கந்தபுராணக்கலாசாரம் எங்கே சென்றது - அவதானி.முன்பொருதடவை  பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள், “  யாழ்ப்பாண கலாசாரம் கந்தபுராணக் கலாசாரம் “  என்றார்.  அவர் தற்போது உயிரோடு இருந்திருப்பின், சமகாலத்தில் யாழ்ப்பாணமும் அது  தலைநகராக விளங்கும் வடமாகாணமும்  எவ்வாறு இருக்கிறது..? என்பதை பார்த்துவிட்டு,  “ போதை வஸ்து கலாசாரம்  “ என்று சொல்லியிருப்பாரா…?

நாம் எங்கிருந்து எங்கே செல்கின்றோம்..?

தமிழின விடுதலைக்காக ஆயிரம் ஆயிரம்  தமிழ் இளைஞர், யுவதிகள் தாங்கள் தொடர்ந்துகொண்டிருந்த கல்வியையும் இடையில் நிறுத்திவிட்டு,  களம் புகுந்து போராடி மடிந்தனர்.

அவ்வாறு மடிந்தவர்களையும்  மறைந்தார்கள் எனச்சொல்லாமல்  வித்தானார்கள்  என்றுதான் வர்ணித்து


அகவணக்கம் செய்தது,  எமது தமிழ் சமூகம்.

ஆனால், இன்று அத்தகைய சமூகம்,  கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், அதற்கு அடிமையானவர்கள், போதை வஸ்து கடத்துபவர்கள்,  அதன் பாவனையால் சீரழிந்துகொண்டிருப்பவர்கள் பற்றிய செய்திகளைதான் பார்த்துக்கொண்டிருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்னர், ஜனாதிபதி பதவியிலிருந்த மைத்திரிபால சேனாநாயக்கா,   “  அரசாங்கத்திற்கு மதுவரியால் கிடைக்கும் வருமானம் கூடுதலாக வடபகுதியிலிருந்துதான் வருகிறது ! “  என்று சொன்னதை ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள்.

தென்னிலங்கையில் பாதாள உலகக்கோஷ்டிகளின் அட்டகாசத்தின் பின்னணியிலும் போதைவஸ்துதான்  அடங்கியிருக்கிறது.

அதனால்,  போதை வஸ்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டும்.  மரணதண்டனையும் தீர்ப்பாகவேண்டும் என்றும்  மைத்திரிபால சிறிசேன சொன்னார்.

அவ்வாறு அன்று சொன்னவருக்கு, புதிய அரசில் குறைந்தபட்சம் அமைச்சர் பதவி கூட கிடைக்கவில்லை.

தென்னிலங்கையில்  ஒரு நபர் நான்குவயதுக்குழந்தைக்கு மது அருந்தக்கொடுத்து, அதனை காணொளி வாயிலாக பதிவேற்றி வலைத்தளத்தில் பரவ விட்டுள்ளார். இது பேலியாகொடை பிரதேசத்தில் நடந்துள்ளது.


வடக்கில் வட்டுக்கோட்டையில்   வீதியில் நடந்து வந்த ஒரு மாணவியின் கழுத்திலிருந்த தங்கச்சங்கிலியை பறித்துச்சென்றிருக்கிறார்கள் இரண்டு இளைஞர்கள்.

நாவற்குழி பகுதியில் போதைக்கு அடிமையான ஒரு தமிழ்க்குடும்பஸ்தர் தனது பத்துவயதுப்பிள்ளையை தலைகீழாகக்கட்டி கிணற்றுக்குள் இறக்கியிருக்கிறார்.

போதை செய்திருக்கும் காரியம் இது.

உடுவில் பிரதேசத்தில் இரண்டுபேர் ஒரு வீட்டினுள் நள்ளிரவு புகுந்து அங்கிருந்த தண்ணீர் இறைக்கும் மோட்டார் பம்பியை திருட முயன்று கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் ஒரு இளைஞர் வெளிநாட்டு மதுபானப்போத்தல்களை பொலிஸ் புலனாய்வுப்பிரிவினருக்கே விற்க முயன்று பிடிபட்டுள்ளார்.

போதைப்பொருளுக்கு அடிமையான தனது 22 வயதுள்ள மகனை தாயொருவர் அழைத்துவந்து சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

மேலே குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் அனைத்தும் கடந்த சில நாட்களில்  வெளியான செய்திகளின் தொகுப்புத்தான்.

வடபகுதியில் மேலும் சில இடங்களில் இரகசியமாக கசிப்பு உற்பத்தி நிலையங்கள் இயங்கிவருகின்ற செய்திகளும் வெளிவருகின்றன.

மாதகல், காங்கேசன்துறை, பருத்தித்துறை, முல்லைத்தீவு கடல் மார்க்கத்தில் கேரளாவிலிருந்து வந்துகொண்டிருக்கும் கஞ்சாப்பொதிகள் பற்றிய செய்திகளை ஊடகங்களில் அடிக்கடி பார்க்கின்றோம்.

போர்க்காலத்தில் இந்த கடல் மார்க்கத்தில்  விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் வருகின்றன என்று கண்காணித்துக்கொண்டிருந்த  கடற்படையினர்,  தற்போது எதனை கண்காணிக்கின்றனர்…? என்ற கேள்விதான் எழுகின்றது.

அவர்கள்,  படகுகளில் வந்துகொண்டிருக்கும் கஞ்சாப்பொதிகளை கண்டும் காணாமலும் விட்டுவிடுதனால்தானே, அவை பாதுகாப்பாக கரையொதுங்கி பொலிஸாரினால் பிடிபடுகின்றன.

எமது முன்னோர்கள் ஒரு கதை சொல்வார்கள்.

 “ இன்று தப்பிவிட்டாய்..  உனது  வீட்டில் எனது தம்பி உன்னை பார்த்துக்கொள்வான்  “ என்று குளத்தில் தன்னிடம் கடிவாங்கித் தப்பிச்சென்றவருக்கு சொல்லுமாம்.  முதலை . தனது தம்பி எனக்குறிப்பிட்டது, பல்லியைத்தான்.  முதலை கடித்தவருக்கு வைத்தியர் சிகிச்சையளிக்கும்போது,  வீட்டுக்கூரையிலும் சுவரிலும் ஊர்ந்து திரியும் பல்லியின் எச்சம், முதலை கடித்த காயத்தில் பட்டுவிடக்கூடாது என்றுதான் எச்சரிப்பார்.

பல்லி எச்சம் பட்ட காயங்கள் எளிதில் குணமடையாது.

அதுபோன்று கடலில்  கடற்படையிடமிருந்து தப்பிவிடும் போதை வஸ்து கடத்தல்காரர்கள், வெளியே வந்து பொலிஸாரிடம் சிக்கிக்கொள்கிறார்கள்.

பொலிஸாரும் பிடிபட்ட பெருந்தொகையான கஞ்சாப்பொதிகளை காட்சிக்கு வைத்து  ஊடகங்களுக்கு  தங்கள் வேட்டையை பிரபலப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

கச்சியப்ப சிவச்சாரியார் எழுதியது  கந்தபுராணம்.  ஆணவம்,  கன்மம்,  மாயை  எனும் மும்மலங்களால் பீடிக்கப்பட்ட ஆன்மாக்களாகிய தேவர்களை கந்தப்பெருமான் மீட்ட கதைதான்   கந்தபுராணம்.

 இந்தக் கதையில்  சூரபத்மன் ஆணவத்தின் உருவமாகவும் சிங்கமுகாசூரன் கன்மத்தின் உருவமாகவும் தாரகாசூரன் மாயை வடிவமாகவும்  சித்திரிக்கப்பட்டுள்ளனர்.

முருகனுக்கு, தாய் சக்தி வழங்கிய  ஞானவேல் கொண்டு இந்த  மும்மலங்களையும் அழித்து ஆன்மாக்களாகிய தேவர்களை மீட்ட கதைதான் கந்தபுராணம்.

 

யாழ்ப்பாணத்தில்  ஆலயங்களில்   கந்தபுராணப்படனம்  வாசிக்கும் பழக்கம்   தொன்று தொட்டு இருந்துவந்தது.  புராண படனம் செய்வது என்பது  ஒருவர் சந்தி பிரித்து கந்தபுராணப் பாடலைப் பாடுவார்.  மற்றும் ஒருவர் அருகிலிருந்து அதற்கு பொருள்விரித்து  பயன் கூறுவார்.

இதனை கவனத்தில்கொண்டுதான் அன்றே யாழ்ப்பாணக்கலாசாரம் கந்தபுராணக்கலாசாரம் என்றார் பண்டிதமணி கணபதிப்பிள்ளை.

ஆனால்,  காலம் மாறிவிட்டது.  பெரும்பாலானவர்களுக்கு தொலைக்காட்சியிலும் கைத்தொலைபேசியிலும் தென்னிந்திய தொலைக்காட்சி நாடகங்கள்,  சூப்பர் சிங்கர் களியாட்டங்கள் பார்ப்பதற்கும் கமலின் பிக்பொஸ் பார்க்கவுமே நேரம் தேடவேண்டியதாகிவிட்டது.

“  பெரிசுகள்  “ என்று  சின்னவர்களினால் அழைக்கப்படுபவர்கள் மாத்திரம் புராண படனம் கேட்கச்செல்லக்கூடும்.  இந்நிலையில் கண்ணுக்குத் தெரியாத கொரோனோ வைரஸ் வந்து சமூக இடைவெளியையும்,  ஊரடங்கு உத்தரவுகளையும், பயணத்தடைகளையும் அறிமுகப்படுத்திவிட்டது.

இதனை போதைவஸ்து கடத்தல்காரர்களும் கசிப்பு உற்பத்தியாளர்களும் தங்களுக்கு சாதாகமாக்கிவிட்டனர் போலும்.

கொரோனோவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்துகிறார்களோ இல்லையோ,  போதை வஸ்தை செலுத்திக்கொள்வதில்  இளம் சமுதாயம் தீவிரம் காண்பிக்கின்றது என்பதைத்தான் வெளியாகும் செய்திகள் அம்பலப்படுத்துகின்றன.

இவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டிய பாரிய பொறுப்பு தன்னார்வத் தொண்டர் அமைப்புகளையும் மருத்துவர்களையும் சார்ந்தது.

வடக்கினை பிரதிநிதித்துவப்படுத்தும்  தமிழ் அரசியல் தலைவர்கள் தங்களுக்குள் நடத்தும்  குடுமி பிடி சண்டையை சற்று ஒதுக்கிவைத்துவிட்டு,  எமது மக்களின் எதிர்காலம்  குறித்து ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்க முன்வரவேண்டும்.

சுமார் அரைநூற்றாண்டுக்கு முன்னர் வடக்கிற்கு வந்த இஸ்ரேல் விஞ்ஞானிகள், வடக்கின் நிலத்தடி நீர் படிப்படியாக உவர்ப்பாகி முழு வடக்குமே காலப்போக்கில் உவர் நீராகிவிடும் என்று முன்னெச்சரிக்கை விடுத்தார்கள்.  எமது தமிழ் அரசியல் தலைவர்கள் அந்த எச்சரிக்கையை கண்டுகொள்ளவேயில்லை.

அதுபோன்று வடக்கில் பரவிவரும் போதைவஸ்து பழக்கத்தை முற்றாக ஒழிக்காதுபோனால்,  இனத்திற்காக-  மொழிக்காக விதையாகிப்போனவர்களின் மண்ணில்  எதிர்காலத்தில் விஷம்தான் விளையும்.

விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள தாமதிக்காதீர் !

( நன்றி: யாழ். தீம்புனல் )

 

No comments: