புட்டும் தேங்காய்ப் பூவும் என்னவாயிற்று ? அவதானி


இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு,  இந்த ஆண்டுடன் 35 ஆண்டுகளாகின்றன.

1987 இற்குப்பின்னர், அதாவது குறிப்பிட்ட ஒப்பந்தம் உருவாகியபின்னர் இலங்கையிலும் இந்தியாவிலும் பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.

ராஜீவ்காந்தி, ஜே.ஆர். ஜெயவர்தனா, பிரேமதாச ஆகியோர் மறைந்துவிட்டனர். இவர்களில் இருவர் தற்கொலைக் குண்டுதாரிகளினால் கொல்லப்பட்டவர்கள். அந்த உடன்படிக்கையில்   ஒப்பமிட்ட ஜே.ஆர். இயற்கை மரணமெய்தினார்.

1987 இற்கும் மலர்ந்துள்ள 2022 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கையிலும் இந்தியாவிலும் அதிபர்கள், பிரதமர்களும் மாறிவிட்டனர்.

1987 இல் பிறந்த குழந்தைகள், திருமணமாகி


பெற்றோர்களுமாகியிருப்பர்.  2009 மே மாதத்துடன் முடிவுக்கு வந்த போர்க்காலத்தில் பிறந்த குழந்தைகளும் 13 வயதை நெருங்கிவிட்டனர்.

எனினும்  ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு தரும் என்ற நம்பிக்கையை உருவாக்கிய அந்த ஒப்பந்தம் இதுவரையில் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இன்றளவும் அது ஏட்டுச்சுரக்காய்தான்.

அந்தச்சுரக்காயை வைத்துக்கொண்டு பேசுகிறார்கள்… பேசுகிறார்கள்… முடிவற்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.  இதற்கிடையில் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்‌ஷவும் இந்தியப் பிரதமர்  மோடியும் சில தடவைகள் இலங்கையிலும் இந்தியாவிலும் மற்றும் சில நாடுகளில் நடந்த உலக மாநாடுகளிலும் சந்தித்து பேசியும்விட்டனர்.

மீண்டும் சந்திப்பார்கள். பரஸ்பரம் கைகுலுக்குவார்கள். சுகநலன் விசாரிப்பார்கள்.  பருவகாலம் பற்றி பேசுவார்கள்.

அவ்வாறாயின்,  35 வருடத்திற்கு முன்னர் உருவான இந்த ஒப்பந்தம் பற்றி ஏதும் பேசமாட்டார்களா..? 

இலங்கையில் இன்னமும் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்ற உண்மை இந்தியப்பிரதமருக்கு இதுவரையில் தெரியாதா..?  குறிப்பிட்ட  இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான 13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் மாகாணங்களுக்குரிய அதிகார பரவலாக்கம் நடக்கவில்லை என்பதாவது தெரியாதா..?

அதனால்தானா  தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து அவருக்கு ஒரு


ஆவணக்கடிதத்தை தயாரிப்பதற்கு மண்டையை பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள்..?!   

கொழும்பில் இந்தத் தலைவர்கள் ஒன்றுகூடத்தொடங்கியவுடனே, கிழக்கிலிருந்து                                           வடக்கையும் கிழக்கையும் இணைக்க அனுமதியோம். அதற்கு முஸ்லிம் தலைவர்கள் துணைசெல்லக்கூடாது  “ என்ற குரல் உரத்து எழுந்துவிட்டது.

13 ஆவது திருத்தச் சட்டத்தை இலங்கை அரசு விரைந்து நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியப்பிரதமர் மோடிக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடன்தான்  அந்த ஆவணம் தயாரிக்கப்படுகிறதாம்.

மோடி அவர்கள் முதலில் 2014 ஆம் ஆண்டும் இரண்டாவது தடவை 2019 ஆம் ஆண்டும் அமோக வெற்றியுடன் இந்தியப் பிரதமரானவர்.

அதற்கு முன்னர் 2001 ஆம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சியின் சார்பாக குஜராத் மாநிலத்தின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

அதற்கு முன்னர் இலங்கை – இந்திய ஒப்பந்தம்  உருவான காலத்தில் அவர் என்ன செய்துகொண்டிருந்தார்..?  என்பதை இந்த பத்தியில் ஆய்வு செய்வது அவதானியின் நோக்கமல்ல. 

அவர் குஜராத்தில்  முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில்தான் 2002 ஆம் ஆண்டில் கோத்ராவில் ஒரு ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது .

அதனைத்தொடர்ந்து நடந்த கலவரங்களினால்,  இந்துக்களும் இஸ்லாமியர்களுமாக ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

எனினும் மோடி,  குஜராத்தில் அதன்பின்னர் நடந்த தேர்தலிலும் வெற்றிபெற்று முதல்வரானதுடன், தன்னையும் கட்சியையும் வளர்த்தெடுத்து அடுத்தடுத்து இரண்டு தடவை இந்தியப் பிரதமராகியும்விட்டார்.

இந்தியாவில் இந்து – இஸ்லாமியர் உரசல் என்பது  சுதந்திரம் கிடைத்து , பாகிஸ்தான் பிரிந்த காலம் முதல் நீடித்திருப்பது.

ஆனால், இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர்  டி. எஸ். சேனநாயக்காவின் முதலாவது அமைச்சரவையில் சி. சிற்றம்பலம், சி. சுந்தரலிங்கம், ஆகிய தமிழர்களும் டி.பி. ஜாயா என்ற இஸ்லாமியரும் உட்பட சில சிங்களவர்களும் அங்கம் வகித்தனர்.

டி.எஸ். சேனநாயக்காவினால் தோற்றுவிக்கப்பட்ட ஐக்கிய தேசியக்கட்சியிலும் பின்னாளில் பண்டாரநாயக்காவினால் உருவாக்கப்பட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலும்,  என். எம். பெரேராவின் லங்கா சமசாமஜக்கட்சியிலும்,  எஸ். ஏ. விக்கிரமசிங்காவின் கம்யூனிஸ்ட் கட்சியிலும் சிங்களவர்களுடன்  தமிழர்களும் இஸ்லாமியர்களும் அங்கம் வகித்தனர்.

1971 இற்குப்பின்னர் கிளர்ச்சியுடன் தொடங்கப்பட்ட  மக்கள் விடுதலை முன்னணியிலும்  மூவினத்தவர்களும் அங்கம் வகித்தனர். ஒரு காலத்தில் தமிழரசுக்கட்சியில் இஸ்லாமிய சகோதரர்களும்  அங்கத்துவம் பெற்றிருந்தனர்.  அவர்களில்  குறிப்பிடத் தகுந்தவர்கள் மசூர் மௌலானா, எம். எச். எம். அஷ்ரப்.

அக்காலத்தில்  இஸ்லாமியர்களும் தமிழர்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்தபோது,  அரசியல் தலைவர்களும் ஆய்வாளர்களும்  இவர்களின் உறவை புட்டும் தேங்காய்ப்பூவும் என்றே வர்ணித்தனர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திலும் இஸ்லாமிய சகோதரர்கள் அங்கம் வகித்தார்கள் என்பதற்கும் ஆதாரமாக திகழ்கிறது 1987 ஆம் ஆண்டு இவ்வியக்கத்தின் அரசியல் குழு வெளியிட்ட இஸ்லாமிய தமிழரும் தமிழீழ விடுதலைப்போராட்டமும் என்ற நூல்.

இந்நூல் தமிழீழ விடுதலைப்போரில் முதற்களப் பலியான இஸ்லாமிய தமிழ் வீர மறவன் விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் லெப்டினன்ட் ஜுனைதீனுக்குத்தான் காணிக்கையாக்கப்பட்டுள்ளது.

அதன் முன்னுரை இவ்வாறு தொடங்குகிறது:   “ இலங்கையில்       ‘ முஸ்லீம்  ‘ என அழைக்கப்படும் மக்கள் இஸ்லாமிய மதத்தை தழுவிய தமிழர்கள். இந்த இஸ்லாமியத்தமிழர்கள் இலங்கைத் தமிழ்த் தேசிய இனத்தின் ஒரு இணைபிரியாத அங்கம் என்பது எமது நிலைப்பாடு 

எனவே,  இந்த இணைபிரியாத  தொனியின் பின்னணியையும்  குறிப்பிட்ட       “ புட்டும் தேங்காய்ப்பூவும்  “ என்ற பதத்துடன் ஒப்பிட முடியும்.

குறிப்பிட்ட நூல் 1987 ஆம் ஆண்டு வெளிவந்தது.  இலங்கை – இந்திய ஒப்பந்தமும் அதே ஆண்டு கைச்சாத்திடப்பட்டது.  அதன்பின்னர் நடந்த வடக்கு - கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழர்களும் இஸ்லாமியர்களும் போட்டியிட்டனர்.

வரதராஜப்பெருமாள் தலைமையில் அமைந்த வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண சபையில் மூவினத்தவர்களும் அங்கம் வகித்தனர். அதில் ஒருவர் “மக்கத்துச்சால்வை  “ புகழ் எழுத்தாளர் எஸ். எல். எம். ஹனீபா.   மற்றும் ஒருவர்  புகழ்பெற்ற பத்திரிகையாளர் தயான் ஜயதிலக்க.

ஒரு தமிழர் முதலமைச்சராகவிருந்த வடக்கும் – கிழக்கும் இணைந்த மாகாண சபையில் சிங்களவரும் இஸ்லாமியரும் அங்கம் வகித்தனர் என்பது மூன்று தசாப்தங்களுக்கு முற்பட்ட நாம் அறிந்த வரலாறு.

தற்பொழுது இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதத் தொடங்கியிருப்போரும் , இந்தியப் பிரதமரும் குறிப்பிட்ட முப்பத்தியைந்து வருடத்திற்கு முன்னர்,  என்ன செய்து கொண்டிருந்தார்கள்..?  என்பதை வரலாற்றின் ஏடுகளை புரட்டினால் தெரியவரும்.

இரண்டு தடவைகள் அடுத்தடுத்து பிரதமராகியிருக்கும் நரேந்திர மோடி அவர்களுக்கு இலங்கையில் வாழும் தேசிய சிறுபான்மை இனத்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்  ஏதும் தெரியாதா..? அவருக்காக இந்தத்  தலைவர்கள் ஒன்று  கூடி, கூட்டம்போட்டுத்தான் கடிதத்தின் வரைவை தயாரிக்க வேண்டுமா..?

இதற்கு முன்னர் இந்தத் தலைவர்கள் எத்தனை தடவை அவரைச் சந்தித்திருப்பார்கள்..?

இந்தியப்பிரதமரும் இக்கடிதத்தை படித்துவிட்டு,  இலங்கை அரசுக்கும் அதிபருக்கும் தாமதமின்றி அழுத்தம்கொடுத்து இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடக்கு – கிழக்கை மீண்டும் இணைத்து அதிகாரப்பகிர்வுடன் கூடிய ஒரு மாகாண சபை வந்துவிடுமோ ? ! என்ற கனவுடன் அல்லது  எண்ணத்துடன் கிழக்கிலிருந்து,  அதற்கு எதிரான குரல்கள் ஒலிக்கத்தொடங்கிவிட்டன.

தமிழர்களும் இஸ்லாமியர்களும் மீண்டும் புட்டும் தேங்காய்ப்பூவும் போன்று ஒற்றுமைப்பட்டு,  மலையகத் தமிழ்மக்களையும் தம்மோடு இணைத்துக்கொண்டு முன்னே செல்வதற்கான பேரியக்கத்தை உருவாக்காத வரையில்,  இந்த கடிதம் அனுப்பும் படலம் தொடரத்தான் செய்யும்.

இலங்கையில் மற்றும் ஒரு பொதுத்தேர்தல் நடந்து மற்றும் ஒரு கட்சியோ, அல்லது  பல கட்சிகள் இணைந்த கூட்டாட்சியோ வந்துவிட்டால், இதுபோன்ற கடிதங்கள் வெறும் ஏட்டுச்சுரக்காய்களாகத்தான் வரலாற்று ஏடுகளில் வரையப்படும்.

---0---

No comments: