உலகச் செய்திகள்

 காசா நகர் மீது இஸ்ரேல் இராணுவம் மீண்டும் வான்வழி தாக்குதல்

166 நாட்களில் 20 இலட்சம் பேர் பலி; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஜி-7 மாநாடு நிறைவு: எலிசபெத் ராணியுடன் ஜோ பைடன் சந்திப்பு

அமெரிக்காவுடன் மோதலுக்கும் தயாராக வேண்டும்


காசா நகர் மீது இஸ்ரேல் இராணுவம் மீண்டும் வான்வழி தாக்குதல்

கடந்த மாதம் 10ம் திகதி இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட இந்த சண்டை இடைவிடாமல் 11 நாட்களுக்கு தொடர்ந்தது. இதில் இரு தரப்பிலும் சேர்த்து 250-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

சண்டை நிறுத்தத்துக்கு பிறகு முதல் முறையாக காசா நகர் மீது இஸ்ரேல் இராணுவம் மீண்டும் வான்வழி தாக்குதலை நடத்தியது.

மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான இந்த மோதலின் மையமாக கிழக்கு ஜெருசலேம் நகரம் இருந்து வருகிறது. இந்த நகரம் யாருக்குச் சொந்தம் என்பதில்தான் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் நீடிக்கிறது.

இந்த சூழலில் கடந்த மாதம் முதல் வாரத்தில் ஜெருசலேம் நகரில் அல் அக்ஷா பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் பலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேல் பொலிசாருக்கும் இடையே கடுமையான மோதல் சம்பவங்கள் அரங்கேறின.

அதனைத் தொடர்ந்து பலஸ்தீனத்தின் காஷா நகரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் போராளிகள் அல் அக்சா பள்ளிவாசல் பகுதியில் இருந்து இஸ்ரேல் படைகள் விலக வேண்டும் என எச்சரிக்கும் விதமாக இஸ்ரேல் நகரங்கள் மீது ரொக்கெட்டுகளை வீசி தாக்கினர்.‌ இதற்கு பதிலடியாக இஸ்ரேல் இராணுவம் காசா நகர் மீது வான்வழி தாக்குதலை தொடுத்தது.

கடந்த மாதம் 10-ம் திகதி இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட இந்த சண்டை இடைவிடாமல் 11 நாட்களுக்கு தொடர்ந்தது. இதில் இரு தரப்பிலும் சேர்த்து 250-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த உயிரிழப்பில் பெரும் பகுதி காசாவில் நிகழ்ந்தது.

இருதரப்பு மோதலில் அப்பாவி மக்கள் உயிரிழப்பது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்திய நிலையில், சர்வதேச சமூகம் கொடுத்த அழுத்தத்தின் பேரில் கடந்த மாதம் 21-ம் திகதி இரு தரப்பும் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன.

இதனால் காசாவில் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருந்தது.

இந்தநிலையில் ஹமாஸ் போராளிகளின் கடும் எதிர்ப்பை மீறி ஜெருசலேம் நகரில் யூதர்கள் பேரணி நடத்தினர்.

இதனால் கோபமடைந்த ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலின் தெற்கு நகரங்களை குறிவைத்து வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட பலூன்களை பறக்க விட்டனர்.

இந்த பலூன்கள் தரையில் விழுந்து வெடித்ததில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தீப்பற்றியதாக இஸ்ரேல் தீயணைப்பு துறை தெரிவித்தது.

இதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் அதிகாலை காசா நகரில் ஹமாஸ் போராளிகளின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் வான்வழி தாக்குதலை நடத்தியது.

ஹமாஸ் போராளிகளின் பயிற்சி மையங்கள், பதுங்கு குழிகள் உள்ளிட்டவற்றை குறிவைத்து போர் விமானங்கள் 10 நிமிடங்களுக்கும் மேலாக குண்டு மழை பொழிந்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. அதேசமயம் இந்த வான்வழி தாக்குதலால் காசா நகரில் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றி இஸ்ரேல் இராணுவம் குறிப்பிடவில்லை.

சண்டை நிறுத்தத்துக்கு பிறகு இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பெரிய மோதல் இதுவாகும். இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.   நன்றி தினகரன் 




166 நாட்களில் 20 இலட்சம் பேர் பலி; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா பாதிப்புக்கு உலக அளவில் கடந்த 166 நாட்களில் 20 இலட்சம் பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.

உலக நாடுகளில் பல்வேறு அலைகளில் கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்ட சூழலில், சர்வதேச அளவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 40 இலட்சம் என்ற மைல்கல்லை கடந்துள்ளது.

கொரோனா பாதிப்புகளில் இருந்து மக்கள் தற்காத்து கொள்வதற்கு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதேபோன்று கொரோனா தடுப்பூசிகளையும் பல்வேறு நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் புதிய பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் சூழலில், பல்வேறு நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறையும் காணப்படுகிறது. இதனால் பாதிப்பு அதிகரிக்க கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்புகளால் 20 லட்சம் பேரின் உயிரிழப்பு ஏற்படுவதற்கு ஓராண்டு எடுத்து கொண்ட நிலையில், அடுத்த 20 லட்சம் பேர் கடந்த 166 நாட்களில் உயிரிழந்த உள்ளனர் என ஆய்வொன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அவற்றில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா மற்றும் மெக்சிகோ ஆகிய 5 நாடுகள் உலக அளவில் 50% உயிரிழப்புகளை கொண்டுள்ளன என்றும் ஆய்வு தெரிவிக்கின்றது.   நன்றி தினகரன் 




ஜி-7 மாநாடு நிறைவு: எலிசபெத் ராணியுடன் ஜோ பைடன் சந்திப்பு

இங்கிலாந்து வந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மாநாடு முடிந்ததும் எலிசபெத் இராணியை நேரில் சந்திக்க திட்டமிட்டு இருந்தார்.

ஜி-7 நாடுகள் கூட்டமைப்பின் 47-வது மாநாடு இங்கிலாந்தில் நடந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த மாநாடு நேற்றுமுன்தினம் நிறைவு பெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

3 நாள் நடந்த இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகள் வழங்குவது, பருவநிலை மாற்றத்திலிருந்து உலகை பாதுகாப்பது போன்றவை இந்த மாநாட்டின் முக்கிய அம்சங்களாக இருந்தன.

இங்கிலாந்து இராணி எலிசபெத்தும் இந்த மாநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவரை ஜி-7 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் சந்தித்து பேசுவதில் ஆர்வமாக இருந்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அமெரிக்காவில் இருந்து விமானத்தில் இங்கிலாந்து புறப்படும் போதே எலிசபெத் இராணியை சந்திக்க ஆர்வமாக இருப்பதாக கூறினார். அவர் என் அம்மாவின் தோற்றத்தில் இருக்கிறார் என்று புகழ்ந்தார்.

இங்கிலாந்து வந்த ஜோ பைடன் மாநாடு முடிந்ததும் எலிசபெத் இராணியை நேரில் சந்திக்க திட்டமிட்டு இருந்தார். முன்னதாக மாநாட்டுக்கு வந்திருந்த உலக தலைவர்கள் அனைவரும் சந்தித்து கொண்டனர்.

பின்னர் ஜோ பைடன் தனது மனைவியுடன் சென்று இங்கிலாந்து இராணி எலிசபெத்தை அரண்மனையில் சந்தித்தார். பின்னர் அவர்கள் அரண்மனையின் வெளியே மாடங்களுக்கு இடையே உள்ள நடைபாதையில் பேசிக்கொண்டே நடந்து சென்றனர். நேற்றுமுன்தினம் இந்த சந்திப்பு நடந்தது.

இராணி எலிசபெத்தின் மகன் சார்ல்ஸ் அவரது மனைவி கமிலா ஆகியோருடனும் உரையாடினார்கள். எலிசபெத் இராணியுடனான சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக ஜோ பைடன் தெரிவித்தார்.    நன்றி தினகரன் 






அமெரிக்காவுடன் மோதலுக்கும் தயாராக வேண்டும்

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்

ஜோபைடன் நிர்வாகத்துடன் முழு அளவிலான மோதலுக்கு தயாராக வேண்டும் என தனது அரசுக்கு கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தில் கொள்கை போக்கிற்கு பதிலடியாக வடகொரியா எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்த கிம் ஜாங் அன், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மற்றும் மோதல் என இரண்டுக்கும் தயாராக வேண்டும் எனக் கூறியதாக கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பாக அமெரிக்காவுடன் மோதலுக்கு முழு அளவில் தயாராக இருக்க வேண்டும் என கிம் கூறியதாகவும், நாட்டின் கண்ணியம் மற்றும் நலனை பாதுகாக்கவும் சுதந்திரமான வளர்ச்சி மற்றும் அமைதியான சூழல், நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு இத்தகைய தயார் நிலைகள் மிகவும் அவசியம் என வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 201-19- ஆம் ஆண்டில் அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் - கிம் ஜாங் உன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனினும், இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், கடந்த ஜனவரியில் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன், வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்கள் குறித்து புதிய அணுகுமுறையை கையாள்வது குறித்து பணியாற்றி வருகிறது. எனினும், வடகொரியா விவகாரத்தில் ஜோ பைடனின் கொள்கை என்ன என்பது பற்றி விரிவாக தெரிவிக்கப்படவில்லை.  நன்றி தினகரன் 




No comments: