எங்களது மூக்குப்பேணி !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா 


எச்சில்படாப் பேணி 
எங்களது மூக்குப்பேணி
சோக்காகக் குடிப்பதற்கு
பாங்காக வந்தபேணி
ஆர்குடித்து நின்றாலும்
அசுத்தமாகா அப்பேணி

அம்மம்மா சொத்தாக
ஆகிநிற்கும் மூக்குப்பேணி 

சூடாக இருந்தாலும்
குளிராக இருந்தாலும்
இதமாகக் குடிப்பதற்கு
ஏற்றதுதான் மூக்குப்பேணி
பித்தளையில் வெண்கலத்தில்
பிறப்பெடுத்த நல்லபேணி
நித்தமுமே நீரருந்த
சுத்தந்தரும் மூக்குப்பேணி

அண்ணாந்து குடியென்று
அறிவுதந்த மூக்குப்பேணி
அளவாக உட்செல்ல
அமைந்ததுவே மூக்குப்பேணி
சிந்தாமல் சிதறாமல்
சிறப்பாகக் குடிப்பதற்கு
வந்தமைந்த மூக்குப்பேணி
வாய்தநல்ல வரமன்றோ 

குடிப்பதற்கு பாத்திரங்கள்
பலவடிவில் வருகிறது
நிறம்நிறமாய் நித்தமுமே
நிறையவே குவிகிறது 
அத்தனையும் நவீனமாய்
ஆகியே அமைந்தாலும்
எங்களது மூக்குப்பேணி
என்றுமே பெரும்பேணி 

வாய்வைத்து உறுஞ்சுகிறார்
வகைவகையாய் குடிக்கின்றார்
நோயதற்குள் சிக்குண்டு
நொறுங்கியவர் போகின்றார்
பாயதனில் படுக்காமல்
பலநோய்கள் அணுகாமல்
முதலுதவி வழங்கியதே 
மூக்குப்பேணி சிறப்பன்றோ 

மறந்துவிட்ட மூக்குப்பேணி
மனதுக்குள் வருகிறது
மண்ணினது எண்ணங்கள்
அலையலையாய் எழுகிறது
பிறந்தவிடம் வாழ்ந்தவிடம்
பெருங்கனவாய் மலர்கிறது
மறந்துவிட்ட மூக்குப்பேணி
மண்ணின் கதைசொல்கிறது 

யாழ்மண்ணின் சொத்தாக
வந்தமைந்த மூக்குப்பேணி
நம்மிளைய பரம்பரைக்கு
நாமுரைப்போம் மனம்பதிய 
ஊர்நினைப்பை உளமெண்ண
உணர்வூட்டும் மூக்குப்பேணி
ஊர்சென்றால் நீர்குடிப்போம்
உளமெண்ணி மகிழ்ந்திடுவோம் 

No comments: