எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 52 இராமாயணத்துக்குப் பின்னாலிருக்கும் “ தள்ளாடி “ யின் கதை ! இராணுவத்திற்குப் பின்னாளிருக்கும் மாம்பழக்கதை !! முருகபூபதி


 “  பூபதி  அண்ணன்,  நாங்க இனி காலையில் பஸ்ஸில்தான் ஊருக்குப் புறப்படுவோம்.  வழியில் தள்ளாடி முகாம் வரும். செக்கிங் இருக்கும்  “ என்றார், எங்கள் ஊரைச்சேர்ந்தவரும்  வீரகேசரியில் அச்சுக்கோப்பாளராகவும் பணியாற்றிய தில்லைநாதன்.

இவரை குழந்தைப் பருவம் முதலே நன்கு அறிவேன். அத்துடன் இவரின் குடும்பமும் எமது குடும்பமும் நெருங்கிய உறவினர்கள் போன்று பழகியவர்கள்.  இவரது இரண்டு அக்காமாரும் எனது அக்கா, தங்கையுடன் படித்தவர்கள். இவரது அண்ணன் நவரத்தினராஜா எனது நல்ல நண்பர்.

அந்தப்பயணத்தில் இராணுவ சோதனைச்சாவடியில் ஆளுக்கு ஆள் துணையாக இருப்போம் என்ற தைரியமும் பிறந்தது.

1983 திருநெல்வேலி தாக்குதல் சம்பவத்திற்குப்பின்னர் இலங்கை இராணுவம் மிகவும் உஷார் நிலையிலிருந்தது.

முதல் நாள் இரவு, எனது பொதிகளிலிருந்தவற்றை மாற்றி


அடுக்கினேன்.  அடியில் தமிழ்நாட்டில் வாங்கிய புத்தகங்கள் , பிரசுரங்களை வைத்தேன். மேலே உடைகளை அடுக்கிவிட்டு, சென்னையில் பெற்ற ஒரு அழகிய நடிகையின் உருவம் பொறிக்கப்பட்ட வண்ணக்கலண்டர்களையும்,  வாசனை மிக்க ஊதுவத்தி பக்கட்டுக்களையும்  மதுரை கொண்டையம்பட்டியில் பெற்ற கரும்பு வெல்லக்கட்டிகளில் சிலவற்றை வீட்டுக்கென  வேறாக வைத்துவிட்டு,   ஒரு சில கட்டிகளையும்  தனியாக சுற்றி வைத்தேன்.

தில்லைநாதனுக்கும் அவ்வாறு சில யோசனைகள் சொன்னேன்.

இலங்கை பாதுகாப்பு படையினர் மீது,  எனக்கு எப்போதும் அனுதாபம் இருந்தது.   அவர்கள் குடும்ப வறுமையைப் போக்குவதற்காக  ஆயுதம் ஏந்தி,  களத்திற்கு சென்றவர்கள். மாதா  மாதம் அரசின் சம்பளம் வரும். ஆனால், எமது தமிழ் இளைஞர் -  யுவதிகள்  அப்படியல்ல ! உயிரை துச்சமாக மதித்து கையில் ஆயுதமும் கழுத்தில் சயனைற்றும்  ஏந்தியவர்கள்.

மரணத்திற்காக நேர்ந்துவிடப்பட்ட  தியாகிகள்.  மேதகுவின் உத்தரவுக்கு அமைய வித்தாகின்றவர்கள். இவர்கள் மறைந்தால்  அஸ்தியும் கிட்டாத புனிதர்கள் !


பாதுகாப்பு படையினர் சித்திரை புதுவருடம், வெசாக்,   பொசன்  பண்டிகை காலம் வரும் வரையில் விடுமுறைக்காக காத்திருப்பவர்கள். சிலசமயங்களில் அந்த விடுமுறையும் கிடையாது.

ஒரு சமயம் இவர்களின் மீது பரிதாபப்பட்டு யாழ். மாவட்ட புலிகளின் தளபதி கிட்டு மாம்பழமும் பெட்டி பெட்டியாக வழங்கினார்.

அவர்களின் சமையலுக்கு உதவும்பொருட்டு விறகுகளும் கட்டுக்கட்டாக அனுப்பியிருந்தார்.  இவ்வாறு  எதிரியின் நலனில் மனிதாபிமானம் பார்த்த கிட்டு, தனது இயக்கத்தினுள் பல இளைஞர்களுக்கு மரண தண்டனையும் விதித்தார். அதில் ஒருவர் மாத்தையா என்ற மகேந்திரராஜா. சகோதர தமிழ் இயக்க இளைஞர்களையும் ( ரெலோ )  கோப்பாய் கட்டைப்பிறாயில் விட்டு வைக்கவில்லை !

இராணுவத்தில் இணைந்த சிங்கள இளைஞர்கள், ஊரில் காதலியை விட்டு வந்து, கனவில் மூழ்கியிருப்பார்கள். இரவில் தூக்கத்தை தொலைத்தால், அந்தக்காதலிகள் கனவிலும் வரமாட்டார்கள்.  கிடைக்கும் உறக்கத்திலும் கனவில் புலிகள்தான் வருவார்கள்.

எனது பொதியை சோதிக்கும் இராணுவ சகோதரனுக்கு அழகிய பெண்ணின் கலண்டர் உதவக்கூடும்.  வாசம் நிரம்பிய ஊதுவத்தியும் தேவைப்படலாம்.  வாயில் மென்று சப்புவதற்கு இனிமையான கரும்பு வெல்லமும் தரலாம். பிறகென்ன… எந்தப்பிரச்சினையும் இல்லாமல் ஊர்போய்ச்சேரலாம்.

வழியில் வரும் தள்ளாடி பற்றி ஒரு கர்ண பரம்பரைக்கதை இருக்கிறது.

இலங்கை மீது முதலில் படையெடுத்து வந்த இராமரும், இலக்குமணனும் சீதையை மீட்க நடத்திய போரில் ஒரு கட்டத்தில் இலக்குமணன் படுகாயமடைந்துவிடுகிறான்.  அவனைக்  காப்பாற்ற அநுமான் சஞ்சீவி மலையிலிருந்து மூலிகை எடுத்து வரச்சென்றார். அந்த மூலிகையை பிடுங்கினால் தொட்டால் சுருங்கிபோன்று வாடிவிடும்.  அதனால், சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்து சுமந்து வந்தாராம்.

இக்காலத்தில் இந்த கொரோனோவை தடுக்க எந்த சஞ்சீவி


மூலிகையும் உதவவில்லையே…!

அவ்வாறு அநுமார் சஞ்சீவி மலையுடன் பறந்து வரும்போது தலைமன்னார் அருகே தள்ளாடிவிட்டாராம்.  ஒருவாறு சமாளித்து வந்து சேர்ந்துள்ளார். இலக்குமணன் உயிர் பிழைத்துக்கொண்டார்.

அந்த இடத்திற்கு அதனால் தள்ளாடி எனப்பெயர் வந்ததாம்.

அன்று இராமர் காண்பித்த வழியில்,  1987 இன்பின்னர் இந்திய இராணுவமும் வந்தது.  அதற்கு முன்னர்  நரசிம்ம ராவ்,                          ஜி. பார்த்தசாரதி,  ரொமேஷ் பண்டாரி முதலானோர் நல்லெண்ணத் தூதுவர்களாக  அநுமார் காண்பித்த வழியில் வந்தனர்.  இன்றும் சிலர்  வந்தவண்ணமிருக்கின்றனர்.

இதுவும் தொடர்கதைதான்.

ஆனால்,  இவர்களுக்கு இலங்கையில் சிலை இல்லை.  அநுமார் நுவரேலியாவுக்கு அருகில் இறம்பொடையில்  பென்னாம் பெரிய


  சிலையாக எழுந்தருளிவிட்டார். ஆலயங்கள் தோறும் அவருக்கு வெண்ணெய் படையல் நடக்கிறது.

ஆனால், தற்காலத்தில் வரும் இந்தியத்தூதுவர்கள் இலங்கை அரசுகளுக்கு வெண்ணெய் தடவிவிட்டு செல்கிறார்கள் !

இதுவும் தொடர்கதைதான். போகட்டும் . எனது கதைக்கு வருகின்றேன்.

எதிர்பார்த்தவாறு சோதனைச்சாவடியில் அதிகம் கெடுபிடி இருக்கவில்லை. எனினும் எனது பொதியை சோதித்த அந்த முகம் மறந்துபோன, பெயர் தெரியாத இராணுவ இளைஞனுக்கு ஊதுவத்தி பக்கட் ஒன்றும் அழகிய நடிகையின் கலண்டரும், சில வெல்லக்கட்டிகளும் கிடைத்தன.

அவள் அவன் கனவில் வந்திருக்கமாட்டாள். அவனது அறையின் சுவரில்  இராணுவத்தினர் அனைவருக்கும் காட்சியளித்திருப்பாள்.  தொடர்ந்து வந்த போர்க்காலத்தில் அவன் என்னவாகியிருப்பானோ தெரியாது.


வீரகேசரிக்கு பணிக்குத் திரும்பியதுமே எனது பயணத் தொடரை எழுதத் தொடங்கிவிட்டேன்.  வீரகேசரி வாரவெளியீட்டில்  தமிழகப்பயணத் தொடர் சில வாரங்கள் வெளிவந்தது. மித்திரன் வாரமலரில் பல சுவாரசியமான தமிழகத் தகவல்களை எழுதினேன்.

வாராந்த இலக்கியப்பலகணியிலும் ரஸஞானி என்ற பெயரில் இலக்கிய குறிப்புகள் பதிவேற்றினேன்.

வீரகேசரி வாரவெளியீட்டில் இடம்பெற்ற  இலக்கிய ரீதியான கட்டுரைகளில் பாரதியார், கண்ணதாசன், கி.ரா. சுஜாதா  முதலானோர் இடம்பெற்றனர். அச்சமயம் வீரகேசரி வாரவெளியீட்டில் அதன் ஆசிரியர் பொன். இராஜகோபாலுக்கு துணையாக நண்பர் சிவலிங்கம் பணியாற்றினார். அவர் எனது கட்டுரைகளுக்கு பொருத்தமான தலைப்புகளை சூட்டினார்.

பின்னாளில் இவர் கொழும்பிலிருந்து வெளியான நவமணி வார இதழிலும் பணியாற்றினார்.


மித்திரன் வாரமலருக்கு பொறுப்பாக இருந்த இலக்கிய சகோதரி திருமதி அன்னலட்சுமி இராஜதுரை,  எனது ஆக்கங்களுக்கு போதிய களம் தந்தார்.

இவ்வாறு தொடர்ந்து எழுதியதனால்,  சன்மானமும் கிடைத்தது. எவ்வளவு தெரியுமா..?

வீரகேசரி  வாரவெளியீட்டு கட்டுரைக்கு இருபது ரூபா. மித்திரன் வாரமலர் கட்டுரைக்கு பதினைந்து ரூபா.   வாரத்தில் முப்பத்தியைந்து ரூபா.  இவ்வாறு மேலதிகமாக சம்பாதித்துவிடுவேன். எனது இரண்டு பெண்குழந்தைகளுக்கும் பால் மா வாங்குவதற்கு அந்தப்பணம்  உதவியது.

அவ்வாறு பாலூட்டி வளர்த்து  பழம் கொடுத்து  பார்த்த  எனது செல்லக் கிளிகள்,  தற்போது அவுஸ்திரேலியாவில் தத்தமது கிளிகளுக்கு  பாலும், பழமும் அவுஸ்திரேலிய டொலரில் வாங்கிக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

காலம்தான் எப்படி மாறிவிட்டது !

 “ எமது பெற்றோர் எம்மை தரையில்,    பாயில்  கிடத்தி  உறங்கவைத்தனர்.  நாம் எமது பிள்ளைகளை கட்டில் மெத்தையில் உறங்கவைத்தோம்.  அவர்கள் தமது பிள்ளைகளை  கோடை  காலத்தில் மின்விசிறிக்கு கீழேயும் குளிரூட்டிக்கு அருகிலேயும்  உறங்க வைப்பார்கள்.  “ என்று எமது வீரகேசரி சிரேஷ்ட செய்தி


ஆசிரியர் நடராஜா ஏற்கனவே சொல்லியிருந்தார்.

மனிதவாழ்வில் தலைமுறையின் தாற்பரியம் இதுதான்.

மித்திரன் வார மலரில்  எழுதிய தமிழக செய்திக்குறிப்புகள் மிகவும் சுவாரசியமானவை.

சிலவற்றை இங்கே நினைவூட்டுகின்றேன்.

அமைந்தகரைக்குச் செல்ல சில மணிநேரங்கள் காத்திருந்த கதை.

நான் அவ்வாறு கேட்டிருக்கக்கூடாது. அமிஞ்சிகரை எனக்கேட்டிருக்கவேண்டும் என்று ஆலோசனை !

 “உங்கப்பா இங்கிருந்துபோனார்.  உங்கம்மா சிலோன் பொம்பிளை. அவ தமிழ் பேசுவாவா..?  “ இவ்வாறு கேட்டது ஒரு சென்னை பல்கலைக்கழக மாணவன்.  எனது அப்பாவின் அண்ணன் மகனின் செல்வப்புத்திரன்.  

நுங்கம்பாக்கத்தில் ஒரு சேரிப்புறத்தில் எம். ஜி. ஆரின் பழைய பட சுவரொட்டிக்கு இரண்டு பெண்கள் குடுமி பிடி சண்டை பிடித்த அற்புதக்காட்சி. அவர்கள் வாயில் உதிர்ந்த பொன்மொழிகள்.

( ஜெயகாந்தனின் சினிமாவுக்குப்போன சித்தாளு நாவலை நினைவில்கொள்ளுங்கள் )

சிலுக்கு ஸ்மீதா சாராயக்கடை.

தமிழ்நாட்டில் சிலுக்கு பெற்றிருந்த வரவேற்பு. 

ஒரு திரையரங்கில்  மக்கள் திலகத்தின் திரைப்படம் தொடங்கும்போது  திரையில் அவரது பெயர் வந்ததும்,  கலரியிலிருந்து வீசப்பட்ட  பூக்கள்.  சிலரது கரத்தில் கற்பூரத் தீபாராதணை.

1984 ஆம் ஆண்டு  மே மாதம்  முதல்   சில மாதங்கள் தமிழக பயணக்கட்டுரைகள் எழுதினேன்.  சுஜாதா பற்றி எழுதிய கட்டுரையால் அவர் என்மீது கடுப்பிலிருந்ததாகவும் பின்னர் அறிந்தேன்.

அவர் தனது கோபத்தை நர்மதா பதிப்பகம் இராமலிங்கத்திடம் சொன்னதாக நண்பர்கள் காவலூர் ஜெகநாதனும் மல்லிகை ஜீவாவும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் சொன்னார்கள்.

சுஜாதா சில சமயங்களில்  குசும்புத்தனமாகவும் கருத்துக்களை தெரிவிப்பவர்.  ஒரு சமயம் தான் டோபிக்கு போடும் அழுக்குத் துணிகளின் எண்ணிக்கையும் ஊடகத்தில் இலக்கிய அந்தஸ்து பெற்றுவிடும் என்றும், யாராவது தனக்கு மாதம் இரண்டாயிரம் ரூபா தந்தால்,  தான் எழுதுவதை நிறுத்திவிடுவேன் என்றும் பேசியிருந்தார். அது ஊடகங்களில் வெளிவந்த செய்தி.

இதுபற்றி ஜெயகாந்தன் நடத்திய கல்பனா இதழில் ஒரு வாசகர் கேள்வி எழுப்பியிருந்தார்.

 “ மாதம் இரண்டாயிரம் ரூபா தந்தால்…  “ என்ற விவகாரம் ஒரு கூட்டத்தில் நிகழ்ந்த சம்பவம்.

அதற்கு ஜெயகாந்தன்,                             “ அந்தக்கூட்டத்தில்,  இதோ நான் தருகிறேன் என்று சொல்வதற்கு ஒருவரும் இருக்கவில்லையா..?  “  என்பது ஜெயகாந்தனின் கிண்டலான பதில்.

இதனை நான் எனது கட்டுரையில் எழுதியதால் வந்தது வினை.

எனினும் பிற்காலத்தில்  சுஜாதா எனது மழை என்ற சிறுகதையை ( அக்கினிக்குஞ்சுவில் வெளியானது – பனியும் பனையும் தொகுப்பில் இடம்பெற்றது ) விதந்து குறிப்பிட்டிருந்தார்.  நானும் அவர் மறைந்த பின்னர் சில  பதிவுகள் அவரைப்பற்றி எழுதியிருக்கின்றேன்.

இவ்வாறு  ஜெயகாந்தனின் கோபத்திற்கும் ஒரு சமயம் நான் இலக்காகியிருக்கின்றேன்.

அவர்தான் புலம்பெயர்ந்தோர் இலக்கியம்,   “  புலம்பல் இலக்கியம்   “ என்றவர். அதனைச்சுட்டிக்காண்பித்து நான் எழுதியபோது, அவரது அந்த வாக்குமூலத்தை என்னிடம் சொன்ன ஒரு மலையக எழுத்தாளரிடம்  ,   “ ஏன் அதனை வெளியே சென்று சொன்னீர் ..? எனக்கடிந்து கொண்டாராம்.

அதன்பின்னரும் ஜெயகாந்தனை நான் இரண்டு தடவைகள்              ( 1991 -  2008 ) சந்தித்திருக்கின்றேன்.

எழுத்தாளர்களுக்கிடையில் வரும் இதுபோன்ற ஊடல்கள் – கூடல்கள் தவிர்க்கமுடியாதவை.

1984 இறுதிப்பகுதியில் வீரகேசரி ஆசிரிய பீடத்தில் மாற்றங்கள் நேர்ந்தன.  பிரதம ஆசிரியராக பணியாற்றிய க. சிவப்பிரகாசம்  1983 கலவரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டவர். அவருக்கு  அமெரிக்க தூதரகம் விசேட விசா வழங்கி அமெரிக்காவுக்கு அழைத்தது.

அவருக்காக நடந்த பிரிவுபசாரக்கூட்டத்தில் நான் தமிழிலும் சிங்களத்திலும் உரையாற்றினேன்.

அவர் சிங்கள ஊழியர்களும் அங்கம் வகித்த வீரகேசரி நலன்புரிச்சங்கத்தின் தலைவராக இருந்தவர். அந்தச்  சங்கத்தின் செயற்குழுவில் நானும் அங்கம் வகித்தேன்.  ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் மறைந்தால் மரணச்சடங்கு செலவுகளுக்கு உதவும் மரண சகாய நிதியுதவித்திட்டம், ஊழியர்களுக்கு துவிச்சக்கர வண்டி  வழங்கும்  கடனுதவித்திட்டம் முதலான நல்ல பணிகளையும்  இந்த நலன்புரிச்சங்கம் மேற்கொண்டது.

சிவப்பிரகாசம் விடைபெற்றால், அடுத்து யார் பிரதம ஆசிரியர்..? சிரேஷ்ட துணை செய்தி ஆசிரியர் கார்மேகம் ஏற்கனவே விடைபெற்று தமிழ்நாடு சென்று தினமணியில் இணைந்துவிட்டார்.

சிவப்பிரகாசத்திற்குப்பின்னர் அடுத்து பிரதம ஆசிரியராக வந்திருக்கவேண்டியவர் செய்தி ஆசிரியர் டேவிட் ராஜூ.

அவரை முதலில் இணை ஆசிரியராகவும் ஏற்கனவே துணை செய்தி ஆசிரியர்களில் ஒருவராக பணியாற்றிய நடராஜாவை செய்தி ஆசிரியராகவும் மாற்றிய வீரகேசரி நிருவாகம், அத்துடன் நிற்கவில்லை.

வீரகேசரிக்கு  புதிய பிரதம ஆசிரியர் நியமனத்திற்கு விண்ணப்பங்கள் கோரி ஆங்கிலப்பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தது.

அங்கிருந்து பலரது வாழ்க்கையில் விதி விளையாடத் தொடங்கியது.

( தொடரும் )

letchumananm@gmail.com

 

 

 

 

 

 

  


No comments: