"இன்னமும் வாழும்" ஈழத்துப் படைப்பாளி மாவை வரோதயன்

 ஏரும் ஊரும் பட்டை நனையும்


எங்கள் அன்னை நெஞ்சினிலே

காரும் சூழும் கண்ணீர் வடிக்கும்

கன்னி மாதா நெஞ்சினிலே

போரும் சூழும் ரத்தம் சுவறும்

பொன்னித் தாயாள் நெஞ்சினிலே

தேரும் ஓடும் சங்கும் முழங்கும்

தேவன் செவ்வேள் கோயிலிலே

 

ஆரைக் காட்டு அழகைக் காட்டி

ஆலிங் கனங்கள் செய்து நிதம்

ஊரைக் கட்டி உவக்கும் மட்டும்

ஊரில் களங்கம் வந்ததென்ன

மாரைக் காட்டிக் களப்பில் ஓடி

மேழித் தனங்கள் செய்த நிலம்

போரைக் கூட்டி பகையில் வீழ்ந்து

போரில் சுடலை யான தென்ன

 

குப்பி லாம்பு ஏற்றி வைத்து

கல்வி கற்கும் கால மிதோ

கப்பி சுற்றி வா னொலிக்கும்

கை கொடுக்கும் ஆதி யிதோ

முற்பிறப்பில் செய்த தீதோ

முற்றிப் போன வீண் முரசோ

தப்பி விட்டால் தாயம் என்று

தஞ்சம் தேடும் நாளிதுவோ?

 

விந்தை மீந்து வளர்ந்த காலம்

வீழ்ந்து ஆதி ஆனதுவோ

சந்தை போட்டு சலித்துப் போன

சாத்வீகங்கள் மாண்டனவே! - மாவை வரோதயன்

 

2004 ஆம் ஆண்டில் சுவடு இல்லாதஈழத்தின் கலைப்படைப்புக்கள்படைப்பாளிகள்மெல்லிசைப்பாடல்கள் குறித்த வானொலி நிகழ்ச்சி ஒன்றை உருவாக்க விழைந்தேன். அதற்கு "முற்றத்து மல்லிகை" என்று பெயர் சூட்டி முதலாவது நிகழ்ச்சியை ஈழத்தின் முன்னோடிக் கவிஞர்களில் ஒருவரான அமரர் நீலாவணனின் மகன்வானொலிப்படைப்பாளி திரு எஸ்.எழில்வேந்தன் அவர்களை முதல் நிகழ்ச்சியின் பகிர்வை வழங்க வானலையில் அழைத்திருந்தேன். தொடர்ந்து வரும் முற்றத்து மல்லிகை நிகழ்ச்சிகளில் ஈழத்தில் நடைபெறும் இலக்கிய நிகழ்வுகளையும்படைப்பாளிகள் குறித்த செய்திகளையும் "ஈழத்தில் இருந்து ஓர் இலக்கியக் குரல்" என்ற ஒலிப்பகிர்வாக கொடுக்க யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று எழில் அண்ணாவிடம் கேட்டபோது அவர் மாவை வரோதயனை அறிமுகப்படுத்தி வைத்தார். அன்றிலிருந்து வாரா வாரம் மாவை வரோதயனின் "ஈழத்தில் இருந்து ஓர் இலக்கியக் குரல்" இரண்டு ஆண்டுகள் வரை நீடித்தது அந்த நிகழ்ச்சியில். வெறும் இலக்கியச் செய்தித் தொகுப்பாக இல்லாது தனக்கே உரிய பாணியில் விமர்சனம் கலந்து அவற்றைக் கொடுத்ததோடுதன் செய்தியை அடியொற்றி ஒரு குறுங்கவியையும் கொடுத்து நிறைவு செய்வார் மாவை வரோதயன். மாவை வரோதயன் என்ற பெயர் இலக்கிய உலகில் அதிகம் தெரியாவிட்டாலும் வீரகேசரி போன்ற பத்திரிகைகளின் வார இதழினைப் பார்த்தால் இவரின் விமர்சனக் கட்டுரைகள்மதிப்பீடுகளை

படித்த எண்ணற்ற வாசகர்கள் இருப்பார்கள். மாவை வரோதயன் அண்ணர் நேற்று அகால மரணமடைந்தார் என்ற செய்தியை இழப்பு குறித்த செய்தியை செ.பொ.கோபிநாத் இன் வலைப்பதிவின் மூலம் அறிந்து மிகுந்த கவலையடைந்தேன்.

 

நான் பணிபுரியும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மாவை வரோதயன் குறித்த நினைவுப்பகிர்வை எனக்கு அவரை அறிமுகப்படுத்திய எழில் அண்ணாவையே வழங்க வேண்டும் என்றெண்ணி அவரைத் தொடர்பு கொண்டேன். தொடர்ந்து மாவை வரோதயன் குறித்த தன் பகிர்வை வழங்குகின்றார் எஸ்.எழில்வேந்தன் அவர்கள்.

 

ஒலி வடிவில்

 

 

மாவை வரோதயன் அவர்களை முதன்முதலாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நண்பர் யோகராஜா அவர்களின் வீட்டில் தான் கண்டேன். யோகராஜா அவர்களின் வீட்டின் ஒரு பகுதியில் தான் மாவை வரோதயன் அப்போது குடியிருந்தார். அந்த வகையில் நான் யோகராஜாவைக் காணச் செல்லும் போதெல்லாம் மாவை வரோதயன் அமர்ந்து உரையாடுவார். நாங்கள் யோகராஜா வீட்டில் கூழ் எல்லாம் காய்ச்சி உண்ட ஞாபகங்கள் இப்போது வருகின்றன.

 

மாவை வரோதயனின் இயற்பெயர் சத்தியகுமாரன். இவர் யாழ்ப்பாணத்தின் வடக்கே உள்ள மாவிட்டபுரம்பளை என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரின் தந்தையார் சிவகடாட்சம் பிள்ளை அவர்கள் பணி நிமித்தம் காரணமாக மட்டக்களப்பிலே சம்மாந்துறை என்ற இடத்திலே இருந்தார். சம்மாந்துறைக்குச் செல்வதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தின் காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரியில் பயின்றவர். சம்மாந்துறையிலே அவர் வசித்த போது சம்மாந்துறை முஸ்லீம் மத்திய கல்லூரியிலும்சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியிலும் அவர் பயின்றிருக்கிறார். அதனால் அவருக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து சில இஸ்லாமிய அமைப்புக்களுக்காக அந்தக் காலத்திலே அவர் சுவரொட்டிகள் எல்லாம் ஒட்டியிருக்கிறார் என்று கூட எனக்கு ஒருமுறை சொல்லியிருக்கிறார். அவருடைய இந்தப் புலம்பெயர் வாழ்வு அதாவது யாழ்ப்பாணத்தில் இருந்து கிழக்கிற்குச் சென்று அங்கே மக்களுடன் வாழ்ந்து பழங்கிய வாழ்க்கை அவருடைய வாழ்க்கையிலே பெரிய விரிவாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொல்ல வேண்டும். பின்னரே முஸ்லீம் நண்பர்கள் மட்டக்களப்பு நண்பர்கள் எல்லாம் இருக்கின்றார்கள். அவர் மட்டக்களப்பைப் பற்றிக் கூட சில பாடல்கள்கவிதைகளை இயற்றியிருக்கிறார். இதற்குப் பின்னர் அவர் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயின்ற பின்னர் தான் கொழும்பிலே நான் அவரைச் சந்தித்த போது பரீட்சைத் திணைக்களத்திலே பணிபுரிந்தார்.

பரீட்சைத் திணைக்களத்திற்குச் செல்கின்ற பலருக்கும் அவர் பல்வேறு வகையிலே உதவி செய்திருக்கிறார். பலர் அவரைப்பற்றிச் சொல்லும் போது யாருக்குமே தெரியாவிட்டாலும் கூட அங்கே உதவிக்குப் போது அங்கே உதவி செய்திருக்கின்றார்.

அதற்குப் பின்னர் அவர் சுகாதாரப் பரிசோதகராகப் (P.H.I) பணிபுரிந்தார். அப்போது வெலிசறையில் உள்ள மார்பு சிகிச்சை நிலையத்தில் இருந்து பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக சயரோகம் சம்பந்தமான சிகிச்சைகளுக்காக இவர் சுகாதாரப் பரிசோதகராகப் பணிபுரிந்தார். பலர் இந்தச் சயரோகம் இருப்பதைக் காட்டிக் கொள்ளாமல் மறைத்துக் கொண்டிருப்பதால் இவர் கொழும்பைச் சூழவுள்ள கிராமங்கள்மூலை முடுக்குகள் எல்லாவற்றிற்கும் சென்று சயரோகக்காரர்களுக்கு அறிவுறுத்திசில சமயம் தன் கைப்பணத்தைக் கூடச் செலவு செய்து வைத்தியசாலையில் சிகிச்சை செய்வதற்காக ஊக்கப்படுத்தினார் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். அவருடன் பணியாற்றிய வேறு நண்பர்களும் இதைச் சொல்லியிருக்கிறார்கள். "இந்த மனுஷன் தன்னுடைய கைக்காசைச் சிலவழித்தே ஆட்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காகச் சிலவேளைகளில் பொருட்கள்சாப்பாட்டுப் பார்சல்களை பிள்ளைகளுக்குக் கொடுத்து தகப்பனை அல்லது தாயை வைத்திய சிகிச்சைக்காக அழைத்துக் கொண்டு செல்கின்ற அந்த மனிதாபிமானம் என்பது அவருக்கு நிறைய இருந்தது.

 

அவரது இலக்கியப் பணிகளைப் பார்க்கும் போது அவர் ஒரு கவிதையாளராகசிறுகதையாளராககட்டுரையாளராக என்று பன்முகப்பட்ட முகங்களைக் காட்டியிருக்கிறார்அவர் நாடகங்களை எழுதியிருக்கிறார். வில்லுப்பாட்டு எழுதி அதில் நடித்திருக்கிறார் என்று பலவிதமாகச் சொல்லலாம். அவர் தேசியக் கலை இலக்கியப் பேரவையின் முக்கிய உறுப்பினராக இருந்தார். கொழும்பிலே தேசியக் கலை இலக்கியப் பேரவையின் இலக்கியக் குழுச் செயலாளராக அவர் நீண்டகாலம் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

 

பின்னர் வானொலிப் பங்களிப்புப் பற்றிச் சொல்வதானால் சில்லையூர் செல்வராசன் செய்து கொண்டிருந்த "பா வளம்" "கவிதைக் கலசம்" போன்ற நிகழ்ச்சிகளிலே அவர் பங்குபற்றியிருக்கிறார். அப்போது அவர் கவிதைகளை அனுப்புகின்ற போது சில்லையூர் செல்வராசன் அவர்கள் அதனைத் திருத்தி அவற்றினை ஒலிபரப்புகின்ற அந்தப் பாங்கிலே மயங்கி அவர் சில்லையூர் செல்வராசனின் ஒரு ஏகலைவனாகவே மாறிவிட்டார் என்று சொல்லலாம். அவரது கவிதைகளைப் பார்த்தால் சில்லையூராரின் அந்த நடைபோக்குகள் இருப்பதைக் கூடக் காணலாம். ஏனெனில் அவர் சில்லையூராரின் கவிதைகளில் ஈர்க்கப்பட்டவர் என்று சொல்லலாம். குறிப்பாக சில்லையூராருக்காக இவர் இறக்கும் வரை வாதாடிக் கொண்டிருந்தார். சிலவேளைகளில் சீரியஸ் கவிஞர் இல்லைசும்மா மேம்போக்காக நகைச்சுவையாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறாரே தவிர அவர் ஒரு தீவிரமான கவிதையாளர் அல்ல என்ற ஒரு குரல் இங்கு எழுந்த போது தொடர்ச்சியாக பத்திரிகைகளிலே மாவை வரோதயன் பல கட்டுரைகள் எழுதியிருக்கின்றார். அவரது தீவிரமானநல்ல கவிதைகளை வெளிக்காட்டியிருக்கின்றார். அந்த வகையிலே அவரது கவிதைப் போக்கைச் சொல்லலாம்.

 

மாவை வரோதயனது கவிதைத் தொகுதி ஒன்று "இன்னமும் வாழ்வேன்" என்று வந்திருக்கிறது. தேசியக் கலை இலக்கியப் பேரவையின் வெளியீடாக அது வெளிவந்திருக்கிறது. அந்த இன்னமும் வாழ்வேன் என்ற கவிதைத் தொகுதியிலே இருக்கின்ற கவிதைகள் அனைத்துமே மரபுக் கவிதைகளாக இருக்கும். ஆங்காங்கே இடங்கள் இருக்கின்ற பகுதியிலே சின்னச் சின்ன சீட்டுக் கவிதைகள் அதாவது சில்லையூராரின் ஊரடங்கப் பாடல்களில் இருக்கின்ற சின்னச் சின்னக் கவிதைகள் போன்று அவற்றை எழுதியிருக்கின்ரார். அவை நகைச்சுவையாகவும் இருக்கும். அவை நகைச்சுவையாகவும் இருக்கும் அதே போன்று குத்திக் காட்டுவது போலவும் இருக்கும். இன்னமும் வாழ்வேன் என்று சொன்ன மனிதர் நேற்று அதிகாலை 1 மணி அளவிலே இறந்து விட்டார். இன்னமும் வாழ்வேன் என்று அவர் கவிதைகளில் அவர் வாழ்வார் என்று அப்போதே அவர் எடுத்துக் கூறினாரோ என்று நான் யோசிக்கின்றேன்.

 

மற்றய அவரது சிறப்பு விமர்சனத்துறை. அவர் எவரையும் விமர்சிக்கத் தயங்குவதில்லை. யாராவது ஒருவர் பிழைவிட்டால் அது நானாக இருக்கட்டும் ஏன் சில்லையூர் செல்வராசனாக இருந்தால் கூட அவர் தொலைபேசி அழைப்பெடுத்துச் சொல்லுவார். எனக்கு ஒரு பிரபல எழுத்தாளர் பெண்மணி சொன்னார். ஒருநாள் இரவு பதினோரு மணி அளவில் தொலைபேசி அழைப்பு வந்தது. அது மாவை வரோதயன் தான், "நீங்கள் காலையிலே நிகழ்ச்சியிலே சொன்ன கருத்து தப்பானம்மா நீங்கள் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாதென்று" இரவு பதினொரு மணிக்கு அவரோடு மிகக் காத்திரமாக உரையாடிக் கொண்டிருந்தாராம். பொறுக்க முடியாமல் அந்த அம்மா சொன்னாராம் "தம்பி! இப்போது இரவு பதினோரு மணி இப்போது பேச நேரம் பொருத்தமாக இல்லைநாளைக்கு அழைப்பெடுங்கள் நாளைக்குப் பேசுவோம் என்று சொல்லுகின்ற அளவுக்கு இருந்ததாம்.

 

அதேபோன்று வானொலியின் பக்கம் மிகவும் கவனத்தைச் செலுத்தினார். வானொலியிலே தமிழ்ப் பிழைகள்தமிழ்க்கொலைகள் அவர் அடிக்கடி என்னிடம் தொலைபேசி அழைப்பெடுத்து "அண்ணா! இப்படி பேசுகிறார்களே என்ன செய்வது நாங்கள்நான் இதைப்பற்றி கட்டுரை எழுதப்போறேன்" என்று தொடர்ச்சியாகத் தன் எதிர்ப்புக் குரலைக் காட்டிக் கொண்டே வந்தார்.

இலக்கியம் தொடர்பாக எந்தத் தவறு நிகழ்ந்தாலும் அது தொடர்பாகத் தனது எதிர்ப்புக் குரலைக் காட்டுகின்ற ஒரு பாங்கு அவரிடம் இருந்தது.

 

அதே போன்று இன்னொரு சம்பவத்தைச் சொல்லலாம். வானொலியிலே ஒரு பெண்மணி பணிப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்திலே அவர் வானொலி நிலையத்தை நடத்துகின்ற பாங்கை வைத்துக் கொண்டு மாவை வரோதயன் நகைச்சுவையாக ஒரு அம்மானை பாடியிருந்தார். அது பத்து பதினைந்து பக்கத்தில் வரக்கூடிய ஒரு நூலாக வெளியிட்டு அதற்கு "வாணி அம்மானை" என்று நினைக்கின்றேன்சரியாக எனக்கு அந்தப் பெயர் தெரியவில்லை. அதில் மிகச்சிறப்பு என்னவென்றால் அந்தப் பெண்மணி செய்கின்ற பணிகளை கிண்டலடித்து மிகவும் நாசுக்காக அம்மானை வடிவத்திலே பாடியிருந்தார். அதில் ஆகச் சிறப்பு என்னவென்றால் அந்த அம்மானை யாருக்கு எதிராகப் பாடப்பட்டதோ அந்தப் பெண்மணியிடமே முன்னுரை வாங்கி அந்தப் புத்தகத்திலே போட்டிருந்தார். அந்தப் பெண்மணிக்கு அவர் என்ன பாடியிருக்கின்றார் என்று தெரிந்ததோ தெரியவில்லை. அந்தப் பெண்மணி தனக்கு எதிராகப் பாடப்பட்ட அம்மானைக்கே முன்னுரை வழங்கியிருந்தார் என்பது மிகச்சிறப்பான ஒரு விஷயம்.

 

மாவை வரோதயனின் "வேப்பமரம்" என்ற சிறுகதைத் தொகுதி வெளிவந்தது. உண்மையில் அவர் சிறுகதைகளில் நாட்டம் கொண்டது வேல் அமுதன் அவர்கள் யாழ்ப்பாணத்திலே நடாத்திய மகவம் என்ற ஒரு இலக்கிய அமைப்பிலே நீண்டகாலம் இருந்தார். இந்த மகவம் அமைப்பு சிறுகதைகளை எழுதுகின்ற முறைகளை இளம் எழுத்தாளர்களுக்குச் சொல்லிக் கொடுத்தது. அதே போன்று ஒவ்வொரு வாரமும் பத்திரிகைகளில் வெளிவருகின்ற சிறுகதைகளை எடுத்து ஓவ்வொரு மாதமும் அவற்றுக்கு பரிசு வழங்குகின்ற அமைப்பாக இந்த வேல் அமுதனின் மகவம் அமைப்பு இருந்து வந்தது. அதிலே அவர் கொஞ்சக்காலம் ஈடுபட்டு அங்கே சிறுகதைகள் எழுதுகின்ற நுட்பங்களைத் தெரிந்து கொண்டார். அவர் ஒருமுறை சொல்லியிருக்கிறார் "சிறுகதை எழுதினால் இது சிறுகதை இல்லை என்று சொல்லுகிறார்களே தவிர எப்படிச் சிறுகதை எழுதுவதென்று எவருமே சொல்லித் தருவதில்லை" என்று அவர் சொல்லியிருக்கிறார். இவரின் வேப்பமரம் என்ற சிறுகதைத் தொகுதியை தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியிட்டது.

 

தேசியக் கலை இலக்கியப் பேரவையின் மாசிகையான தாயகம் பத்திரிகையிலே "வலிகாமம் மைந்தர்கள்" என்ற தலைப்பிலே ஒரு தொடர் எழுதி வந்தார். வலிகாமம் பகுதியிலே வாழ்ந்த மனதைக் கவர்ந்த நபர்கள்பாத்திரங்கள் பற்றி தொடர்ச்சியாக அதில் எழுதி வந்தார். அதைத் தவிர ஐம்பெருங்காப்பியங்களை வைத்துக் கொண்டு அவர் நாடகங்களை எழுதியிருக்கிறார். அவற்றை வினோதன் கலை இலக்கிய மன்றம் என்ற திருமதி ஜெயந்தி வினோதன் அவர்கள் ஒவ்வொரு மாதமும் நடத்திய நிகழ்விலே அந்த நாடகங்கள் அரங்கேற்ப்பட்டிருக்கின்றன. அதைத் தவிர சில வில்லுப்பாட்டுக்களை எழுதி தானே பாடி அவற்றை அரங்கேற்றியும் இருக்கின்றார்.

 

இப்படி பன்முகப்பட்ட ஆற்றல்கள் கொண்ட மனிதராக அவர் இருந்திருக்கின்றார். இந்த வில்லுப்பாட்டுக்கள்நாடகங்கள் என்பவற்றை வெளியிடுவதற்குத் தயாராக இருந்தார். ஆனால் முடியாமல் போய் விட்டது. தேசியக் கலை இலக்கியப் பேரவையின் சோ.தேவராஜா அவர்கள் அது தொடர்பாக கவனமெடுத்திருக்கிரார். அவற்றை வெளியிடுவதற்காக முன்வந்திருக்கின்றார்.

 

சில மாதங்களுக்கு முன்னர் மாவை வரோதயன் மூளைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதை அறிந்து நாங்கள் எல்லோரும் கவலைப்பட்டோம். அவரை உடனடியாக இந்தியாவுக்கு அழைத்துச் செல்லும் பணியை சோ.தேவராஜா தம்பதியினர் இறங்கியிருந்தார்கள். அதற்காக இலக்கிய நண்பர்கள் நாங்கள்நலன் விரும்பிகள் எல்லோரும் எங்களால் முடிந்த அளவு பணத்தைத் திரட்டிக் கொடுத்தோம். தேவராஜா அவர்கள் சில நாடகங்களைக் கூட அரங்கேற்றி அந்த நாடகங்களின் மூலம் கிடைத்த பணத்தைத் திரட்டி இந்தியாவுக்கு அழைத்துச் சென்று அங்கே அவருக்கு சத்திர சிகிச்சை செயதார்கள். அதனாலும் அவரால் குணமடைய முடியாமல் போய் விட்டது. பிறகு இடத்தை மாற்றிப் பார்த்தால் குணமாகும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மாவை வரோதயனை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் சென்றார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் கொஞ்சம் குணமடைந்து வந்த வேளை திடீரென அந்த நோய் முற்றி நேற்று அதிகாலை ஒரு மணியளவில் அங்கே இறந்ததாகச் செய்தி கிடைத்திருக்கிறது.

 

மாவை வரோதயனைப் பற்றிச் சொல்வதானால் நிறையச் சொல்லலாம். அவரது நேர்மையான குணத்தைப் பற்றி அவரது விமர்சனப் பாங்கைப் பற்றிச் சொல்லலாம். அவரது இன்னமும் வாழ்வேன் கவிதைத் தொகுதியில் இருந்து ஒரு கவிதையைச் சொல்லி என் பகிர்வை நிறைவு செய்கின்றேன்.

 

உள்ளதும் கெட்டு உடுதுணியோடு

ஊரினை விட்டு ஓடி வந்தேன்

பள்ளமும் மேடும் பகடையும் தாண்டி

பாழினில் மூழ்கி மீண்டு வந்தேன்!

 

நற்றொழில் தேடி நகரினில் சேர்ந்து

நாரென இற்று வாடி நின்றேன்

புற்றுரை தேரை படுதுயர் வாழ்வில்

பேறென இங்கு ஏது கண்டேன்

 

நித்தமும் நோகும் வயற்றினுக்காக

நேர்வதை செய்து வாழுகின்றேன்

மத்தென ஆட்டி மதி நிறைத்தாரும்

மானிடப் பணியைத் தேர்வதில்லை

 

சுற்றமும் சூழல் சுகமுற வாழ்ந்தும்

சோதனை எந்தன் தோள்களிலே

கற்றது கானல் கனலென ஆயும்

காசெனைச் சேரப் போவதில்லை

 

உண்ணவும் ஓய்ந்து உறங்கவும்

ஊர்க்கதை பேச நேரமில்லை

எண்ணவும் எண்ணி எழுதவும்

ஆற்றலைக் காட்டப் பாதையில்லை

 

எத்தனை தோல்வி எனை மறைத்தாலும்

ஆசைகள் நெஞ்சில் ஆழ வைத்தே

இத்தரை மீதில் இன்னமும் வாழ்வேன்

ஈற்றினில் மேன்மை காணுமட்டும்! - மாவை வரோதயன்

 

இந்தப் பகிர்வின் காணொளி

 

https://www.youtube.com/watch?v=J7pX_D647D4

No comments: