பொங்கல்தனை இனிமைபொங்கப் “பொங்கலோ பொங்கல்
பொலிந்திடுக” என்றேபுத் தரிசி கொண்டு
பொங்கியதைப்
புடவிவாழப் பொற்கதிர் வழங்கும்
பொற்புமிகு பரிதிக்குப் படையல்செய்து
பொங்கிநிற்கும் இந்நாளில் தமிழ ரெல்லாம்
புகலரிய ஒற்றுமையை மனதிற் பொங்கிப்
பொங்குமின்பத் “தமிழ்த்தாயை’ நினைந்து வணங்கிப்
போற்றிடவே தைமலர்ந்து வருக வருகவே!
பழையபொருள் கழித்திடவே சேர்த்துத் தீயில்
பலர்கூடி எரித்திடுவர் ‘போகி’ யன்று!
கழைவதற்கு மனதிற்குள் பலபல இருந்தும்
கழிவுகளைச் சிலர்என்றும் ஒழிப்ப தில்லை
உழைத்துழவர்
பெற்றபுது அரிசி பொங்கி
உயர்பண்பாம் நன்றிக்கடன் செலுத்து முன்பு
திழைத்திருப்போர்
மனஅழுக்கை எரித்துப் போக்கிச்
சீர்செய்யத் தைமலர்ந்து வருக வருகவே!
“தையும்வர வழிபிறக்கும்” என்ற கூற்றைத்
தாரகமந் திரமெனவே அன்று தமிழன்
ஐயமின்றி நம்பிவாழ்ந்தான்! பயனும் பெற்றான்!
அவசியமென் றேநல்ல விழுமி யங்கள்
மெய்யாக வழிவழியாய்த் தெடர வைத்தான்!
விரும்பாத சிலரின்று அவற்றை மறந்து
பொய்வாழ்க்கை வாழ்கின்றார்! மனதை மாற்றிப்
புடஞ்செயவே தைமலர்ந்து வருக
வருகவே!
முந்துதமிழ்
முச்சங்கம் எல்லாம் கண்டு
முதுசொம்பல கொண்டதமிழ்! எல்லாம் பெருமை!
சந்ததிக்குத்
தமிழைநாம் எடுத்தல் வேண்டும்!
தமிழைச்சிறார் வெட்கமின்றி எங்கும் பேசி
“எந்தநாட்டில் வாழ்ந்தாலும் தமிழை என்றும்
என்னுயிராய்ப் போற்றிடுவேன்”
என்று மனதில்
வந்திடுமிப்
பொங்கலன்று உறுதி கொள்ள
வைத்தருளத்
தைமலர்ந்து வருக வருகவே!
குறையாது பெருகிவரும் ‘கொறோனா’ வதனால்
குவலயத்தில் மக்கள்படும் கொடுமைகள் எல்லாம்
மறைஞான சம்பந்தன் அருளிப் போந்த
மந்திரமாம்
திருமுறையை மனது வைத்தே
முறையாக ஓதமுற்றாய் நீங்கு மென்று
முனைந்துநீயும் எம்மவர்க்குச் செய்தி
தன்னை
இறைவாக்காய்ச் செவிமடுக்கச் சொல்வ தற்கு
எழில்பொங்கத் தைமலர்ந்து வருக வருகவே!
வாசக நேயர்களுக்கு என் அன்புத் தைப்பொங்கல் வாழ்த்து!
இல்லமெலாம்
எழில்பொங்க இனிமைபொங்க
இதயங்கள் அனுதினமும் அன்பிற் பொங்க
நல்லுளங்கள்
வாழ்த்திடவெம் நலங்கள் பொங்க
நனிசிறந்து வாழ்வுயர மகிழ்ச்சி பொங்க
நெல்வழங்கும்
உழவர்வளம் நிரம்பிப் பொங்க
நினைந்திறைவன் தாழ்தொழுது வாழ்த்து கின்றேன்
எல்லையிலா
உயிர்களுக்கு ஒளியைப் பொங்கும்
எழுகதிரோன் அருள்பொங்கப் பொங்கு வோமே!
No comments:
Post a Comment