அன்புதனை அணையுங்கள் !


  மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா  

 மெல்பேண்   .... அவுஸ்திரேலியா ) 


            ஓடிவரும் ஆறும் 
            ஊற்றெடுக்கும் நீரும்

            ஆடிவரும் காற்றும் 
            அனைவருக்கும் உதவும் 
            கூவிநிற்கும் குயிலும் 
            குதித்தோடும் முயலும் 
            யாவருக்கும் இன்பம் 
             நல்கிவிடும் நயமாய் !

             மயிலென்பார் குயிலென்பார்
             வண்ணமிகு கிளியென்பார் 
             தனியான குணங்கொண்டால் 
             அன்னமென உயர்த்திடுவார் 
             கருடனை வணங்கிடுவார்
             காக்கைக்குச் சோறிடுவார் 
             பெருமைநிறை பறவையென
             உரிமையாய் உரைத்திடுவார் !

              கூவிநிற்கும் கோழியினை
              குழம்புவைத்துச் சுவைத்துவிட்டு
              கோழியது பொருமையை
              கொண்டாடி மகிழ்ந்திடுவர்
              வீட்டிலே வளர்த்தெடுக்கும்
              வெள்ளாடு தனைவெட்டி
              விருந்துண்டு மகிழ்ந்துவிட்டு 
              விரிவுரைகள் செய்துநிற்பர் !

              அஃறிணை எனவுரைத்து
              அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு
              உயர்திணை தாமெனவே
              உவப்பாகப் பேசிநிற்கும்
              உலகத்து மனிதர்களின்
              உண்மைமுகம் வரும்வேளை
              அஃறிணை எதுவென்று
              அப்போது  அறிந்திடலாம் !

              உயிர்கொன்று உயிர்வளர்த்தல்
              உயர்வான செயலன்று
              எனவுரைக்கும் வள்ளுவத்தை
              உயர்பீடம் வைக்கின்றோம் 
              உயர்வான குறள்சொல்லும்
              உயர்வான தத்துவத்தை
              உள்ளமதில் பதிக்காமல்
              உதாசீனம் செய்கின்றோம் !

              கருணைதான் கடவுளென்போம்

              அன்புதான் அனைதுமென்போம்
              உயிர்களைக் காப்போமென்று 
              உறுதியும் எடுத்துநிற்போம் 
              விலங்குக்குச் சங்கம்வைப்போம் 
              வேள்விகள் வேண்டாமென்போம் 
              நலம்பற்றி சொல்லிவிட்டு
              நாம்மட்டும் மாறமாட்டோம் !

             நிலமதில் நாமேயென்று
             நித்தமும் ஆடிநிற்போம்
             மனமதை மாற்றமாட்டோம்
             மாறவும் நினைக்கமாட்டோம்
             மனமதை மாற்றிவிட்டு
             மன்பதை அகற்றிவிட்டு
             அனுதினம் அன்புதன்னை
            அனைத்திடல் அறமேயாகும்  !

No comments: