சீனி வாங்க சதொசவுக்கு மக்கள் படையெடுப்பு
மக்கள் பொறுப்புடன் நடந்தால் மட்டுமே கொரோனா கட்டுப்படும்
கொழும்பில் 100 சதவீதம் டெல்டா திரிபு பரவுகிறது - பேராசிரியர் தகவல்
சீனி வாங்க சதொசவுக்கு மக்கள் படையெடுப்பு
நாட்டில் பால்மா, சீனி, எரிவாயு, உட்பட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தை தொட்டும், சில அத்தியாவசிய பொருட்கள் சந்தையில் இல்லாத நிலையில், கல்முனை சதொசவில் நேற்று (27) சீனி 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
சில வகை பால்மா விற்பனை இடம் பெற்றதால் பெருமளவு மக்கள் சதொசவில் குவிந்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது. அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய மக்கள் ஆர்வத்துடன் விற்பனை நிலையத்தை நோக்கி வந்தாலும் நாட்டின் கொரோனா சூழ்நிலை காரணமாக மக்களை கட்டுப்படுத்துவதில் பல்வேறு சிக்கல் நிலைகள் உள்ளதாக கல்முனை சதொச முகாமையாளர் தெரிவித்தார்.
நாட்டின் நடுத்தர வர்க்கம் முதல் உயர்தர வர்க்கம் வரை கொரோனா அலையில் பொருளாதார பாதிப்பை சந்தித்திருக்கும் இந்த சூழ்நிலையில், விலையேற்றம் பாரிய சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்கள் பலதும் பசியுடன் நாட்களை கடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் கரிசனை செலுத்தி அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
(கல்முனை மத்திய தினகரன் நிருபர்) நன்றி தினகரன்
மக்கள் பொறுப்புடன் நடந்தால் மட்டுமே கொரோனா கட்டுப்படும்
இல்லாவிடின் நாட்டை முடக்கியும் பயனில்லை
நாட்டு மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றத் தவறினால் நாட்டை முடக்கியும் தீவிர வைரஸ் பரவலைத் தடுக்க முடியாமற்போகும் என கொரோனா வைரஸ் ஒழிப்புக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். நாட்டில் டெல்டா திரிபு கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் தற்போதைய சூழ்நிலையில் மக்கள் அனைவரும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வது மிக முக்கியம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் டெல்டா திரிபு வைரஸ் மிக வேகமாக பரவக்கூடிய கொரோனா வைரஸாகும். ஒவ்வொருவரும் தம்மை பாதுகாத்துக் கொள்வதில் கவனமெடுத்தால் வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பாக அமையும்.
இதுவரை தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் அருகில் உள்ள தடுப்பூசி நிலையங்களுக்கு சென்று எந்த வகை தடுப்பூசியானாலும் அதனைப் பெற்றுக் கொள்வது அவசியமாகும். நாட்டில் தற்போது வழங்கப்பட்டு வரும் அனைத்து வகை கொரோனா தடுப்பூசிகளும் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து நம்மைப் பாதுகாக்கக் கூடியதே என்பதை மருத்துவ நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே அனைவரும் ஏதாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது மிக முக்கியமானதாகும். நாட்டில் அனைத்து மக்களும் பொறுப்புடன் செயற்பட்டு தமக்கான பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். மனித உயிருடன் சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கல் இது என்றும் இராஜாங்க அமைச்சர் எச்சரித்துள்ளார்.(ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன்
இலங்கையின் மூத்த அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர (65) இன்று காலமானார்.
கோவிட் தொற்று காரணமாக கடந்த 13ம் தேதி கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மங்கள சமரவீர, தீவிர சிகிச்சை பிரிவில் பின்னர் சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் இன்று அதிகாலை காலமானதாக மருத்துவமனை தகவல்கள் உறுதிப்படுத்தின.
இலங்கையின் தென் பகுதியான மாத்தறை மாவட்டத்தில் 1956ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி மங்கள சமரவீர பிறந்தார்.
1983ம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடாக, தனது அரசியல் வாழ்க்கையை மங்கள சமரவீர ஆரம்பித்திருந்தார். அதனைத் தொடர்ந்து,
1989ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்றார்.
1994ம் ஆண்டு சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவின் தலைமையில் ஆட்சி அமைத்த அரசாங்கத்தில் தபால் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சராக மங்கள சமரவீர நியமிக்கப்பட்டிருந்தார்.
2004ம் ஆண்டு துறைமுகம், விமான சேவைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சராகவும் அவர் கடமையாற்றியிருந்தார்.
2005ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையான காலப் பகுதியிலும், 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையான காலப் பகுதியிலும் மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராக கடமையாற்றியிருந்தார்.
2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை இலங்கையின் நிதி அமைச்சராக, மங்கள சமரவீர செயற்பட்டிருந்தார். சுமார் 35 வருடங்களுக்கு மேல் அரசியல் அனுபவத்தை கொண்ட மங்கள சமரவீர, 2019ம் ஆண்டு அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற நிலையிலும், சில அரசியல் செயற்பாடுகளை இறுதித் தருணங்களில் முன்னெடுத்து வந்திருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே, கோவிட் தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மங்கள சமரவீர, இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். நன்றி BBC Tamil
கொழும்பில் 100 சதவீதம் டெல்டா வைரஸ் திரிபு பரவி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டாக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ் திரிபு சூப்பர் டெல்டாவாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வைரஸ் தொற்றாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளின் ஊடாக நடத்தப்பட்ட ஆய்விலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
பேராசிரியர் நீலிகா மலவகே மற்றும் பேராசிரியர் சந்திம ஜீவந்தர ஆகியோரின் தலைமையில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
இலங்கையில் பரவி வருவதாக சந்தேகிக்கப்படும் சூப்பர் டெல்டா பிறழ்வு குறித்து, தொடர்ந்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் இதுவரை பதிவான தினசரி கோவிட் மரணங்களிலேயே அதிகப்படியான மரணம் நேற்று முன்தினம், அதாவது ஆகஸ்ட் 26ல் பதிவானது. அன்றைய தினம் 214 பேர் கோவிட் நோயால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்திருந்தது.
அதற்கு முதல் நாள், 25ம் தேதி, கோவிட் தொற்றினால் 209 பேர் உயிரிழந்தனர்.
இலங்கையில் இதுவரை 4,16,961 கோவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் 353,191 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அத்துடன், 8,371 கோவிட் உயிரிழப்புக்கள் நாட்டில் பதிவாகியுள்ள அதேவேளை, 55,399 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகள், வீடுகள் மற்றும் இடை சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவிக்கிறது.
இதேவேளை, கடந்த 20ம் தேதி நள்ளிரவு 10 மணிக்கு அமல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு, நாளை மறுதினம் (30) தளர்த்தப்படவிருந்த பின்னணியில், மீண்டும் ஊரடங்கு கால எல்லை எதிர்வரும் 6ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கோவிட் - 19 தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, இந்த ஊரடங்கு கால எல்லை நீடிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.
இதேவேளை, கொழும்பில் நூறு சதவீதம் டெல்டா பிறழ்வு பரவி வருவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவர் டொக்டர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
டெல்டாவின் மற்றுமொரு பிறழ்வே, கொழும்பில் பரவி வருவதாகவும் அவர் கூறுகிறார்.
இவ்வாறு கொழும்பில் பரவி வரும் டெல்டா பிறழ்வானது, நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அபாயம் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறான நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் கணிப்பின்படி, இலங்கையை செப்டம்பர் மாதம் 18ம் தேதி வரை மூடினால், சுமார் 7500 உயிர்களை காப்பாற்ற முடியும் எனவும், அக்டோபர் 3ம் தேதி வரை நாட்டை மூடினால் மேலதிகமாக 10,000 உயிர்களை காப்பாற்ற முடியும் எனவும் விசேட மருத்துவர் டொக்டர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது கோவிட் வைரஸ் பரவியுள்ள விதத்தை அவதானிக்கும் போது, வைரஸை தற்போதைக்கு கட்டுப்படுத்த முடியுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
மக்கள் மிகவும் பொறுப்புடன் நடத்துக்கொள்ளாத பட்சத்தில், நாட்டை மேலும் மூட வேண்டிய நிலைமை ஏற்படும் என விசேட மருத்துவர் டாக்டர் பத்மா குணரத்ன குறிப்பிடுகிறார். நன்றி BBC Tamil
No comments:
Post a Comment