நல்ல
மழை பெய்து கொண்டிருந்த ஒரு இரவில் யாங்கின் கடைக்கு போவதற்காக காரை நிறுத்திவிட்டு இடத்தைக் கண்டுபிடிக்க அங்குமிங்கும்
அலைந்து வெள்ளத்தில் காலை வைத்து சப்பாத்தையும்
காலுறையையும் நனைத்து விட்டிருந்தேன். கடைசியில் அவன் கடைக்கு முன்னால் வந்த போது வெளியே
நின்று புகைத்துக் கொண்டிருந்தவன் என்னை கையசைத்துக் கூப்பிட்டான். கடைக்குள்ளே அவனைப்
பின் தொடர்ந்து போனதும் அவனோடு ஒட்டிக் கொண்டிருந்த சிகரெட் புகை மணமும் உள்ளே வந்தது.
நிலத்தளத்துக்கு பதிக்கும் பொருத்து மரப்பலகை
வகையறாக்கள் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் சாம்பிள்கள் சுவரில்
சார்த்தி வைக்கப்பட்டிருந்தன. மிகச்சிறிய அந்த இடத்தில் கால் வைக்க இடமில்லாமல் பலகைப்
பெட்டிகள் அடுக்கப்பட்டு நடுவில் மேசையொன்றும் கதிரையும் இருந்தன.
எனக்குப் பிடித்த கெம்பஸ் பலகையை தெரிவு செய்து
நிலத்தின் அளவையும் யாங்கிடம் சொன்னேன். ஏற்கனவே வீட்டின் அறையிலுள்ள பலகையின் நிறத்திலேயே
எனது வரவேற்பறைக்கும் வேண்டும் என்று மீண்டும் நினைவு படுத்தினேன். மரத்தின் பலவிதமான
பட்டைகளின் நிறத்தில் பொருத்தப்படுவதால் கெம்பஸ் பலகைள் ஒரு கவர்ச்சியைக் கொடுக்கும்.
"ஒன்றும் பிழை போகாது நண்பனே" என்றான்.
‘நத்திங்க் வில் கோ ரோங் ஃபிரெண்ட்’ என்றுதான்
யாங் சொன்னான். பிழை போகாது என்ற சொற்கள் எனக்கும் விருப்பமானது. அதை ஊரிலும் அடிக்கடி பாவித்துப் பழகியிருந்தோம்.
யாங் கட்டையான உயரமும் அவனது உதடுகள் மிளகாய்
கடித்தவனின் வாய் போல எப்போதும் ஊவென்று இருந்தது.
பிறகு கதிரையில் அமர்ந்து கணக்குப் போட்டான்.
என் வரவேற்பறை நிலத்திலுள்ள கம்பளத்தை அகற்றுவதற்கும்
பலகையைப் பதிப்பதற்குமாக ஏழாயிரத்து தொளாயிரம் வந்தது. நிலத்தின் அளவை விட ஐந்து வீதம் கூடுதலாகவே பலகைகளைக் கொள்வனவு செய்ய வேண்டுமென்றும் பாவித்தது போக மீதியானவற்றுக்கு
பணத்தை திருப்பித் தருவதாகவும் சொன்னான்.
சிட்னியிலிருந்து பலகைகள் முழுவதையும் தனது
வானில் கொண்டு வருவதற்காக மொத்தத்தையும் பணமாகவே தரவேண்டும் என்றும் பணம் கையில் வந்தால்
வெள்ளிக்கிழமையே சிட்னிக்குப் போவதாக சொன்னான்.
இந்தக்காலத்தில் யாராவது பணத்தை வீட்டில் வைத்திருப்பார்களா?
பண நோட்டுகளைப் பார்த்தே பல நாளாகி விட்டிருந்தது. பணத்தைக் கொடுக்கும் வங்கி மெஷின்களும்
ஒரேயடியாக இவ்வளவு பணத்தை வாரி வழங்கி விடாது,
அன்று புதன் கிழமை. அடுத்த நாள் வேலை முடித்து
வங்கிக் கிளையிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு வருவதாக சொல்லி விட்டு கடையை விட்டு
இறங்கினேன். மழை விட்டிருந்தது.
அடுத்த நாள் வியாழன் மாலையில் மனைவிக்கு பல்
வைத்திய பரிசோதனை இருந்ததால் மூன்று மணிக்கே வேலையிலிருந்து புறப்பட்டாயிற்று. வங்கியில் வரிசையில் எனக்கு முன்னால் நின்றவன் நகர்ந்ததும்
எனது வங்கி அட்டையை காட்டி பணத்தை நூறு டொலர் நோட்டுகளாக கேட்டேன். கவுண்டரில் நின்ற
பெண் உள்ளே பார்த்து விட்டு ஐம்பது நோட்டுகளே இருப்பதாக சொன்னாள். அவளுக்கு வயது இருபத்தைந்துக்குள்
இருக்கும்.
நோட்டுகளை கட்டுக் கட்டாக எடுத்து சுற்றியிருந்த
ரப்பர் பாண்டுகளை கழற்றி விட்டு நோட்டுகளை
எண்ணும் கருவியில் இரண்டு முறை பிரித்துப் போட்டு எண்ணி சரி பார்த்துக் கொண்டிருக்கையில்
கண்வெட்டாது அவளையும், நோட்டுகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.
நேரம் நாலு மணிக்கு ஐந்து நிமிடங்கள் இருந்தது.
வெளியிலிருந்து யாரும் கஸ்டமர் உள்ளே வரமுடியாதவாறு கண்ணடிக் கதைவை பூட்டினாள் இன்னொருத்தி.
நாலு மணிக்கு வங்கி மூடுவார்கள்.
ஒரு கவரில் நோட்டுக்களை போட்டு அவசர அவசரமாக
புறப்பட எண்ணியபோதுதான் நான் ஒருமுறை நோட்டுகளை எண்ணவேண்டுமோ என்று தோன்றியது. மெஷினில் எண்ணியது
சரியாக இருக்கும் என்று எனக்குள் இருக்கும் இன்னொன்று சொன்னது.
அந்தப் பெண்ணிடம் எனது கணக்கிலுள்ள பலன்சுக்கு
ஓரு ரசீது தரும்படி கேட்டேன். ரசீதை பிரிண்ட்
பண்ண முடியாதென்றும் ஒரு சிறு துண்டில் எழுதி தருவதாக சொல்லி எழுதி தந்தாள்.
வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது மாலை வெளிச்சம்
மங்கிக் கொண்டு வந்தது. வின்டரில் இது சகஜம்தான்.
மனைவி புறப்படுவதற்காக உடை மாற்றிக்கொண்டிருக்கையில் நான் அறைக்கதவை பூட்டிவிட்டு அலுமாரியின் இழுப்பறையில் வைத்து கவரைப்
பிரித்து நோட்டுகளை எண்ணத் தொடங்கினேன்.
நோட்டுகள் ரப்பர் பாண்டுகள் போட்டபடி கட்டு கட்டாக அந்தக் கவர் கொள்ளாமல் பிதுங்கிக்
கொண்டிருந்தன. திடீரென்று ஒரு யோசனை. ரசீதை
பிரிண்ட் பண்ணாமல் ஏன் கையெழுத்தில் தந்தாள் என்று ஒரு கேள்வி எழுந்தது.
உடனே இழுப்பறையை சார்த்திவிட்டு கணினியில் வங்கியின் இணையத தளத்தில் சேமிப்புக் கணக்கை
சரி பார்த்தேன். ஏழாயிரத்துத் தொள்ளாயிரம்
சரியாகவே வித்ட்ரா பண்ணப்பட்டிருந்தது.
பிறகு ரப்பர் பாண்டுகளை அவிழ்த்து விட்டு ஆயிரம், ஆயிரமாக கட்டுகள் போட தொடங்கினேன்.
பத்து நோட்டுகளை கட்டுவதா?, இல்லை, இல்லை இருபதை கட்டினால்தான் ஆயிரம் வரும் , ஐம்பது டொலர் நோட்டுக்கள்
அல்லவா ? வேண்டாம் நாற்பது நோட்டுகளைக் கட்டி இரண்டாயிரமாக போடலாம்.
திருப்பி எண்ணத் தொடங்கினேன். மொத்தமாக நூற்று ஐம்பத்தெட்டு நோட்டுக்களை எண்ண வேண்டும்.
எண்ணுவது சலிப்பை தந்தது. கை விரல்கள் வேறு சொர சொரத்து நோட்டுகளை இலகுவில் பிரித்தெண்ண முடியவில்லை.
அவ்வப்போது அவை ஒட்டிக் கொண்டு வந்தன.
மூன்று கட்டுக்களும் அதைவிட மீதியாக தொள்ளாயிரமும்
வந்தது. அப்படியானால் ஆறாயிரத்து தொள்ளாயிரம். ஆயிரம் எங்கே? எண்ணும் கருவி ஏமாற்றி
விட்டதா அல்லது கவுண்டரில் நின்ற பெண்ணின் தவறா? எனது கூட்டலில் பிழையாக இருக்கலாம்.
திருப்பி கட்டுகளைக் குலைத்து விட்டு ஆயிரங்களாக
எண்ணி வைத்தேன். ஆறு முழுசும் ஒரு குறையும்தான்.
நிச்சயம் ஆயிரம் குறைந்திருக்கிறது. திரும்பிப் போய் கேட்க முடியாது. வங்கி
பூட்டியிருப்பார்கள். இனி நாளைக்குத்தான்.
மனைவியின் பல் பரிசோதனைக்கு நேரமாகி விட்டது.
தாமதிக்க முடியாது. இதை விட்டால் அந்த விஷேட
வைத்திய சோதனைக்கு பல மாதங்கள் காத்திருக்க வேண்டும். இந்த நேரத்தில் இதை மனைவியிடம் எப்படி சொல்வது? நோட்டுக்களை கவரில் போட்டுக்கொண்டேன்.
பல் வைத்தியரிடம் வரும் வழியெல்லாம் மனம் பதற்றத்திலேயே இருந்தது.
மனைவியிடம் எதுவுமே பேசாமல் காரை ஓடினேன்.
வங்கியிலேயே நின்று எண்ணி சரி பார்க்காத முட்டாள்தனத்தை
எண்ணி திட்டிக் கொண்டேன். திட்டு வேண்ட வேண்டிய எனக்குள் இருந்த முட்டாளுக்கு என்ன
கவலை.? அது தன் பாட்டுக்கு காரை ஓட்டிக் கொண்டிருந்தது.
ஒன்றில் எண்ணும் மெசின் தவறிழைத்திருக்க வேண்டும்,
அல்லது அந்த பெண் ஆயிரத்தை குறைத்து தந்திருப்பாளா? அல்லது அவசரத்தில்
எனது எண்கணிதத்தில் ஏதோ தவறு நிகழ்ந்திருக்க வேண்டும்.
மனைவியை பல் வைத்தியரிடம் விட்டு விட்டு யாங்கின்
கடைக்கு போனேன். கடையில் யாங்கிடம் காசை எண்ணக் கொடுத்து மீண்டும் சரி பார்க்க எண்ணினேன்.
இந்த முறை யாங்கின் கடைக்குள் அவனது வேலையாளுடன்
அவன் பேசிக்கொண்டிருக்கும் போது உள் நுழைந்தேன்.
வழமைபோல சிகரெட்டின் மணம்.
யாங்கின் கதிரைக்கு பக்கத்தில் ஒரு சில பிளாஸ்டிக்
வாளிகளைக் கண்டதும் பலகைகளை சீமெந்து நிலத்துடன் ஒட்டுவதை பற்றிக் கேட்கும் எண்ணம்
வந்தது. கெம்பஸ் பலகைகளை பிளைவூட்டுக்கு மேல் வைத்து ஆணி அடிப்பதும் உண்டு. இந்த ஒட்டு வேலை பலகைகளை நீண்ட காலம் மேற்கிளம்பாமல் வைத்திருக்குமா என்று கேட்டேன்.
"என் நண்பனே, ஒன்றும் பிழை போகாது".
பணத்தை எடுத்து முன்னால் வைத்து விட்டு யாங்கிடம் எண்ணிப் பார்த்துக் கொள்
என்றேன். இருதயம் அடிக்கும் சத்தம் எனக்கே கேட்பது போலிருந்தது. சுங்கப்
பரிசோதனையிலும் கூட இப்படிப் பயப்பட்டதில்லை.
‘நான் கஸ்டமருக்கு முன் பணத்தை எண்ண மாட்டேன். உன்னை நம்புகிறேன் நண்பனே. ஒன்றும் பிழை போகாது’
ஒரு வெள்ளை தாளைக் கொண்டு வந்து அதில் நான் ஏழாயிரத்து தொளாயிரம் கொடுத்ததாய்
எழுதி கீழே எனது முகவரியையும் கையெழுத்தையும் போட்டுக் கொள்ள சொன்னான். பிறகு அவனும்
கையெழுத்திட்டான்.
அப்போதும் வங்கியில் ஆயிரத்தை குறைத்து தந்து விட்டார்கள் என்று சொல்ல முடியாமல் என்னைத் தடுத்தது எதுவென்று தெரியவில்லை. நாணயம் தவறிய எனது இந்த காரியத்துக்கு எனது எண் கணிதப் பிழையை சாட்டாக வைத்துக் கொண்டு வாய் மூடி மௌனம் காத்தேன்.
நான்
எதோ கேட்கப் போக மீண்டும் இன்னொரு ‘
பிழை போகாது நண்பனே’ அவனிடமிருந்து வரு முன்னம் அவனிடம் விடைபெற்று வீட்டுக்கு வந்தேன்.
நான் கடையை விட்டுப் போனதும் யாங் பணத்தை எண்ணியிருப்பான்.
இரவு வெகு நேரம் வரை யாங்கிடமிருந்து அழைப்பு வருமென்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் துரதிஷ்டவசமாக அழைப்பு எதுவும் வரவில்லை.
அடுத்த நாள்வெள்ளிக்கிழமை குறிப்பிடத்தக்கதாக
எதுவும் நிகழாமல் கடந்து சென்றது.
யாங்கின் வேலையாட்கள் இருவர் வந்து சனிக்கிழமை வந்து ஒரு நாளிலேயே வரவேற்பறையில் கெம்பஸ்
பலகை பதிக்கும் வேலையை முடித்து விட்டுச் சென்றனர். யாங்க் அன்று வரவேயில்லை.
பூகம்பம் வெடிக்கப் போகிறது என்றெண்ணிக் கொண்டேன்.
ஆனால் யாங்கின் வாயில் சிரிப்பு வந்ததையும்
இப்போதுதான் கண்டேன்.
என் சிரிக்கிறாய் என்று கேட்டதற்கு
பலகைகளை
தேவைக்கு அதிகமாகவே வாங்கிவிட்டதால் பாவிக்காத பலகைகளுக்கான பணம் ஆயிரம் டொலர்
மிகுதி என்கிறான். ஆயிரம் டொலர்களை அதே கவரில் போட்டுக் கொண்டு வந்து சிரித்தபடியே
என் கையில் தந்தான்.
எனக்குத் திகைப்பாக இருந்தது. அவனிடம் இரகசியக்குரலில்
‘நானல்லவா உனக்கு ஆயிரம் குறைவாகத் தந்து விட்டேன்
என்று எண்ணிக் கொண்டிருந்தேன்’ என்றேன்.
'அதுவும் உண்மைதான். ஆனால் நான்தான் உன்னிடம்
ஏழாயிரத்து தொள்ளாயிரம் வாங்கிவிட்டதாக கையெழுத்து வைத்து விட்டேனே ?’
‘அதற்காக’
'இதோ பார். அன்றைக்கு சொல்லிலும், எழுத்திலுமாக
இரண்டு விசயங்களை உறுதியளித்தேன். அதை மாற்றுவது
எனது தொழிலுக்கு அவமரியாதை. என்
பையில் ஆயிரம் குறைந்தது உண்மைதான். ஆனாலும் உனது ஆயிரமும் உனது கைக்கு வர வேண்டுமல்லவா ?’
அவனிடம் வற்புறுத்தி அந்த கவரை திரும்பக் கொடுத்தபோது
வலது கையை நெஞ்சில் வைத்து விட்டு இரு கைகளாலும்
வாங்கிக் கொண்டான்.
நான் நிம்மதி பெருமூச்சு விட்டேன்
'கவலைப்படாதே நண்பனே உன் பணம் உன்னிடமே வரும்'
என்று சொல்லி விட்டு வானில் ஏறிக் கொண்டான்.
வான் சென்று மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவன் கடைசியாய் சொன்னது மனதில் பொறி தட்ட எனக்கு ஒன்று தெளிவாகியது.
நிதானமாக அறைக்குச் சென்று அலுமாரியின் மேல்
இழுப்பறையைத் திறந்தேன். அதன் கடைசியில் ஒரு
நீக்கல் இருப்பது தெரிந்தது. பிறகு அதன் கீழிருந்த இழுப்பறையைத் திறக்க அதற்குள் ஒரு கட்டு ஆயிரம் விழுந்திருப்பதைக் கண்டேன்.
கைத்தொலைபேசியில் யாங்கை அழைத்தபோது அவன் வானை
செலுத்திக்
கொண்டிருந்தபடியே
'சொல்லு நண்பனே' என்றான்.
'எதுவும் பிழை போகவில்லை நண்பனே' இம்முறை சொன்னது
நான்.
1 comment:
நல்ல கதையொன்றை வாசித்த சந்தோசம். என்றும் மனசாட்சி வெல்லும்.
வாழ்த்துக்கள்.
Post a Comment