உலகச் செய்திகள்

தடுப்பூசி போட்டால் $100 ஊக்கத் தொகை: ஜோ பைடன் 

சீனா vs அமெரிக்கா: அணு ஆயுத திறனை மேம்படுத்த சீனா அமைக்கும் ரகசிய தளங்கள் - புதிய அறிக்கை

ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று புதிய உச்சம்

 2 ஆண்டுகளின் பின் பேச்சுவார்த்தைக்கு வட, தென் கொரிய தலைவர்கள் இணக்கம்

ஈராக்கில் அமெ. துருப்புகளின் போர் ஆண்டு இறுதியில் முடிவு

தடுப்பு மருந்து பெற்ற சுற்றுலா பயணிகளுக்கு பிரிட்டன் அனுமதிதடுப்பூசி போட்டால்  $100 ஊக்கத் தொகை: ஜோ பைடன் 


பைடன்

அமெரிக்காவில் கொரோனா தொற்றுகள் மீண்டும் அதிகரித்திருக்கும் நிலையில் தடுப்பூசி போட்டால் 100 டாலர் ஊக்கத் தொகை வழங்க மாநிலங்களுக்கு ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார்.

தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு புதிய விதிமுறைகளையும் அவர் அறிவித்திருக்கிறார். இதன்படி அரசு ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அமெரிக்காவில் இதுவரை பாதிக்கும் குறைவான மக்களே தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பதாக அரசு தரவுகள் கூறுகின்றன.

டெல்டா திரிபு மிக வேகமாகப் பரவி வருவதால் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதாக வெள்ளை மாளிகையில் பேசும்போது ஜோ பைடன் கூறினார்.

எனினும் தடுப்பூசி போட மறுப்பவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் என்றும் பைடன் உறுதியளித்தார்.   நன்றி BBC தமிழ் .


சீனா vs அமெரிக்கா: அணு ஆயுத திறனை மேம்படுத்த சீனா அமைக்கும் ரகசிய தளங்கள் - புதிய அறிக்கை

சீனா ராணுவ வீரர்கள்

ராணுவ மற்றும் ஆயுத பலத்தில் உலகின் மிகப்பொரிய நாடுகளில் ஒன்றாக சீனா உள்ளது.

அணு ஆயுத ஏவுகணைகளை சேமித்து வைக்கும் மற்றும் ஏவும் திறன்களை சீனா மேம்படுத்தி வருவதாக அமெரிக்க அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஷின்ஜியாங் மாகாணத்திற்கு மேலிருந்து எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள், சீனா அணு ஆயுத ஏவுகணைகளை ஏவும் தளம் ஒன்றை அங்கு உருவாக்கி வருவதைக் காட்டுகின்றன என்று ஃபெடரேஷன் ஆஃப் அமெரிக்கன் சயின்டிஸ்ட்ஸ் (எஃப்.ஏ.எஸ்) எனும் அறிவியலாளர்கள் கூட்டமைப்பின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

சீனா தனது அணுஆயுத வல்லமையை அதிகரித்து வருவது குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் கவலை வெளியிட்டுள்ளனர்.

அணு ஆயுதத் தளம் ஒன்றை சீனா உருவாக்கி வருவதாக கடந்த இரண்டு மாதங்களில் வெளியாகியுள்ள இரண்டாவது தகவல் இது.ஏவுகணைகளைச் சேமித்து வைக்கவும், ஏவவும் உதவும் சுமார் 110 குதிர்களைக் கொண்டிருக்கும் அளவுக்கு இந்த தளம் பெரியதாக இருக்கக்கூடும்.

சீனாவின் கான்சு மாகாணத்தின் யூமென் எனும் ஊருக்கு அருகே உள்ள பாலைவனப் பகுதியில் இவ்வாறு சுமார் 120 குதிர்கள் காணப்பட்டன என்று கடந்த மாதம் வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டது.

திங்களன்று வெளியிடப்பட்ட எஃப்.ஏ.எஸ் அமைப்பின் அறிக்கையின்படி ஹமி எனுமிடத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்த புதிய தளம் யூமெனில் இருந்து வடமேற்கே சுமார் 380 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது என்றும் இதன் கட்டுமான பணிகள் மிகவும் தொடக்க நிலையில் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

China expanding its nuclear capabilities, scientists say

குதிர்கள் உள்ள தளத்தின் மேலே வெப்பநிலையைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ள குவிமாடம்.

அமெரிக்க பாதுகாப்பு துறையின் ஓர் அங்கமான 'யூஎஸ் ஸ்ட்ரேடஜிக் கமேண்ட்' சீனா ஆயுத பலத்தை அதிகரித்து வருவது தொடர்பாக தனது கவலையை ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

"உலகம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் அதிகரித்து வருவது மற்றும் அதைச் சுற்றியுள்ள ரகசியத் திரை ஆகியவை குறித்து இதுநாள்வரை நாங்கள் கூறி வந்ததை இந்த இரண்டு மாத காலங்களில் இரண்டாவது முறையாக பொதுமக்கள் அறிந்துள்ளனர்," என்று அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.

ஷின்ஜியாங் மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏவுகணை தளத்தை முதலில் வர்த்தக நோக்கிலான செயற்கைக் கோள் ஒன்றின் படம் மூலம் கண்டறிந்தனர்.

அதன்பின்னர் செயற்கைக்கோள் புகைப்படங்களை வழங்கும் நிறுவனமான 'ப்ளானட்' எனும். நிறுவனத்தால் மூலம் அதிக துல்லியத் தன்மை வாய்ந்த படங்கள் வழங்கப்பட்டன.

குறைவான அளவில் உள்ள தமது அணுஆயுத கையிருப்பை இரண்டு மடங்கு ஆக்குவதற்கு சீனா முயற்சித்து வருகிறது என்று 2020ஆம் ஆண்டு அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் தெரிவித்தது.   நன்றி BBC தமிழ் .


ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று புதிய உச்சம்

ஆசிய நாடுகளில் கொவிட்-19 நோய்த் தொற்றுச் சம்பவங்கள் புதிய உச்சங்களைத் தொடுகின்றன.

தாய்லாந்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் நேற்று புதிதாக 16,500 பேருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் 133 பேர் நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தாய்லாந்தில் இதுவரை சுமார் 543,000 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

4,300 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

தென் கொரியாவிலும் முன்னெப்போது இல்லாத அளவில் நேற்று புதிதாக 1,900 பேருக்கு நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

நான்காம் கட்ட நோய்ப்பரவலாலும் வேகமாகப் பரவும் டெல்ட்டா வகைக் கொரோனா வைரஸாலும் தென் கொரியா

தடுமாறி வருகிறது.

தலைநகர் சோலில் மட்டும் 600க்கும் அதிகமானோருக்கு புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

தற்போது தென் கொரியாவில் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளிலும் அண்மைக்காலமாக நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.   நன்றி தினகரன் 2 ஆண்டுகளின் பின் பேச்சுவார்த்தைக்கு வட, தென் கொரிய தலைவர்கள் இணக்கம்

வட கொரியா, தென் கொரியா நாடுகளின் தலைவர்கள் இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க ஒப்புக்கொண்டனர்.

உலக நாடுகளின் எதிர்ப்பு, ஐ.நா தீர்மானங்கள் என எதையும் பொருட்படுத்தாமல் அணு ஆயுதம், ஏவுகணை சோதனைகளை வட கொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனால், அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.

இதன் காரணமாக அமெரிக்கா, வடகொரியா இடையே நேரடியாக பகை ஏற்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன், 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதங்களில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் இடையே 2 முறை வரலாற்று சிறப்புமிக்க பேச்சுவார்த்தை நடந்தது.

ஆனால், இவை தோல்வியில் முடிந்ததால், அதன் பின்னர் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. இதனிடையே, எல்லையில் தங்கள் நாட்டிற்கு எதிராக துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பதை தடுக்க தவறி விட்டதால் தென் கொரியாவுடனான அனைத்து பேச்சுவார்த்தையையும் வட கொரியா கடந்தாண்டு முறித்து கொண்டது.

ஆனால், கடந்த ஏப்ரல் முதல், தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன், வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் இருதரப்பு உறவை பலப்படுத்த விரும்புவதாக தனிப்பட்ட முறையில் தொடர்ந்து பல கடிதங்கள் எழுதினர்.

இதன் விளைவாக, இரு நாடுகளின் உறவை வலுப்படுத்த மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இது குறித்து தென் கொரிய செய்தி தொடர்பாளர் பார்க் சூ யூன் கூறுகையில், "இரு தரப்பிலும் பரஸ்பர உறவை விரைவில் மீண்டும் வளர்த்து கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.     நன்றி தினகரன் 


ஈராக்கில் அமெ. துருப்புகளின் போர் ஆண்டு இறுதியில் முடிவு

ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படையினர் போர் நடவடிக்கையில் ஈடுபடுவது இந்த ஆண்டு இறுதியுடன் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

இருப்பினும் தொடர்ந்து அவர்கள், ஈராக்கிய இராணுவத்தினருக்குப் பயிற்சியளித்து ஆலோசனை வழங்கிவருவர்.

ஈராக்கியப் பிரதமர் முஸ்தபா அல்-காதிமியை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசிய பின்னர் அமெரிக்க ஜனாதிபதி அதுபற்றி அறிவித்தார். ஈராக்கில் தற்போது, அமெரிக்கத் துருப்பினர் 2,500 பேர் உள்ளனர். ஐ.எஸ். குழுவில் எஞ்சியுள்ளோரை முறியடிப்பதில் ஈராக்கியப் படையினருக்கு அவர்கள் உதவி வருகின்றனர். ஈராக்கில் எஞ்சியிருக்கும் அமெரிக்கத் துருப்பினரின் எண்ணிக்கை, அப்படியே நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது, ஈராக்கியப் பிரதமருக்கு உதவும் முயற்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது   நன்றி தினகரன் 
தடுப்பு மருந்து பெற்ற சுற்றுலா பயணிகளுக்கு பிரிட்டன் அனுமதி

தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு இங்கிலாந்து முழுமையாக எல்லைகளைத் திறந்துவிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியவற்றைச் சேர்ந்தோர் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமின்றி இங்கிலாந்து செல்லலாம். அந்தத் தகவலை இங்கிலாந்தின் போக்குவரத்து அமைச்சர் கிரான்ட் ஷாப்ஸ் கடந்த புதனன்று ட்விட்டர் பதிவு மூலம் உறுதிப்படுத்தினார்.

ஓகஸ்ட் 2ஆம் திகதி பிரிட்டன் நேரப்படி அதிகாலை 4 மணி முதல் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியவற்றில் ஒப்புதல் அளிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டும் தான் அனுமதி வழங்கப்படும். நாட்டிற்குள் வருவதற்கு முன் பயணிகள் தங்களுக்கு நோய்த்தொற்று இல்லை என்பதை பரிசோதனை மூலம் உறுதிப்படுத்த வேண்டும். நாட்டிற்குள் வந்த பின்னர் இரண்டாவது நாள் பயணிகள் பீ.சி.ஆர் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். பயணத்துறையை மீட்க சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று பிரிட்டனின் ஹீத்ரோ விமான நிலையம் சில நாட்களுக்கு முன்னர் கோரிக்கை விடுத்திருந்தது. ஜூலை 19ஆம் திகதி முதல் பிரிட்டனில் கொவிட்-19 தொடர்பான அனைத்துத் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன. இருப்பினும் அங்கு நோய்த்தொற்றால் தொடர்ந்து பலர் பாதிக்கப்படுகின்றனர்.  நன்றி தினகரன்
No comments: