வருகின்ற ஞாயிறு (6-9-2021) நல்லூர்த் திருமுருகன்த் திருவிழா!

                                                    

                                             சிவமயம்

                      


வரசரண சிவமுருகா!

                                    வைறஸ்சை ஒழித்திடாயோ? வையத்தோர் தனைக்காக்க         

                                  வண்ணத்தேர் ஏறிவாராய்!

 

 

                      சிவஞானச் சுடர் கலாநிதி பாரதி இளமுருகனார்

 

 

 

 


                                           

குன்றுதோறும் குடியிப்போய்! கொடுஞ்சூரன்

                                                                                                   வதைத்தன்று

வென்றுவாகை சூடியசெவ் வேள்முருகன் தேர்விழாவும்

என்றுதானோ வரும்என்று இனிதேகாத் திருந்தவர்கள்

நன்றுவந்தோம் எனநல்லூர் நாடிவந்து கூடிடுவர்!

 

ஊரோடு ஒற்றுமையாய்க் கொண்டாடும் பக்தர்களைச்

சீரோடு வாழவைக்கும் சேந்தனவன் திருவிழாவில்

தாரோடு பொலிந்திலங்கும் சண்முகன்வேல்

                                                                                                        அமர்ந்ததிருத்

தேரோடு வலம்வருவோர் தெருவெல்லாம் நிரம்பிடுவர்!

 

ஆதிரையான் சொரூபநிலைச் சிவமான செவ்வேளே!

அருள்பொழியுஞ் சோதிவைவேல் தேரேறி வருநாளில்

சாதிவேறு பாடின்றிச் சகலரிலுஞ் சிவங்கண்டு

வீதிசுற்றி வினைதீர்க்கும்  தேரிழுக்க ஊர்திரளும்!

 

முருகனுக்கு அரோகராவென் றதிரவெழும்

                                                                                               ஒலியலைகள்!

கருதடியர் ஓதிவரும் பண்ணிசையில் திருமுறைகள்!

பெருகிவரும் பக்தியொடு விரவிவரும் காவடிகள்!

திருமுருகன் விழாக்காணப் போதாதே இருவிழிகள்!

 

கோலமயில் மீதேறிக் கோதையர்கள் அருகிருக்க

வேலதனைக் கரம்பற்றி வெற்றிக்கொடி தூக்கியொளி

காலவருந் திருக்கோலம் கண்டடியர் மெய்சிலிர்ப்ப

ஆலவாயான் திருக்குமரா!  அற்புதத்தேர் ஏறிவாராய்!

 

முப்புரத்தை எரித்திட்ட முக்கண்ணன் சொரூபமானாய்

எப்பொழுதும் கதிநீயே என்றுதினம் உன்பெயரைச்

செப்பிநிற்கும் அடியாரைச் சேவ்வேளே தேரேறித்

தப்பாமற் கரைசேர்க்கத் தயாபராதேர்  ஏறிவாராய்!

 

 

 

 

 

குரவணிபன் னிருவாகா! குமரகுரு பரவேகா!

கொன்றொழிக்கும் கொறோனாவை வென்றொழிக்கத்

                                                                                                        தாமதமேன்?

வரசரண சிவமுருகா! வைறஸ்சை ஒழித்திடாயோ?

வையத்தோர் தனைக்காக்க வண்ணத்தேர் ஏறிவாராய்!

 

தேர்வடத்தை இனிதிழுக்கத் திருவீதி வலஞ்செய்வாய்!

ஊர்நடப்பி லுருக்குலைந்த ஒற்றுமையின் சீர்கேட்டை

யாரிடத்து முறையிடுவோம்? நல்லைநகர்த் திருக்குமரா!

கார்நிறத்து மால்மருகா! கடிதுவந்து காவாயோ?

 

காதலொடு உனையேத்திக் கண்பனிப்பத்

                                                                                        தொழுவோரைச்

சோதனைசெய் யாதினிநற் சுகமருளிக் காப்பாயோ?

பேதலிக்கும் அடியவரைப் பெரிதுவந்து ஆட்கொண்டு

பாதமலர் ஒளிகாட்டிப் பரமுத்தி அளிப்பாயோ?.



                                  

 

 

 

 

 

 

                                                                  

 

 

 

 ----------------------------------------------------------------------------------------

 

No comments: