எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 46 எழுத்தாளர்களில் எத்தனை கோணம்..? எத்தனை பார்வை…? பாரதி - தி. ஜானகிராமன் - ஏ.வி. எம். மனைவிமார் !! பெண்களின் குரலாக ஒலித்த பெண் எழுத்தாளரின் அந்திம காலம் ! முருகபூபதி

 


ஒரு தமிழ்த்திரைப்படத்தில்,   “ காதலிகளுக்காக நினைவுச்சின்னம் அமைத்த  காதலன்கள் பற்றி அறிந்துள்ளோம்.  ஆனால், காதலன்களுக்காக ஒரு செங்கல்லையாவது காதலிகள் நட்டுவைத்தார்களா..?   “ என்ற தொனியில் வசனமோ, பாடலோ வந்தது.

இதற்கு உதாரணமாக சாஜகான் , தனது காதல் மனைவி மும்தாஜுக்காக நிர்மாணித்த தாஜ்மகாலைச் சொல்வார்கள்.

பல எழுத்தாளர்கள் தங்கள் நூல்களில்  முன்னுரை எழுதும்போது , மனைவியையும் மறக்காமல் குறிப்பிடுவார்கள்.  அதில்  “ தப்பித்தல்  “  குணமும் உள்ளடங்கியிருக்கும்.

 “ நான் சமைத்துப்போடுவதால்தானே,  அதனைச்சாப்பிட்டுவிட்டு,  அது சமிபாடடைவதற்கு அவர்


இலக்கியம்  சமைத்துக்கொண்டிருக்கிறார்  “ என்பார் மனைவி.

பல தமிழ் எழுத்தாளர்களின் மனைவிமாருக்கு, தங்கள் கணவர் என்ன எழுதுகிறார்..? முகநூலில் எதனை நோண்டுகிறார்..? என்பதும்  தெரியாது.

இந்தப்பின்னணிகளுடன் இந்த அங்கத்திற்குள்  வருகின்றேன்.

1951 ஆம் ஆண்டு திருச்சி வானொலியில்,   என் கணவர் என்ற தலைப்பில் மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மா நிகழ்த்திய உரையில் ஒரு பகுதியை இங்கே தருகின்றேன்:

 “ ஒரு சம்பவத்தை என்னால் மறக்க முடியாது. மத்தியானம் ஒரு மணி ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு அவர் இன்னும் வரவில்லை. மெதுவாகச் சென்று, தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தேன். என் கணவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. “இனி மிஞ்ச விடலாமோ?” என்று அவர் உதடுகள் முணுமுணுத்தன. அருகில் போய் என்னவென்று கேட்க என் மனம் துடிதுடித்தது. ஆனால்,  பயமும் ஒரு புறம் ஏற்பட்டது. ‘ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது. என்ன விஷயமோ?’ என்று  திகில் கொண்டேன். கணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார். ‘செல்லம்மா, இங்கே வா’ என்றார். சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். ‘நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்’ என்றார். “கரும்புத் தோட்டத்திலே” என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மிவிம்மி அழுதோம். மறுநாள் அந்தப் பாட்டு சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பாடப்பட்டது. அதைக் கேட்ட ஜனங்கள் எவ்விதத்திலும் ஒப்பந்தக் கூலி முறையை ஒழிக்கவும், அந்நிய நாடு சென்ற நமது நாட்டுத் தொழிலாளரின் குறைகளைத் தீர்க்கவும் கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.  “

இவ்வாறு வீட்டுக்குள் முடங்கியிருந்த அந்தப்பெண்ணை தனது மறைவுக்குப்பின்னர்  வெளியே வந்து வானொலியில் பேசவைத்தவர்  பாரதியார்.

அதற்கான தூண்டுதலை அவருக்கு வழங்கியதும் ஒரு


பெண்தான். அவர்தான் சுவாமி விவேகானந்தரின் சீடர் நிவேதிதா தேவி.

1984 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதத்தில் – அந்தக்கோடை காலத்தை கத்திரி வெய்யில் என்பார்கள்.  சென்னை மயிலாப்பூரில் அமைந்திருந்த ஏவிஎம் இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்திற்கு சென்றிருந்தேன்.

இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற திரைப்படத்தயாரிப்பு நிறுவனம் ஏ.வி.எம். இதனை உருவாக்கி வளர்த்தெடுத்த அவிச்சி மெய்யப்பச்செட்டியார்,  பேசும் படம் யுகம் தொடங்கிய 1931 காலத்தில், திரையுலகப்பிரவேசம் செய்யும்போது, அவருக்கு வயது 24.

அல்லி அர்ஜுனா என்ற புராணப்படமே இவர் தயாரித்து வெளியிட்ட முதலாவது படம்.  தொடர்ந்து  இந்தியமொழிப்படங்கள் பலவற்றை தயாரித்தார். பின்னாளில் முன்னணிக்கு வந்த பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்திய பெருமையும் ஏ.வி. எம். அவர்களைச் சாரும்.  பதின்மூன்று வயதுப்பராயத்தில்  இருந்த  இராஜேஸ்வரியை அவர் மணமுடித்தார்.

திருமதி இராஜேஸ்வரி மெய்யப்பன் எழுதிய நூல்,   ஏவி. எம். என் கணவர் 1996 ஆம் ஆண்டு  இந்த நூல் வெளியாவதற்கு முன்பே,


1984 ஆம் ஆண்டு அவரது பெயரில் அமைந்திருந்த கல்யாண மண்டபத்திற்கு சென்றிருந்தேன்.

அந்த நூலுக்கு எட்டுப்பக்கங்களில் நீண்டதோர் சிறப்புரையை அவ்வேளையில் முதல்வராக பதவியிலிருந்த கலைஞர் மு.  கருணாநிதி எழுதியிருக்கிறார்.

அவரது  அழகான கையெழுத்திலேயே அது  அந்த நூலில் பதிவாகியிருக்கிறது.

தந்தை ஏவிஎம். பற்றி மகன்மார் சரவணன், குமரன் ஆகியோரும் நூல்கள் எழுதியுள்ளனர்.   அத்துடன் அறக்கட்டளைகள் அமைத்து தன்னார்வத் தொண்டுகளிலும் ஈடுபடுகின்றனர்.


தமிழ் கலை உலகில் முன்மாதிரியான இக்குடும்பத்தினால் உருவாக்கப்பட்ட அந்த கல்யாண மண்டபம் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ளது.

அன்று அந்த மண்டபத்தில் நடந்த இலக்கியச்சிந்தனை  பரிசளிப்பு விழாவை கண்டுகளிக்கச்சென்றிருந்தேன்.

மண்டபம் நிறைந்து மக்கள். அந்த மண்டபத்தை பாக்கியராஜின் தாவணிக் கனவுகள் திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்.

கலைஞர்களும் எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும்,  நிரம்பியிருந்த அந்த விழாவிலும் ஒரு பெண்மணி – அதுவும் ஒரு பகழ்பெற்ற எழுத்தாளரின் மனைவி  தனது கணவர் பற்றி


இரத்தினச்சுருக்கமாக  ஒரு வரியில் தனது  நன்றியுரையை தெரிவித்தார்.

மண்டபம் அதனைக்கேட்டு கரகோஷத்தால் அதிர்ந்தது.

அன்றைய தினம் தி. ஜானகிராமனின் நளபாகம் நாவலுக்கு இலக்கியச்சிந்தனையின் பரிசு வழங்கப்பட்டது.

இந்த நாவலை ஏற்கனவே கணையாழி இதழில் தொடர்கதையாகப் படித்திருக்கின்றேன். இலக்கியச்சிந்தனை அறக்கட்டளையில்  முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்  அங்கம் வகிக்கிறார்.

அந்தப்பரிசை வாங்கவந்திருந்தார் திருமதி ஜானகிராமன். 


மேடையில்  எழுத்தாளர்கள் சுஜாதா, நீலபத்மநாபன் ஆகியோருடன் அவர் அமர்ந்திருந்தார்.

தி. ஜானகிராமனின்   அம்மா வந்தாள், மலர்மஞ்சம், அன்பே ஆரமுதே,  மோகமுள், மரப்பசு, உயிர்த்தேன், முதலான   நாவல்களையும் பல சிறுகதைகளையும் ஏற்கனவே படித்திருந்தமையால்,  என்னை மிகவும் கவர்ந்த படைப்பாளி அவர். தற்போது அவரது நூற்றாண்டு நடந்துகொண்டிருக்கிறது.

அவரது படைப்புலகம் பற்றி எங்காவது, இந்த கொரோனோ காலத்தில்   மெய்நிகர் காணொளி அரங்குகள் நடந்தவண்ணமிருக்கின்றன.

தி. ஜா.வின் நாலுவேலி நிலம் கதையும் திரைப்படமாகியிருக்கிறது . அதில் நடித்திருக்கும் கலைஞர் நடிகர் சகஸ்ரநாமமும் அந்த விழாவுக்கு வந்திருந்தார்.

சபையில்  கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், பத்திரிகையாளர் அறந்தை நாராயணன், தண்ணீர் தண்ணீர் நாடகம் எழுதிய கோமல் சாமிநாதன் முதலானோரும்  அமர்ந்திருந்தனர்.

மேற்கு அண்ணா நகரில் அப்போது வாழ்ந்த நண்பர்


எழுத்தாளர் மு. கனகராசனுடன் அந்த விழாவுக்குச்சென்றிருந்தேன்.

சுஜாதாவுக்கு அந்தக்கோடை காலத்தில் தண்ணீர் தாகம் அதிகம்.   அவர் பேசும்போது, சபையினரிடம் அடிக்கடி மன்னிப்புக்கேட்டுக்கொண்டு,  “ கொஞ்சம் தண்ணீர் அருந்துகிறேன்  “ என்று சொல்லும்போது சபை சிரித்தது.

நீலபத்மநாதனும் உரையாற்றியதும் இலக்கியச்சிந்தனை அறக்கட்டளையைச்சேர்ந்தவர்கள்,  பரிசுக்கான காசோலையை திருமதி ஜானகிராமனிடம் வழங்கினார்கள்.

 “ தனக்கு முழுப்பணமும் வேண்டாம்.  தனது கணவர் வந்து பெறவேண்டிய பரிசு, அவர் போய்விட்டார் ( இறந்துவிட்டார் )   அவர் சார்பில்  பரிசுத்தொகையில் பாதியை மாத்திரம் பெற்றுக்கொள்கின்றேன்.  “  என்று சொல்லிவிட்டு கூச்சத்துடன்  மீண்டும் ஆசனத்திற்கு சென்று அமர்ந்தார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்,  “ ஏற்புரையாவது சொல்லுங்கள்  “


என மீண்டும் அழைத்தார்கள்.

திருமதி தி. ஜானகிராமன் எழுந்து வந்தார். அதுவரையிலும் அந்த அரங்கில் தனது கணவரின் படைப்பு இலக்கியம் பற்றி பேசியவர்களின் கருத்துக்களையெல்லாம் கூர்ந்து கேட்டவண்ணம் பரவசப்பார்வையை வீசிக்கொண்டிருந்த அவர்,  ஒலிவாங்கிக்கு அருகில் வந்தார்,   “   எனக்கு அந்தரங்கமாக வாழ்ந்த எனது கணவர், உங்கள் மத்தியில் இப்படி அம்பலமாகியிருக்கிறார். நன்றி. வணக்கம்  “ எனச்சொல்லி நாணம் கலந்த புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு சென்று மீண்டும் அமர்ந்தார்.

சபை எழுந்து நின்று கரகோஷம் எழுப்பியது.

தி. ஜானகிராமன் படைத்திருக்கும் பெண் பாத்திரங்கள்


குறித்து இன்றும் பேசப்படுகிறது. சௌந்தர்ய உபாசகர் என வர்ணிக்கப்படும் தி.ஜா. அவர்களின்  மனைவியின் அந்த மிக மிக சிக்கனமான உரையில் பொதிந்திருக்கும் பேருண்மையின் பின்னால்  பல ஆண் எழுத்தாளர்கள் இருக்கலாம்.

பாரதியாரின் மனைவி செல்லம்மாவுக்கு தனது கணவர் பற்றி ஒரு பார்வை இருந்தது. அதுபோன்றுதான்,  திரையுலகில் சாதனைகள் பல புரிந்த ஏவி.எம். மின் மனைவி இரஜேஸ்வரிக்கும் தனது கணவர் பற்றி ஒரு பார்வை இருந்தது. அவ்வாறே தி. ஜா.வின் மனைவியின் பார்வை ஒரு வரியில் உள்ளடங்கியிருந்தது.

எத்தனை கோணம்..!?  எத்தனை பார்வை…?!

வீரகேசரியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் ரஸஞானி என்ற புனைபெயரில் தொடர்ந்து இலக்கியப்பலகணி பத்தி எழுத்து எழுதிவந்த காலம் அது.


அந்தப்பத்தியில் தமிழக இலக்கியப்புதினங்களையும் எழுதிவந்தேன். அதன் நறுக்குகளையும் அந்தப்பயணத்தில் எடுத்துச்சென்றிருந்தேன்.

இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் உரைகள்  முடிந்ததும் மேடைக்குச்சென்று சுஜாதா, நீலபத்மநாபனுடன் பேசினேன்.  அன்றுதான் சுஜாதாவிடம்,  யாழ். பொது நூலகம்  1981 இல் எரிக்கப்பட்ட பின்னணியில் அவர் எழுதிய இலட்சம் புத்தகங்கள் என்ற சிறுகதை பற்றி கேட்டறிந்தேன்.   இதுபற்றி ஏற்கனவே வலிசுமந்த நூலக நினைவுகள்  கட்டுரையிலும் குறிப்பிட்டுள்ளேன்.

அவரைச்சுற்றி அவரது பிரியமான ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர்.  ஒரு பெண் ரசிகை தன்னிடமிருந்த ஐந்து ரூபா நாணயத்தாளில் சுஜாதாவிடம் ஓட்டோகிராஃப் பெற்றார்.

சுஜாதா, தமது பெங்களுர் வீட்டுக்கு வருமாறு தனது


முகவரியை எழுதித்தந்தார்.  அவருக்கு இலங்கை நிலவரங்களை மேலும் அறியும் ஆவல் இருந்தது.  ஆனால் எனது பயணத்திட்டத்தில் பெங்களுர் வரவில்லை.

நீலபத்மநாபனின்  பள்ளிகொண்டபுரம், தலைமுறைகள் நாவல்கள் மற்றும் அவரது சிறுகதைகள் பலவற்றை ஏற்கனவே படித்திருந்தமையால், அவருடன் பேசுவதற்கு தயக்கமிருக்கவில்லை.

அவருக்கு இலங்கையில் எமது நண்பர்கள் மல்லிகை ஜீவா, ஐ. சாந்தன் ஆகியோரையும் நன்கு தெரியும். அவர்களைப்  பற்றிக் கேட்டறிந்தார். 

அந்த  மேடையில்  அவர்கள் இருவரையும் பற்றி ஏற்கனவே


நான்  எழுதியிருந்த இலக்கியப்பலகணி நறுக்குகளை கையில் கொடுத்தேன்.  நினைவோடு எடுத்துவந்து தந்தமைக்கு நன்றி கூறினார்கள்.

மண்டபத்திற்கு வெளியே பிரபல பத்திரிகையாளர் அறந்தை நாராயணன் சிகரட் புகைத்துக்கொண்டிருந்தார்.  அவர் ஜெயகாந்தன் ஆசிரியராக இருந்து என். சி. பி. எச். வெளியிட்ட கல்பனா மாத இதழில் துணை ஆசிரியராகவும் பணியாற்றியவாறு கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனசக்தி பத்திரிகை ஆசிரியர் குழுவிலும் அங்கம் வகித்தவர்.

சினிமா தொடர்பாக பல நூல்களை எழுதியிருக்கும் அறந்தை நாராயணன்,  சினிமாத்துறை துணை நடிகர்களுக்கான தொழிற்சங்கத்திலும் நெருங்கிய ஈடுபாடு கொண்டிருந்தவர். துணை நடிகர்களின் உரிமைக்காக போராட்டங்களிலும் ஈடுபட்டவர்.  கம்யூனிஸ்ட் கட்சியில் பிரசார பீரங்கி எனவும் வர்ணிக்கப்பட்டவர்.

அவர் ஜனசக்தியில் எழுதிய சில கட்டுரைகளை எங்கள் மல்லிகை ஜீவா, மல்லிகையில் மறுபிரசுரம் செய்துள்ளார்.

( அவரை மீண்டும் 1990 இல் ஜீவாவுடன் சென்னையில் சந்தித்தேன். இந்தப்பதிவில் அவரும்    நாட்டுப்புறக்கலைஞர் குணசேகரனும் ஜீவாவும்  நானும் நிற்கும் படத்தை காணலாம் )

அவரும் ஜீவாவை விசாரித்தார். அவர்பற்றியும் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் பற்றியும் இலக்கியப்பலகணியில் எழுதியிருந்த பத்தி எழுத்துக்களின் நறுக்குகளை கொடுத்தேன்.

 “ இந்தத்தகவல்கள் யாவும் உங்களுக்கு எப்படி கிடைக்கின்றன..?   “ எனக்கேட்டனர்.    “ எல்லாம் நண்பர் காவலூர் ஜெகநாதனின் உபயம்  “ என்றேன்.

அவரையும் அவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது.  காவலூர் ஜெகநாதன் அக்காலப்பகுதியில் மேற்கு அண்ணா நகரில் குடும்பத்தினரை வைத்துக்கொண்டு மாதம்  ஒருதடவை இலங்கை வந்து திரும்பிக்கொண்டிருந்தார்.

அவர் வரும்போது வீரகேசரிக்கும் வந்து என்னை சந்திக்க தவறமாட்டார்.

ஆனால், அன்றைய  இலக்கிய சிந்தனை விழாவுக்கு அவர் வரவில்லை. அதனால் நண்பர் மு. கனகராசனை வழித்துணைக்கு அழைத்து வந்திருந்தேன்.

கோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் மேடை நாடகம் கொழும்பு  கலைஞர்களினால் மருதானை டவர் மண்டபத்தில் மேடை ஏறியிருந்தது.   அதனைப்பார்த்துவிட்டும் வீரகேசரியில் எழுதி இருக்கின்றேன்.  இந்நாடகம் அவரது வசனத்திலேயே கே. பாலச்சந்தரால்  பின்னர் திரைப்படமாக்கப்பட்டது.

கோமல் சாமிநாதன் இயக்குநர் கே. எஸ். கோபாலகிருஷ்ணனின் திரைப்படங்களிலும் பணியாற்றியவர். ஒரு இந்தியக்கனவு என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கியவர்.  இதில் சுகாசினி நடித்தார்.

பின்னாளில் சுபமங்களா  கலை இலக்கிய இதழின் ஆசிரியராகவும் விளங்கினார்.  அவரால் எனக்கு அறிமுகமானவர்தான் பரீக்‌ஷா ஞாநி என்ற இதழாளர். கலைஞர். இவர் பற்றி எனது அவுஸ்திரேலிய புகலிட வாழ்க்கை பகுதி  எழுதப்படும்போது குறிப்பிடுவேன்.

கோமலுக்கும் ஜெயகாந்தனுக்கும் ஏழாம் பொருத்தம்.  கோமல் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்.  அந்தப்பயணத்தில்  நான் ஜெயகாந்தனை சந்திக்கவில்லை.  அவர் குறித்து எனக்கு தயக்கம் இருந்ததுதான் காரணம்.

மற்றும் ஒருநாள்  சென்னை பச்சையப்பன் கல்லூரியில் அப்போது படித்துக்கொண்டிருந்தவரும்  பின்னாளில் எனக்கு உறவினராகியவருமான  கவிஞர் காவியன் முத்து தாசன் விக்னேஸ்வரனையும்  அழைத்துகொண்டு, தாம்பரத்தில் வசித்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனை பார்க்கச்சென்றேன். எம்முடன் எழுத்தாளர் க. நவமும் உடன் வந்தார்.

தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் ராஜம் கிருஷ்ணனின் வீடு அமைந்திருந்தது.

அன்று பகல்பொழுது முழுவதும் அவருடன்தான் உரையாடல் தொடர்ந்தது.  ராஜம் கிருஷ்ணன்  தங்கு தடையின்றி கலகலப்பாக பேசுவார்.  அவரது சிரிப்பில்  குழந்தைகளின் குதூகலத்தை காணமுடியும்.

அவர் 1983 தொடக்கத்தில் பாரதி நூற்றாண்டுக்கு வந்தபோது அவருடன் பயணங்கள் மேற்கொண்டேன்.  பாரதி குறித்து  பல செய்திகளை அவர் எனக்குச்சொல்லியிருக்கிறார்.

பின்னாளில் 1990 இலும் சென்னைக்கு எனது குடும்பத்தினருடனும் சென்று அதே தாம்பரம் இல்லத்தில் பார்த்தேன். காலம் உருண்டோடியது. அவருக்கு பிள்ளைகள் இல்லை.   கணவரும் இறந்ததையடுத்து தனிமரமானார்.   எஞ்சியிருந்த சேமிப்பையும் இழந்தார்.  மீண்டும் சில வருடங்களின் பின்னர் அவரை நீலாங்கரையில் ஒரு ஒண்டுக்குடித்தன வீட்டில் பார்த்தேன்.  தனிமை, இயலாமை, இழப்பு  என எத்தனையோ சோகங்கள் அவரைச்சூழ்ந்து வந்தபோதும்,  அவருடைய முகத்திலிருந்த  பிரகாசம் மாறவேயில்லை.  அவர் எனக்கு எழுதிய கடிதங்கள் சேமிப்பில் இருக்கின்றன.

தனது மாணிக்க கங்கை என்ற ஈழ அகதிகள் பற்றிய நாவலின் முன்னுரையிலும் என்னை குறிப்பிட்டிருக்கிறார்.

இறுதியாக அவர் சென்னை பொரூர் இராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும் சென்று பார்த்துள்ளேன்.

அந்தக்காட்சியும் மனதைவிட்டு நீங்கவில்லை.

அவரை 1983 இல் சந்தித்த காலம் முதல் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு வரையில், சென்னை செல்லும்போதெல்லாம் பார்த்து, அவரது அன்பான உபசரிப்பில் திழைத்திருக்கின்றேன்

ஆனால், அந்த மருத்துவமனைக்கு நான் அவரை தேடி வந்திருப்பதை பார்த்துவிட்டு விம்மி விம்மி அழுத காட்சி மனதை உருக்கியது.   “ எல்லாம் போச்சு…எல்லாம் போச்சு  “ என்றார்.  கண்ணீருடன் எனது பிள்ளைகளையும் நினைவுபடுத்தி கேட்டறிந்தார்.

இறுதியில் தான் இறந்தவுடன், தனது உடலை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உடற்கூற்று பரிசோதனை செய்வதற்கே வழங்குமாறு மரண வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

ஆண் எழுத்தாளர்கள்  தொடர்பாக அவர்களின் மனைவிமாரின் கண்ணோட்டம் பற்றியே இந்த அங்கத்தின் தொடக்கத்திலிருந்து சில பந்திகளை தொடர்ந்திருந்தேன்.

ஒரு பெண் எழுத்தாளரின் சோகத்துடன் இந்த அங்கத்தை நிறைவுசெய்கின்றேன்.

( தொடரும் )

letchumananm@gmail.com

 

 

 

 

 

 

No comments: