வெறும் சோற்றுக்கே வந்தவர்கள் செல்வி கிஷாலினிக்கு நீதிவேண்டும் ! அவதானிகிளிநொச்சியில் காட்டை அண்டிய சிறிய கிராமத்திலிருந்து பதினொரு வயதுச்சிறுமி வள்ளி, ஒரு குழந்தை தொழிலாளர் முகவரினால் ஐம்பது ரூபாய்க்கு பெறப்பட்டு, கொழும்பில் வசதி வாய்ப்புகளுடன் வாழும் கணவன் – மனைவி மாத்திரம் கொண்ட செல்வந்தக்குடும்பத்தின் வீட்டுக்கு வேலைக்காரியாக வருகிறாள்.

தினமும் கோதுமைப்புட்டும்  தேங்காய்ச் சம்பலும் சாப்பிட்டவளுக்கு கொழும்பில் வீட்டு வேலைக்குச்சென்றால் தினமும் இறைச்சியும், மீனும், முட்டையும் உணவாகக் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தைகள் தரப்பட்டு அழைத்துச்செல்லப்படுகிறாள் அந்த வள்ளி.

ஆனால்,  அவள்  கிராமத்தில் கண்ட காட்சிகளை, ஓடி ஆடி விளையாடிய சகோதர சகோதரிகள், அயல்வீட்டுச்சிறுவர், சிறுமியர் இன்றி தனித்துவிடப்பட்டு, பொன்கூண்டுக்குள் சிறைப்பட்ட  பறவையாகிறாள்.

சத்தான உணவுக்கு ஆசைப்பட்டு, தமக்கும் எஞ்சியிருக்கும் ஆறு


குஞ்சுகுறுமான்களுக்கு கிடைக்காது போனாலும் இவள் வள்ளி ஒருத்திக்காவது அவை கிடைக்கட்டுமே, அத்துடன் அவளது உழைப்புக்கான ஊதியத்தையும் அங்கே சென்று பெற்றுக்கொள்ளலாம் என நினைக்கும் குடிகாரத் தந்தைதான் வள்ளி என்ற  அந்தச் சிறுமியை பெற்றவன்.

 ஒருநாள் மகளைப்பார்க்க அவன்  கொழும்பிலிருக்கும் வனப்பு மிக்க அந்த வீட்டுக்கு வந்து மெய்சிலிர்த்துப்போகிறான்.  குடிசையில் வாழ்ந்த தனது மகளுக்கு இங்கே வசிக்க மாளிகையே கிடைத்திருக்கிறதே என்று அகமும் முகமும் மலர, அவளது ஊதியத்தை மாத்திரம் எஜமான் – எஜமானியிடம் பெற்றுக்கொண்டு திரும்பிச் செல்லத்தயராகும்போது,  வள்ளி தானும் உடன் வரப்போவதாக உரத்துக்குரல் எழுப்புகிறாள்.

இக்கதை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெறும் சோற்றுக்கே  வந்தது என்ற தலைப்பில் வத்தளையிலிருந்து வெளிவந்த அஞ்சலி என்ற மாத இதழில் வெளிவந்தது.

அதாவது 1971 ஆம் ஆண்டு வெளிவந்தது. 


செல்வந்தர்களின்  வீடுகளில் வேலைக்கு அமர்த்தி பணம் சம்பாதிப்பதற்காக  ஏழைச்சிறுவர் சிறுமியரை அழைத்துச்செல்லும் தரகர்களை நம்பி,  தங்கள் குழந்தைகளை அனுப்பும்  பெற்றோர்களும்  - சத்தான உணவும் உடு புடவையும் கிடைக்கும் என்ற  கனவுகளோடு கொழும்புக்கு வரும்  குழந்தைகளும் எத்தனை ஆண்டுகள் சென்றாலும் பிரச்சினைகள் நேரும்போது மாத்திரம்தான் செய்தி ஊடகங்களில் வலம் வருவார்கள். 

அவ்வாறு ஒரு செய்திதான் அண்மையில்  கொழும்பு பௌத்தா லோக மாவத்தையில் அமைந்த  முன்னாள் அமைச்சரும்  நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கட்சியின் தலைவருமான ரிஷார்ட் பதியூதினின் வீட்டிலிருந்து  வெளிவந்துள்ளது. 

ஈழத்து எழுத்தாளர் செ. கதிர்காமநாதன் 1971 ஆம் ஆண்டு எழுதிய  வெறும் சோற்றுக்கே வந்தது சிறுகதையில் வந்த  கிளிநொச்சிக் கிராமத்துச்சிறுமி வள்ளி, குடிசையானாலும்,  கோதுமைச் சாப்பாடாயினும்  தன் தாய்வீட்டுக்கு திரும்பிச்  செல்லவே விரும்பினாள். அதற்காகவே  உரத்துக்குரல் கொடுத்தாள்.

ஆனால்,   இந்த மாதம்  நிஜத்தில் நடந்திருக்கும் கதையில்   மலையகத்தில் நுவரேலியா டயகம மூன்றாம் பிரிவு தோட்டத்தைச்


சேர்ந்த ஒரு சிறுமி  செல்வி கிஷாலினி, எரிகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பன்னிரண்டு நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறாள்.

இச்செய்தி வெளியானதும்,  அந்தச்சிறுமி இறந்து இரண்டு நாட்களில்  வீட்டு எஜமான் ரிஷார்ட் பதியூதீனுக்கு எங்கிருந்தோ மாரடைப்பும் வந்துவிட்டது. இப்போது அவரும் மருத்துவமனையில்.

அரசியல்வாதிகளுக்கு  நீதி சார்ந்த நெருக்கடிகள் வந்ததும் இந்த எதிர்பாராத மாரடைப்பும் வந்துவிடும் என்பதும் எழுதப்படாத விதி போலும்.

இந்தச்செய்தியையடுத்து மலையக அரசியல் தலைவர்கள் ஊடகங்களில் அறிக்கை விடுகிறார்கள். மலையகத்தில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கிறார்கள். 

இவர்களது தொகுதிகளிலிருந்துதானே தரகர்களினால் ஏழைச்சிறுவர் சிறுமியர் எத்தனையோ வருடகாலமாக குழந்தைத் தொழிலாளர்களாக தரகர்களினால் ஆசை வார்த்தை காண்பித்து அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

இந்தத் தலைவர்களின் வீடுகளில் பணியாற்றும் வேலைக்காரர்கள் எத்தனைபேர்  என்பதை வெளியே சொல்வார்களா..?

சிறுவர் நலன்களை பாதுகாக்கும் அரச நிறுவனங்கள் என்ன செய்கின்றன..? அதற்காகவே இயங்கும் தன்னார்வத் தொண்டு அமைப்புகள் இது விடயத்தில் எத்தனை விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

முன்னர் தோட்டப்பாடசாலைகளுக்கு வடபகுதியிலிருந்து ஆசிரியப்பணியாற்றச்செல்லும் ஆசிரியர்கள்,  விடுமுறைக்கு ஊர் திரும்பும்போது,  கையோடு ஒரு ஏழைச்சிறுவனையோ சிறுமியையோ அழைத்து வந்துவிடுவார்கள் தங்கள் குடும்பத்தலைவிக்கு ஊழியம் பார்ப்பதற்காக.

இதுபற்றிய கதைகள் ஏராளம்.  

தங்கள் வீடுகளில் பணிக்கமர்த்தப்பட்ட சிறுமிகளை வன்கொடுமை செய்த பெரியமனிதர்களும் நிரம்பிய புனித பூமியில்தான்  குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.


சில வருடங்களுக்கு முன்னர் கிழக்கிலங்கை மூதூரில் 1988 ஆம் ஆண்டு பிறந்த  ரிசானா நஃபீக் என்ற பெண்ணை 1982 ஆம் ஆண்டு பிறந்தவள்  என பொய்யான பிறப்புச்சான்றிதழ் காண்பித்து,   மத்தியகிழக்கிற்கு அனுப்பிவைத்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுத்து,  இறுதியில் அவளை தலையற்ற முண்டமாக அவள் பெற்றோரிடம் ஒப்படைத்த  முகவர் நிறுவனங்கள் -   அரசியல் தலைவர்களை  நாம் மறக்கவில்லை.

   மலையக தோட்டங்களில் வதியும் ஏழைத் தொழிலாளர்களின் குடும்பத்து சிறுவர் சிறுமியரை  தலைநகரின்  செல்வச்சீமான் – சீமாட்டிகள்  படாடோப  வாழ்க்கை வாழும் பங்களாக்களில்  சமைப்பதற்கும்  பாத்திரம் கழுவுவதற்கும் சமைப்பதற்கும் உடு புடைவை கழுவி காயப்போட்டு அயர்ன் போட்டு வைப்பதற்கும் அவர்களுக்கு பணிவிடை செய்வதற்கும்,  பூமரங்களுக்கு தண்ணீர் வார்ப்பதற்கும்  வீட்டுச்செல்லப்பிராணிகளுக்கு வேளா வேளைக்கு உணவு தருவதற்கும்,  தங்கள்  பால்ய காலத்து கனவுகளையும் பள்ளிப்படிப்பையும் பெற்றோரின் அரவணைப்பையும் முற்றாக இழந்து செல்லும் குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றப்படும் பிஞ்சுகள் எத்தனை எத்தனை..?

குழந்தைப் போராளிகளை , குழந்தை தொழிலாளர்களை உருவாக்குதல்  சட்டப்படி குற்றம் எனச்சொல்லப்பட்டிருப்பது சட்டப்புத்தகங்களில் மாத்திரம்தான்.

ஆனால், நடைமுறையில்  சட்டம் தெரிந்த படித்த பெரிய மனிதர்களின் வீடுகளில்தான் குழந்தை தொழிலாளர்கள் மாடாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு சத்தான உணவும் ஆரோக்கியமான வாழ்வும் சிறந்த கல்வியும் வழங்காத தேசங்கள் உருப்படப்போவதில்லை.  எத்தனை அகலமாக்கப்பட்ட விரைந்து செல்லக்கூடிய  வீதிகள் அமைத்தாலென்ன, எத்தனை மாடிக்கட்டிடங்களை தாமரைக்கோபுரங்களாக வான் நோக்கி உயர்த்தி  காட்சிப்படுத்தித்தான் என்ன, கடலிலே  உல்லாச மாநகரம் அமைத்தால்தான் என்ன,  நாளைய எதிர்காலத்திற்கான சந்ததிகளின் வாழ்வில் சுபீட்சத்தை காணாமல்,  அவர்களை உல்லாசிகளின் வீட்டு அடிமைகளாக்கி வைத்திருப்பதை கண்டும் காணாமலிருக்கும்  அரசின் தலைவர்கள் இறுதியில் குழந்தைகளின் சாபத்தையே சம்பாதிப்பார்கள்.

நல்லவை யாவும் குழந்தைகளுக்கே என்று சொன்னவர் மாமேதை லெனின்.  

இலங்கை அரசு குழந்தைகளுக்கு நல்லதை செய்யாவிட்டாலும்,   பள்ளி செல்லவேண்டிய குழந்தைகளை வீட்டு வேலைகளுக்கு அமர்த்துவதை தடுப்பதற்கு கடுமையான சட்டங்களையாவது நடைமுறைப்படுத்தட்டும்.

இல்லையேல் அரசுக்கும் மாரடைப்பு வந்துவிடும்.

( நன்றி:  யாழ். தீம்புனல் வார இதழ் )

---0---

 

 

 

No comments: