இலங்கையின் உறுதியான, நம்பகமான பங்காளியாக இந்தியா இருக்கும்
பிரதமர் தலைமையில் இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் விழா
ஒமிக்ரோன் அலையின் விளிம்பில் இலங்கை
யாழ். மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள்
தற்காலிகமாக தங்கியிருப்போர் பொலிஸில் பதிய வேண்டும்
வாரமஞ்சரி பிரதி ஆசிரியர் வாசுகியின் கணவர் எஸ். சிவகுமார் காலமானார்
நல்லூரானை தரிசித்த எதிர்க்கட்சித் தலைவர்
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையருக்கு பாதிப்பு
புதிய குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி ரயில்!
இலங்கையின் உறுதியான, நம்பகமான பங்காளியாக இந்தியா இருக்கும்
- இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர். எஸ். ஜெய்சங்கர் உறுதியளிப்பு
இலங்கையின் உறுதியான மற்றும் நம்பகமான பங்காளியாக இந்தியா இருக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவதாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர். எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் ஒன்லைன் மூலம் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது ட்விற்றர் கணக்கில் பதிவிட்டுள்ள, இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர். எஸ். ஜெய்சங்கர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது, 400 மில்லியன் அமெரிக்க டொலர் இடமாற்று வசதியின் (swap facility) நீடிப்பு மற்றும் 515.2 மில்லியன் அமெரிக்க டொலர் ஒத்திவைக்கப்பட்ட ACU தீர்வு ஆகியன தொடர்பில் சாதகமான கலந்துரையாடலை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களுக்கான 1 பில்லியன் டொலர் காலக் கடன் வசதி மற்றும் எரிபொருள் கொள்வனவிற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை முன்கூட்டியே செயல்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க ஏனைய சர்வதேச பங்காளிகளின் முன்முயற்சிகளுடன் இணைந்து இந்தியா செயல்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
வலு சக்தி பாதுகாப்பிற்கு பங்களிக்கும் திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் தொடர்பான நடவடிக்கைகளை தாம் வரவேற்பதாக, ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அவசியமான, இந்தியாவினால் கருதப்படும் திட்டங்கள் மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, மனிதாபிமான நடவடிக்கையின் அடிப்படையில், இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்களை விரைவில் விடுவிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
பிரதமர் தலைமையில் இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் விழா
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தேசிய தைப்பொங்கல் விழா நேற்று (14) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
விவசாய நடவடிக்கைகளுக்கு உதவிய சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் தை மாதம் முதல் நாள் இவ்வாறு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமரின் ஆலோசனைக்கமைய இம்முறை தைப்பொங்கல் விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அலரி மாளிகையில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழா இந்து கலாசார அம்சங்களுடன் நடைபெற்றதுடன், பிரதமருடன், பிரதமரின் பாரியார் திருமதி. ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷவும் விழாவில் கலந்து கொண்டார்.
நிகழ்வில் கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரனின் மாணவிகளின் நடன நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.
இதன்போது இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் அச்சிடப்பட்ட இந்து அறநெறி பாடசாலை மாணவர்களிற்கான புதிய பாடத்திட்டத்திற்கு அமைவான புத்தகங்கள் பிரதமரின் பாரியார் திருமதி. ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷவினால் மாணவர்களுக்கு வழங்கி வெளியிட்டு வைக்கப்பட்டது.
கொழும்பு ராமகிருஷ்ண மிஷன் தலைவர் வணக்கத்திற்குரிய அக்ஷராத்மானந்த மஹராஜ் சுவாமி, பிரதமரின் இந்து சமய விவகாரங்களுக்கான இணைப்பாளர் வணக்கத்திற்குரிய ராமசந்திர குருக்கள் பாபு சர்மா உள்ளிட்ட இந்து மதகுருமார் பலர் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
தேசிய பொங்கல் விழாவின் நிறைவில் இந்து மதகுருமார் இந்து முறைப்படி பிரதமரை ஆசீர்வதித்தனர்.
குறித்த நிகழ்வில் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கௌரவ இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளர் அங்கஜன் ராமநாதன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானி யோஷித ராஜபக்ஷ, பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உமா மகேஸ்வரன் மற்றும் அத்திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். நன்றி தினகரன்
ஒமிக்ரோன் அலையின் விளிம்பில் இலங்கை
ஒமிக்ரோன் அலையின் விளிம்பில் இலங்கை இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூஸ்டர் தடுப்பூசியைப் பெறுவதன் மூலம் இதனை கட்டுப்படுத்தப்படலாம் என்று தொடர்ந்து நினைவூட்டப்பட்ட போதிலும் பொது மக்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் பெறுவதில் தயக்கம் காட்டுவதாக வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், பூஸ்டர் டோஸ் பெறும் நபர்களின் சதவீதம் 50 சதவீதமாக இருக்கும் என்று தாங்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது அந்த சதவீதம் 20 சதவீதமாக உள்ளதாக தெரிவித்தார். எனவே, கட்டுக்கதைகளை நம்பாது பூஸ்டர் டோஸை கூடிய விரைவில் பெறுமாறு அவர் வலியுறுத்தினார். நன்றி தினகரன்
யாழ். மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள்
யாழ்ப்பாணம் - பலாலி பிரதான வீதியில், யாழ். மாநகர எல்லை ஆரம்பிக்கும் பகுதியில் வரவேற்பு பதாகை அமைக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகரத்தினை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த வரவேற்பு பதாகை அமைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணனால் யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பகுதியினை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு அங்கமாக யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியில் யாழ்ப்பாண மாநகரசபை அன்புடன் வரவேற்கின்றது என்னும் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் வரவேற்பு பதாகை யாழ் மாநகரசபை இலட்சினையுடன் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை பதாகை அமைப்பதில் பெரும் ஊழல் நடைபெற்றதாக உள்ளூர் பத்திரிகை ஒன்றில் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் கட்டுரைகளை எழுதி வந்ததுடன் , சமூக வலைத்தளங்களிலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.விசேட நிருபர் - நன்றி தினகரன்
தற்காலிகமாக தங்கியிருப்போர் பொலிஸில் பதிய வேண்டும்
புதிய உத்தரவின்படி நேற்றுமுதல் பதிவு ஆரம்பம்
கொழும்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பிரதேசத்தில் தொழில் நிமித்தமோ வேறு காரணங்களுக்காகவோ தற்காலிகமாக தங்கியிருக்கும் அனைவரையும் உடன் பதிவு செய்யும் திட்டமொன்று பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண பிரஜைகள் பொலிஸ் பிரிவூடாக இந்த திட்டம் 'தேசிய பாதுகாப்பை உறுதி செய்வோம்; குற்றம், போதைப் பொருளை ஒழிப்போம்' எனும் தொனிப் பொருளின் கீழ் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இந்த பதிவு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 76 ஆவது அத்தியாயத்துக்கு அமைய விண்ணப்பம் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், நேற்றுமுதல் வழங்கப்பட்டுவரும்அதனை இன்று சனிக்கிழமை அல்லது நாளை ஞாயிற்றுக்கிழமையில் பெற்று பூர்த்தி செய்து பொலிஸாருக்கு வழங்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ மேலும் குறிப்பிட்டார்.
இந்த தற்காலிக வதிவாளர்களை பதியும் திட்டம் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதை நோக்ககாக கொண்டது.
நேற்று (14) முதல் மூன்று நாட்களுக்கு நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வீதிகள் ஊடாக பொலிஸ் பிரஜைகள் பிரிவின் அதிகாரிகள் வருவார்கள். அவர்களின் கைகளில் தற்காலிக வதிவாளர்களை பதிவு செய்யும் விண்ணப்பம் இருக்கும். அவற்றை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கவும். அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் இதற்கென விஷேட கரும பீடம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று ஒரு விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து கொடுக்க முடியும்' என தெரிவித்தார்.
இந்த பதிவு செய்யும் திட்டத்தின் கீழ் யாரின் தகவல்கலைப் பெற்றுக்கொள்ள பொலிஸார் எதிர்ப்பார்க்கின்றனர் என்பது தொடர்பிலும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்ர்சர் நிஹால் தல்துவ விளக்கினார்.
'நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பலர் கொழும்புக்கு வந்து தங்கியுள்ளனர். கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அதிகார எல்லைக்கு உட்பட்ட அதாவது கொழும்பு மாநகர சபையின் கீழ் வரும் பகுதிகளில், நிரந்தர வதிவாளர்களின் வீடுகளில், வர்த்தக நிலையங்களில், நிறுவனங்களில், அரச மற்றும் தனியார் கட்டுமான வளாகங்களில், தங்கியிருக்கும் அனைத்து தற்காலிக வதிவாளர்களையும் பதிவு செய்ய வேண்டும் ' என தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு மற்றும் குற்றங்களை தடுத்தல் ஆகியனவே இந்த பதிவின் நோக்கம் எனவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார். நன்றி தினகரன்
வாரமஞ்சரி பிரதி ஆசிரியர் வாசுகியின் கணவர் எஸ். சிவகுமார் காலமானார்
தினகரன் - வாரமஞ்சரி பத்திரிகையின் பிரதி ஆசிரியர் வாசுகி சிவகுமாரின் கணவர், ஊடகவியலாளர் எஸ். சிவகுமார் (59) காலமானார்.
திடீர் சுகவீனமுற்று கடந்த சில தினங்களாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்றிரவு (13) காலமானார்.
யாழ்ப்பாணம் உடுத்துறையை பிறப்பிடமாகக் கொண்ட அவர் அச்சரன், ஆயனன், அனன்யா ஆகிய மூன்று குழந்தைகளின் தந்தையாவார்.
ஊடகவியலாளர், ஒலிபரப்பாளர் எனும் பல்துறையாளரான சிதம்பரப்பிள்ளை சிவகுமார், இறுதியாக தினகரன் பத்திரிகையிலிருந்து விடைபெறும்போது, ஒப்புநோக்குனராக கடமையாற்றியிருந்தார்.
அன்னாரின் பூதவுடல் இன்று (13) பிற்பகல் 1.30 மணியளவில் பொரளையிலுள்ள ரேமண்ட் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு பி.ப. 5.30 மணியளவில் பொரளை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1962ம் ஆண்டு ஜனவரி 25ம் திகதி தம்பு சிதம்பரம்பிள்ளை அம்பிகாவதி தம்பதியினரின் மகனாகப் பிறந்த இவர் கிருஷ்ணகுமார், அம்பிகுமார், உதயகுமார், நந்தகுமார், உமா குமாரி, பாமா குமாரி, மீனா குமாரி, சுகுமாரி ஆகியோரின் சகோதரராவார் என்பதுடன், சிதம்பரப்பிள்ளை வைரவநாதன் மற்றும் திலகவதி வைரவநாதன் ஆகியோரின் மருமகனும் ஆவார்.
உடுத்துறை மகாவித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்ற அவர் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டருந்த அவர் வாசிப்பிலும், தமிழ் இலக்கியத்திலும் மிகுந்த ஆர்வமும் அத்துறையில் தேர்ச்சியும் பெற்றிருந்தார்.
லேக் ஹவுஸ் வெளியீடாக வெளிவந்த அமுது மாதச் சஞ்சிகையின் இணை ஆசிரியராக விளங்கிய அவர் பின்னர் தினமுரசு நாளிதழின் ஆசிரியராகவும் கடமையாற்றினார். கவிஞராகவும் இலக்கிய பேச்சாளராகவும் அறியப்பட்டிருந்த சிவகுமார் கொழும்பு கம்பன் விழா மேடைகளில் தவறாமல் காணப்படும் முக்கியஸ்தர்களில் ஒருவராவார். நன்றி தினகரன்
நல்லூரானை தரிசித்த எதிர்க்கட்சித் தலைவர்
நேற்று காலை நேரில் வழிபாடு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்றுக்காலை வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று தனது மனைவி சகிதம் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
வடமாகாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர், வடக்கில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்றார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவின் பிறந்த தினமான நேற்று, காலை 10 மணியளவில் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.
யாழ்.விசேட நிருபர் - நன்றி தினகரன்
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையருக்கு பாதிப்பு
மீள் பரிசீலனை செய்ய சிறிதரன் MP கோரிக்கை
வெளிநாட்டவர்கள் இலங்கையில் விவாகம் செய்து கொள்வது தொடர்பில் தேசியப் பாதுகாப்பை காரணம் காட்டி வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையை மீள் பரிசீலனைக்குட்படுத்துமாறு நீர்ப்பாசன அமைச்சரும், தேசிய பாதுகாப்புக்கான இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
இச்சுற்றறிக்கையின் மூலம், மாதாந்த வேதனமற்ற கௌரவ பதவியை உடைய கிராமிய விவாகப் பதிவாளர்கள் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கான விவாகப் பதிவை மேற்கொள்ள முடியாதென தடைசெய்து, அதற்கான அதிகாரத்தை மேலதிக மாவட்டப் பதிவாளர்களுக்கு வழங்கியிருப்பது, அவர்களை அகௌரவப்படுத்தி, உளவியல் தாக்கங்களுக்கு உட்படுத்துவதாகவும், மாதாந்த வேதனமோ, நிலையான வருமானமோ அற்ற அவர்களுக்கு, விவாகப் பதிவின் போது வழங்கப்படும் சிறு வருமானத்தை இல்லாமற்செய்வதாகவும் அமைந்துள்ளது.இலங்கையின் விவாகம் (பொது) கட்டளைச் சட்டத்தின் 112ஆவது அத்தியாயத்தில் குறித்துரைக்கப்பட்ட நியதிகளை மாற்றத்திற்கு உட்படுத்தி, புதிய சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள், அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இளைஞர், யுவதிகள், தத்தம் பண்பாடு, கலாசார, மரபியல் அடையாளங்களை ஒத்தவர்களை திருமணம் செய்ய முடியாத அபாய நிலையே உருவாக்கப்படும்.
நன்றி தினகரன்
புதிய குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி ரயில்!
பவித்ராவால் நேற்று ஆரம்பித்து வைப்பு
கல்கிசை முதல் காங்கேசன்துறை (KKS) வரையிலான குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி சேவையினை நேற்று அதிகாலை போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். ரயில் சேவையினை ஆரம்பித்துவைத்த அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, இந்த ஆரம்ப ரயில் சேவையில் பயணித்த நிலையில் அமைச்சரை பிரதி இந்திய உயர் ஸ்தானிகர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் வரவேற்றார்.
இன்று அதிகாலை 5.10 மணியளவில் கல்கிசையிலிருந்து சேவையை ஆரம்பித்த ரயில் நண்பகல் 12.15 மணிக்கு யாழ்ப்பாணம் முதன்மை ரயில் நிலையத்தை சென்றடைந்தது.
காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு சேவையை ஆரம்பிக்கும் குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி ரயில் சேவை யாழ்ப்பாணம் முதன்மை ரயில் நிலையத்திலிருந்து 1.37 மணிக்கு சேவையை ஆரம்பித்து கொழும்பை இரவு 8 மணிக்கு சென்றடையும்.
இதுவரை காலமும் 5 குளிரூட்டப்பட்ட பெட்டிகளுடன் சேவையில் ஈடுபட்ட இந்த நகர்சேர் கடுகதி சேவை நேற்று முதல் மேலதிகமாக 3 பெட்டிகளை இணைத்து 8 பெட்டிகளுடன் சேவையில் ஈடுபடவுள்ளது.
இதன்மூலம் பயணிகளின் எண்ணிக்கை 360 ஆக அதிகரிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவின் 318 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் கீழ் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகள் (RITES) நிறுவனமானது இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு குளிரூட்டப்பட்ட வசதிகளுடனான டீசல் ரயில்கள்(DMU) இரண்டை இலங்கைக்கு வழங்கியது.
அவற்றில் ஒன்று வடக்குக்கான சேவையில் நேற்று முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த கடனுதவி திட்டத்தின் கீழ் மாஹோ முதல் ஓமந்தை வரையிலான 128 கிலோ மீற்றர் ரயில் பாதை சீரமைப்பு, மாஹோ முதல் அனுராதபுரம் வரையிலான சமிக்கை வலையமைப்பு திட்டம், பொல்காவலை முதல் குருநாகல் வரையிலான இரட்டை ரயில் பாதை திட்டம் உள்ளிட்ட திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன. நன்றி தினகரன்
No comments:
Post a Comment