நவீன அரிச்சந்திரன் – சிறுகதை கே.எஸ்.சுதாகர்

குள்ளமான தோற்றம். வயது எழுபதிற்கும் மேல் இருக்கலாம்.


தளர்வான நடை. வேட்டி, நாஷனலுடன் ஆமை போல ஊர்ந்து கொண்டிருந்தார் கதிரைமலை ஆசிரியர். பாடசாலை கேற்றிலிருந்து மைதானத்தை நோக்கி நடந்துகொண்டிருந்த அவரை இடைமறித்தாள் பார்வதி. அவளின் சேலைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு நின்றான் கோபாலன்.

 “சேர்! என்னுடைய மகன் கோபாலன் பள்ளிக்கூடத்துக்கு எடுபட்டிருக்கின்றான். பாடசாலைக் கட்டிட நிதிக்கு 500 ரூபா கொடுத்திட்டு பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்படி கடிதம் வந்திருக்கு.”

 “உம்… சேர்க்கிறதுதானே!”

“எங்களிட்டை அவ்வளவு காசு இல்லை. அவரும் தோட்ட வேலைதான் செய்கின்றார். 200 ரூபா தான் தரமுடியும்.”

 அவர் பார்வதியை உற்றுப் பார்த்தார்.

 “அப்ப வேறை பள்ளிக்கூடத்திலை சேர்த்துக் கொள்ளுங்கோ” சொல்லிவிட்டு நடையைத் தொடர்ந்தார்.

 பார்வதி திகைத்துப் போனாள். இந்தப் பதிலை அவள் எதிர்பார்க்கவில்லை. கோபாலனுக்கு மூத்த சகோதரர்கள் இருவர் அந்தப் பள்ளிக்கூடத்தில் ஏற்கனவே படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் கெட்டிக்காரர்கள். கோபாலன் இதுவரைகாலமும் வீட்டிற்கு அண்மையாகவிருந்த ஆரம்பப் பாடசாலையில் படித்தான். இரண்டாம்நிலைப் படிப்பிற்காக இந்தப் பள்ளிக்கூடத்திற்கு விண்ணப்பித்திருந்தான். அதற்கான போட்டிப்பரீட்சையிலும் சித்தியடைந்திருந்தான். தெரிவுசெய்யப்பட்ட 50 மாணவர்களில், புள்ளியடிப்படையில் கோபாலனுக்கு இரண்டாவது இடம் கிடைத்திருந்தது.

 பார்வதி ஆசிரியரைப் பார்த்தாள். கொஞ்சத் தூரம்தான் நடந்திருந்தார். பின்னாலே கலைத்துக் கொண்டு போனாள்.

“சேர்… இண்டைக்குத்தான் கோபாலனுக்கு முதல்நாள். வந்திட்டு திரும்பிப் போறது மனசுக்கு கஸ்டமாகவிருக்கு. அவனுக்கு மூத்த அண்ணன்மார்கள் கூட இந்தப் பள்ளிக்கூடத்திலைதான் படிக்கினம். என்ரை இன்னொரு மகன்கூட இந்தப்பள்ளிக்கூடத்திலை படிச்சுத்தான் யூனிவசிட்டிக்கு எடுபட்டவன்.”

 “அதுக்கு நான் ஒண்டும் செய்யமுடியாது. சட்டம் எல்லாருக்கும் பொதுவானது.”

 “இவனையும் இஞ்சையே சேந்திட்டன் எண்டால், எல்லாப்பிள்ளைகளும் ஒண்டா பள்ளிக்கூடம் வந்து போவினம். பிள்ளையளும் நல்லாப் படிப்பினம் எண்டபடியாலை பள்ளிக்கூடத்துக்கும் பெருமைதானே சேர்!”

 கதிரைமலை ஆசிரியர் மீண்டும் பார்வதியை உற்றுப் பார்த்தார். அம்மாவை இவர் ஏன் உற்று உற்றுப் பார்க்கின்றார்? கோபாலன் யோசித்தான்.

 “சரி 400 ரூபாவைக் கட்டிப்போட்டு, பிள்ளையைச் சேருங்கோ.”

 “சேர் நானூறுக்கு நான் எங்கை போவன்? இருநூறுதான் கிடக்கு.”

 “சரி... இருநூறைக் கட்டிப்போட்டு வகுப்பிலை சேருங்கோ. மிகுதியைப் பிறகு கட்டுங்கோ. சரிதானே நான் சொல்லுறது?”

 பார்வதி யோசித்தாள். என்ன செய்வதென்று அவளுக்குப் பிடிபடவில்லை. முதலில் மகனைப் பள்ளியில் சேர்ப்போம். பிறகு பார்த்துக் கொள்ளுவோம் என்ற நினைப்பில் “ஓம் சேர்” என்றாள். காசைக் கட்டியவிடத்தில் அதிபரைச் சந்திக்கும்படி கேட்டுக் கொண்டார்கள்.

 ”பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு கதிரைமலை ஆசிரியர் தான் பொறுப்பு. மிகுதி 200 ரூபாய்களையும் இரண்டு தவணையாகப் பிரிச்சுக் கட்டிப்போடுங்கோ. உங்கடை மகன் இதிலை நிக்கட்டும். நான் வகுப்பிலை கொண்டுபோய் விடுவதற்கு ஒழுங்கு செய்யுறன்” சொல்லிய அதிபர், பாடசாலையில் ஏற்கனவே பயின்றுகொண்டிருக்கும் பார்வதியின் பிள்ளைகளையும் மெச்சினார்.

கோபாலனைப் போல பல மாணவர்கள் அங்கே நின்றார்கள். பெரும்பாலான பிள்ளைகள் நல்ல உடுப்புகளுடன் சப்பாத்தும் அணிந்திருந்தார்கள். செருப்புடன் வந்திருந்த கோபாலனைத் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு வீட்டிற்குப் போக ஆயத்தமானார் பார்வதி. வழி நெடுகலும் அவரை நடக்கவிடாமல், ஒரு குட்டைபிடிச்ச நாயும் 200 ரூபாய்களும் விரட்டியடித்தன. வீட்டிலே படித்துவிட்டு ஒரு மகளும் மகனும் வேலை வெட்டியில்லாமல் இருக்கின்றார்கள். அவர்களின் காலத்தில் தரப்படுத்தல் நடைமுறைக்கு வந்தபடியால், அவர்களால் பல்கலைக்கழகம் போக முடியவில்லை. வேலை கிடைப்பதும் முயற்கொம்பாகிவிட்டது.

 கதிரைமலை வாத்தியாரைப் பார்த்தால் வயதில் மிகவும் மூத்தவர் போல் காணப்படுகின்றாரே? அவர் ஏன் இன்னமும் இளைப்பாறாமல் பள்ளிக்கூடத்தையே சுற்றித் திரிகின்றார். நடக்கவும் முடியாமல் தத்தித் தத்தி அவரால் என்ன செய்துவிட முடியும்? என்னுடைய மகளுக்கு ஆசிரியர் வேலை என்றால் கொள்ளை விருப்பம். இவர்களைப் போன்றவர்கள் தொழிலில் ஒட்டிக்கொண்டு இருப்பதனால் தான் என்னுடைய மகளுக்கு வேலை கிடைப்பதில்லையோ? ஒருபுறம் தரப்படுத்தல் என்கின்றார்கள். இன்னொருபுறத்தில் மூத்தவர்கள் ஓய்வு பெறுகின்றார்கள் இல்லை. சிந்தித்தபடியே வீடு போய்ச் சேர்ந்தாள் பார்வதி.

பாடசாலை ஆரம்பமாவதற்கான முதல் மணி அடித்தது. இன்று முதலாம் தவணை ஆரம்பம். மாணவர்கள் எல்லோருக்குமாக `அசெம்பிளி ஹோலில்’ ஒரு கூட்டம் இருந்தது. மாணவர்கள் வகுப்பு ரீதியாக அணிவகுத்து, கூட்டம் நடைபெறும் இடத்திற்குப் போனார்கள்.

 பாடசாலை கீதம் இசைத்து முடிந்தவுடன், அதிபர் மேடையேறி அந்த வருடத்துக்கான திட்டங்களை விரிவாகக் கூறினார். அவரது உரை முடிந்தவுடன் கதிரைமலை ஆசிரியர் படியேறினார். மேடைக்குப் போவதற்கு அவருக்கு இரண்டு நிமிடங்கள் பிடித்தன. அவர் ஊர்ந்து வருவதை அதிபர் மேடையில் நின்று இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

 கதிரைமலை ஆசிரியர் புதிதாக வந்திருக்கும் மாணவர்களுக்கான அறிவுரைகள், பாடசாலை நடைமுறைகள் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். திடீரென அவரது உரை திசைமாறியது.

“இன்று காலை ஒரு அம்மணியைச் சந்தித்திருந்தேன். தனது பிள்ளையை ஏழாம் வகுப்பில் சேர்ப்பதற்காக வந்திருந்தார். நாம் பாடசாலைக் கட்டடநிதிக்காகக் கேட்கும் நன்கொடையைத் தர முடியவில்லை என அவர் வருத்தப்பட்டார். ஆனால் அவரது கழுத்தில் தாலிக்கொடி ஒன்று பெரிய வடமாக மின்னியதை நான் பார்த்தேன். எட்டுப்பவுண்கள் தேறலாம்” சொல்லிக்கொண்டே போனார் கதிரைமலை ஆசிரியர்.

 கோபாலனின் இரண்டு அண்ணன்மாருக்கும் திடீரென அவரது பேச்சு உறைத்தது. தமது வரிசையில் நின்றபடியே கோபாலனைப் பார்த்தார்கள். கோபாலன் தலை குனிந்தபடி நின்றுகொண்டிருந்தான்.

 மாணவர்கள் வகுப்பு ரீதியாக மண்டபத்தைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். சிறுவயதில் தான் பார்த்த அரிச்சந்திரன் மயானகாண்டம் நாடகம் கோபாலனின் மனதில் வந்து நின்றுகொண்டது. நவீன அரிச்சந்திரன் வேடத்தில் கதிரைமலை ஆசிரியர் காட்சியளித்தார். பாடசாலையில் நான் படிப்பதற்காக அம்மா தனது தாலிக்கொடியை விற்க முடியுமா?

 பாடசாலை முடிந்து கோபாலன், தனது அண்ணன்மாருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். கதிரைமலை ஆசிரியரின் மேடைப்பேச்சைப் பற்றி அவர்கள் ஒருவதும் எதுவும் கதைக்கவில்லை. ஆனால் அவர்கள் மூவரின் மனதுக்குள்ளும் அந்தப் பேச்சு கிடந்து உழன்று கொண்டிருந்தது. கோபாலன் தனது முதல் நாள் பாடசாலை அனுபவத்தை வியந்து தன் பெற்றோரிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அந்த அற்புதக் காட்சியை அண்ணன்மார்கள் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கதிரமலை ஆசிரியரின் பிரசங்கம் பற்றி, அவர்கள் பெற்றோருடன் மூச்சுக்கூட விடவில்லை. அவர் பிரசங்கம் அவருடனே இருக்கட்டும் என்று விட்டுவிட்டார்கள். அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் முன்னேறுவதே அவர்கள் நோக்கமாகவிருந்தது.

 

 

No comments: