எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 56 வாழ்நாளில் ஜூலை மாதத்தில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள் ! நினைக்கத் தெரிந்த மனதிற்கு மறக்கவும் தெரியாது ! ! முருகபூபதி


அன்று 1984 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 01 ஆம் திகதி.

 எனது வாழ்நாளில் பல முக்கியமான சம்பவங்கள் இந்த ஜூலை மாதத்தில்தான் நிகழ்ந்துள்ளன.

இம்மாதத்தில் 1951 ஆம் ஆண்டு  13 ஆம் திகதி பிறந்தேன்.  அதே திகதியில் 1972 ஆம் ஆண்டு ஜூலை மாதம்தான் எனது முதலாவது சிறுகதை கனவுகள் ஆயிரம் வெளியான மல்லிகை இதழ், எங்கள் வீடுதேடி தபாலில் வந்தது.

1979 ஆம் ஆண்டு ஜூலை மாதம்தான் எனக்கு திருமணமும் நடந்தது.

வீரகேசரியுடனான எனது தொடர்பு முதலில் நீர்கொழும்பு பிரதேச


நிருபராக 1972 இல் ஜூலை மாதம்தான் தொடங்கியது.

பின்னர் 1977 ஆம் ஆண்டு அங்கு ஒப்புநோக்காளராக இணைந்து,  சிவநேசச்செல்வன் 1984 இல் பிரதம ஆசிரியராக வந்ததும் கிடைத்த துணை ஆசிரியர் பதவியும் இதே  1984 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 01 ஆம் திகதி கிடைத்தது.

ஒப்புநோக்காளர் பிரிவிலிருந்தபோது, கடமை நாட்களில் தினமும் வீரகேசரியின் பக்கங்களை முழுமையாக ஒப்புநோக்கிய பின்னர், பக்கத்தின் இறுதியில் எமது கையொப்பமும் வைத்துவிட்டு, ஆசிரிய பீடத்தில் காண்பிப்பதுதான் நடைமுறை.  அங்கு பிரதம ஆசிரியரோ, அல்லது செய்தி ஆசிரியரோ அவர்களும் ஆசனத்தில் இல்லையாயின் வேறு யாராவது துணை ஆசிரியரோ மேம்போக்காக அதனைப் பார்த்து, ஒப்பமிட்ட பின்னர்தான், குறிப்பிட்ட பக்கம் மீண்டும்  அச்சுக்கோப்பாளர் பிரிவுக்குச்செல்லும். குறிப்பிட்ட  பக்கத்திலும் மேலும் திருத்தவேண்டிய எழுத்துக்கள் இருப்பின் அவற்றையும் மாற்றி வைத்துவிட்டுத்தான்  அச்சுக்குத்தயாரகும்.

எனவே ஒரு பத்திரிகை தயாராகி வெளியே வாசகரிடம் செல்வதற்கிடையில் எத்தனையோ நடந்துவிடும். 

தினமும்  ஆசிரியபீடத்திற்கு இதற்காக சென்று வந்த நான், அன்று  ஜூலை 01 ஆம் திகதி  காலை ,  அங்கு எனக்காக ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் வந்தமர்ந்தேன்.

அங்கிருந்தவர்கள் புன்னகை சிந்தி வரவேற்றார்கள். புன்னகையில் பல ரகம் இருக்கிறது !


செய்தி ஆசிரியர் நடராஜா, வெளியூர்களிலிருந்து அன்று தபாலில் வந்திருந்த செய்திகளை பிரித்து,  சிலவற்றை என்னிடம் தந்து, செம்மைப்படுத்தி தலைப்புகளும் இடச்சொன்னார்.

அச்செய்திகளை எழுதிய வெளியூர் நிருபர்களின் கையெழுத்துக்கள் எனக்கு ஏற்கனவே நல்ல பரிச்சியம்.

யாழ்ப்பாணத்திலிருந்து செல்லத்துரை,  மானிப்பாயிலிருந்து அரசரட்ணம்,  உடுப்பிட்டியிலிருந்து தில்லைநாதன், சுன்னாகத்திலிருந்து நடனசிகாமணி,  தம்பலகாமத்திலிருந்து வேலாயுதம்,  குண்டசாலையிலிருந்து குவால்தீன், கண்டியிலிருந்து க.ப. சிவம்,  திருகோணமலையிலிருந்து இரத்தினலிங்கம், மட்டக்களப்பிலிருந்து நித்தியானந்தன், வவுனியாவிலிருந்து மாணிக்கவாசகர், புங்குடுதீவிலிருந்து துரைசிங்கம், மாத்தறையிலிருந்து முகம்மட், அட்டனிலிருந்து தியாகராஜா ,  வவுணதீவிலிருந்து  இரத்தினசிங்கம்,  அக்கரைப்பற்றிலிருந்து நல்லதம்பி, முதலானோர் தத்தம் பிரதேச செய்திகளை எழுதி தபாலில் அனுப்பிக்கொண்டிருந்த காலம் அது.

யாழ். நிருபர் செல்லத்துரை கடுமையான உழைப்பாளி.  அவரை யாழ்ப்பாணத்தில் ஓரிரு சந்தர்ப்பங்களில்தான் பார்த்துள்ளேன். எனினும் பேசக்கிடைக்கவில்லை. சைக்கிளில் யாழ். குடாநாடெங்கும் அலைந்து திரிந்து செய்திகள் சேகரித்து எழுதி அனுப்பிக்கொண்டிருந்தார். யாழ். நீதிமன்றச்செய்திகள், உட்பட அரசியல் கூட்ட செய்திகள் மற்றும் சமூகச்செய்திகள் வரையில் அவரது எழுத்துக்கள்  வீரகேசரியை ஆக்கிரமித்திருந்தது.

அவர்தான் நிருபர்களில் அதிகம் சம்பாதித்தவர் என்றும்


சொல்லலாம். ஆசிரிய பீடத்திலிருந்த செல்வி நிர்மலா மேனன் அடிமட்டம் வைத்து அளந்து செய்திகளுக்கான கொடுப்பனவுகளை ஒரு பேரேட்டில் எழுதுவார்.

யாழ். நிருபர் செல்லத்துரை அக்காலப்பகுதியில் எம்மைவிட அதிகம் சம்பாதித்தார்.  அவரது கடின உழைப்புக்கு கிடைத்த சன்மானம் அவை. 

இவர் பற்றி எங்கள் மல்லிகை ஜீவாவும் செய்திவேட்டை என்ற சிறுகதையை எழுதியிருக்கிறார்.

நான் ஆசிரிய பீடத்தில் இணைந்த காலப்பகுதியில் செல்லத்துரை எதிர்பாராதவகையில் சுகவீனமுற்று மறைந்தார். அவரது மறைவு வீரகேசரிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகிவிட்டது.

அதன்பின்னர் அவரது மகன் ஒருவர் கோப்பாய் நிருபராக தெரிவானார். எனினும் அந்த இளைஞரால் தந்தையைப்போன்று பிரகாசிக்க முடியவில்லை.

பின்னர் யாழ். அலுவலக நிருபராக காசி. நவரட்ணமும்,  யாழ்நகர் நிருபராக அரசரட்ணமும் நியமிக்கப்பட்டு, ஒரு செல்லத்துரை தனித்து செய்துகொண்டிருந்த பணிகளை இரண்டுபேருக்கு பகிர்ந்துகொடுக்கவேண்டிய சூழ்நிலை வீரகேசரி நிருவாகத்திற்கு வந்தது.

யாழ். குடாநாட்டிலும் வவுனியாவிலும் மட்டக்களப்பு திருகோணமலையிலும் எமது நிருபர்கள் உயிரைக்கையில் பிடித்துகொண்டு செய்தி வேட்டையில் ஈடுட்ட காலம்தான் அது.

1983 கலவரத்துடன்  வடக்கு – கிழக்கில் அடிக்கடி இயக்கங்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் மோதல்கள் தொடர்ந்தன.

சில இயக்கங்கள்  கொள்ளை, திருட்டு, மற்றும்  தனிநபர் கொலைகளிலும் ஈடுபட்டன.  சில சம்பவங்களுக்கு சில இயக்கங்கள் உரிமைகோரின. மின்கம்ப மரண தண்டனைகளும் அதிகரித்தன.


கொள்ளை என்று வந்துவிட்டால்,  அந்த இயக்கங்கள் எதனையும் விடவில்லை. கோயில்கள், பாடசாலைகள், தபால் நிலையங்கள், வங்கிகள், வர்த்தக நிலையங்கள்,  நகை அடவு பிடிக்கும் கடைகள்,  செல்வந்தர் வீடுகள் அனைத்தும் இயக்கங்களின் கைவரிசைக்கு இலக்காகின.

இந்த இயக்கங்களுக்கு ஆயுதம் வாங்குவதற்கும், தமது உறுப்பினர்களை போஷிப்பதற்கும் பணம் தேவைப்பட்டது.

ஆயுதப்படையினரின் தேடுதல்வேட்டைகளும் தொடர்ந்தமையால், பல இளைஞர்கள் கைதாகி சித்திரவதைகளையும் அனுபவித்தனர்.

இவை தொடர்பான செய்திகள் தினமும் வந்து குவிந்துகொண்டிருந்த துர்ப்பாக்கியமான காலப்பகுதியில் எனக்கு துணை ஆசிரியர் நியமனம் கிடைத்தது.

ஆயுதம் ஏந்திய  தமிழ் இளைஞர்களின் இயக்கங்கள் நேரடி மோதலில் ஈடுபடாமல், கெரில்லா தாக்குதல்களையே தொடுத்துவந்தனர்.  பெரும்பாலும் கண்ணிவெடித்தாக்குதலில் சிக்கிய இராணுவத்தினர் எதிர்த்தாக்குதலில் அப்பாவிப்  பொதுமக்களை சுட்டுக்கொன்றனர்.

அந்தச்செய்திகளை வடக்கு – கிழக்கிலிருந்த எமது நிருபர்கள் தொலைபேசியில் தரும்போது, அவற்றை குறிப்பெடுத்துக்கொண்டு, பின்னர் செய்தியாக எழுதி முதலில் மித்திரனுக்கும், அதன்பின்னர் மேலதிக செய்திகள் கிடைக்கும் பட்சத்தில் அவற்றையும் சேர்த்து விரிவாக எழுதி வீரகேசரிக்கும் கொடுக்கவேண்டும்.

செய்தி ஆசிரியர் நடராஜா அவற்றுக்குப்பொருத்தமான தலைப்புகளை இடுவார்.  சில செய்திகளை தலைப்புச்செய்தியாகவும் மாற்றிவிடுவார்.

அவருக்கு இருமருங்கும் அமர்ந்திருக்கும் துணை செய்தி ஆசிரியர்களான சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் எட்வர்ட் ஆகியோரும் நாம் செம்மைப்படுத்திக்கொடுக்கும் செய்திகளுக்கு தலைப்பிடுவர். இரவுக்கடமையில் ஏற்கனவே மித்திரனில் பணியாற்றிய நித்தியானந்தன் செய்தி ஆசிரியராக செயல்பட்டார்.

பிரதம செய்தி ஆசிரியர் நடராஜாவின்  மருமகன் முறையான மயில். தவராஜா மித்திரனை கவனித்தார்.  திருமதி அன்னலட்சுமி இராஜதுரை மித்திரன் வாரமலருக்கும் திருமதி பற்றீஷியா ஆரோக்கிய நாதர் வீரகேசரி இரண்டாம் பக்கத்தில் வெளியாகும் ஆக்கங்களுக்கு பொறுப்பான Feature Editor ஆகவும் பணியாற்றினார்கள்.

பற்றீஷியா, வாரவெளியீட்டில் சமையல் குறிப்புகளும் எழுதிவந்தமையால், அவருக்கு பதார்த்தகுணா என்ற பெயரையும், அரசியல் கட்டுரைகள் எழுதிவந்த ஜோன் ரெஜீஸுக்கு உளியன் என்றும், பின்னாளில் எம்முடன் இணைந்துகொண்ட வீரகத்தி தனபாலசிங்கத்திற்கு சத்தியன் என்றும் புனைபெயர் சூட்டியவர்தான்  வா ரவெளியீட்டுக்குப்பொறுப்பான ஆசிரியர் பொன்.  ராஜகோபால். 

எனக்கு ரஸஞானி என்ற புனைபெயரை வழங்கியவரும் அவர்தான். தனக்கு  டாக்டர் லலிதா என்று பெயர்வைத்துக்கொண்டு,  மித்திரன் வாரமலரில் மருத்துவம் உளவியல், காதல் , இல்லறம்  சார்ந்து வாசகர்கள் எழுதிவரும் கேள்விகளுக்கு பதில் தந்துகொண்டிருந்தார்.

அந்த லலிதா உண்மையிலேயே பெண்தான் என நினைத்துக்கொண்டு,  வீரகேசரி வாயிலுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிய வாசகர்களும் இருந்தனர்!

இதேபோன்று இலங்கை வானொலியில் வித்தியாசமான சினிமா விளம்பரங்களை ஒலிபரப்பி தனக்கென ஏராளமான நேயர்களை தேடிக்கொண்ட கே. எஸ். ராஜா வைத் தேடியும் ஆண் – பெண் நேயர்கள் வானொலி கலையக வாசலுக்கு படையெடுத்துள்ளனர்.

அவர் தனது உருவத்தையும் தலைக்கறுப்பையும் காண்பிக்காமல் மறைந்த கதைகள் பலவுண்டு.  இறுதியில் அவர் அனாதரவாக மறைந்த செய்திதான் ஆழ்ந்த துயரம் தருவது.

வீரகேசரி அலுவலக நிருபர்கள் எஸ். என். பிள்ளை,  ஜோன் ரெஜீஸ்,  சனூன், பால . விவேகானந்தா, கனக. அரசரட்ணம், அஸ்வர், தியாகராஜா, அன்டன் எட்வர்ட், வி. ஆர். வரதராஜா, குகதாசன்,   ஏ. கே. பிள்ளை, சொலமன் ராஜ், ஆர். திவ்வியராஜன்,  எஸ். ஜி. எஸ். சதாசிவம்,  நிலாம்,  ஆகியோர் எழுதித்தரும் செய்திகளும் துணை ஆசிரியர்களான சேதுபதி, ஸி. எஸ். காந்தி, வர்ணகுலசிங்கம், கிண்ணையடி பாண்டியன்,  ஆகியோரிடமும் என்னிடமும் வரும்.

இக்காலப்பகுதியில் பட்டதாரிகள் சிலரையும் வீரகேசரி நிருவாகம் ஆசிரிய பீடத்திற்கு உள்வாங்கியது.

சட்டம் பயின்றிருந்த இ. தம்பையா,  முத்தையா பாலச்சந்திரன்,  ஶ்ரீகாந்தலிங்கம் ஆகியோரும் உள்வாங்கப்பட்டனர்.

தம்பையா,  தற்பொழுதும்   இலங்கையில் சட்டத்தரணியாக பணியாற்றியவாறு அரசியல் ஆய்வுகள் எழுதிவருகிறார்.  ஶ்ரீகாந்தலிங்கம் தற்போது லண்டனிலும் பாலச்சந்திரன் கனடாவிலும் சட்டத்தரணிகளாக அலுவலகம் நடத்தி தங்கள் பணிகளை சிறப்பாக முன்னெடுத்துவருகின்றனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வந்த ரங்கன் தேவராஜன்,  சிறிது காலம் அங்கே பணியாற்றிவிட்டு விடைபெற்றார். இவர் சட்டம் பயின்றவாறு துணை ஆசிரியராக பணியாற்றுவதற்கு அன்றைய நிருவாகம் அனுமதிக்கவில்லை. இறுதியில் அவர் ஏமாற்றத்துடன் திரும்பினார். இந்தத் துர்ப்பாக்கியம் கே. சிவப்பிரகாசம் பிரதம ஆசிரியராக இருந்த காலப்பகுதியில் அவருக்கு  நிகழ்ந்தது,

ஆனால், சிவப்பிரகாசமும், தினகரன் ஆசிரியர் சிவகுருநாதனும் பிரதம ஆசிரியர்களாக பதவி வகித்தவாறே சட்டக்கல்லூரி சென்று சட்டம் படித்தார்கள் என்பதை அன்றைய  நிருவாகம் ஏன்தான் மறந்ததோ தெரியவில்லை.

ரங்கன் தேவராஜன் யாழ்ப்பாணத்தில் தற்பொழுது பிரபல சட்டத்தரணியாக பணியாற்றிவருகிறார். இவரது அக்கா ராஜம் தேவராஜன் இலக்கிய ஆர்வலர். அத்துடன் இவர் யாழ். போதனா மருத்துவமனையில் மருத்துவராகவும் பணியாற்றியவர். தற்போது இங்கிலாந்தில் இருக்கிறார்.

இருவரும் மல்லிகை ஜீவாவின் அபிமானிகள்.

இவர்கள் அனைவருடனும் நான் சுமுகமாக உறவாடியமையால் இற்றைவரையில் இவர்களின் பெயர்களை மறக்க இயலவில்லை.

நினைக்கத் தெரிந்த மனதிற்கு மறக்கவும் தெரியாது அல்லவா..?

 சில ஊடகவியலார்கள் தற்போது உயிரோடு இல்லை. அவர்களின் நினைவுகளை மனதில் தேக்கிவைத்துக்கொண்டே,  எனது எழுத்துப்பயணத்தை தொடருகின்றேன்.  மட்டக்களப்பு நிருபர் நித்தியானந்தன் பின்னாளில் விடுதலைப்புலிகளுடன் இணைந்து அவர்களின் சீருடையும் அணிந்தார். ஒரு சம்பவத்தில் அவரும் கொல்லப்பட்டார்.

அத்துடன் வர்ணகுலசிங்கம் என்ற துணை ஆசிரியர் மட்டக்களப்பிலிருந்து திரும்பி வரும் வழியில் காணாமல்போனார். வவுணதீவு நிருபர் இரத்தினசிங்கமும் ஒரு சம்பவத்தில் ஆயுதப்படையினரால் கொல்லப்பட்டார்.

இச்சம்பவங்கள் யாவும் நான் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்தபின்னர் நிகழ்ந்த அநர்த்தங்களாகும்.

இந்தப்பதிவில் வாசகர்கள், வட – கிழக்கில் எத்தனை இயக்கங்கள் அப்போது இயங்கின என்பதை அவற்றின் பெயர்களுடன் பார்க்கலாம்.

அன்று ஆயுதம் ஏந்திய பல  தமிழ் இயக்கங்கள். இன்றோ ஜனநாயகம் பேசும் பல தமிழ்க்கட்சிகள். 

அன்று  தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களினால் மாறி மாறிச்சுட்டு, சகோதரப் படுகொலைகளை செய்தார்கள்.

இன்று  தமிழ்த்தலைவர்கள் ஆளுக்கு ஆள் எதிராக அறிக்கை விட்டு காகிதப்புரட்சி செய்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.

அந்த ஆயுத இயக்கங்களினதும்,  ஜனநாயக சவடால் அரசியல் தலைவர்களினதும்  செய்திகளை எழுதும் தலைவிதி ஊடகவியலாளர்களுக்கு !

மித்திரனுக்கும் வீரகேசரிக்கும் அன்று  அதிகம் தீனி போட்ட இயக்கங்களின் செய்திகளில் இடம்பெற்ற பல தலைவர்கள் இறுதியில் செய்தியாகியே போனார்கள்.

பல அதிர்ச்சி தரும் செய்திகள் எழுதியதனால் எனக்கு மன அழுத்தங்களும் வந்துள்ளன.

சிலவற்றை இங்கு நினைவூட்டலாம்.

எனக்கு நன்கு தெரிந்த உறவினர்களான  ஒரு குடும்பம்  மலையகம் பலாங்கொடையில் 1981 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தினால்  பாதிக்கப்பட்டு, அகதிகளாக இடம்பெயர்ந்து வவுனியா பூவரசங்குளத்திற்கு வந்து காடு வெட்டி குடிசை அமைத்து வாழ்ந்தது.

நான்கு பெண்குழந்தைகளைக்கொண்ட அந்த குடும்பத்தலைவர் ஒரு வாகனச்சாரதி. வேப்பங்குளத்தில் அமைந்த ஒரு அரிசி ஆலையில் அவருக்கு சாரதி வேலை கிடைத்தது.

தினமும் அதிகாலை எழுந்து மனைவி தரும் உணவுப்பொதியுடன் அவர் பூவரசங்குளம் சந்தியிலிருந்து மன்னாரிலிருந்து வரும் பஸ்ஸில் ஏறி, வேப்பங்குளத்தில் இறங்கி கடமைக்குச்செல்வார்.

அந்த இடத்தில் விடுதலைப்புலிகள் அந்த அதிகாலை வேளையில் கண்ணிவெடி வைத்துவிட்டனர். அதில் சிக்கிய இராணுவத்தினர் சிலர் கொல்லப்பட்டனர்.  அவ்வேளையில் அங்கே வந்து இறங்கிய குறிப்பிட்ட சாரதியான சுப்பையா என்பவர், இராணுவத்தினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானார். அவரது சடலம் ஒரு மலகூடத்தில் கிடந்தது. அவர் இராணுவத்தைக்கண்டு பயத்தில் ஓடி மலகூடத்தில் ஒளிந்திருக்கிறார்.  இராணுவம் வேட்டுக்களை தீர்த்தது.  அவரது சடலம் இரண்டு நாட்களின் பின்னர் அவரது மனைவியின் தம்பியால் வவுனியா ஆஸ்பத்திரி சவச்சாலையில் அடையாளம் காணப்பட்டது.

மற்றும் ஒரு சம்பவம்:

மன்னாரைச்சேர்ந்த ஒரு முஸ்லிம் யுவதி மத்திய கிழக்கிற்கு பணியாற்றச் சென்று திரும்பியிருந்தார். அவரை அழைத்துச்செல்வதற்கு அந்த இரவுவேளையில் மன்னாரிலிருந்து உறவினர்கள் எவரும் வந்திருக்கவில்லை.

இறுதியில் அவர் மன்னார் செல்வதற்கு விமான நிலையத்தில் எத்தனையோ வாடகைக்கார் சாரதிகளிடம் உதவி கேட்டும் எவரும் கிடைக்கவில்லை. இறுதியில்  தமிழ் ஓரளவு பேசத் தெரிந்த ஒரு சிங்களச்சாரதி அந்தப்பெண்ணுக்கு உதவ முன்வந்தார்.

அந்தப்பெண்ணை அவர் பத்திரமாக ஏற்றிக்கொண்டு மன்னாரில் விட்டுவிட்டு திரும்பும்போது, அதே பூவரசங்குளம் சந்தியில் ஒரு இயக்கம் அந்தச்  சாரதியை தடுத்து நிறுத்தி,  கொலைசெய்துவிட்டு அந்தக் காரையும் எடுத்துக்கொண்டது.

வாடகைச்சாரதிகள் சங்கம்,  வீரகேசரியில் குறிப்பிட்ட சாரதியை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்குமாறு  கோரி செய்திகள் எழுதித்தந்தது. அதனை மொழிபெயர்த்து எழுதினேன்.  

சாரதிகள் சங்கத்தின் செயலாளர் பல தடவை வீரகேசரி வாசலில் வந்து நின்றார். ஒரு நாள் காணாமல்போன சாரதியின் மனைவி கண்ணீருடன் தனது குழந்தையையும் ஏந்தியவாறு வந்து நின்றார்.

மற்றும் ஒரு சம்பவம்:

எங்கள் நீர்கொழும்பூரிலிருந்து மூன்று சிங்கள கத்தோலிக்கர்கள் புதிய வாகனம் ஒன்றை வாங்கிவிட்டு. மடுத்திருப்பதியில் அதற்கு பூசை ஒப்புக்கொடுப்பதற்காகச்  சென்றார்கள்.  அந்த வாகனமும் அந்த மூவரும் அதன்பின்னர் திரும்பவே இல்லை. இவர்களையும் ஒரு இயக்கம் கடத்திக்கொன்றது.

அந்தச்சம்பவத்தில் காணாமலாக்கப்பட்ட  ஒரு குடும்பத்தலைவனுக்கும் குழந்தைகள் இருந்தன.  எனது அயல்வீடு.  அந்த வீட்டின் அழுகுரல் தினம் தினம் கேட்டது.

அவர்களையும் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்குமாறு மித்திரனிலும் வீரகேசரியிலும் செய்திகள் எழுதினோம்.

எந்தப்பயனும் இல்லை. இத்தகைய இரத்தக்கறை படிந்த செய்திகளை எழுதி எழுதி மன அழுத்தம் வராமல் மன அமைதியா வரும்.

இந்தப் பத்தியில் நான் எழுதியிருக்கும் இறுதிச்சம்பவத்தின் பின்னணியில் நான் எழுதிய சிறுகதைதான் மனப்புண்கள். ஆனால், இச்சிறுகதையை இலங்கையில் வீரகேசரி, மல்லிகை உட்பட எந்தவொரு இதழும் வெளியிடவில்லை.

இறுதியில் சென்னை தமிழ்ப்புத்தகாலயம் வெளியிட்ட எனது இரண்டாவது கதைத் தொகுதி சமாந்தரங்கள் நூலில்தான் அக்கதை இடம்பெற்றது.

அதனை அத்தொகுப்பின் மகுடக்கதை என்று தமிழ்ப்புத்தகாலயம் அகிலன் கண்ணன் பதிப்புரையில் எழுதியிருந்தார்.

அச்சிறுகதை பின்னர் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது.

வவுனியா வேப்பங்குளத்தில் கொல்லப்பட்ட சாரதியான சுப்பையாவின் மூத்த குழந்தையை நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர் பொறுப்பெற்று கல்வி கற்க ஆதரவு வழங்கினேன்.  அந்த மாணவியுடன்தான் 1988 ஆம் ஆண்டு இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தேன்.

அம்மாணவி சிறந்த முறையில் கல்வி கற்று பட்டதாரியாகி ஆசிரியப்பணியிலும் ஈடுபட்டு பின்னாளில் ஒரு பாடசாலை அதிபரானார். அவரது மூன்று தங்கைமாரும் தற்போது பட்டதாரிகளாகவும் ஆசிரியர்களாகவும் வவுனியா மாவட்டத்தில் பணியாற்றியவாறு தங்களது தாயை பராமரித்து வருகிறார்கள்.

நீடித்த அந்தப்  போரில் தமது தந்தைமாரை தமது குழந்தைப்பராயத்தில்,  இழந்த ஆயிரம் ஆயிரம் பிள்ளைகள் குறித்து எழுதப்படாத கதைகள் ஏராளம் இருக்கின்றன.

அன்று உண்பதற்கும் கொட்டாவி விடுவதற்கும் மாத்திரம் வாயை மக்கள் திறந்த காலத்தில் ஊடகவியலாளர்கள் கத்திமுனையில் நடந்து செய்திகளை எழுதினார்கள்.

பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள். சிலர் காணாமல்போனார்கள்.

நெருப்பாற்றை கடந்து வந்தவர்கள் தற்போது நனவிடை தோய்ந்துகொண்டிருக்கிறார்கள் !

( தொடரும் )

letchumananm@gmail.com

 

 

No comments: