நந்தவனத்து ஆண்டிகளும் போட்டுடைத்த தோண்டிகளும் அவதானி



நேற்றைய செய்தி நாளைய வரலாறு என்பார்கள்.  வரலாற்றிலிருந்துதான் பாடங்களையும் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது.

எதனையோ கேட்டு, எதனையோ அடைந்து, இறுதியில் ஆப்பிழுத்த குரங்கின் கதிக்கு ஆளாகிய பாடத்தை கற்றுக்கொண்ட வரலாற்றையே கடந்துகொண்டிருக்கின்றோம்.

அகிம்சையில் தொடங்கி, ஆயுதபாதைக்கு தள்ளப்பட்டு, இப்போது இராஜதந்திர அரசியல் செய்கிறோம் எனச்சொல்லும் தமிழர் தரப்பின் பேச்சாளர்களை சமகாலத்தில் பார்த்துவருகின்றோம்.

இலங்கைத் தீவுக்கு விஜயன் வந்து  ஈராயிரம் ஆண்டுகள் கடந்த நிலையில், உள்நாட்டு சுதேச மன்னர்கள், சிற்றரசர்கள்


வசமிருந்தபோது, யாழ்ப்பாணம், கண்டி, கோட்டே முதலான இராஜதானிகள் இருந்ததாக வரலாறு கூறுகிறது.

வர்த்தக நோக்கத்துடன் வந்த விதேசியர்கள் நாட்டைப்பிடித்து, தங்கள் உள்நோக்கங்களை நிறைவேற்றிவிட்டு, எங்கள் தேசத்தை     அம்போ  என கைவிட்டுச்சென்ற பின்னர், ஏதோவெல்லாம் நடந்து முடிந்துவிட்டன.

அன்றையசெய்திகள் யாவும் வரலாறாகியதுதான் மிச்சம்.

தந்தை செல்வா, வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பின்னர் 1976 ஆம் ஆண்டு, தேசிய அரசுப்பேரவையில் ( அன்றைய நாடாளுமன்றம் ) பேசுகையில்,   தமிழ் மக்கள் இழந்த உரிமைகளை மீட்க, நாங்கள் ஒரு காலத்தில் இணைப்பாட்சி                ( சமஷ்டி )   கேட்டோம். அதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவது சாத்தியம் இல்லை என்பதை பட்டறிவு மூலம் உணர்ந்தோம். எனவே, நாங்கள் பிரிந்து  வாழ்வதுதான் வழி என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். இதை நாம் செய்யாவிடின் தமிழினம் இழந்த தனது உரிமைகளை ஒருபோதும் மீட்க முடியாது. எங்களுக்கென ஒரு பாரம்பரிய பூமி உள்ளது. நாங்கள் பிரிவினை கோரவில்லை. இழந்த எங்கள் உரிமைகளை , எங்கள் அரசை மீட்டுப் பெறுவதே எங்கள் நிலை. தனித்தமிழ் ஈழம் என்ற இலட்சியத்தை நோக்கி நாங்கள் முன்னேறுவோம்.


எங்கள் இலக்கை அடைவது சுலபம் அல்ல என்பது எமக்குத் தெரியும். ஆனால், ஒன்றில் நாம் சிங்களவரின் அதிகாரத்திலிருந்து விடுபட வேண்டும், அல்லது அழிந்துபோகவேண்டும். ஆயினும், நாங்கள் போராடி தனித் தமிழீழம் நிறுவியே தீருவோம். கூட்டாட்சிக் கோரிக்கையை அடியோடு கைவிட்டு விட்டோம். அகிம்சை வழியில் தனித் தமிழ் ஈழம் வென்றெடுப்போம்.    என்றார்.

இந்த உரையை தந்தையார் 19-11- 1976 ஆம் திகதி நிகழ்த்தினார். அடுத்த ஆண்டு 1977 இல் பொதுத் தேர்தலுக்கு சில மாதங்களே இருந்த நிலையில் ஏப்ரில் 30 ஆம் திகதி               ( 30-04-1977 ) மறைந்தார்.

ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் பதவிக்காலத்தில்தான் 1972 இல் புதிய அரசியலமைப்பு வந்தது. அதன் எதிரொலியாக தமிழர் தரப்பில் போர்க்குணம் எழுந்தது.  அந்தக்குணம் வட்டுக்கோட்டை தீர்மானம் வரையில் தீவிரம்பெற்றதையடுத்து தந்தை செல்வா, அத்தகைய ஒரு தீர்மானத்தை ஏன் எடுக்க நேர்ந்தது என்று மரண வாக்குமூலமாகவே சொல்லிவிட்டு, ஒரு சில மாதங்களில் விடைபெற்றார்.

தந்தைக்குப்பின்னர் தனயர்களும் தளபதிகளும் செயல்


அதிபர்களும், தேசியத்தலைவரும், மாவீரர்களும் வந்தனர்.

இப்போது, யாழ். மாகாண சபையின் முதல்வர் யார் என்ற இழுபறிக்கு வந்துள்ளனர்.

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"

ஒரு காலத்தில் சித்தர் ஒருவர் பாடிய பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

1977 ஆம் ஆண்டு  பொதுத்தேர்தலுக்கு முன்னர், கொழும்பில் நடந்த ஒரு இரகசிய பேச்சுவார்த்தைக்கான சந்திப்புக்கு வருவோம்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் எஸ். தொண்டமான் வலதுசாரி சிந்தனைப்போக்கினைக்கொண்டவர். ஆனால், அரசியலில் காய் நகர்த்தும் சாணக்கியர்.

அதுவரையில் ஶ்ரீமா அம்மையாரின் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி யின் கூட்டரசாங்கத்திறகு முண்டுகொடுத்துவந்த இடதுசாரிகளான கம்யூனிஸ்ட், சமசமாஜக்கட்சியினர் அடுத்தடுத்து வெளியேறியதையடுத்து,  திண்ணை காலியாவதை உணர்ந்த தொண்டமான், நடக்கவிருந்த பொதுத்தேர்தலில் வெல்வதற்கான ஒரு கூட்டணி குறித்து பேசுவதற்கு தனது வீட்டில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார்.


அதில் கலந்துகொண்டவர்கள் பின்னாளில் அமைச்சராகவும் பிரதமராகவும் பதவிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்காவின் அருமைத்தந்தையார் எஸ்மண்ட் விக்கிரமசிங்கா,  ( இவர் இலங்கையில் மூத்த பத்திரிகையாளர். ) தமிழர் தரப்பில் அமிர்தலிங்கம், மு. சிவசிதம்பரம், எஸ். கதிரவேற்பிள்ளை, பொல்காவெலை எம். பி. எம். டீ. பண்டா.

இந்த இரகசிய சந்திப்பு, அவர்கள் தயாரித்த அடுத்து வந்த தேர்தல் அறிக்கையினால்  Manifesto )  பரகசியமானது !

அந்த அறிக்கை இவ்வாறு சொன்னது:

" தமிழ்ப்பேசும் மக்களுக்கு பிரச்சினைகள் இருப்பதை ஐக்கிய தேசியக்கட்சி ஏற்றுக்கொள்கிறது. அவற்றை தீர்க்க  முன்னைய அரசுகள் முன்வராதமையால்தான் தனிநாட்டுக்கோரிக்கையை முன்வைப்பவர்களை தமிழ் மக்கள் ஆதரிக்கவேண்டிய நிலை உருவானது. நாட்டின்


முன்னேற்றத்திற்கு தேசிய ஐக்கியம் முக்கியமானது. எனவே தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டிய அவசியத்தை ஐக்கிய தேசியக்கட்சி உணருகிறது. எனவே ஐ. தே. க. ஆட்சிக்கு வந்ததும், கல்வி, அரசாங்க வேலை வாய்ப்பு, தமிழ்பிரதேசங்களில் திட்டமிட்ட குடியேற்றங்கள், அரச நிருவாகத்தில் தமிழுக்குரிய இடம் ஆகியனவற்றில் தமிழ்மக்கள் எதிர்நோக்கும் குறைபாடுகளை களைவதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் ஐ. தே. க மேற்கொள்ளும். "

இத்துடன்   அந்த அறிக்கை முடியவில்லை. இறுதியில் ஒரு கொசுறு இணைப்பினையும் பதிவேற்றியிருந்தது!

அந்த வரிகள்: இங்கு சொல்லப்பட்ட  தமிழர் தரப்பிலான ஆதங்கங்களை ஆராய்வதற்கு ஐ.தே.க. பதவிக்கு வந்ததும் சர்வகட்சி மாநாடும் நடத்தப்படும்.

இழுத்தடிப்பின் மறுபெயர்தான் இதுபோன்ற மாநாடுகள் என்பது விடயம் தெரிந்தவர்களுக்குப் புரியும் !

தன்னை ஒரு தார்மீகத்தலைவர் என்று பிரகடனப்படுத்திக்கொண்ட ஜே.ஆர். ஜெயவர்தனா, இறுதியில் தமிழர்களைப்பார்த்து,  " உங்கள் தந்தைக்கும் பெப்பே… உங்கள் தனயர்கள், தளபதிகளுக்கும் பெப்பே… "  என்று பெப்பே காண்பித்தார்.

எனினும்,  ஆயுதம் ஏந்திய வீரர்களுக்கும் அவர்களது தேசியத்தலைவருக்கும் பெப்பே காட்ட முடியாமல்,  இறுதியில் இந்தியாவிடம் சரணடைந்து, உள்ளே அழைத்து ஒப்பந்தம் என்ற பெயரில் ஒன்றை உருவாக்கி, அதனால் தோற்றுவிக்கப்பட்ட மாகாண சபை முறைமைக்கும் போதிய அதிகாரங்கள் வழங்காமல், அமைதிப்படை என்ற பெயரில் வந்தவர்களையும், தனக்குப்பின்னர் அதிபராக பதவியேற்ற ரணசிங்க பிரேமதாசவினால் My Boys என விளிக்கப்பட்ட, தந்தை, தனையர், தளபதிக்குப்பின்னர் வந்த தம்பிமாருடன் மோதவிட்டுவிட்டு, அரசியலிலிருந்து முற்றாக ஓய்வுபெற்று இரத்தம் சிந்தாமல்  1996 ஆம் ஆண்டு நிரந்தரமாக விடைபெற்றார்.

அவருக்கு முன்னரே, யாரை My Boys என அழைத்தாரோ அவர்கள் தரப்பினாலேயே 1993 இல்  மேல் உலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார் ரணசிங்க பிரேமதாச.

வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்மொழிந்து தம்பிமாரை உசுப்பேத்திய அண்ணன் அமிர்தலிங்கம், 1977 பொதுத்தேர்தலில் வென்று எதிர்க்கட்சித் தலைவராகி, கொழும்பில் வீடும் காரும் பெற்றார்.

இறுதியில் அவரும் அருமைத்தம்பிகள் தரப்பால், 1989 ஆம் ஆண்டு மேல் உலகம் அனுப்பிவைக்கப்பட்டார்.

இவர்களுக்கு ஒப்பந்தம் என்ற பெயரில் உதவ வந்த அயல்நாட்டுத் தலைவர் ரஜீவும் 1991 ஆம் ஆண்டு மேல் உலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இறுதிவரையில் தமிழ் ஈழத்திற்காக போராடிய தேசியத்தலைவரும் 2009 இல் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார்.

தமிழ் ஈழத்திற்காக களம் இறங்கிய மேலும் சில இயக்கத்தலைவர்களும் ( ஶ்ரீசபாரத்தினம், உமா மகேஸ்வரன், பத்மநாபா, கிட்டு, மாத்தையா, தமிழ்ச்செல்வன், பாலகுமார் உட்பட பலர் )  அரசியல் அரங்கிலிருந்து நிரந்தரமாக விடைபெற்றுவிட்டனர்.

திண்ணைகள் காலியாகிவிட்டன. இயக்கங்கள் கோலோச்சிய காலத்தில் வடக்கிற்கும் கிழக்கிற்கும் வராத தற்போதைய தலைவர்கள் சிலர் நாடாளுமன்ற ஆசனத்திற்காகவும், வடக்கு – கிழக்கு மகாண சபைகளின் முதல்வர்  பதவிக்காகவும்  பட்டிமன்றங்கள் நடத்திக்கொண்டும்,  சங்கீத கதிரைப்போட்டி நடத்திக்கொண்டுமிருக்கிறார்கள்.

அன்று 1977 இல் எந்த ஐக்கிய தேசியக்கட்சியை அரசுக்கட்டில் ஏற்றுவதற்கு கொழும்பில் சந்திப்பு நடத்திய தமிழ்த்தலைவர்களின் வாரிசுகள்தான், மீண்டும் 2010 இல் அதிபர் தேர்தலில் போரை முன்னின்று நடத்திய ஃபீல்ட் மார்ஷல் சரத்பொன்சேக்காவை பொதுவேட்பாளராக்கி ஆதரித்தது.

அதே வாரிசுகள்தான் மீண்டும் மைத்திரி – ரணில் நல்லாட்சிக்கு (  ? ) முண்டுகொடுத்தார்கள் !

இந்த ரணில்தான் கல்முனை பிரதேச செயலக விவகாரத்தில் சுமந்திரனுடன்  சாமர்த்தியமாகப்பேசி, அன்றைய தனது பிரதமர் பதவியையும் நல்லாட்சி அரசையும் தக்கவைத்தவர்.

மீண்டும் தேசியப்பட்டியல் ஊடாக பின்கதவால் வரவிருக்கும் ரணிலும் தமது தந்தை எஸ்மண்ட் விக்கிரமசிங்கா போன்று காய் நகர்த்துவதில் வல்லவர்.

தற்போது அரசியல் அரங்கில் காட்சிகள் மாறிவிட்டன.

வடக்கு முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு, தனது ஆன்மீகப்பணிகளை ஓரம்கட்டி வைத்துச்சென்ற நீதியரசர் விக்கினேஸ்வரன், புதிய கட்சியும் தொடங்கி, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவமும் பெற்றுவிட்டார். அவருக்கும் மக்களின் வரிப்பணத்தில் அனைத்து சௌகரியங்களும் வசதிகளும் கிடைக்கும்.

அவரது வடக்கு மாகாண திண்ணை காலியாகிவிட்டது.  அந்தத் திண்ணையில் இனி யார் அமருவது என்பதில்தான் தற்போது சங்கீத கதிரைப்போட்டி நடக்கிறது!

எமது தமிழ் மக்களை எமது தலைவர்கள் எங்கிருந்து எங்கே அழைத்துச்சென்றிருக்கிறார்கள் என்பதையும்,  தாங்கள் எங்கே சென்றார்கள் என்பதையும் பற்றிய  அவதானக்குறிப்புகள்தான் இவை.

சமகாலச்செய்திகள்,   நாளை ஒரு நாள் வரலாறாகிவிடும்.

அவ்வளவுதான் ! 

 

( நன்றி:  யாழ்ப்பாணம் – தீம்புனல் வார இதழ் 01-05-2021)

 

No comments: