பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - கொஞ்சும் சலங்கை - ச. சுந்தரதாஸ் - பகுதி 26

.


பரதக் கலையினதும் நாதஸ்வர இசையினதும் மகோன்னதத்தை விளக்கும் வகையில் தில்லானா மோகனாம்பாள் என்ற படம் 1968ல் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்றது தெரிந்ததே.ஆனால் இதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன் அதாவது 1962ல் ஒரு படம் பரதத்தையும் நாதஸ்வரத்தையும் மேன்படுத்தி வெளிவந்தது ! சரியாக அறுபது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த அந்தப் படம்தான் கொஞ்சும் சலங்கை.வண்ணப் படங்கள் மிக அரிதாக வெளிவந்த அந்த கால கட்டத்தில் டெக்னிக் கலரில் இந்தப் படம் உருவானது.படத்தின் கலர் பிரதிகள் லண்டன் மாநகரில் பதிவு செய்யப்பட்டன.

பிரம்மாண்டம் என்ற சொல்லுக்கு உதாரணமாக மிகுந்த பொருட்செலவில் ஏராளமான செட்கள் போடப் பட்டு ரசிகர்களை பிரமை கொள்ளும் வகையில் படமாகியிருந்தார்கள்.அறுபது ஆண்டுகளுக்கு முன்னமே இப் படத்தை நாற்பது இலட்சம் ரூபாய் செலவில் படமாக்கி இருந்தார்கள்.இன்றைய மதிப்பில் இது பல கோடிகளை எட்டும் . எம் ஜீ ஆருக்கு ஒரு நாடோடி மன்னன்,சிவாஜிக்கு ஒரு வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற வரிசையில் ஜெமினிக்கு இந்தப் படம் அமைந்தது.கதாநாயகனாக ஜெமினி நடித்த முதல் கலர் படமும் இதுதான்.அதுமட்டுமன்றி அவரின் மனைவி சாவித்திரியின் நூறாவது படமாகவும் இது அமைந்தது.

படத்தின் மற்றுமொரு சிறப்பாக பிரபல நாதஸ்வர வித்வானாக திகழ்ந்த காருக்குறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வரம் படத்தில் வியாப்பித்திருந்ததாகும்.நாதஸ்வர கலைஞனாக வரும் ஜெமினிக்கு காருக்குறிச்சியாரின் நாதமே பயன்பட்டது.குறிப்பாக இன்றும் காலத்தால் மறையாத சிங்கார வேலனே தேவா என்ற பாடல் எஸ் ஜானகியின் குரலோடு கருக்குரிச்சி அருணாசலத்தின் நாதத்தோடு, தேனோடு கலந்த தெள்ளமுது கோல நிலவோடு சேர்ந்த குளிர் தென்றலாக ரசிகர்களை வசீகரித்தது.






படத்தின் மற்றொரு கதாநாயகியாக குமாரி கமலா நடித்தார்.சிறு வயது முதல் பரதம் பயின்று எ வி எம் தயாரித்த நாம் இருவர் படத்தில் நடித்து நடனமாடி புகழ் பெற்ற
இவர் இதில் தனது நடனத் திறமையை பட்டியல் இட்டிருந்தார்.குறிப்பாக இவரும் குசலகுமாரியும் ஆடும் போட்டி நடனம் அற்புதம்.அண்மையில் மறைந்த பாடகர் மாணிக்க விநாயகத்தின் தந்தையான நடன ஆசிரியர் வழுவூர் ராமையா பிள்ளை இந்த போட்டி நடனத்தை அமைத்திருந்தார் .நடனத்தில் சாதனை படைத்தது குறிப்பிட்டு சொல்லக் கூடிய படங்களில் நடித்த குமாரி கமலா பின்னர் பிரபல காட்டூனிஸ்டான ஆர் கே லட்சுமணனை மணந்து கமலா லட்சுமணன் ஆகி,பின்னர் அவரைப்பிரிந்து அமெரிக்கா சென்று குடியேறி அங்கேயே தங்கி விட்டார்.

அன்றைய காலகட்டத்தில் வில்லன் நடிகராக அடியெடுத்து வைத்துக் கொண்டிருந்த ஆர் எஸ் மனோகர் இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.அவருடைய அதட்டலும்,மிரட்டலும் படம் முழுவதும் நிறைந்திருந்தது.நகைச்சுவையை பழம் பெரும் நடிகரான கே சாரங்கபாணியும் முத்துலெட்சுமியும் பார்த்துக் கொண்டார்கள்.இவர்களுடன் குசலாகுமாரி,எஸ் வி ராமதாஸ்,ருஷ்யேந்திரமணி,பஷீர் முஹம்மது,சி டி ராஜகாந்தம் ஆகியோரும் நடித்திருந்தனர்.படத்தை பம்பாயில் உள்ள ராமன் ஸ்டூடியோவிலும் சென்னையில் உள்ள நியூடோன் ஸ்டுடியோவிலும் நரசு ஸ்டுடியோவிலும் படமாக்கினார்கள்.வெளிப்புற படப்பிடிப்பு மைசூர்,ராஜஸ்தான் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டன.இதில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்களும் பங்கு பற்றினார்கள்.




கொஞ்சும் சலங்கை படத்தை தயாரித்து இயக்கியவர் எம் வி ராமன் ஆவார்.ஆரம்பத்தில் ஏ வி எம் நிறுவனத்தில் இயக்குனராக பணியாற்றிய இவர் பின்னர் பம்பாய் சென்று ராமன் ஸ்டுடியோவை உருவாக்கி படங்களை தயாரித்தார்.படத்தின் ஒளிப்பதிவை வட இந்தியரான எஸ் ஹர்பீட் கையாண்டிருந்தார் .தொழில்நுட்பம் குறைந்த அந்த நாளில் மிக லாவகமாக கலரில் தன் ஒளித் திறமையை அவர் காட்டியிருந்தார்.

படத்துக்கான பிரம்மாண்டமான அரங்குகளை அமைத்தவர் எம் அழகப்பன்.அவரின் திறமையே திறமை! இசையமைத்தவர் எஸ் எம் சுப்பையா நாயுடு.அவரின் இசையில் உருவான ஒருமையுடன் நினது திருமலரடி என்ற திருவருட்பா நெஞ்சத்தில் நிறைந்தது.படத்தின் பாடல்களை சூலமங்கலம் ராஜலட்சுஷ்மி,ஜெய்லஷ்மி,பி லீலா,எஸ் ஜானகி ,டி எம் எஸ் ,எஸ் சி கிருஷ்ணன் ஆகியோர் பாடியிருந்தனர்.படத்துக்கான வசனங்களையும் பாடல்களையும் கவிஞர் கு மா பாலசுப்ரமணியம் எழுதியிருந்தார்.

பணத்தை தாராளமாக செலவு செய்து நடனத்தையும் நாதத்தையும் முன்னிலைப் படுத்தி 1962 தை பொங்கலுக்கு வெளிவந்த கொஞ்சும் சலங்கை பார்க்க வேண்டிய படம்.




No comments: