உறவுகளை தேடியலைந்து வரும் 92 உறவுகள் இதுவரை மரணம்
வெள்ளவத்தையில் 73 கொரோனா நோயாளர் பதிவு
மேலும் 54 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 2,534 கொவிட் மரணங்கள்
யாழ்.மருத்துவபீட ஆய்வு கூடத்துக்கு ரூ. 4.8 மில். பெறுமதியான இயந்திரம்
கொழும்பிலிருந்து இந்தியா சென்ற கப்பலில் எண்ணெய் கசிவு; இந்திய கடலோர காவல்படை அவதானிப்பு
ஏறாவூர் சம்பவம் தொடர்பில் இராணுவம் ஒழுக்காற்று நடவடிக்கை
உறவுகளை தேடியலைந்து வரும் 92 உறவுகள் இதுவரை மரணம்
வவுனியா மாவட்டத்தில் மட்டும் 12 பேர் உயிரிழப்பு
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலைந்த 92 உறவுகள் நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் 12 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உறவுகள் தெரிவித்துள்ளன.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி வடக்கு, கிழக்கில் போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்களது உறவுகள் அவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும் நீண்டகாலமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலைந்து சொல்லெண்ணா துன்பங்களையும், துயரங்களையும் சுமந்து வயோதிப ஓய்வு காலங்களில் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளிலும் ஏனைய உறவுகளின் பாதுகாப்பிலும் இருந்து வருகின்றனர்.
வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வீதிகளிலிருந்து தமது போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
சர்வதேசத்தின் தலையீடுகளை கோரியும் ஐக்கிய நாடுகள் தமது விடயங்களில் தலையீடு செலுத்தி தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரியும் உறவுகள் தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
வெள்ளவத்தையில் 73 கொரோனா நோயாளர் பதிவு
கொழும்பு 06, வெள்ளவத்தையில் நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் 73 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்றுக் காலை ஆறு மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 177 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் வெள்ளவத்தையில் 73 கொரோனா வைரஸ் தொற்றாளர்களும் நாரஹேன்பிட்டி, பொரளையில் 20 தொற்றாளர்களும் மட்டக்குளியில் 14 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நன்றி தினகரன்
மேலும் 54 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 2,534 கொவிட் மரணங்கள்
- 31 ஆண்கள், 23 பெண்கள்
- மரணித்தவர்களில் 30 வயதுக்குட்பட்ட இருவர் உள்ளடக்கம்
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 54 மரணங்கள் நேற்று (18) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 2,480 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 54 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 2,534 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு மரணமடைந்த 54 பேரில், 31 பேர் ஆண்கள், 23 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
யாழ்.மருத்துவபீட ஆய்வு கூடத்துக்கு ரூ. 4.8 மில். பெறுமதியான இயந்திரம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட கொரோனாப் பரிசோதனை ஆய்வு கூடத்துக்கு 4.8 மில்லியன் ரூபா பெறுமதியான தானியங்கி ஆர்.என்.ஏ பிரிப்பு இயந்திரம் ஒன்று புலம்பெயர் தமிழரான சுப்பிரமணியம் கதிர்காமநாதனால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ பீட கொரோனாப் பரிசோதனை ஆய்வு கூடத்தின் தேவைகருதி, யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி இந்த அன்பளிப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.
இந்த தானியங்கி ஆர்.என்.ஏ பிரிப்பு இயந்திரத்தை பல்கலைக்கழக மருத்துவ பீடத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் அண்மையில் இடம்பெற்றது. நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, இயந்திரத்துக்கான ஆவணக் கோப்பை, மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரவிராஜுடன் இணைந்து ஒட்டுண்ணியல் துறைத் தலைவர் மருத்துவர் ஏ.முருகானந்தனிடம் கையளித்தார். இந்த நிகழ்வில் நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியர் திருமதி கலாமதி முருகானந்தன், உயர்பட்டப் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கண்ணதாசன், மருத்துவபீட சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எஸ். ரமேஷ் மற்றும் கொரோனா பரிசோதனை ஆய்வு கூடத்தின் மருத்துவ ஆய்வு கூடத் தொழில் நுட்பவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
தானியங்கி ஆர். என். ஏ பிரிப்பு இயந்திரத்தை அன்பளிப்பாக வழங்கிய புலம்பெயர் தமிழரான சுப்பிரமணியம் கதிர்காமநாதன் மற்றும் அதனை ஏற்பாடு செய்த யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி ஆகியோர் நிகழ் நிலை வழியாக இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். (யாழ்.விசேட நிருபர்) - நன்றி தினகரன்
கொழும்பிலிருந்து இந்தியா சென்ற கப்பலில் எண்ணெய் கசிவு; இந்திய கடலோர காவல்படை அவதானிப்பு
கொழும்பு துறைமுகத்திலிருந்து புதன்கிழமை (16) இந்தியா நோக்கி புறப்பட்டுச்சென்ற போர்த்துக்கல் கொடியுடனான எம்.வீ.டெவோன் என்ற சரக்குக் கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக இந்திய கடலோர காவல்படை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட கிழக்கு கடல் வலயத்தில் இந்த எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து 250 கடல்மைல் தொலைவிலுள்ள கடற்பகுதியில், சுமார் 10 கிலோலீட்டர் (10 KL) எண்ணெய் கடலில் படிந்துள்ளதாக இந்திய கடலோர காவல் படை தெரிவிக்கின்றது.
இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்திலிருந்து இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்திலுள்ள ஹல்தியா துறைமுகத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது.
இந்த கப்பலின் எரிபொருள் தாங்கியில் ஏற்பட்ட கசிவின் காரணமாக, அதிலிருந்த எரிபொருள் கடலில் படிந்துள்ளதாக இந்திய கடலோர காவல் படை மேலும் தெரிவித்துள்ளது.
எனினும், எம்.வீ. டெவொன் கப்பல் தடையின்றி பயண இலக்கை நோக்கி பயணத்தை தொடர்வதாகவும், நிலைமை தொடர்பில் பொறுப்பான அனைத்து தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் காவல்படை மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த எரிபொருள் கசிவு தொடர்பில் கொழும்பு சமுத்திர மீட்பு மற்றும் இணைப்பு மத்திய நிலையத்தினால் கடலோர காவல்படைக்கு அறிவிப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த கப்பலில் 382 கொள்கலன்கள் (மொத்த நிறை 10, 795 டன்) ஏற்றிச்செல்லப்படுவதாகவும், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பணிக்குழாம் உறுப்பினர்கள் 17 பேர் அடங்குகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
ஏறாவூர் சம்பவம் தொடர்பில் இராணுவம் ஒழுக்காற்று நடவடிக்கை
- நாடு சர்வாதிகாரத்தை நோக்கிப் போவதாக இம்ரான் எம்.பி. சாடல்
ஏறாவூர் சம்பவம் தொடர்பில், இராணுவ வீரர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென இராணுவம் தெரிவித்துள்ளது.
சம்வத்துடன் தொடர்புடைய இராணுவ வீரர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பயணக்கட்டுப்பாடுகளை மீறி வீதிகளில் நடமாடிய பலரில் ஒரு சிலரை, வீதியோரதில் கைகளை உயர்த்தியவாறு, முழங்காலில் நிற்க வைத்தமை தொடர்பிலேயே குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்ரான் எம்.பி சாடல்
ஏறாவூர் பொதுமக்கள் வீதியில் முட்டுக்காலில் நிற்க வைக்கப்பட்ட சம்பவம் நாடு சர்வாதிகாரத்தை நோக்கிப் போவதை எடுத்துக்காட்டுகின்றது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பயணத்தடை அமுலில் இருப்பதாக சொல்லப்பட்டாலும் நாடு முழுவதும் நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வீதிகளில் நடமாடுகின்றன. அதேபோல பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் வீதிகளில் பயணிப்பதை நாம் காண்கிறோம்.
இந்நிலையில் ஏறாவூரில் தமது அன்றாடத் தேவையை நிறைவேற்ற வந்த பொதுமக்களை மட்டும் வதைக்கின்ற செயல் நாட்டில் நியாயமான சட்டவாட்சி இல்லை என்பதை உறுதிப் படுத்துகின்றது. சட்டம் பொதுவாக எல்லோருக்கும் தான் அமுல் படுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த நாட்டில் சட்டம் பாரபட்சமாக அமுல்படுத்தப்படுவதை இச்சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்) - நன்றி தினகரன்
No comments:
Post a Comment