பவளவிழாக்காணும் நாட்டிய நர்த்தகி கலாநிதி கார்த்திகா கணேசர் முருகபூபதி


இலங்கையின் மூத்த பரத நாட்டிய நர்த்தகியும், தமிழ்க்கலை உலகப்புகழ்பெற்ற நடனக்கலைஞர் ( அமரர் )  பத்மபூஷன்  வழுவூர் இராமையா பிள்ளை அவர்களின் சிரேஷ்ட மாணவியுமான கலாநிதி கார்த்திகா கணேசர் அவர்கள் இந்த ஆண்டு பவளவிழாக் காணுகிறார்.

அவுஸ்திரேலியா சிட்னியில் வதியும் இவர்,  இங்கும் தனது ஆற்றல்களை அடுத்த தலைமுறையினரிடம் கடத்தியவாறு நடனம் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளையும் நூல்களையும் எழுதிவருகிறார்.

அத்துடன் சிட்னியிலிருந்து தினமும் 24 மணி நேரம் ஒலிபரப்பாகும் தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்ச்சியிலும் பகுதி நேர நிகழ்ச்சித்தயாரிப்பாளராகவும் ஒலிபரப்பாளராகவும் இயங்கிவருகிறார்.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், சிட்னி உயர்திணை


இலக்கிய வட்டம் ஆகியனவற்றிலும் இணைந்திருக்கும் கார்த்திகாவின் வாழ்வும் பணிகளும்  நடனக்கலையுடன் பின்னியிருக்கின்றன.

இவரது கவிஞன் கனவு நாட்டிய நாடகம் 1982 இல் பாரதி நூற்றாண்டு காலத்தில்  இலங்கைத்தலைநகரில் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் மேடையேறியபோது,  அமைச்சர்கள் செல்லையா இராசதுரை, சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

இந்நாட்டய நாடகத்திற்கு இந்திய பிரபல இசையமைப்பாளர் எம்.பி. ஶ்ரீநிவாசன் இசையமைத்திருந்தார். அத்துடன் அவரும் குறிப்பிட்ட நிகழ்ச்சியின்போது இலங்கைக்கு வருகைதந்து கலந்து சிறப்பித்தார்.


இலங்கை எழுத்தாளர்கள் பேராசிரியர்  இந்திரபாலா, நீர்வை பொன்னையன், செ. கணேசலிங்கன்  ஆகியோரின் புதல்விகளும் கார்த்திகாவின் நடனப்பள்ளி மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

கொழும்பில்  கலை  இலக்கிய  நண்பர்கள்  கழகம்  என்ற  அமைப்பு 1970  களில்  இயங்கியது.   இதில்  எழுத்தாளர்கள்  சாந்தன்,  மாவை நித்தியானந்தன்,   குப்பிழான்  சண்முகன்,  யேசுராசா,  இமையவன், நெல்லை க. பேரன், கே. எஸ். சிவகுமாரன்   உட்பட  சிலர்   அங்கம்வகித்து  அடிக்கடி கலை,  இலக்கிய  சந்திப்புகளை   நடத்திக்கொண்டிருந்தார்கள்.

சில   நிகழ்ச்சிகளை  வெள்ளவத்தை  தமிழ்ச்சங்கத்திலும்  நடத்தி  மூத்த  எழுத்தாளர்களை  அழைத்து  அவர்களின்  இலக்கிய அனுபவங்களை   பேசவைத்தார்கள்.

நாடகம்,   கவிதை,  சிறுகதை,  நாவல்,  விமர்சனம்  என்று அந்தக்கலந்துரையாடல்கள்   அமைந்திருக்கும்.   மிகவும்  தரமான கருத்துப்பரிமாறல்களுக்கு  களம்  அமைத்திருந்த   அச்சந்திப்பில் 


ஒரு நாள்  நாட்டியம்  பற்றிய  கலந்துரையாடல்  நடந்தது.

நடன   நர்த்தகி  கார்த்திகா  கணேசர்    எழுதி  தமிழ் நாடு தமிழ்ப்புத்தகாலயம்  1969  இல்  வெளியிட்டிருந்த  தமிழர்  வளர்த்த ஆடற்கலை   என்ற   நூலையே  அன்று  பேசுபொருளாக எடுத்திருந்தார்கள்.    இத்தனைக்கும்  நான்   கார்த்திகா  கணேசரை  அதுவரையில் பார்த்ததும்  இல்லை.   அவர்  பற்றி   அறிந்ததும்  இல்லை.  அன்றைய சந்திப்பு  அவர்  பற்றியும்  நாட்டியக்கலை   பற்றியும்  எனக்கு  புதிய வெளிச்சம்   தந்தது.

பல   ஆண்டுகள்  கழித்து  அவுஸ்திரேலியாவில்  அறிமுகமான கார்த்திகா  கணேசர்,  அந்த  நூலின்   இரண்டாவது  பதிப்பினையும் காலம்தோறும்  நாட்டியக்கலை  என்ற   தமது  மற்றுமொரு நூலையும்   எனக்கு  அனுப்பியிருந்தார்.

கார்த்திகாவின்  எல்லார  காமினி  என்ற   நாட்டிய  நாடகத்தை பம்பலப்பிட்டி   சரஸ்வதி  மண்டபத்தில்  பார்த்த  பின்னர்,  அவர்  மீது எனக்கிருந்த   வியப்பு  மேலும்  அதிகரித்தது.


காலம்   காலமாக  எல்லாளன் - துட்டகைமுனு  பற்றிய  சரித்திரம் எமக்கு  சொல்லப்பட்டதிலிருந்து,   அந்த  நாட்டிய  நாடகம்  முற்றிலும் வேறுபட்டிருந்தது.   இதில்  கெமுனுவின்  தாயாக -  விஹாரமா தேவியாக    நடித்தவர்  ஆனந்தராணி   ராஜரட்ணம்.   இவர்தான் தற்பொழுது  ஆனந்தராணி  பாலேந்திரா. லண்டனில் இருக்கிறார்.

கார்த்திகா   ஏனைய  நடன  நர்த்தகிகளிடமிருந்து  வேறுபட்டிருப்பதற்கு  அவரிடமிருக்கும்  ஆற்றலும்,  தேடலும் மாத்திரம்    காரணம்  அல்ல.   நாட்டியக்கலை   தொடர்பாக  அவர் நீண்டகாலம்   ஆய்வுசெய்து  நூல்களும்  எழுதியிருக்கும் எழுத்தாளரும்    ஆவார்.   நடன  நர்த்தகியாக  மாத்திரமன்றி  தமது ஆய்வின்  வெளிப்பாடாக  நாட்டியக் கலாநிதியாகவும்  மிளிர்ந்தவர்.

இவர்  இதுவரையில்  தமிழர்  வளர்த்த  ஆடற்கலைகள்,  காலம் தோறும்  நாட்டியக்கலை,  இந்திய  நாட்டியத்தின்  திராவிட  மரபு, நாட்டியக்கடலில்   புதிய  அலைகள்  முதலான  நூல்களையும் வரவாக்கியிருப்பவர்.

இவற்றில் இந்திய  நாட்டியத்தின்  திராவிட  மரபு நூல் தஞ்சை பல்கலைககழகத்தின் விருதினைப்பெற்றுள்ளது.

நாட்டியக்கலைக்கு  கற்பனைத்திறனும்  அவசியமானது  என்பதை தமது  முதல்  குருவான  இயல்,  இசை   வாருதி  ஸ்ரீ வீரமணி அய்யரிடம்   கற்றிருப்பவர்.    பரதநாட்டியக்கலையில்  பெருவிருட்சம் என்று   போற்றப்படும்  பத்மபூஷன் - நாட்டியகலாகேசரி  வழுவூர்


இராமையா  பிள்ளையின்  வீட்டிலேயே  தங்கியிருந்து  பரத நாட்டிய பயிற்சியை  தொடர்ந்த  பாக்கியசாலி.

                 வழுவூராரின்   மாணவிகள்தான்  கமலா  லக்க்ஷ்மணன்,  பத்மா சுப்பிரமணியம்,   சித்திரா  விஸ்வேஸ்வரன்,  வைஜயந்திமாலா, பத்மினி, லலிதா,  ஈ.வி. சரோஜா,   எல். விஜயலட்சுமி,   ரமணதிலகம்  ( கவிஞர்  வாலியின்  மனைவி)  உட்பட  பலர். இவர்களில்   சிலர்  திரையுலகில்  நட்சத்திரமானார்கள்.

ஆனால்,  கார்த்திகா  ஆய்வாளராகவும்  எழுத்தாளராகவும்  மாறினார். இவரது   நூல்கள்   பரதம்  பயிலும்  மாணவர்களுக்கும்  பயிற்றுவிக்கும்   ஆசிரியர்களுக்கும்  பாட  நூல்களாக விளங்குகின்றன.

கார்த்திகா,  இராமாயண  நாட்டிய  நாடகத்தை  தயாரித்தபொழுது, இராமன்,  இராவணன்,  அனுமான்  போன்ற  பாத்திரங்கள்  பரதம் ஆடினால்  சோபிக்காது  என்று  எண்ணியிருக்கிறார்.   தமது  நண்பரும் கூத்துக்கலைஞருமான   பேராசிரியர்  மௌனகுருவை  நாடி ஆலோசனை  பெற்றுள்ளார்.

அவரும்   கார்த்திகாவுக்கும்  அந்தக்குழுவில்  பங்கேற்ற மாணவியருக்கும்  வடமோடி  கூத்து  மரபை  பயிற்றுவித்து அதற்கேற்ப   பாடல்களையும்  எழுதிக்கொடுத்து  ஊக்குவித்திருக்கிறார்.

தமிழர்  வளர்த்த  ஆடற்கலைகள்  நூலை   " நீங்களின்றி  நானில்லை"  - என்று  குறிப்பிட்டு,  தமது  அருமைக்கணவர்  அமரர் தியாகராஜா  கணேசர்  அவர்களுக்கே   சமர்ப்பித்துள்ளார்.

இந்நூலின்   மூன்றாவது  பதிப்பினை  கொழும்பில்  ஞானம்  பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

காலம்தோறும்  நாட்டியக்கலை  நூலின்  மூன்றாம்  பதிப்பை கொழும்பில்    பூபாலசிங்கம்  புத்தகசாலை   வெளியிட்டுள்ளது.  இதன் இரண்டாவது    பதிப்பு  சென்னையில்   பிரபல தமிழ்ப்புத்தகாலயத்தினால்   வெளியானபொழுது,   1982  ஆம்  ஆண்டு தமிழக   முதல்வர்  எம். ஜி. ஆரிடமிருந்து  தமிழக  அரசின் விருதைப்பெற்றுக்கொண்டார்   கார்த்திகா  கணேசர்.

வற்றாத  ஜீவநதியாக  ஓடிக்கொண்டிருக்கும்  நாட்டியக்கலையின் தோற்றம்,  வளர்ச்சி,  அழகூட்டும்  ஆடல்  உத்திகள்,  அறிவுக்கு விருந்தாகும்   அபிநயம்,  உட்பட  நாட்டியக்கலை   விருத்திக்கு தத்துவமும்   கோட்பாடும்  -  பார்வையாளரும்  விமர்சகர்களும் முதலான   அத்தியாயங்களை  எளிமையாக  பதிவுசெய்து  அவர் எழுதியிருக்கும்   நூல்தான்  காலம்தோறும்  நாட்டியக்கலை.  அவர் தமது  ஆய்வுக்கு  மனித  குலத்தின்  கற்காலத்திலிருந்தும்  பழங்குடி மக்களிடமிருந்தும்   சங்க  இலக்கியங்களிலிருந்தும் சிலப்பதிகாரத்திலிருந்தும்    விளக்கமளிக்கிறார்.

கார்த்திகா,    அரங்கேற்றத்திற்காகவே  தயாரிக்கப்படுபவர்களின் கோலங்களையும்   தமது  நூலில்  நயமுடன்  எடுத்துரைக்கிறார்.

நாட்டியக்கலையின்   விருத்திக்கு  என்ன  தேவை..? என்பதையும்  பல அங்கங்களில்   விபரிக்கும்பொழுது,  பார்வையாளர்களையும் விமர்சகர்களையும்   அழைக்கிறார்.  

" ஆக்கப்படைப்பில்   ஈடுபடும்    ஒவ்வொரு  கலைஞனின் படைப்புக்களுக்கு   ஆதார  சுருதியாக  முதற்  சிந்தனையோட்டமாக விளங்குவது   அவன்  சொல்லாமல்  செய்யும்  விமர்சனமே.   இதனால் ஒவ்வொரு   கலைஞனுமே  தனக்குள்  விமர்சகனாக  விளங்குகிறான். ஆனால்,   மற்றவர்களுக்கும்  கலைஞருக்கும்  எடுத்து விளக்குவதையே  விசேட  பணியாகக்  கொள்பவரையே   நாம் விமர்சகர்    என்கிறோம். "   என்ற கூற்றை  மூத்த  கலை,  இலக்கிய  விமர்சகர் கா.நா. சுப்பிரமணியம்  (கா.நா.சு)  சொல்லியிருப்பதன்  ஊடாக  எமக்கு   நினைவுபடுத்துகிறார்.

பவளவிழாக்காணும் கலைஞர் நடன நர்த்தகி  திருமதி காரத்திகா கணேசர், தொடர்ந்தும் தமது ஆற்றல்களை எமது சமூகத்திற்கு அடுத்த தலைமுறையினர் ஊடாக வெளிப்படுத்த வேண்டும் என வாழ்த்துகின்றோம்.

-----o----

No comments: