உலகச் செய்திகள்

வட கொரியா மூன்றாவது முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை வீச்சு

நேட்டோ-ரஷ்யா பேச்சில் தொடர்ந்தும் பின்னடைவு

தடுப்பூசி பெறாதோருக்கு ஒமிக்ரோன் திரிபு ஆபத்து

உக்ரைன் தாக்குதல்: நிராகரித்தது ரஷ்யா

படகின் மீது பாறை வீழ்ந்து எழுவர் பலி

ஆங் சான் சூகியிற்கு மேலும் 4 வருட சிறைத் தண்டனை


வட கொரியா மூன்றாவது முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை வீச்சு

வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் மேற்பார்வையின் கீழ் மற்றுமொரு ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அந்த நாடு அறிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஏவப்பட்ட இந்த ஏவுகணை வெற்றிகரமாக செயற்பட்டு கடலில் சுமார் 1,000 கிலோமீற்றருக்கு அப்பாலிருக்கும் இலக்கை தாக்கியதாக அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

வட கொரியா ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை பற்றி அறிவிப்பது இது மூன்றாவது முறையாகும். இந்த வகை ஏவுகணை பலிஸ்டிக் ஏவுகணைகளை விடவும் நீண்ட நேரம் அவதானிப்பை தவிர்க்க முடியுமானதாக உள்ளது.

இந்த நிகழ்வுக்கு கிம் பங்கேற்றிருப்பதும் வட கொரியாவின் தொழில்நுட்பம் மேம்பட்டிருப்பதை காட்டுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

வட கொரியாவின் பாதுகாப்பு திறனை அதிகரிப்பது புத்தாண்டு இலக்காக அந்நாட்டு தலைவர் அறிவித்திருக்கும் நிலையில் இந்த சோதனை அதற்கு உதவுவதாக உள்ளது.

கடந்த வாரம் வட கொரிய இவ்வாறான ஒரு சோதனை மேற்கொண்டதற்கு அமெரிக்கா உட்பட ஆறு நாடுகள் கண்டித்து அறிக்கை விட்டிருக்கும் நிலையிலேயே இந்த சோதனை இடம்பெற்றுள்ளது. பிராந்தியத்தில் வட கொரியா தனது அழிவு செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

வட கொரியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை பற்றிய அறிவிப்பை தென் கொரியா குறைத்து மதிப்பிட்டபோதும், முந்தைய சோதனையை விடவும் இந்த சோதனையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது தெரிவதாக குறிப்பிட்டுள்ளது. பலிஸ்டிக் ஏவுகணைகள் போலன்றி பூமியின் மேற்பரப்பிற்கு நெருக்கமாக பக்கவாட்டில் பயணிக்க முடியுமான இந்த ஏவுகணை மிகக் குறிகியகால பறத்தலில் இலக்கைத் தாக்கக் கூடியதாக உள்ளது.

தவிர ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் செல்லக்கூடியதாக உள்ளது. இந்த அம்சங்களால் இந்த ஆயுதங்களை அவதானிப்பது மற்றும் இடைமறிப்பது கடிமானதாக உள்ளது.

அமெரிக்க மற்றும் சீனா உட்பட ஒருசில நாடுகளே இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி தினகரன் 
நேட்டோ-ரஷ்யா பேச்சில் தொடர்ந்தும் பின்னடைவு

அமெரிக்கா மற்றும் நேட்டோ உடன் இந்த வாரம் இடம்பெற்ற பாதுகாப்பு பேச்சுவார்த்தைகள் ‘வெற்றி அளிக்கவில்லை’ என்று குறிப்பிட்டிருக்கும் ரஷ்யா, அடிப்படை விவகாரங்களில் தொடர்ந்து முரண்பாடு நீடிப்பாக தெரிவித்துள்ளது.

ஜெனீவா மற்றும் பிரசல்ஸில் இதுவரை இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதோடு சில சாதகமான நிலை ஏற்பட்டபோதும் மொஸ்கோ ஸ்திரமான முடிவு ஒன்றை எதிர்பார்க்கிறது என்று ரஷ்ய அரச பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கடந்த வியாழனன்று தெரிவித்தார்.

மேற்கில் இருந்து ரஷ்யாவின் பாதுகாப்புக் கோரிக்கைகள் மற்றும் உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்திருக்கும் நிலையில் ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பின் சந்திப்பு ஒன்றுக்காக கடந்த வியாழனன்று இந்த பேச்சுவார்த்தைகள் வியன்னாவுக்கு மாற்றப்பட்டது.

ரஷ்யாவின் படைக் குவிப்பை வாபஸ் பெறும்படி உக்ரைன் மற்றும் அதன் கூட்டணி நாடுகள் கோருவதோடு ரஷ்யா தாக்குதல் ஒன்றை தொடுத்தால் அதன் மீது பல்வேறு தடைகளை விதிப்பது பற்றி மேற்குலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

உக்ரைனின் கிழக்கில் ஏற்கனவே ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் போராடுவதோடு 2021 இல் ரஷ்ய படைகள் உக்ரைனின் கிரிமியான் தீபகற்பத்தை கைப்பற்றிய நிலையில் உக்ரைன் மீது ஆக்கிரமிப்புத் தொடுக்கும் எண்ணம் இல்லை என்று ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

தமது எல்லைக்குள் தாம் விரும்புகின்றபடி படைகளை நிலைநிறுத்த முடியும் என்று குறிப்பிடும் ரஷ்ய அதிகாரிகள் நேட்டோ, பிராந்தியத்தில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

முன்னாள் சோவியட் ஒன்றிய நாடான உக்ரைனை நோட்டோ அமைப்பில் சேர்ப்பதில்லை என்ற சட்டபூர்வ உறுதிப்பாட்டைக் கோரும் ரஷ்யா மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் முன்னாள் சோவியட் ஒன்றிய நாடுகளில் இருந்து படைகளை வாபஸ் பெறும்படியும் கோருகிறது.   நன்றி தினகரன் 
தடுப்பூசி பெறாதோருக்கு ஒமிக்ரோன் திரிபு ஆபத்து

ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு டெல்டாவை விட கடுமையாக இல்லையென்றாலும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோருக்கு ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரியேஸஸ் இதைத் தெரிவித்தார்.

உலக நாடுகள், மக்கள்தொகையில் 40 வீதத்தினர் தடுப்பூசி போட்டுக்கொள்ள இலக்கு கொண்டுள்ளன. இருப்பினும், 90க்கும் மேற்பட்ட நாடுகள், அந்த இலக்கை எட்டவில்லை என்றார் அவர்.

ஆபிரிக்காவில் 85 வீதத்தினருக்கும் அதிகமானோர் இன்னும் ஒருமுறை கூட தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. வாராந்த வைரஸ் தொற்று நிலவர அறிக்கையை நிறுவனம் வெளியிட்டது.

கடந்த வாரம், அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்புநோக்க, நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55 வீதம் அதிகரித்துள்ளது. அதாவது முன்னெப்போதும் இல்லாத அளவில் மேலும் 15 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.

உலக அளவில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரில் பெரும்பாலோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என்று கேப்ரியேஸஸ் கூறினார். நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் இன்னொரு வகை கொரோனா வைரஸ் திரிபு உருவாகும் அபாயம் அதிகம் என்று அவர் எச்சரித்தார். அவ்வகை இன்னும் எளிதில் பரவக்கூடும், அல்லது இன்னும் கொடியதாக இருக்கக்கூடும் என்று கேப்ரியேஸஸ் குறிப்பிட்டார்.   நன்றி தினகரன் 
உக்ரைன் தாக்குதல்: நிராகரித்தது ரஷ்யா


உக்ரைன் மீது ஆக்கிரமிப்பு தொடுக்கும் நோக்கம் இல்லை என்று அமெரிக்காவிடம் ரஷ்யா தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஜெனிவாவில் இடம்பெற்ற உயர் மட்டப் பேச்சுவார்த்தையிலேயே ரஷ்யா இதனைத் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை பல மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், பதற்றத்தை தணிக்கும் முயற்சியை தொடர்ந்து மேற்கொள்ள இரு நாடுகளும் இணங்கின.

எனினும் இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்டதற்கான எந்த சமிக்ஞையும் வெளியாகவில்லை.

உக்ரைன் எல்லைக்கு அருகில் சுமார் 100,000 ரஷ்ய துருப்புகள் நிலைகொண்டிருக்கும் சூழலில் ஆக்கிரமிப்பு ஒன்று பற்றிய அச்சம் அதிகரித்துள்ளது.   நன்றி தினகரன் 
படகின் மீது பாறை வீழ்ந்து எழுவர் பலி

பிரேசிலின் ஏரி ஒன்றில் சுற்றுலா பயணிகளின் படகுகள் மீது பாறை இடிந்து விழுந்ததில் குறைந்தது ஏழு பேர் பலியாகியுள்ளனர்.

நாட்டின் தென்கிழக்கு பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் மூவர் காணாமல்போயிருப்பதோடு 32 பேர் காயமடைந்துள்ளனர்.

பாறை அந்த ஏரியின் மீது விழும்போது அதனை பார்த்த கரையில் இருந்தவர்கள் படகுகளை விலகும்படி எச்சரித்து கூச்சலிடுவது வீடியோ ஒன்றில் பதிவாகி உள்ளது. இதன்போது அங்கிருந்த ஒரு படகு மூழ்கியதோடு மற்றைய படகு தப்பியுள்ளது.

கடும் மழை பொழிந்த அடுத்த தினமான கடந்த சனிக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.   நன்றி தினகரன் 

ஆங் சான் சூகியிற்கு மேலும் 4 வருட சிறைத் தண்டனை

ஆங் சான் சூகியிற்கு மேலும் 4 வருட சிறைத் தண்டனை-Aung San Suu Kyi Sentenced to Four Years in Prison

ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட மியன்மார் நாட்டுத் தலைவி ஆங் சான் சூகிக்கு மேலும் 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது, சூகிக்கு எதிராக வழங்கப்படும் இரண்டாவது கட்டத் தீர்ப்பாகும்

அனுமதிப்பத்திரம் பெறாமல் வாக்கி-டாக்கிகளை (walkie-talkies) இறக்குமதி செய்து வைத்திருந்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் சூ கி குற்றவாளி என அந்நாட்டு இராணுவ நீதிமன்றம் அறிவித்துள்ளதற்கு அமைய குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அனுமதிப்பத்திரம் பெறாத வாக்கி-டாக்கிகளை வைத்திருந்ததற்காக இரண்டு ஆண்டுகளும், கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் இரண்டு ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன.

நோபல் பரிசு வென்ற 76 வயதான சூகி, மியான்மரின் அரச ஆலோசகராகவும், நாட்டின் தலைவராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு இடம்பெற்ற இராணவு ஆட்சிக் கவிழ்ப்பில் அவர் உள்ளிட்ட அந்நாட்டு அரச தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, கடந்த பெப்ரவரி 01ஆம் திகதி அந்நாட்டு இராணுவம், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைன்ட் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகளை இராணுவம் கைது செய்தது.

இதனைத் தொடர்ந்து சூகி உள்ளிட்ட கைதானவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, வழக்குகள் இடம்பெற்று வருகின்றன.

அப்போது முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஆங் சான் சூகி மீது, தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தமை, 2020 தேர்தல் பிரசாரத்தின்பேபாது கொவிட் கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்காததன் மூலம் தேசிய அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இதுதொடர்பாக விசாரணை நடாத்திய மியன்மார் நீதிமன்றம், கடந்த டிசம்பர் மாதம் இரு குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆங் சான் சூகிக்கு தலா 2 வருடங்கள் வீதம் 4 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அத்துடன் அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதி, வின் மைன்டுக்கும் அதே குற்றச்சாட்டுகள் தொடர்பில் 4 வருட சிறைத் தண்டனை விதிக்கப்படட்டது.

பின்னர் இராணுவ ஆட்சியால் அது பாதியாக குறைக்கப்பட்டது. இதன்படி புதிய தண்டனையுடன் சூக்கியின் சிறைக்காலம் மொத்தம் ஆறு ஆண்டுகளாக உள்ளது.

இதேவேளை, இராணுவ ஆட்சியாளர்களால் ஆங் சான் சூகிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 வழக்குகளில் இரு வழக்குகள் தொடர்பான தீர்ப்பே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஆங் சான் சூகி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 100 வருடங்கள் வரை சிறைத் தண்டனை வழங்கப்பட வாயப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2020 தேர்தல் பிரச்சாரத்தின் போது கொவிட்-19 தொற்றுநோய் கட்டுப்பாடுகளை மீறியமை, அதனைத் தூண்டியமை, சட்டவிரோதமாக வாக்கி டாக்கிகளை இறக்குமதி செய்தமை மற்றும் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றிற்கும் உச்சபட்சமாக 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், காலனித்துவ கால உத்தியோகபூர்வ இரகசியச் சட்டங்களை வெளியிட்டமை தொடர்பான குற்றச்சாட்டுக்கு உச்சபட்சமாக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் வாய்ப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவ சதிப்புரட்சிக்குப் பின்னர் மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருவதோடு இதுவரை 1,303 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு, 10,600க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   நன்றி தினகரன் 


No comments: