இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்க இந்தியா தயாராக உள்ளது
யாழில் புதிய வகை நுளம்பு கண்டுபிடிப்பு
யாழில் எரிவாயு பெற நீண்ட வரிசை
இலங்கை வரும் இலங்கையர்களுக்கு விமான நிலையத்தில் 24 மணி நேர தடுப்பூசி
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக எம். இளஞ்செழியன் கடமையேற்பு
பகிடிவதையில் ஈடுபட்ட மாணவனுக்கு பல்கலைக்குள் நுழையத் தடை
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் திருகோணமலைக்கு விஜயம்
இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்க இந்தியா தயாராக உள்ளது
ஜீ.எல்.பீரிஸிடம் தெரிவித்ததாக ஜெய்சங்கர் டுவிட்டரில் பதிவு
கடினமான சந்தர்ப்பங்களை எதிர்கொள்ளும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்கும் நோக்கில் இலங்கை வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை தாம் தொலைபேசியில் தொடர்புகொண்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக தொடர்ச்சியாக தொடர்புகளைப் பேணுவதற்கு இணங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை எண்ணெய்க் குதங்களை அபிவிருத்தி செய்வதற்காக, இரண்டு நாடுகளுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
இந்த ஒப்பந்தம் இருதரப்பு வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கடனுதவியை நீடிப்பது குறித்து, தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் கீழ், இலங்கையை முக்கியமான தரப்பாகக்கொண்டு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என்றும் புதுடில்லியில் நேற்று(06) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார். நன்றி தினகரன்
யாழில் புதிய வகை நுளம்பு கண்டுபிடிப்பு
முழுநாட்டுக்கும் எச்சரிக்கை விடுப்பு
யாழ்ப்பாண நகர எல்லைக்குள் 'எனோபீலிஸ் டிபென்ஸி' எனும் புதிய வகை மலேரியா நுளம்பு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது மிகவும் ஆபத்தான நிலை என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஏ. கேதீஷ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தென்ஆபிரிக்காவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள சிலருக்கு மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசேட வைத்திய நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாண நகர எல்லையில் அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நுளம்ப துரிதமாக பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நன்றி தினகரன்
யாழில் எரிவாயு பெற நீண்ட வரிசை
யாழ்ப்பாண நகரில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இன்று காலை முதல் யாழ்ப்பாணம் - வைத்தியசாலை வீதியிலுள்ள கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலைக்கு முன்பாக எரிவாயு சிலிண்டர்களுடன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இதன்போது, குறித்த களஞ்சியசாலையில் முதலில் வரும் 300 பேருக்கு மட்டும் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் எனும் பதாதை காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(யாழ். விசேட நிருபர்) நன்றி தினகரன்
இலங்கை வரும் இலங்கையர்களுக்கு விமான நிலையத்தில் 24 மணி நேர தடுப்பூசி
- இலங்கை விமானப்படையினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுப்பூசி மையம்
வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களுக்கு விமான நிலையத்தில் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தினமும் 24 மணி நேரமும் (24x7) இயங்கும் கொவிட்-19 தடுப்பூசி மையத்தை இலங்கை விமானப்படை நிறுவியுள்ளதாக, இலங்கை விமானப்படை பேச்சாளர் குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.
இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்கள் முதலாவது, இரண்டாவது அல்லது பூஸ்டர் தடுப்பூசி டோஸ்களை போட்டிருக்காத நிலையில், அவர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள தடுப்பூசி மையத்தில் Pfizer தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியுமென, துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
நன்றி தினகரன்
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக எம். இளஞ்செழியன் கடமையேற்பு
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
வடக்கு, கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடமாற்றம் பிரதம நீதியரசரினால் வழங்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டதுடன், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டிருந்தார்.
அதற்கமைய, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டிருந்த மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவருக்கு நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள், சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்களால் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(வவுனியா விசேட நிருபர்) நன்றி தினகரன்
பகிடிவதையில் ஈடுபட்ட மாணவனுக்கு பல்கலைக்குள் நுழையத் தடை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன் ஒருவர், புதுமுக மாணவர்கள் மீது பகிடிவதையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் முடியும் வரை குறித்த மாணவன் பல்கலைக்கழகத்தின் எந்தவொரு பகுதிக்கும் உள் நுழைய முடியாதபடி தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளை குறித்த மாணவனை உடனடியாக விடுதியிலிருந்தும் வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட மாணவன் ஒருவர் மீதே விஞ்ஞான பீட பீடாதிபதியினால் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று (05) அதிகாலை 2.00 மணியளவில், புதுமுக மாணவர்களைப் பகிடிவதைக்கு உள்ளாக்கியதுடன் மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தியதாகவும் குறித்த சிரேஷ்ட மாணவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள், மாணவர் நலச்சேவை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முடியும் வரை குறித்த மாணவன் உள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞான பீட பீடாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
(யாழ்.விசேட நிருபர்) - நன்றி தினகரன்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் திருகோணமலைக்கு விஜயம்
கோணேஸர் ஆலயத்திலும் வழிபாடு
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச திருகோணமலைக்கு இரண்டு நாள் விஜயமொன்றை நேற்று மேற்கொண்டிருந்தார்.
ஐ.ம.ச தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக் கருவில் உருவான ''பிரபஞ்சம்'' திட்டத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கான டிஜிட்டல் கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் திருகோணமலையில் நான்கு பாடசாலைகள் உள்வாங்கப்பட்டு அதனை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வுக்காக அவரது விஜயம் அமைந்திருந்தது.
திருமலைக்கு வருகைதந்த அவர் திருகோணமலை கோணேஸ்வர் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாட்டில் கலந்துகொண்டபின்னர் திருகோணமலை சாம்பல்தீவு தமிழ் வித்தியாலயத்தில் டிஜிட்டல் கற்றல் உபகரணங்கள் வழங்குதல் மற்றும் பாடசாலையின் கணினி அறை என்பன உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து பாடசாலையின் அதிபர் வைரமுத்து கமலநாதனிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், புத்திக பத்திரன, கிழக்கு மாகாண முன்னாள் மாகாணசபை உறுப்பினர் வைத்தியர் அருண,பிரதேச சபை உப தவிசாளர் முகம்மட் நௌபர்,பிரதேச சபை உறுப்பினர் வெள்ளைத்தம்பி சுரேஷ் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
ரொட்டவெவ குரூப் நிருபர், அப்துல்சலாம் யாசீம் - நன்றி தினகரன்
No comments:
Post a Comment