இலங்கை என்றும் யாருக்குமே விலைபோகாத அடிபணியாத நாடாக நிமிர்ந்து நிற்க வேண்டுமென்பதே ஒவ்வொரு இலங்கையனுடைய ஆசையும் எதிர்பார்ப்புமாகும். -கந்தையா முருகதாசன் (ஏலையா க.முருகதாசன்) ஜேர்மனி


அன்புடன் சிங்கள சகோதரர்களுக்கு,இது உங்கள் மீதான பரிசுத்தமான அக்கறை கொண்ட அறைகூவற் பகிரங்கக் கடிதம். 

இக்கடிதத்தை வாசித்து அதில் உள்ள சாராசம்சத்தை உள்வாங்குவதும் உள்வாங்காது விடுவதும் உங்கள் விருப்பம். 

ஆனால் எதிர்காலத்தில் எதுவெல்லாம் நடக்கவிருக்கின்றதோ அதை முன்கூட்டியே அறிவதற்காக சிங்களவர் தமிழர் என்ற வேறுபாடின்றி நமெல்லோரும் இலங்கையர் என்ற ஒருமித்து இலங்கை என்ற இறைமையுள்ள நாட்டிலே வாழுகின்ற மக்கள் என்ற அத்திவாரம் கொண்டவர்கள் என்ற ரீதியிலே அக்கறையுடன் உங்களை நோக்கி எழுதப்படுகின்ற கடிதந்தான் இது. 

இலங்கையில் தீர்க்கப்படக்கூடாத அல்லது தீர்க்கப்படக்கூடாது என்ற நோக்கில் இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழரின் இனப் பிரச்சினையின் தாற்பரியத்தை தமிழர்கள் மட்டுமல்ல நீங்களும் அறிவீர்கள். 

ஓரிரு வருடங்களில் பேசித் தீர்க்கப்பட்டு மனமுண்டால் இடமுண்டு என்பது தமிழரும் சிங்களவரும் சகோதரர்கள் நமக்குள் ஏன் இவ்வளவு விரிசல் என்று ஆறஅமரச் சிந்தித்து நல்லிதயத்துடன் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையை நானா நீயா என்று கையிறுத்தல் போட்டியாக சிங்கள தமிழ் அரசியல்வாதிகள் மாற்றிவிட்டார்கள். 

மக்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்திற்கு தெரியு செய்யப்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரு இன மக்களையும் ஒற்றுமைப்படுத்துவதற்கான வழிவகைகள் என்ன என்பதை ஆராயாது,மக்களின் வாழ்வியலுக்கு அவர்களின் தேவைகளை எவ்வாறு அபிவிருத்திகள் மூலம் பூர்த்தி செய்யலாம் என்று யோசிப்பதைத் தவிர்த்து எப்படி இரு இனங்களையும் முரண் கொள்ள வைத்து நாடாளுமன்ற கதிரைகளில் நிரந்தரமாக உட்கார்ந்து கொள்ளலாம் என்ற சூது நோக்கு அரசியலே இன்று இலங்கை எடுப்பார் கைப்பிள்ளையாகிப் போனதற்கு காரணம். 

பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறோம் என்று வந்த நாடுகள் யாவும் இலங்கையின் ஆட்சிக் கட்டமைப்பு எதில் தங்கியிருக்கின்றது என்பதை ஆராய்ந்து அதன் பலவீனத்தின் மிது தமது கையாளுதலை பேணி வருதலைக் காண முடிகின்றது. இலங்கை என்பது ஒரு சிறிய தீவாக இருந்தாலும் அது இறைமையும் ஆளுமையுமுள்ள நாடு என்பதை சிங்களவர்களும் தமிழர்களுமாகிய நாம் அடிக்கடி மறந்துவிடுகிறோமா என சிந்திக்க வேண்டியுள்ளது. பெரும் நிலப்பரப்பைக் கொண்டுள்ள நாடுகளே தன்னாதிக்கம், சுதந்திரம், இறைமை என்ற அரசியல் கட்டமைப்பு அலகுகளைக் கொண்டு தன்னைத்தானே ஆளும் சக்தி கொண்டவை என்ற தப்பான எண்ணத்கை; கொண்டுள்ளோமோ என்று நினைக்கத் தோன்றுகின்றது.அது அப்படியல்ல.ஒரு குடிமகனே தன்னாதிக்கம் உள்ளவனாகும்.சிறு தீவான இலங்கையும் தன்னாதிக்கமுள்ள சுதந்திர நாடேயாகும். 

எமது நாட்டின் ஆளுமை மீதும் நாம் கொண்டிருக்க வேண்டிய தேசபக்தி மீதும் நாம் வலுவிழந்த தன்மையைக் காட்டியதனால்தான் அண்டை நாடுகள் உதவி என்ற போர்வையில் எம்மீது ஆதிக்கம் செலுத்தவும் ஆளுமை கொள்ளவும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. தமிழ் அரசியல்வாதிகளினதும் சிங்கள அரசியல்வாதிகளினதும் இனவாதப் பேச்சுக்களும் அவர்கள் அதை முன்னெடுக்கும் நடவடிக்கைகளும், அதே போல சிங்களவர்களும் தமிழர்களும் தாங்கள் ஒரே நாட்டில் வாழும் சகோதர்கள் என்பதை மறந்துவிட்டு முரண்பாடுகளை வளர்த்துக் கொள்வதாலும் பலவீனமான உடலில் மோசமான நோய்க்கிருமிகள் தொற்றி உடலை மெல்ல மெல்ல வலுவிழக்கச் செய்வது போல எமது நாட்டின் அரசியல் நிர்வாகக் கட்டமைப்பின் பலவீனம் மற்றைய நாடுகள் எமது நாட்டில் நிலைகொண்டு கண்காணிக்கும் நிலைக்கு எமது நாட்டைக் கொண்டு வந்துவிட்டிருக்கின்றது. 

எமது நாட்டின் பொருளாதார வளங்களை மேம்படுத்துவதற்காக மாபெரும் கட்டுமாணப் பணிகளை செய்ய வரும் வேற்று நாட்டினர் அப்பணிகளுக்கான செலவீனங்களை எமது நாட்டிடம் வாங்கிக் கொள்ளலாமே தவிர இது என்னுடையது,குறிப்பிட்ட காலத்திற்கு குத்தகைக்கு வேணும் என்பதும் அதற்கு அரசு ஒப்புதல் அளிப்பதும் அந்த நிலப்பரப்பு வெளிநாட்டினர் வாங்கிய நிலப்பரப்புக்கு ஒப்பானதேயாகும். அந்த நிலப்பரப்பில் ஒரு சிறு நாட்டையே உருவாக்க முடியும் என்பதற்கு இன்று போர்ட் சிட்டியே உதாரணமாகி, கிட்டத்தட்ட இலங்கை மீண்டும் காலணித்துவ ஆட்சிக்கு உட்பட்டு விட்டதோ என சந்தேகம் வலுக்கத் தொடங்கியுள்ளது. 

போர்த்துக்கீசர் இலங்கையைக் கைப்பற்றி,காலணித்துவ நாடாக்கிய போது முழு இலங்கையின் நிலப்பரப்பையும் மக்களையும் ஒரேயடியாக தமது ஆட்சிக்கு உட்படுத்தவில்லை. அவர்கள் கரையோர நிலப்பரப்பில் காலூன்றி நிலை கொண்டு மெல்ல மெல்ல முழு நிலப் பரப்பையும் தமது ஆட்சிக்கு உட்படுத்தினார்கள் என்பதை வரலாறு எமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கின்றது. அதற்குப் பின்னர் போத்துக்கீசரின் வழியில் ஒல்லாந்தரும் பிரித்தானியரும் எவ்வாறு எமது நாட்டை கையகப்படுத்தினார்கள் என்பதையும் இலங்கையர்களாகிய நாமறிவோம். அன்றிருந்த சிங்கள மக்களினதும் தமிழ் மக்களினதும் தேசபக்தி காரணமாகவும் சிந்தனைத்திறன் காரணமாகவும் இலங்கையர் நாம் என்று ஒருமித்து அந்நியர் ஆதிக்கத்திலிருந்து இலங்கையை மீட்டு சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் உள்ள நாடாக நிமிர்ந்து நிற்கச் செய்தனர். 

ஆனால் இன்று எமது நாட்டில் நவீன சிந்தனைத் திறனும் அரசியல் மதிநுட்பமும் உள்ள அரசியல்வாதிகளும் மக்களுமிருந்தும் ஏன் எமது நாடு அந்நிய ஆதிக்கத்துக்கு உட்பட்டு, தேசபக்தி அற்று ஏன் மண்டியிட்டு நிற்கிறது என்பது பெரும் கவலையைத் தருகின்றது. எமது நாட்டுக்கு உதவி செய்ய வருபவர்கள் யாராக இருந்தாலும் வாருங்கள்.அதற்கு பரிகாரமாக பண்டமாற்று வணிகம் செய்வதற்கும், செலவீனங்களுக்கு பணமாகவும் தருகிறோம் அதற்காக எங்கள் நாட்டையே தாரைவார்த்துத் தாருங்கள் எனக் கேட்காதீர்கள்.எமது நாடு கொடுக்கவும் கூடாது. 

அவர் எவராக இருந்தாலும் அது எந்த நாடாக இருந்தாலும் ஏற்றுமதி இறக்குமதியோ பண்டமாற்று வணிகமோ ஒருவருக்கொருவர் பரஸ்பரம் ஒத்தாசையாக இருப்போமே தவிர எமது நாட்டின் ஆட்சிக் கட்டமைப்பைச் சிதறடிக்க முயற்சிக்காதீர்கள் வெளிநாடுகளை கேட்டுக் கொள்கிறோம்.உளவு நிறுவன ஒற்றர்கள் எமது நாடு முழுவதும் பரந்துவிட்டார்களோ என ஐயுறவு கொள்ள வேண்டியதாகிவிட்டது.எந்தவொரு குடிமகனுமே எந்தவொரு நாட்டுக்குமே விலைபோகக்கூடாது. எமது நாடு ஒரு சிறிய தீவுதான் ஆனால் ஒவ்வொரு குடிமகனும் இறைமையுள்ளவன்.எமது இறைமை என்பது தன்னாதிக்க முறைமையைக் கொண்டது. 

சிங்களச் சகோதர்களே!.உங்களைத் தூண்டிவிடுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல எங்கள் நாட்டின் மீது எந்தவொரு நாடும் ஆளுமை கொள்ள வைக்காதீர்கள் என்பதே எனது அன்பான வேண்டுகோளாகும். உங்களுக்கு இருக்கும் ஒரேயொரு நாடு இலங்கை மட்டுமே.எங்கள் சகோதரர்களான நீங்கள் பேசும் மொழியான சிங்கள மொழி எமது நாட்டில் மட்டுமே இருக்கின்றது.இது ஒரு அபூர்வமானதும் அதிசயமானதும்கூட.உங்களுடைய நாடு உங்களுக்கு இல்லாத காலம் வருவதற்கு இடம் கொடுக்காதீர்கள்.நீங்களே உங்களை இல்லாது செய்துவிடாதீர்கள்.உங்களுடைய மொழியும் என்றும் நிலைத்து நிற்க வேண்டும்.உங்களுக்கும் எங்களுக்குமிடையில் நிறைய ஒற்றுமைகள் உண்டு.திருமண பந்தங்களே இருக்கின்றன. 

தமிழர்களுக்கும் உங்களுக்கும் இடையிலிருக்கும் சிறு பிரச்சினைகளை சீனா விஸ்வரூபமாகக் காட்டி உங்களைக் காப்பாற்றுகிறோம் என்ற போர்வையில் இலங்கையை தமது ஆளுமைக்குட்படுத்துவதை உணருங்கள். சீனா மக்களையோ சீனாவையோ தமிழ்மக்கள் வெறுக்கவில்லை.ஆனால் சீனா எமது நாட்டுடன் நட்போடு இருக்கலாமே தவிர அவர்கள் காட்டும் திசையில் இலங்கையை வழிநடத்த அவர்களுக்கு உரிமையில்லை. போர்ட் சிட்டியை அவர்கள் கட்டித் தந்துவிட்டுப் போகட்டும்.அது இலங்கையின் ஒரு சொத்து, இலங்கையின் ஒரு நகரமே தவிர அது சீனாவின் குட்டி நாடாகக்கூடாது. அங்குள்ள தொழில்நுட்ப கணிணித் தளங்கள் யாவும் இலங்கையால் கண்காணிக்கப்பட வேண்டும்.தேசபக்தி உள்ள ஒவ்வொரு சிங்கள குடிமகனாகட்டும்,தமிழ் குடிமகனாகட்டும் எமது நாட்டின் ஒரு மில்லிமீற்றர் நிலத்தையோ அதன் வளங்களையோ எமக்குரிய கடலையோ கடல் வளத்தையோ யாருக்குமே கொடுக்க அனுமதிக்காதீர்கள். நான் ஒரு தமிழனாக இருந்தாலும் இலங்கையின் கடல் எல்லைக்குள் தமிழ் நாட்டினராக இருந்தாலும்கூட மீன் பிடிக்க அனுமதி கொடுக்கக்கூடாது என்பதே எனது பலமான கருத்தாகும். 

எமது மீன் வளங்களை பல ஆண்டுகளாகவே ரோலர் போட்டு தமிழ்நாட்டு மீனவர்கள் வாரிச் சுருட்டிக் கொண்டு போவதை கேள்விப்பட்டு வருகிறோம். தாயும் பிள்ளையானாலும் வாயும் வயிறும் வேறை.அது போலத்தான் இலங்கைத் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் இனத்தால் ஒன்றெனினும் அவர்கள் வேறு நாங்கள் வேறு.நாங்கள் இலங்கைத் தமிழர்கள்,இலங்கையர்கள்.எமது கடலில் மீன்பிடிக்க அவர்களுக்கு இலங்கை அனுமதி கொடுக்கக்கூடாது. 

எமது நாட்டில் இருக்கும் இனப்பிரச்சினையை சாட்டாக வைத்துக் கொண்டு எமது நாட்டை வல்லரசுகள் தமது அரசியல் விளையாட்டு மைதானமாக்க முயற்சிக்கிறார்கள். அந்த வழியைத்தான் இன்னொரு வல்லரசாகிக் கொண்டிருக்கும் சீனா தன்வழியில் இலங்கையைக் கையாளத் தொடங்கியுள்ளது. தமது மொழியை மெல்ல மெல்ல அபிவிருத்திக்காக வரும் சீனர்களுக்கு அவர்கள் சார்ந்த தொழில்நிறுவனங்களுக்கு திசைகாட்ட வேண்டும் என்ற போர்வையில் தவிர்க்க முடியாத மொழியாக எதிர்காலத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் தம்சொற்படி இலங்கை ஆட வேண்டும் என்பதற்காகவும் சீனமொழியில் வீதிப் பெயர்ப்பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. 

சீனர்கள் ஆங்கிலத்தைப் படிக்கட்டும் இல்லையேல் சிங்களத்தைப் படிக்கட்டும்.அவர்களின் மொழியில் வீதிப்பெயர்ப்பலகைகள் இடுவதற்கு என்ன அவசியம் ஏற்பட்டது. இந்தியாவிற்கு எதிராக செயல்படுவதற்காக இலங்கையைத் தளமாக சீனா பாவிக்கப் போகின்றது என்பதை வெறும் ஊகம் என்று சொல்லிவிட முடியாது.இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உள்ள பிரச்சினையை அவர்கள் தீர்த்துக் கொள்ளட்டும்.எமது நாடு அவர்களுனுக்கு தொட்டுக் கொள்ளும் ஊறுகாயல்ல. 

சீனா தனது ஆதிக்கத்தை எமது நாட்டில் நிலைநாட்டாதிருப்பது சிங்கள மக்கள் கையிலேயே இருக்கின்றது.சீனாவால் எவ்வித ஆக்கிரமிப்பும் இருக்காது என சிங்கள மக்கள் அலட்சியமாக இருப்பார்களாயின், அவர்கள் தமது நாட்டை இழந்து நாடற்றவர்களாகி விடுகின்ற அபாயகரமான சூழ்நிலைகூடத் தோன்றலாம். 

இந்தக் கட்டுரையானது எமது நாடு எந்த நாட்டுக்குமே அடிமையாகி எடுப்பார் கைப்பிள்iயாகிவிடக்கூடாதே என்பதற்காவே எழுதப்பட்டது.எல்லா வளங்களும் ,கல்வியறிவும் உள்ள எமது நாடு எதுவுமே எம்மிடம் இல்லையென்ற பொய்த்தோற்றத்தை கற்பிக்க முயலும் மற்றைய நாடுகளின் வலையில் விழுந்துவிடக்கூடாது என்பது மட்டுமல்ல,மற்றைய நாடுகள் எமது நாட்டுக்கு வழங்குகின்ற மனிதாபிமான உதவிகள் பேரம்பேசுதலாக மாறிவிடக்கூடாது என்பதே எமது அச்சமாகும். சிங்களவர்களும் தமிழர்களுமாகிய நாம் எமக்குள்ள பிரச்சினைகளை நாமே பேசித் தீர்த்துக் கொள்வோம் என்பதுடன் நாங்கள் சகோதரர்கள் என்பதும், நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் இனிமேல் நடப்பவை நல்லவையாகவே இருக்கட்டும் என்ற நோக்கத்துடனும், எமது மண்ணையும் எமது கடலையும் எந்த நாடுமே அபகரிக்க இடம் கொடுக்கக்கூடாது என்ற நல்லெண்ணத்தோடுதான் சிங்களச் சகோதரர்களை நோக்கி இக்கட்டுரை வழியாக பகிரங்க வேண்டுகோள் விடுக்கிறேன். 

தன்னாதிக்கமுள்ள இறைமையுள்ள சுதந்திர நாடாக செல்வச்செழிப்புடன் இலங்கை என்றும் யாருக்குமே விலைபோகாத அடிபணியாத நாடாக நிமிர்ந்து நிற்க வேண்டுமென்பதே ஒவ்வொரு இலங்கையனுடைய ஆசையும் எதிர்பார்ப்புமாகும். 

No comments: