இலங்கைச் செய்திகள்

 இலங்கை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் இறந்த சிறுமி: தோண்டி எடுக்கப்பட்ட உடல்

புத்தளத்திலிருந்து வருகை தந்த மீனவரால் முல்லைத்தீவில் உருவெடுக்கும் பேராபத்து!

இலங்கையின் மீதான இந்திய - சீன கரிசனை

பணிப்பெண்களும் மனிதப் பிறவிகளென்ற மனிதநேயம், கருணை மேலோங்கட்டும்!

உண்மைகளை மறைக்க அனுமதிக்கக்கூடாது - சோபித தேரர்



இலங்கை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் இறந்த சிறுமி: தோண்டி எடுக்கப்பட்ட உடல்

ரிஷாட் பதியுதீன்

இலங்கை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றி வந்த நிலையில், தீ காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் இன்று (30) மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.

கொழும்பு - புதுகடை நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த 26ம் தேதி வழங்கப்பட்ட உத்தரவிற்கு அமைய இந்த சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 16 வயதான சிறுமி வேலை செய்து வந்த நிலையில், மர்மமான முறையில் தீ காயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் கடந்த 3ம் தேதி அனுமதிக்கப்பட்டது.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு தொடர்ந்தும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், குறித்த சிறுமி கடந்த 15ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

உடலில் சுமார் 72 வீதமான பகுதிக்கு தீ காயங்கள் ஏற்பட்டமையினால் இந்த மரணம் நேர்ந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

அத்துடன், குறித்த சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்டமை பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.

முன்னாள் அமைச்சரின் மனைவி, மாமனார் கைது

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், கொழும்பு தெற்கு விசேட போலீஸ் பிரிவு, பொரள்ளை போலீஸார் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆகியன இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நடத்தி வருகின்றன.

    இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் இடைதரகர் ஆகியோர் கடந்த 23ம் தேதி கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துமாறு கொழும்பு - புதுகடை நீதவான் நீதிமன்றம் கடந்த 24ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.

    அத்துடன், ரிஷாட் பதியூதீன் 2015 முதல் 2019ம் ஆண்டு வரை அமைச்சு பதவிகளை வகித்த போது, அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அதிகாரபூர்வ இல்லத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த மற்றுமொரு யுவதி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரனும் கைது செய்யப்பட்டிருந்தார்.

    சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்டமை

    பட மூலாதாரம்,

    KRISHANTHAN

    குறித்த சந்தேகநபரையும் தடுத்து வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் கடந்த 24ம் தேதி, போலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

    இதன்படி, குறித்த நான்கு சந்தேகநபர்களும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, கடந்த 26ம் தேதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்ததுடன், சந்தேகநபர்களை எதிர்வரும் 9ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிரதம நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

    கொழும்பு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணைகளின் போது, சட்ட மாஅதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான பிரதி சொலிஸ்டர் ஜெனரல் திலிப பீரிஸ், விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

    தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    தற்கொலையா அல்லது படுகொலையா?

    சிறுமியின் உயிரிழப்பு தற்கொலையா, அல்லது படுகொலையா என்பதில் பாரிய சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    குறித்த சிறுமி கடந்த 3ம் தேதி அதிகாலை 6.45 அளவில் தீ காயங்களுக்கு உள்ளாகியிருந்ததுடன், அந்த சிறுமி காலை 8.20 அளவிலேயே 1990 அம்பியூலன்ஸின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

      சிறுமி தங்கியிருந்த வீட்டில் வாகனங்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லாத நிலையில், சிறுமியை அம்பியூலன்ஸின் உதவியுடன் தாமதமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

      அத்துடன், சிறுமியின் பெயர் மற்றும் வயது மாற்றப்பட்டே, மருத்துவமனையின் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் கூறியுள்ளார்.

      உயிரிழந்த சிறுமி தங்கியிருந்த இடமானது, ஒரு கூடாரத்தை போன்றது எனவும், அந்த இடத்தில் காணப்பட்ட கட்டிலின் மீது மண்ணெண்ணெய் அடங்கிய போத்தல் மற்றும் தலையணைக்கு கீழ் லயிட்டர் ஆகியன காணப்பட்டதாகவும் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் திலிப பீரிஸ் தெரிவித்துள்ளார்.

      இந்த வீட்டில் மண்ணெண்ணெய் உபயோகிப்பதற்கான எந்தவித தேவையும் கிடையாது என கூறிய அவர், குறித்த வீட்டில் இதற்கு முன்னர் பணிப் பெண்களாக வேலை செய்ய யுவதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணைகளிலும் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றார்.

      'வாகன ஓட்டுநர் கொண்டு வந்த மண்ணெண்ணெய்'

      தமது வீட்டில் வேலை செய்யும் ஓட்டுநரால் இந்த மண்ணெண்ணெய் கொண்டு வரப்பட்டதாக ரிஷாட் பதியூதீனின் மனைவியின் தாய் வாக்குமூலம் வழங்கியுள்ள போதிலும், ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் தாம் அவ்வாறு மண்ணெண்ணெய் கொண்டு வரவில்லை என கூறியுள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

      ரிஷாட் பதியூதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமியின் சடலம் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது.

      பட மூலாதாரம்,

      KRISHANTHAN

      அத்துடன், ரிஷாட் பதியூதீனின் மனைவியினால் வழங்கப்பட்ட வாக்குமூலத்தில் பரஸ்பரம் காணப்படுகின்றமை, சந்தேகத்தை மேலும் அதிகரிக்கின்றது என அவர் கூறுகின்றார்.

      இதேவேளை, சிறுமி உயிரிழந்ததன் பின்னர், பாதுகாப்பு பிரிவிற்கு சமமான ஆடையொன்றை அணிந்து சென்ற நபர் ஒருவர், குடும்பத்தாருடன் இந்த விடயம் தொடர்பில் சமாதானம் பேசியுள்ளமை, அழுத்தங்களை விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

      இந்த சம்பவத்தை மறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை, இந்த விடயத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

      இதேவேளை, சிறுமி எதிரத்நோக்கிய துன்புறுத்தல்களுக்கு வீட்டுத் தலைவன் என்ற வகையில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்த பிரதி சொலிஸ்டர் ஜெனரல், இந்த வழக்கில் ரிஷாட் பதியூதீனின் பெயரையும் இணைத்துக்கொண்டு விசாரணைகளை நடத்த எதிர்பார்;த்துள்ளதாக நீதவான் முன்னிலையில் தெரிவித்திருந்தார்.

      இந்திய வம்சாவளியினர் பகுதி இளம்பெண்கள்

      இந்திய வம்சாவளித் தமிழர்கள் அதிகளவில் வாழும் மலையகத்தின் டயகம பகுதியிலிருந்தே இந்த சிறுமி அழைத்து வரப்பட்டுள்ளதுடன், ரிஷாட் பதியூதீனின் வீட்டில் இதற்கு முன்னர் பணியாற்றிய 10 இளம்பெண்களும் அதே பகுதியிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

      இலங்கை முன்னாள் அமைச்சர் வீட்டில் இறந்த சிறுமி: தோண்டி எடுக்கப்பட்ட உடல்

      பட மூலாதாரம்,

      KRISHANTHAN

      இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுமிகளில் இருவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளமை குறித்தும் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

      மேலும், ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றியதாக கூறப்படும் ஐந்து இளம்பெண்கள் உள்ளிட்ட 9 பேரிடம் போலீஸார் இதுவரை விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

      இந்த நிலையில், கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு அமைய உயிரிழந்த சிறுமியின் சடலம் இன்று தோண்டி எடுக்கப்பட்டது.

      நுவரெலியா நீதவான் லுஷாகா குமார ஜயரத்னவின் அனுமதியுடன், அவரின் முன்னிலையில் சடலம் இன்று தோண்டி எடுக்கப்பட்டது.

      இந்த சடலத்தை தோண்டி எடுப்பதற்காக மூவரடங்கிய சிறப்பு மருத்துவ குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

      இதன்படி, பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில், நீதவான் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, சடலம் உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, இரண்டாவது பிரேத பரிசோதனைகளுக்காக கண்டி - பேராதனை போதனா மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.

      பேராதனை மருத்துவமனையில் 2வது பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, அறிக்கை விரைவில் கொழும்பு - புதுகடை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

      சிறுமியின் உயிரிப்புக்கு நீதிக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

      தலைநகரம், வடக்கு, கிழக்கு, மலையகம் மாத்திரமன்றி, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் போராட்டங்கள் ஒவ்வொரு நாளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.    நன்றி  BBC தமிழ் 



      புத்தளத்திலிருந்து வருகை தந்த மீனவரால் முல்லைத்தீவில் உருவெடுக்கும் பேராபத்து!

      புத்தளம் மாவட்டத்தில் இருந்து வந்து நாயாறு பகுதியில் குடியமர்ந்து கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் மீன்பிடித் தொழிலாளர்களால் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் பாரிய பிரச்சினைகளை அனுபவிக்கின்றனர். புத்தளத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் முல்லைத்தீவு கரையோரம் வாடி அமைத்துள்ளனர்.

      யூலை மாத தொடக்கத்தில் இருந்து இதுரை அவர்களில் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் தங்களை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்குமாறு கோரி சமீபத்தில் போராட்டம் நடத்தினர். அதனால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

      முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நாயாறு மீனவர்களால் சுகாதார அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இவர்களிடம் முல்லைத்தீவு மாவட்டத்தில் வசிப்பதற்கான எந்தப் பதிவும் இல்லை. இவர்களுக்கான கொவிட் கட்டுப்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதில் சுகாதார பிரிவினர் சவால்களை எதிர்கொள்கின்றனர்.

      சமூகப் பொறுப்பற்ற மக்களாகவும், பாமர மக்களாகவும், அரசாங்க கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு கட்டுப்படாத மக்களாகவும் இவர்கள் காணப்படுகின்றனர். ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வாழ்ந்து வரும் இந்தப் பகுதிக்கு இங்குள்ள மக்கள் செல்வதற்கே அஞ்சுகின்றனர். அங்கு சென்றால் கொரோனா தொற்று ஏற்படுமென மக்கள் அஞ்சுகின்றனர்.

      புத்தளத்தில் இருந்து பருவகால மீன்பிடிக்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாற்று பகுதிக்கு செல்வதற்கு இவர்களுக்கு அனுமதி கொடுத்தது யார்? இவ்வாறான வினா இங்கு எழுந்துள்ளது. இந்த ஆண்டு எவருக்கும் அவ்வாறு அனுமதி கொடுக்கப்படவில்லை என்று கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

      இந்நிலையில் ஆயிரம் வரையான மீனவர்கள் சுமார் 300 படகுகளுடன் இங்கு வந்து தொழில் செய்வதற்கு யார் அனுமதித்தார்கள்? அவர்கள் தொடர்பிலான பதிவுகள் யாரிடம் உள்ளன? இவையெல்லாம் விடை தெரியாத கேள்விகள் ஆகும்.

      இதேவேளை கடற்றொழில் என்ற போர்வையில் இவர்கள் முல்லைத்தீவிற்கு வருவதன் நோக்கம் என்ன சட்டவிரோத தொழிலில் ஈடுபடுவதற்கெனவும் தகவல்கள் உலவுகின்றன.

      புத்தளம் பிரதேச மீன்பிடியாளர்களால் இங்குள்ள அரச சுகாதார உத்தியோகத்தர்கள் தங்கள் கடமையினை முழுமையாக செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். முடக்கப்பட்டிருந்த இந்தப் பகுதியில் இருந்து 379 பேருக்கு பி.சி.ஆர் செய்யப்பட்டதில் 24.07.2021 வரை 53 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் முடக்கப்பட்ட பகுதியில் உள்ள அனைவருக்கும் பி.சி.ஆர் செய்வதற்காக 24.07.2021 அன்று சுகாதாரப் பிரிவினர் சென்ற போது அங்கிருந்த புத்தளம்வாசிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

      நாட்டில் மக்கள் தங்களுக்கு கொரோனா தடுப்பூசி வேண்டும் என வேண்டி நிக்கும் இந்த வேளையில், இந்த மக்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்காமையானது கவலையளிக்கின்றது.

      (புதுக்குடியிருப்பு விசேட நிருபர்) - நன்றி தினகரன் 



      இலங்கையின் மீதான இந்திய - சீன கரிசனை

      ரி.ஆர்.பி.காரன் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? Temporary residential Permit அதாவது தற்காலிக வதிவிட அனுமதி என்பதன் சுருக்கமே TRP. ஐம்பது அறுபதுகளில் இந்தியத் தமிழர்களை குறிப்பிடும் ஒரு பதம் இது. இகழ்ச்சியாகக் குறிப்பிடுவதற்கான பதம் என்றும் சொல்லலாம்.

      டீ. எஸ். சேனநாயக்க அரசில் இலங்கையில் வசித்துவந்த பத்து இலட்சத்துக்கும் அதிகமான இந்திய வம்சாவளிகளின் குடியுரிமை, வாக்குரிமைகள் பறிக்கப்பட்ட பின்னர், வாய்ப்புள்ளவர்கள் தமிழகம் திரும்பி விட்டனர். டி. ஆர். பி. காரர்கள் பெரும்பான்மையினரிடம் கொள்ளை இலாபமீட்டி அதை தமிழகத்துக்கு கொண்டு செல்வதாக பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது. அறுபதுகளில் இவர்களை கேலி செய்யும் வகையில் ஒரு சிங்கள பைலா பாடலும் இயற்றப்பட்டு, இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பாகி பின்னர் தடை செய்யப்பட்டது. ஒரு பிரபல பைலா பாடகர் அதைப் பாடியிருந்தார்.

      “ஒன்ன பலாங் பெனலா யனவா கள்ளத் தோணிலா...” என்று இந்த பைலா ஆரம்பமாகும். இவர்கள்தான் ‘அபே அனாகதே முதலாளிலா”என்று பாடல் நீளும். ‘இதோ பாருங்கள் பாய்ந்தோடுகிறார்கள் கள்ளத் தோணிகள். இவர்கள்தாம் எமது வருங்கால எஜமானர்கள்’ என்று இந்த வரிகளைத் தமிழ்ப்படுத்தலாம்.

      தமிழகத்தில் இருந்து திருட்டுத்தனமாக இலங்கை வந்து வியாபாரம் செய்து பணத்தை தமது ஊர்களுக்கு கொண்டு செல்கிறார்கள் என்ற இந்தக் குற்றச்சாட்டு, ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் கைச்சாத்தாகும் வரையும், ஸ்ரீமாவோ எழுபதுகளில் பிரதமராக பதவியேற்று இந்தியக் கடவுச் சீட்டுப் பெற்றவர்களை ஆயிரக்கணக்கில் தமிழகத்துக்கு கப்பலேற்றும் வரையும் நீடித்தது.

      சில தமிழர்கள் தமக்கு விரோதமான தமிழ்க் குடும்பங்களின் மீது பழிவாங்கும் வகையில் பொலிசாரிடம் சென்று, அவர்கள் ரி. ஆர். பி. காரர்கள், காலாவதியான பின்னரும் திருட்டுத்தனமாகத் தங்கியிருக்கிறார்கள் என்று புகார் தெரிவித்து, பொலிசார் அவர்களை ஜீப்புகளில் அள்ளிச் செல்வதை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து குரூரமாக புன்னகைத்த சம்பவங்கள் எல்லாம் அக்காலத்தில் நடந்தேறின.

      ஆனால் அதே காலப்பகுதியில் உயர் அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளும், தவறான வழிகளில் தாம் திரட்டிய செல்வத்தை வெளிநாடுகளில் வைப்பு செய்து கொண்டுதான் இருந்தார்கள். 1977 இன் பின்னர் சுதந்திர பொருளாதாரம் நடைமுறைக்கு வந்ததும் பெருந் திட்டங்களும் இங்கே நிறைவேற்றப்பட்டன. அப்போது இலங்கையில் சுரண்டல் பேர்வழிகளின் எண்ணிக்கை மட்டுமல்ல, அவர்களின் சுரண்டலும் மிகப் பெரிய தொகைகளாக இருந்தன. இப்போதெல்லாம் பில்லியன்களில் சுரண்டப்படுவதுடன் ஒப்பிடும் போது, அன்று இந்த ரி. ஆர். பி. காரர்களின் ‘சுரண்டல்’ எல்லாம் சுண்டைக்காய்!

      ஆனாலும் இன்றைக்கும் இந்தியா நம்பிக்கைக்குரிய நாடு இல்லை என்றும் இந்திய நிறுவனங்கள் இலங்கையில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்றும் குற்றச்சாட்டை தீவிர சிங்கள அமைப்புகள் முன்வைக்கவே செய்கின்றன. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்திய அதானி நிறுவனத்துக்கு குத்தகைக்கு கொடுக்கப்படுவதற்கு இலங்கை சம்மதம் தெரிவித்த போது, துறைமுக தொழிற்சங்கங்கள் வெடித்துக் கிளப்பி பெரும் போராட்டங்களை நடத்தியதைப் பார்த்த போது, இவர்கள் அந்த அறுபதுகளின் ‘ஒன்ன பலபங் பெனலா யனவா கள்ளத்தோணிலா’ பைலாவை இன்னும் மறக்காதவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதையே புரிந்து கொள்ள முடிந்தது.

      இந்திய நிறுவனத்துக்கு ‘ஜெட்டி’யை கையளிப்பதில் இவ்வளவு ஆக்ரோஷம் காட்டியவர்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு சீனாவிடம் வழங்கிய போது பெயருக்கு போராட்டம் நடத்தி விட்டு ‘கப்சிப்’ ஆகி விட்டார்கள். கொழும்பு துறைமுகத்தின் ஒரு இறங்குதுறை ஏற்கனவே சீனாவிடம் ஒப்பந்த அடிப்படையில் கையளிக்கப்பட்ட போது இந்தத் தொழிற்சங்கங்கள் கண்டுகொள்ளவே இல்லை!

      பக்கத்தில் இருக்கும் இந்தியாவை சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் சரித்திரக்கால சந்தேகத்தைத்தான் இதில் காண முடிகின்றது. எல்லாளன்- துட்டகாமினி மோதல் காலத்தில் இருந்து இந்த சந்தேகம் இருந்து வந்திருக்கின்றது. இதைத்தான் 1971 விஜேவீரவின் தலைமையிலான ஆயுத கிளர்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட தயார்படுத்தல் வகுப்புகளிலும் பார்க்க முடிந்தது. புரட்சி ஏன் அவசியம் என்பதை புகட்டும் ஏழு வகுப்புகளில் ஒன்று இந்திய விரிவுவாதம். இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளி சமூகம், குறிப்பாக பெருந்தோட்டங்களில் காணப்படும் தொழிலாளர் சமூகம் இலங்கைக்கு விசுவாசமானவர்கள் அல்ல என்றும் அவர்கள் இந்தியாவுக்கு விசுவாசமானவர்களாகக் காணப்படுவதால் இந்திய அரசின் இலங்கை மீதான விஸ்தரிப்பு திட்டமொன்றுக்கு இவர்கள் உதவுபவர்களாக மாற முடியும் என்று இந்த வகுப்பில் சிங்கள இளைஞர்களுக்கு சொல்லித் தரப்பட்டது.

      இவ்வாறு இந்தியாவினால் இலங்கையின் இறைமைக்கு ஆபத்து வந்து விடலாம் என்ற முன்னெச்சரிக்கை உணர்வே இந்தியாவின் எதிரி நாடான சீனாவுக்கும் இலங்கையில் இடமளிக்க வேண்டும் என்ற கொள்கை முடிவுக்குக் காரணமாக இருந்திருக்கலாம். வடக்கு கிழக்கு ஆயுத கிளர்ச்சிக்கு இந்தியா ஒரு சமயத்தில் ஆதரவு அளித்தமை, வடபகுதியில் இந்திய இராணுவ விமானங்கள் உணவுப் பொருட்களை வீசிச் சென்றமை, இலங்கை- - இந்திய சமாதான உடன்படிக்கை, மாகாண சபைகளின் தோற்றம், இந்திய சமாதானப் படைகளின் வருகை என்பவற்றில் இருந்து இலங்கை அரசு கற்றுக்கொண்ட பாடம், பகை நாடான சீனாவுக்கும் இலங்கையில் வர்த்தக ரீதியாக செயல்படுவதற்கு இடமளிக்கப்படுவதன் மூலம் இந்தியாவின் ஆதிக்கத்தை இலங்கையில் மட்டுப்படுத்தலாம் என்பதாக இருக்கலாம்.

      சீனா சற்றுத் தொலைவில் உள்ள நாடு. அந்நாட்டு மக்களுக்கும் இலங்கை மக்களுக்கும் ஒத்துப் போகக் கூடிய விடயங்கள் மிக மிகக் குறைவு. நிறம், தோற்றம், உயரம், கலாசாரம், உணவு மற்றும் சமூக பழக்க வழக்கங்கள் முற்றிலும் இலங்கை மக்களின் பழக்க வழக்கங்களுடன் ஒத்துப் போவதில்லை. சீன பௌத்தமும் இலங்கை பௌத்த நம்பிக்கைகளும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போவதில்லை. இதை ஒரு சாதகமான விஷயமாக இலங்கை அரசு தரப்பில் பார்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் இந்தியாவின் நிலையோ வேறு என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

      இந்தியாவின் தென்கோடியில் ஏழு கோடி தமிழர்கள் வாழ்வதுடன் அவர்களின் சமயம், கலாசாரம், நம்பிக்கைகள் என்பன சிங்கள சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. பௌத்தத்தில் இந்து மதத்தின் செல்வாக்கு விரவிக் கிடக்கிறது. இது தொடர்பாக விரிவாகப் பேச வேண்டிய அவசியம் கிடையாது.

      இலங்கையில் தற்போது 25 ஆயிரத்துக்கும் அதிகமான சீனர்கள் வசித்து வருகின்றனர். இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் சீன முதலீட்டுத் திட்டங்களில் அவர்கள் பணியாற்றி வருகின்றனர். 2010ம் ஆண்டின் பின்னர் கிராமப்புறங்களில் கூட சீன வியாபாரிகள் தெருத் தெருவாகச் சென்று சிறிய பொருட்களை விற்று வந்ததைக் காண முடிந்தது. சீன நிறுவனங்கள் தற்போது பல தொழில்துறைத் திட்டங்களில் ஈடுபட்டிருப்பதால் அவற்றில் ஏராளமான சீனத் தொழிலாளர்களும் பணியில் உள்ளனர். இலங்கைத் தொழிலாளர்களுக்கு பதிலாக சீனர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக ஒரு குற்றச்சாட்டும் இது தொடர்பில் முன்வைக்கப்படுகிறது.

      இந்த நிலையில்தான் சமீபத்தில் ஹம்பாந்தோட்டை திஸ்ஸவாவியை சுத்திகரித்து ஆழப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட திட்டம் சீன நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டது. அந்நிறுவனமும் வாவியில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை அகழும் பணியில் ஈடுபட்ட போது ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதில் பிரதானமாக அமைந்த விஷயம்தான், சீன இராணுவத்தின் சீருடைக்கு சமமான ஒரு உடையை திஸ்ஸ வாவி சுத்திகரிப்பில் ஈடுபட்டிருக்கும் சீனப் பணியாளர்கள் அணிந்திருக்கிறார்கள் என்பதாகும்.

      இராணுவ சீருடையில் கழுத்துப் பட்டையிலும் நெஞ்சிலும் ஒருவரின் பதவி நிலையைக் குறிக்கும் இலச்சினைகளை ஒட்டுவதற்கான இடம் ஏற்படுத்தப்பட்டிருக்கும். திஸ்ஸவாவி சுத்திகரிப்பில் ஈடுபட்டிருந்தோர் அணிந்திருந்த சீருடையிலும் அவ்வாறு ஒட்டுவதற்கான இடம் ஏற்படுத்தப்பட்டிருந்ததை ஊடகங்கள் சுட்டிக்காட்டியதும் விஷயம் இறக்கை கட்ட ஆரம்பித்தது. பின்னர் அரசியல் மயமானது. பாராளுமன்றத்தில் விவாதப் பொருளானது.   நன்றி தினகரன் 

      இதே சமயம் மன்னர் கால வாவியொன்றை புனரமைப்பதற்கு முன்பாக தொல்லியல் துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் இந்த அனுமதி பெறாமல் பணிகள் நடைபெறுவதாகவும் புகார் கிளம்பவே பணி இடை நிறுத்தப்பட்டது.

      இப்போது பணி மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பணியாற்றும் சீனர்கள் தாம் அணிந்திருந்த இராணுவத்துக்கு ஒத்ததான சீருடையைத் தவிர்த்திருக்கிறார்கள்.

      கிளிநொச்சியில் கடலட்டை பண்ணையொன்றை சீனர்கள் நடத்துவதை அப்பகுதி மக்கள் ஆட்சேபித்து வருகிறார்கள். ஆனால் அப்பண்ணைக்கான அனுமதி 2017ம் ஆண்டில் நல்லாட்சி அரசால் வழங்கப்பட்டதாக மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். அதேசமயம் வடபகுதியில் கடலட்டை பண்ணை ஆரம்பிப்பதற்கு யார் அனுமதி வழங்கியது என்பது தொடர்பாக ஒரு ஆய்வு மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. சீன ஆதிக்கம் தொடர்பாக பேசுவோர், கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் 1717 கி. மி. தூர அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் ஒப்பந்தம், துறைமுக நகரத்தை அமைக்கும் சீன துறைமுக பொறியியல் நிறுவனத்துக்கே வழங்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டுகின்றனர்.

      இப்போது நாம் கட்டுரையின் முன்பக்கத்துக்கு வருவோமானால் அங்கே இந்தியா மீதான இலங்கையரின் சந்தேகத்தையும். இந்திய விரிவாக்கம் இலங்கையில் மலையகத் தமிழரின் உதவியுடன் நடத்தப்படுமா என்ற கேள்வியையும் ஆராய்ந்திருந்ததை அவதானித்திருப்பீர்கள். இந்தியாவின் தலையில் குட்டு வைப்பதற்காக அழைத்து வரப்பட்ட சீனா தனது எல்லைகளை மீறி வேறு திட்டங்களுடன் இலங்கையில் செயற்படுகிறதா? என்ற கேள்வி இப்போது எழுந்திருப்பதாக இலங்கை மீதான ஆதிக்க அரசியல் தெரிந்தவர்கள் எழுப்புகிறார்கள்.    நன்றி தினகரன் 




      பணிப்பெண்களும் மனிதப் பிறவிகளென்ற மனிதநேயம், கருணை மேலோங்கட்டும்!

      உள்நாட்டில் மட்டுமன்றி, மத்திய  கிழக்கு நாடுகளிலும் இலங்கைப் பணிப்பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு சட்டரீதியில் முடிவு காணப்படுவது அவசியம்

      வீட்டுப் பணியாளர் நலன் பேண விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்

      நாட்டின் சிறுவர் தொடர்பான அடிப்படைச் சட்டங்கள் மீறப்பட்டு பதினாறு வயதுக்குக் குறைந்தவர்களை வேலைக்கு 'குறிப்பாக வீட்டு வேலைக்கு' அமர்த்துவது தொடர்பாகவும், அவ்வாறு அமர்த்தப்படும் பிள்ளைகளுக்கு ஏற்படும் அனர்த்தங்கங்கள் தொடர்பாகவும் பேசப்பட்டு வருகின்றது. இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் மலையகப் பிள்ளைகள், குறிப்பாக தமிழ்ப் பிள்ளைகள் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

      இந்நாட்டின் சிறுவர் தொடர்பான அடிப்படைச் சட்டத்தின்படி பதினாறு வயதுக்குட்பட்டவர்கள் எதுவித வேலைகளிலும் அமர்த்தப்படக் கூடாது என்பது சட்டமாகவுள்ளதுடன் குறித்த வயது வரையான பிள்ளைகளுக்குப் பாடசாலைக் கல்வி கட்டாயமானது என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறான சட்டங்கள் பல நாட்டில் இருந்த போதிலும், அவற்றில் அநேகமானவை மீறப்படுவதையே காண முடிகின்றது.

      பாராளுமன்ற உறுப்பினர் என்பது பொறுப்பு வாய்ந்த ஒரு பதவி. மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதி அவர். அவ்வாறான மக்கள் பிரதிநிதியான ரிஷாட் பதியுதீனின் வீட்டிலேயே சிறுமி ஒருவர் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தார் என்பதை நினைத்துப் பார்க்கவே சங்கடமாக உள்ளது. மக்கள் பிரதிநிதிகள் வெளியுலகுக்கு ஒன்றையும், சொந்த வாழ்வில் வேறொன்றையும் கடைப்பிடிப்பவர்களாக இருக்கக் கூடாது. ரிஷாட் பதியுதீனின் வீட்டுக்குள் நடந்துள்ள குற்றங்கள் தொடர்பாக வெளிவருகின்ற தகவல்கள் அச்சமூட்டுபவையாக உள்ளன.

      சிறுவர் உரிமை தொடர்பான சட்ட விதிகள், அடிப்படை மனித உரிமை தொடர்பான சட்ட விதிகள் போன்றவை பற்றியெல்லாம் இவ்விடத்தில் விளக்கமளிக்க வேண்டிய தேவை உள்ளது.

      பதினாறு வயதுக்குக் குறைந்த பிள்ளைகளை வேலைக்கு அமர்த்துவது தொடர்பாகவும், அது தவறான செயற்பாடு என்பது பற்றியும் அனைத்துத் தரப்பினராலும் கூறப்பட்டு வருகின்றது. அதற்கப்பாலும் சமூகப் பொறுப்பளர்கள் என்ற முறையில் நாம் சிந்திக்க வேண்டும். சமூகப் பாதுகாப்பு தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும்.

      எமக்கு கீழ் வேலை செய்கின்றார்கள் என்ற காரணத்தை முன்னிறுத்தி அவர்களை எவருமே கட்டாயப்படுத்த முடியாது. சித்திரவதை செய்ய முடியாது. அதற்கு எந்தவொரு சட்டத்திலும் இடமில்லை. அவ்வாறு செயற்படுபவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளேயாவர்.

      சமுதாயத்தில் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் செல்வாக்குப் பெற்றவர்கள் தாம் இழைப்பது குற்றமென்று உணராது தமது செல்வாக்கால் எதையும் செய்து விட்டு சட்டத்தின் முன் குற்றமற்றவர்கள் என்றும், தப்பித்து விடலாம் என்றும் எண்ணுவது தடுக்கப்பட வேண்டும். அது தடை செய்யப்பட வேண்டும். அதற்கான சட்டவிதிகள் ஆக்கப்பட வேண்டும்.

      தற்போது வீட்டு வேலைக்கு அமர்த்தப்படும் பதினாறு வயதுக்குட்பட்ட சிறுவர் தொடர்பாக மட்டுமே அதிகம் பேசப்படுகின்றது. குறித்த வயதுக்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவது முற்றாக தடை செய்யப்பட வேண்டும். அது சட்டப்படி குற்றமானது என்பது தெளிவாக உணர்த்தப்பட வேண்டும்.

      பதினாறு வயதுக்குட்பட்டவர்களை வேலைக்கனுப்பும் பெற்றோர் அல்லது பாதுகாவலர் குழந்தைகளை விற்பனை செய்பவர்களாகவும், வேலைக்கு அமர்த்துவோர் குழந்தைகளை பணத்திற்காக வாங்குபவர்களாகவும், தரகர்கள் தரகு வியாபாரத்தில் ஈடுபடுபவர்களாகவும் கணிக்கப்பட வேண்டியவர்களாவர்.

      நாம் கவனம் செலுத்த வேண்டிய வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுவோர் தொடர்பான பிரச்சினைகள் பல உள்ளன. பதினாறு வயதுக்கு மேற்பட்டவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் ஆராயப்பட வேண்டும். அவற்றுக்குத் தீர்வு காணும் வழிமுறைகள் கண்டறியப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

      வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்படும் எந்த ஒருவரும் துன்புறுத்தல்களுக்கோ, துஷ்பிரயோகங்களுக்கோ ஆளாக்கப்படக் கூடாது, அவர்களது சுய கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் சம்பளத்திற்காக மட்டும் உழைக்கும் உழைப்பாளிகள் என்பது நினைவிற் கொள்ளப்பட வேண்டும்.

      இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல நாடுகளில் வீட்டுப் பணிப் பெண்களாகவும், ஏனைய வேலைகளுக்காகவும் செல்பவர்கள் அனுபவிக்கும் அவலங்கள், துயரங்கள் அடிக்கடி செய்திகளாக வெளிப்படுகின்றன. இனம், மதம், மொழி கடந்து பலர் வெளிநாடுகளில் பணிப்பெண்களாக வேலை செய்கின்றனர். அவர்கள் பலவிதமாக அவதிப்படுகின்றனர்.

      நம் நாட்டு பெண்கள் வெளிநாடுகளில் பாதுகாப்பற்று உள்ளனர் என்று கவலைப்படுவோர் நம் நாட்டுக்குள்ளேயே வீட்டுப் பணியாளர்கள் அவலப்படுவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

      ஒவ்வொரு தொழிற்துறைக்கும் அதற்கான பாதுகாப்பு சட்ட ஏற்பாடுகளுள்ளன. ஆனால், வீட்டுப் பணிப்பெண்களாக, வீட்டு வேலையாட்களாகப் பணிப்புரிபவர்களுக்கென்று குறிப்பிட்ட சட்ட விதிகள் இல்லாமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

      எந்த வயதுடைய ஒருவரும் வீட்டு வேலைக்கு கட்டாயப்படுத்தி அமர்த்தப்படக் கூடாது. அதே போல் கல்வியைத் தொடர வாய்ப்பிருந்தும் அதைத் தடுப்பதாக எக்காரணியும் இருக்கக் கூடாது. வீட்டு வேலையில் அமர்த்தப்படுவோர் அடிமைகளாகக் கருதப்படக் கூடாது. செய்யும் தொழிலுக்கேற்ப சம்பளம் பெறுபவர்களாக மட்டுமே கணிக்கப்பட வேண்டும். வீட்டு வேலையில் ஈடுபடுவோருக்கு எத்தனை பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டுமோ அவ்வாறே வேலைக்கு அமர்த்துபவர்களுக்கும் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். அதாவது வீடுகளில் வேலை செய்வோரைப் போன்றே வேலை வழங்குபவர்களின் நலனும் பாதுகாக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

      அதனால், வீட்டு வேலைக்கு அமர்த்தப் படுவோர் தொடர்பான விபரமான ஆவணமொன்று அவ்வாறு வேலையில் அமர்த்தப்படும் முகவரிக்கு உரித்தான கிராம அலுவலரால் பேணப்பட வேண்டும். குறித்த கிராமசேவை அலுவலர் தனது பிரிவிற்குட்பட்ட வீடுகளில் வீட்டு வேலையில் அமர்த்தப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விபரங்களை அறிந்திருப்பது இருசாராருக்கும் அதாவது வேலை செய்வோருக்கும், வேலை வழங்குவோருக்கும் பயனுள்ளதாக அமையும்.

      அவ்வாறு பேணப்படும் ஆவணமொன்றின் பிரதி குறித்த பிரதேசத்திற்கு பொறுப்பான தொழில் அலுவலரூடாக குறித்த பிரதேச தொழில் அலுவலகத்திலும் கையளிக்கப்பட்டு பேணப்பட வேண்டும். வேலைக்கமர்த்தப்பட்ட வீடுகளுக்குச் சென்று ஆய்வு செய்யும் அதிகாரம் கிராமசேவை அலுவலர்களுக்கும், தொழில் திணைக்கள தொழில் அலுவலருக்கும் சட்டப்படி பொறுப்பு வழங்கப்பட வேண்டும்.

      இவ்வாறு செயற்படுவதன் மூலம் வீடுகளில் பணிப்பெண்களாக, வேலைக்காரர்களாக வேலைக்கு அமர்த்தப்படுபவர்களின் நலன்களைப் பாதுகாக்க முடியும். அத்துடன் இவ்வாறு வேலைக்கமர்த்தப்பட்டவர்களின் விபரங்கள் அவர்களின் சொந்த முகவரி அமைந்துள்ள கிராமசேவை அலுவலரிடமும், தொழிற் திணைக்கள தொழில் அலுவலரிடமும் இருப்பது நன்மை தரும்.

      வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள ஆண், பெண் ஆகிய இரு தரப்பினரதும் வயது வித்தியாசமின்றி நலன்கள் பேண ஆவணப்படுத்தல் சிறப்பாக அமையும்.

      வெறுமனே கூட்டங்கள் நடத்தி கருத்துக்களைத் தெரிவிப்பதை விடுத்து வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆயிரக்கணக்கானோரின் சுதந்திரமான, பாதுகாப்பான, நிம்மதியான இருப்புக்கு ஏற்ற வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், தொழிற்சங்கவாதிகள், சமூக நலன் விரும்பிகள், கல்விமான்கள், அதே போன்ற பொறுப்பு மிக்க தரப்பினர் இது தொடர்பில் அக்கறையுடன் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

      அது மட்டுமல்ல பதினாறு வயதுக்குட்பட்டவர்களை வேலைக்கமர்த்தும் போது அது அவர்கள் குழந்தை தொழிலாளர்கள் என்று கூறப்படுவதுடன் அது சர்வதேச சிறுவர் உரிமைச் சட்டத்தை மீறுவதாக அமையும். அவ்வாறு இடம்பெறுவது சர்வதேச தொழிலாளர் சாசனத்தின்படி தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். பதினாறு வயதுக்குட்பட்ட சிறுவர்களை அது ஆணோ, பெண்ணோ வேலையில் அமர்த்துபவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், இருப்பவர்கள் சட்டப்படி தண்டனை வழங்கப்பட வேண்டிய குற்றவாளிகளாக்கப்படுவர். அதுவே பொதுவாக நடைமுறையிலுள்ள சட்டமுமாகும். நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டத்தைக் கடைப்பிடிப்பது கட்டாயமானதாகும்.

      -த.மனோகரன்...(ஓய்வு பெற்ற கைத்தொழில் நீதிமன்ற பதிவாளர்)

      நன்றி தினகரன் 




      உண்மைகளை மறைக்க அனுமதிக்கக்கூடாது - சோபித தேரர்

      சிறுமி ஹிசாலினியின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்க அனுமதிக்கக்கூடாதென சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

      இது தொடர்பாக சோபித தேரர் மேலும் தெரிவித்துள்ளதாவது,.. இத்தகைய சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் உடனடியாக பாராளுமன்றத்திலிருந்தும் வெளியேற்றப்பட வேண்டும். இதேபோன்ற சம்பவங்கள் தொடர்பாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு ஆணைக்குழு, பொலிஸார் மற்றும் அதிகாரிகள் விழிப்புடன் செயற்பட வேண்டும். சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்பவர்கள், கொலைகாரர்கள் மற்றும் திருடர்கள் போன்ற குற்றவாளிகள் பாராளுமன்றத்தை தங்கள் அதிகார இடமாக மாற்றியுள்ளனர். அத்தோடு ரிஷாட் பதியுதீன் போன்றவர்களுக்காக பாராளுமன்றத்திலுள்ள அனைவரும் வெட்கப்பட வேண்டும். இதேவேளை ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய சிறுமியின் மரணத்தை மறைக்க சதித்திட்டம் இடம்பெறுவதாக சிங்ஹலே அமைப்பின் மெடில்லே பஞ்சாலோக்க தேரர் தெரிவித்துள்ளார்.

      சிறுமியின் மரணம் தொடர்பான முதல் பிரேத பரிசோதனையில் வசீம் தாஜுதீனின் பிரேத பரிசோதனைக்கு விசுவாசமாக இருந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  நன்றி தினகரன் 





      No comments: