உலகச் செய்திகள்

ஆப்கான் விவகாரத்தில் கூட்டாக செயல்பட இந்தியாவும் ரஷ்யாவும் இணக்கம்

காபூல் விமான நிலையத்திற்கு வெளியே இரு குண்டுவெடிப்புகள்; 13 பேர் பலி!

காபூல் விமானநிலைய தாக்குதலுக்கு பின் வெளியேற்ற பணிகள் மீண்டும் ஆரம்பம்

எத்தியோப்பியாவில் இனரீதியான வன்முறைகளினால் 210 பேர் பலி

மூளைக்குள் இன்னுமே தலிபான்களின் அந்த ஒற்றைத் தோட்டாவின் வலி!


ஆப்கான் விவகாரத்தில் கூட்டாக செயல்பட இந்தியாவும் ரஷ்யாவும் இணக்கம்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவும் நேட்டோவும் வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள புதிய சூழல்களை கையாள்வது தொடர்பாக பிராந்தியத்தின் நீண்டகால நண்பர்களான இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்துள்ளன. இது தொடர்பாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவென இந்திய பிரதி பாதுகாப்பு ஆலோசகர் பங்கஜ் சரன் இவ்வாரம் மொஸ்கோ சென்றிருந்தார்.

அங்கே ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் நிக்கொலே பெட்ருஷேவ் மற்றும் பிரதி வெளிநாட்டமைச்சர் இகோர் மோர்குலோவ் ஆகியோரை சந்தித்து அவர் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள புதிய சூழல்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

அமெரிக்கா வெளியேறிய நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள சூழலில் இரு நாடுகளும் ஒருமித்து செயல்படுவதற்கான சாத்தியங்கள் பிரகாசமாக உள்ளதாக இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இப்பேச்சுவார்த்தைகளில் ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் வென்டகேஷ் வர்மா மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

ஆப்கானிஸ்தான் தொடர்பான அரசியல் மற்றும் இராஜதந்திர முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வதோடு எமது பிராந்திய பங்காளி நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு தற்போது காணப்படும் பிரச்சினைகளுக்கு சமாதான தீர்வை பெற்றுத்தர முனைவோம் என ரஷ்ய தினசரியான இஸ்வெஸ்தியாவுக்கு தெரிவித்த தகவலில் ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் பெட்ருஷேவ் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானை அண்டிய நாடுகளான தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் ஈரான், சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடனும் ரஷ்யா நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 




காபூல் விமான நிலையத்திற்கு வெளியே இரு குண்டுவெடிப்புகள்; 13 பேர் பலி!

காபூல் விமான நிலையத்திற்கு வெளியே இரு குண்டுவெடிப்புகள்; 13 பேர் பலி!-Twin Explosions Out Side Kabul Airport Afghanistan-13 Killed

 

 

ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக, சர்தேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காபூல் விமான நிலையத்தின் 'அப்பே' நுழைவாயிலுக்கு அருகில் ஒரு சில துப்பாக்கி வேட்டுகளைத் தொடர்ந்து, இரண்டு குண்டு வெடிப்புகள் அடுத்தடுத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க இராணுவத்தினரை இலக்கு வைத்து இத்தாக்குதல் இடம்பெற்றிருக்கலாமெனவும், இது ஒரு தற்கொலைத் தாக்குதல் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையம் தற்போது அமெரிக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதோடு, தலிபான்கள் காபூல் உள்ளிட்ட ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றியதைத் தொடர்ந்து அந்நாட்டிலிருந்து வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட ஆப்கான் மக்கள் வெளியேறி வருகின்றனர்.

இந்நடவடிக்கைகளை அமெரிக்க இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், இதுவரை 80,000 பேர் ஆப்கானை விட்டு வெளியேறியுள்ளதாகவும், மேல் பல ஆயிரக்கணக்கானோர் அந்நாட்டிலிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

நன்றி தினகரன் 





காபூல் விமானநிலைய தாக்குதலுக்கு பின் வெளியேற்ற பணிகள் மீண்டும் ஆரம்பம்

உயிரிழப்பு எண்ணிக்கை 108 ஆக உயர்வு

காபூல் விமானநிலையத்தில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழு நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 13 அமெரிக்கப் படையினர் உட்பட 108 பேர் வரை கொல்லப்பட்ட நிலையில் மேலும் தாக்குதல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆப்கானில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகளை அமெரிக்கா நேற்று மீண்டும் ஆரம்பித்தது.

விமானநிலைத்திற்கு வெளியில் கடந்த வியாழக்கிழமை இரு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றதாக அங்கிருப்போர் குறிப்பிட்டுள்ளனர். விமானநிலையத்தின் முனையில் இருக்கும் கால்வாய் பகுதியில் பல டஜன் சடலங்கள் வைக்கப்பட்டிருக்கும் படங்களை அங்கிருக்கு ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஆப்கான் நாட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது. தவிர 150க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

வெளிநாட்டினர் மற்றும் தலிபான்கள் ஆட்சியில் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்திருக்கும் ஆப்கானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

‘இந்த நடவடிக்கையை நாம் பூர்த்தி செய்ய வேண்டும், அதனை நாம் செய்வோம்’ என்று அவர் குறிப்பிட்டார். இந்தத் தாக்குதலை நடத்திய குற்றவாளிகளை பிடிப்போம் என்றும் அவர் உறுதி அளித்தார்.

கடந்த ஓகஸ்ட் 15 ஆம் திகதி ஆப்கான் தலிபான்களிடம் வீழ்ந்ததை அடுத்து அந்நாட்டில் இருந்து 100,000க்கும் அதிகமானவர்கள் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்கப் படை வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்கு ஆப்கானில் இருந்து வெளியேற தீர்மானித்திருக்கும் நிலையில் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு விமானநிலையத்தை நோக்கி நூற்றுக்கணக்கான ஆப்கானியர் குவிந்துள்ளனர்.

எனினும் இந்த நடவடிக்கையை பூர்த்தி செய்வதாக உறுதி அளித்திருக்கும் பைடன், ‘பயங்கரவாதிகளுக்கு பயந்து பின்வாங்கமாட்டோம்’ என்று கூறியுள்ளார்.

உள்ளூர் நேரப்படி கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணி அளவிலேயே தாக்குதல்கள் இடம்பெற்றன.

ஆப்கான் மற்றும் பிரிட்டன் படைகள் மக்கள் விமானநிலையத்திற்குள் அனுமதிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த அபெய் வாயிலை இலக்கு வைத்தே முதல் தாக்குதல் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றது.

சில நிமிடங்கள் கழித்து பிரிட்டனுக்கு செல்ல எதிர்பார்த்திருக்கும் ஆப்கானியர்களை ஏற்பது தொடர்பில் செயற்பாடுகளை மேற்கொள்ள பிரிட்டன் அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட ஹோட்டல் ஒன்றில் இரண்டாவது குண்டு வெடித்துள்ளது.

ஏற்கனவே இங்கு ஐ.எஸ் குழுவினரால் தற்கொலை தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல் அதிகம் இருப்பதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அதிகாரிகள் எச்சரித்திருந்தபோதும் தாக்குதல் நடத்தப்படும்போதும் அங்கு பெரும் கூட்டம் கூடி இருந்தது.

இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ் குழு உரிமை கோரியுள்ளது.

‘நாம் மன்னிக்கவோ மறக்கவோ மாட்டோம். அவர்களை வேட்டையாடி இதற்கு விலை கொடுப்போம்’ என்று ஜனாதிபதி பைடன் குறிப்பிட்டார்.

இந்த தாக்குதல்களில் பதின்மூன்று அமெரிக்க படையினர் கொல்லப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகத் தலைவர் ஜெனரல் பிரான்க் மெக்கன்சி தெரிவித்தார். கடந்த 2020 பெப்ரவரி மாதத்திற்கு பின்னர் ஆப்கானில் அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்படும் முதல் சம்பவமாக இது உள்ளது.

ஐ.எஸ் குழுவின் அச்சுறுத்தல் இன்னும் உச்ச கட்டத்தில் நீடிப்பதாகக் குறிப்பிட்ட ஜெனரல் மெக்கன்சி, மேலும் தாக்குதல்களை தடுப்பதற்கு அமெரிக்கப் படை தலிபான்களுடன் இணைந்து செயற்படுவதாகவும், இது போன்ற பலதை தலிபான்கள் தடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

எனினும் இந்தத் தாக்குதல் ஓகஸ்ட் 31 காலக்கெடுவுக்கு வெளியேற்ற நடவடிக்கைகளை எட்டுவதில் அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது காபூல் விமானநிலையத்தில் 5,800 அமெரிக்க துருப்புகள் மற்றும் மேலும் 1,000 பிரிட்டன் துருப்புகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

இதுவரை ஆப்கானில் இருந்து 104,000 பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் 66,000 பேர் அமெரிக்கா மூலமாகவும் மேலும் 37,000 பேர் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மூலமாகவும் காபூலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நாட்டை விட்டு வெளியேற தொடர்ந்து சுமார் 5,000 பேர் விமானநிலையத்தில் காத்திருப்பதோடு மேலும் பலர் சோதனைகளை கடந்து விமானநிலைத்திற்குள் நுழைய முயன்று வருகின்றனர்.

கனடா, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் உட்பட பல நாடுகளும் ஏற்கனவே வெளியேற்ற நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளன.

கடந்த ஆறு ஆண்டுகளாக காபூல் விமானநிலையத்திற்கு பாதுகாப்பு வழங்கி வந்த துருக்கி அங்குள்ள தமது துருப்புகளை திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.

எனினும் தமது அரசின் மூத்த அதிகாரிகளுடன் அவசரக் கூட்டத்தை நடத்திய பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், வெளியேற்ற நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதாக அறிவித்துள்ளார்.

காபூல் விமான நிலையத்தில் இருந்து ஆட்களை வெளியேற்றும் பணியில் பிரிட்டிஷ் படையினர் கடைசி கட்டத்தை எட்டிவிட்டதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் நாட்டினர் மற்றும் வெளியேற்றத்துக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டவர்கள், விமான நிலையத்தில் உள்ளவர்கள் தொடர்பாக மட்டுமே கவனம் செலுத்தப்படும். புதிதாக யாரும் வெளியேற்றுவதற்காக அழைக்கப்படமாட்டார்கள்.

“(விரும்புகின்ற) எல்லோரையும் வெளியேற்ற முடியவில்லை என்ற வருத்தத்துடனே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது,” என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் பென் வேலஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்கை நியூஸ் தொலைக்காட்சிக்கு அவர் பின்னர் அளித்த பேட்டி ஒன்றில், காபூல் விமான நிலையத்தில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதல் தங்கள் வெளியேறும் திட்டத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று தெரிவித்திருந்தார்.

காபூல் தாக்குதலுக்கு உலகின் பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.   நன்றி தினகரன் 





எத்தியோப்பியாவில் இனரீதியான வன்முறைகளினால் 210 பேர் பலி

எத்தியோப்பியாவின் பதற்றம் மிக்க ஒரோமியா பிராந்தியத்தில் கடந்த ஒருசில நாட்களில் இடம்பெற்ற இன வன்முறைகளில் 210க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக எத்தியோப்பிய மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேற்குப் பிராந்தியத்தின் கிடா கிரிமுவில் இருந்து பாதுகாப்பு படையினர் வெளியேறிய பின்னர் அந்தப் பகுதிக்கு ஒரோமோ கிளர்ச்சிக் குழுவினர் வந்திருப்பதாக சாட்சியங்களை மேற்கோள்காட்டி மேற்படி ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

‘அந்தத் துப்பாக்கிதாரிகளால் 150 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக குடியிருப்பாளர்கள் மற்றும் ஏனையவர்கள் ஆணைக்குழுவுக்கு தெரிவித்தனர்’ என்று அந்த மனித உரிமை அமைப்பு குறிப்பிட்டது.

இந்த தாக்குதல்கள் காரணமாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் அண்டைய பகுதிகளுக்கு வெளியேறி இருப்பதோடு இதனால் பழிதீர்க்கும் கொலைகள் அதிகரித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

‘அடுத்தடுத்த நாட்களில் சில குடியிருப்பாளர்கள் இனரீதியாக நடத்திய பழிவாங்கும் தாக்குதல்களில் 60 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்’ என்று ஆணைக்குழு குறிப்பிட்டது.

இந்த தாக்குதல்களை தடுக்க உடன் நடவடிக்கை எடுக்கும்படி அரசினால் நடத்தப்படும் அந்த மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.     நன்றி தினகரன் 





மூளைக்குள் இன்னுமே தலிபான்களின் அந்த ஒற்றைத் தோட்டாவின் வலி!

பெண்களின் கல்விக்காகப்பாகிஸ்தானில் குரல் கொடுத்து வந்த மலாலா மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தியிருந்த நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் அவர்களது ஒற்றை துப்பாக்கி தோட்டா காரணமாக ஏற்பட்ட பாதிப்பிற்குச் சிகிச்சை பெற்று வருவதாக மலாலா தெரிவித்துள்ளார்.

கடந்த 1996 - 2001 வரை தலிபான்கள் ஆட்சியிலிருந்த காலப் பகுதியில் அடக்குமுறைகளே இருந்தன. பெண்களுக்கான உரிமை முற்றிலுமாக மறுக்கப்பட்டது. பாடசாலை செல்வது, வேலைக்குச் செல்வது போன்ற அடிப்படை உரிமைகள் கூட பெண்களுக்கு வழங்கப்படவில்லை. பெண்கள் வீடுகளை விட்டு வெளியே வரும்போது புர்கா அணிந்திருக்க வேண்டும் என அறிவித்துள்ள தலிபான்கள், ஆண் துணை இல்லாமல் பெண்கள் வீடுகளை விட்டு வெளியேறக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர். மேலும், ஆண் பெண் இருபாலர் இணைந்து படிக்கும் கல்வி முறைக்கும் தடை விதித்துள்ளனர். இந்தச் சூழலில் பாகிஸ்தானில் பெண் உரிமைக்காகக் குரல்கொடுத்து தலிபான் பயங்கரவாதிகளால் சுடப்பட்ட மலாலா, தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் 9ஆம் திகதி பாடசாலையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த மலாலா மீது தலிபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் ஒரு குண்டு மலாலாவின் இடது கண்ணிற்கு மேற்புறம் துளைத்துச் சென்றது. அவரது மண்டையோட்டை ஊடுருவிச் சென்ற அந்த துப்பாக்கிக் குண்டு, மலாலாவின் நரம்பு மண்டலத்தையும் மூளையின் ஒரு பகுதியையும் சேதப்படுத்தியது. இப்போது பிரிட்டனில் வசிக்கும் மலாலாவுக்கு இந்தத் தாக்குதல் குறித்த நினைவுகள் எதுவும் இல்லை. இதனால் அன்று என்ன நடந்தது என்பது குறித்து அறியத் தனது பாடசாலைத் தோழியைக் கடந்த சில நாட்களுக்கு முன் தொடர்பு கொண்டு பேசியதாக மலாலா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 9 ஆண்டுகளுக்கு முன்பு தலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய போது இந்தத் தோழிதான் மலாலா அருகிலிருந்தவர்.

'என்ன நடந்தது?' என்று தோழியிடம் மலாலா கேட்டுள்ளார். அதற்கு தோழி, "உனது பெயரைக் கூறி தலிபான் பயங்கரவாதிகள் அழைத்த போது நீ அமைதியாக அவர்களை எதிர்கொண்டாய். அவர்கள் துப்பாக்கியால் சுடத் தொடங்கியதும் நீ உனது கைகளால் முகத்தை மூடிக் கொண்டாய். ஒருநொடியில் எல்லாம் நடந்து முடிந்து விட்டன. இரத்த வெள்ளத்தில் நீ என் மடியில் விழுந்தாய். வெள்ளை நிறத்தில் இருக்கும் நமது பாடசாலை பேருந்து உனது இரத்தத்தால் சிவப்பு நிறமாக மாறியது" என்று தனது தோழி கூறியதாக மலாலா பதிவிட்டுள்ளார்.

அன்று நடந்த சம்பவம் குறித்து தனக்கு எந்த நினைவும் இல்லை. ஆனால், அந்த மோசமான நினைவுகள் தனது தோழியை இப்போது வரை தொடர்வதாகவும் மலாலா குறிப்பிட்டுள்ளார். மருத்துவச்

"எனது உயிரைக் காப்பாற்ற பெஷாவர் மருத்துவமனையில் எனது இடது மண்டை எலும்பு அகற்றப்பட்டது. எனது உயிரைக் காப்பாற்றியதில் இது முக்கிய பங்கு வகித்தது. முதலில் இஸ்லாமாபாத் மருத்துவமனைக்கும் பின்னர் இங்கிலாந்து மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டேன். கண் விழித்த போதுதான் நான் உயிருடன் இருக்கிறேன் எனச் சற்று நிம்மதி ஏற்பட்டது. இடைப்பட்ட நாட்களில் நான் கோமாவில் இருந்ததால் என்ன நடந்தது எனத் தெரியவில்லை. கண் விழித்துப் பார்த்த போது என்னைச் சுற்றி வெளிநாட்டு மருத்துவர்கள் இருந்தனர். பாகிஸ்தான் மருத்துவர்கள் எனது உயிரைக் காப்பாற்ற நீக்கிய மண்டை எலும்பை எனது வயிற்றில் வைத்தார்கள். நான் குணமடைந்த பிறகு அந்த எலும்பை மீண்டும் தலையில் வைக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் நோய்த் தொற்று ஏற்படும் என்ற வாய்ப்புள்ளதால் பின்னர் டைட்டானியம் தகட்டை எனது தலையில் வைத்து அறுவைச் சிகிச்சை செய்தனர். 9 ஆண்டுகள் கழித்து நான் இன்னும் தலிபான்களின் அந்த ஒற்றை துப்பாக்கி தோட்டாவிலிருந்து மீண்டு வர முயல்கிறேன் என்றார்.   நன்றி தினகரன் 




No comments: