரும் ஜனவரி இரண்டாம் வாரத்தில் இந்தியாவுக்கு தனது முதல் விஜயத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த டிசம்பர் 6 ஆம் திகதி வருடாந்த மாநாட்டில் பாதுகாப்பு, வலுசக்தி மற்றும் முதலீட்டுத் துறைகளில் முக்கிய முடிவுகளை எட்டிய நிலையிலேயே இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.

குஜராத் உச்சிமாநாட்டில் ரஷ்ய தூர கிழக்கில் இருந்து பதினொருவர் உட்பட 15 ஆளுநர்களின் தூதுக்குழுவுக்கு பிரதமர் தலைமை வகிக்கவுள்ளதாக தெரியவருகிறது. ரஷ்யாவின் வளம்மிக்க தூரக் கிழக்கு பிராந்தியம் இந்திய–ரஷ்ய உறவுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

10ஆவது குஜராத் உச்சிமாநாடு ஜனவரி 10 முதல் 12 வரை இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.    நன்றி தினகரன் 




பங்குச் சந்தை பெறுமதி: அப்பிள் நிறுவனம் புதிய சாதனை

அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனமான அப்பிள் நிறுவனம் 3 டிரில்லியன் டொலர் பங்குச் சந்தை பெறுமதியை தொட்ட முதல் நிறுவனமாக பதிவாகியுள்ளது.

அதன் பங்கு விலை 182.88 டொலரை எட்டியபோது அதன் மதிப்பு 3 டிரில்லியன் டொலரானது. அதன் பின்னர், அதன் பங்கு விலை சற்றுக் குறைந்தது. 2018ஆம் ஆண்டு, 1 டிரில்லியன் டொலர் மதிப்பை எட்டிய உலகின் முதல் நிறுவனமாகவும் அது உள்ளது.

ஐபோன் விற்பனையே அதன் வருவாயில் முக்கிய பங்களிப்பதாகக் கூறப்படுகிறது. சுமார் 2 டிரில்லியன் டொலர் மதிப்பிலான மற்றொரு நிறுவனம் மைக்ரோசொப்ட் ஆகும்.   நன்றி தினகரன் 





இராணுவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து சூடான் பிரதமர் இராஜினாமா

சூடான் தலைநகர் கார்டூமில் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தை அடுத்து அந்நாட்டு பிரதமர் அப்துல்லா ஹம்தொக் பதவி விலகியுள்ளார்.

கடந்த ஒக்டோபரில் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்துடனான அதிகாரப் பகிர்வுக்கு எதிராகவே ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களுக்கு அதிகாரத்தை வழங்கும்படி கோசம் எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள் முழுமையான சிவில் அரசொன்றுக்காக அழைப்பு விடுத்தனர். எனினும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இராணுவம் தனது படை பலத்தை பயன்படுத்திய நிலையில் இருவர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் ஹம்தொக் பதவி விலகி இருப்பதால் நாட்டின் அதிகாரம் இராணுவத்தின் கையில் முழுமையாக வந்துள்ளது.

2019 ஆம் ஆண்டு மக்கள் எழுச்சி போராட்டத்தின் மூலம் சூடானின் நீண்ட காலத் தலைவரான ஒமர் அல் பஷீர் பதவி கவிழ்க்கப்பட்டதை அடுத்து நாட்டில் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்தும் பலவீனமாக முயற்சியில் ஏற்பட்டிருக்கும் மற்றுமொரு பின்னடைவாக இது உள்ளது.

தொலைக்காட்சி ஒன்றில் உரையாற்றிய ஹம்தொக், “நாட்டின் முழு இருப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அபாயகரமான திருப்புமுனையாக இது உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

நாடு பேரழிவை நோக்கி சரிவதை தடுக்க தன்னால் முடிந்தவரை முயற்சித்ததாகவும், ஒருமித்த நிலைப்பாடாக இருந்தபோதும் அது நடக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

பிரதமராக மீண்டும் பதவிக்கு அமர்த்தப்பட்ட ஹம்தொக்குடன் கடந்த நவம்பரில் எட்டப்பட்ட உடன்படிக்கையின்படி, தேர்தல் நடத்தப்படும் வரை நிபுணர்களைக் கொண்ட அமைச்சரவைக்கு தலைமை அவர் வகிப்பார். எனினும் புதிய சிவில் அரசுக்கு உள்ள அதிகாரங்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டு வரும் நிலையில் இராணுவத்தை நம்ப முடியாது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

தலைநகர் கார்டூம் மற்றும் ஒம்துமான் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டங்களில், இராணுவத்தை அரசியலில் இருந்து வெளியேறுமாறு கோசங்கள் எழுப்பப்பட்டன.

இராணுவ சதிப்புரட்சி தொடக்கம் 50க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஞாயிறன்று இருவர் கொல்லப்பட்டதும் அடங்கும்.

எனினும் சிவில் யுத்தம் ஒன்றை தவிர்ப்பதற்காகவே இராணுவ சதிப்புரட்சி நடத்தப்பட்டதாக அந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு தலைமை வகித்த ஜெனரல் அப்தல் பத்தா அல் புர்ஹான் நியாயப்படுத்தியுள்ளாார். 2023 ஜூலையில் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டிருப்பதோடு சூடான் சிவில் அரசுக்கான ஆட்சி மாற்றத்தில் உறுதியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   நன்றி தினகரன் 







No comments: