டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் என்னைக் கவர்ந்த இருவர் - செ பாஸ்கரன்

 .டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டி இப்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது தங்கப்பதக்கங்கள், வெள்ளிப் பதக்கங்கள், வெண்கல பதக்கங்கள் என்று பதக்கங்களை உலகநாடுகள் பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதுபற்றி 24 மணிநேரமும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது இதையெல்லாம் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் தான் இருப்பீர்கள். இந்த போட்டியில் என்னை கவர்ந்தது இரண்டு விடயங்கள்.

ஒன்று பெண்களுக்கான ஸ்ட்ரீட் ஸ்கேட்டிங் போர்ட் ( Street Skateboarding)  இதிலே தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறார் 13 வயதான ஜப்பானிய பெண் மோம்ஜி நிஷியா (Momiji Nishiya). இந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட பெண்களுக்கான ஸ்கேட்டிங் போர்ட் போட்டியில் இவர் முதலாவது தங்கப் பதக்கத்தை பெற்றிருக்கின்றார். முதன்முதலாக இந்த ஒலிம்பிக் போட்டியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த விளையாட்டு. ஆண்களுக்கான விளையாட்டு நீண்ட காலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் பெண்களுக்கான இந்த விளையாட்டு இந்த வருடமே ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.அதில் பங்குபற்றிய வயதிலேயே குறைந்த பெண்ணாக 13 வயது கொண்ட இந்த பெண் தங்கப்பதக்கம் பெற்றிருப்பது உலகத்துக்கே ஒரு மிகப்பெரிய சாதனையாக காணப்படுகிறது.


ஆண்களுக்கு மட்டும்தான் ஸ்ட்ரீட் ஸ்கேட்டிங் போர்ட் விளையாட்டு பொருத்தமானது என்று உலகம் பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு அழகான இந்திய திரைப்படம் Street Skateboarding வெளிவந்தது.  மிகத் திறமையாக ஸ்கேட்டிங் போர்ட்டை கையாளக் கூடிய ஒரு பெண்ணின் கதை. ஒரு குக்கிராமத்தில் பிறந்து தனக்குக் கிடைத்த பொருள்களைக் கொண்டு தானாகவே வடிவமைத்து அதை மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளையாடி மகிழ்ந்து கொண்டிருக்கின்றார் அதற்கு தாய் தந்தையரிடம் இருந்தும் சமூகத்திடம் இருந்தும் எதிர்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றது இவற்றை எல்லாம் தாண்டி அவள் தனக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பை பற்றிக்கொள்ளுகின்றாள். அதன்மூலம் அந்தக் கிராமமே வியந்து நிற்கும் படி ஸ்கேட்டிங் போட்டியில் சாதனை படைத்து வெற்றி பெறுகின்றாள். இது அந்த திரைப்படத்தின் உண்மையை தழுவி எடுத்த கதை. அதைப் போல்தான் இந்த பெண்ணும் ஆண்களுக்கானது மட்டுமே என்று எழுதப்பட்ட ஸ்கேட்டிங் போர்ட் விளையாட்டின் முதல் பெண்களுக்கான போட்டியிலே தங்கப்பதக்கத்தை பெற்றிருக்கின்றாள்.

அவளிடம் இந்த வெற்றி பற்றி கேட்டபோது "நான் எதிர்பார்க்கவில்லை ஆனால் என்னை சுற்றி இருந்தவர்கள் எனக்கு தந்த உற்சாகம் நான் இந்த விருதைப் பெற்றிருக்கிறேன் என்று அவர் கூறுகின்றார். பெண்களால் ஸ்கேட்டிங்கில் ஈடுபட முடியாது என்று கூறுபவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள் என்ற ஒரு கேள்விக்கு விளையாட்டு பொதுவானது அதற்கு ஆண் பெண் என்ற பேதம் இருக்கக் கூடாது இது எல்லோருக்குமே பொதுவானது என்று (அந்த குழந்தை என்று கூறலாமா) அந்த சிறுமி கூறியிருக்கின்றார்.

நான் குறிப்பிடுகின்ற இரண்டாவது விடயம் உலகத்திலேயே சிறிய குட்டி நாடு 62 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு பர்முடா, இது கரிபியன் தீவிலே அமைந்துள்ளது. இரண்டு பேர் மட்டுமே இந்த ஒலிம்பிக் பந்தயத்தில் பங்குதாரர்கள் கொடியையும் அந்தே இருவரே கொண்டு செல்வதை Opening Ceremony யில்   பார்த்திருக்ப்பீர்கள். அந்த குட்டி நாட்டிலிருந்து வந்த இரண்டு பெண்களில் ஒருவர் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று அந்த நாட்டிற்கு பெருமை தேடிக் கொடுத்திருக்கிறார். அவர் நாட்டுக்கு மட்டுமல்ல உலகுக்கே பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். 62 ஆயிரம் மக்களில் இருந்து ஒருவர் தங்கப் பதக்கம் பெறக்கூடிய வல்லமை இருக்கின்றது. கோடிக்கணக்கான மக்கள் இருக்கின்ற சில நாடுகள் என்ன செய்து கொண்டிருக்கின்றது என்ற ஒரு கேள்வி என் மனதில் எழுந்தது.


33 வயது கொண்ட Flora Duffy என்ற இந்த பெண்மணி நான்காவது தடவையாக இந்த 2020 ஒலிம்பிக் பெண்களுக்கான ரையத்லான் (Triathlon ) போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் பெற்ரிருக்கின்றார். 2008ம் ஆண்டு பெய்ஜிங், 2012ம்  ஆண்டு லண்டன், 2016ம் ஆண்டு ரியோ என மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் அவர் பெர்முடா சார்பில் பங்கேற்றார். ஆனால் எதிலும் பதக்கங்கள் கிடைக்கவில்லை. Tokyo 2020  ஒலிம்பிக்கில் வென்றுள்ளார் . இதை தன் கனவாக வைத்திருந்தார் அது மட்டுமல்ல தன்னுடைய இந்த குட்டி நாட்டை உலகத்தின் முன் தூக்கி நிறுத்துவது என்பது இவரின் இரண்டாவது கனவு. இதை பார்த்த போது மிக பெருமையாக இருக்கின்றது. தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருந்த அந்தப் பெண்மணி இந்த போட்டியில் அதாவது இந்த போட்டி மூன்று நிலைகள் கொண்ட ஒரு போட்டி முதலில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நீந்திச் செல்ல வேண்டும், அதன்பின்பு 40 கிலோ மீட்டர் சைக்கிளில் ஓடி செல்ல வேண்டும் அதன்பின்பு 10 கிலோமீட்டர் தூரம் ஓடிச் செல்ல வேண்டும் 51.5 கிலோமீட்டர் அளவுகளை கடக்க வேண்டும் , இதுதான் அந்தப் போட்டி இந்த போட்டியை ஒரு மணி 55 நிமிடம் 36 நொடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தை பெற்றிருக்கின்றார்.

இவை இரண்டு ஒலிம்பிக் நிகழ்வுகளும் என்னுடைய மனதை கவர்ந்தது அவர்களுக்கு உண்மையிலேயே எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.


No comments: