உலகச் செய்திகள்

அஸ்ட்ரா செனெகாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் வழக்கு 

பைசர் தடுப்பூசி போட்டவர்கள் இடையே இதய வீக்கப் பாதிப்பு

டெல்லியில் உடல்களை தகனம் செய்வதற்கு இடப்பற்றாக்குறை

இந்திய வகை கொரோனா 17 நாடுகளில் கண்டுபிடிப்பு

இந்தியாவில் தற்போது பரவுவது கொவிட் வைரஸின் 3ஆவது திரிபு

இடு காடாக மாறும் இந்தியா; இறந்த உடல்கள் கொத்து கொத்தாக தகனம்

இந்தியாவில் நாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா

இஸ்ரேலில் சமய விழாவில் நெரிசலில் சிக்கி 44 பேர் பலி

உயிரிழக்கும் பொலிஸாரை வீடியோ எடுத்தவருக்கு 10 மாதங்கள் சிறை (அவுஸ்திரேலியாச் செய்தி)    


அஸ்ட்ரா செனெகாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் வழக்கு 

அஸ்ட்ரா செெனகா மருந்துத் தயாரிப்பு நிறுவனம், குறைந்த அளவு தடுப்பூசிகளை மீண்டும் மீண்டும் விநியோகம் செய்ததற்காக அந்நிறுவனத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் வழக்குத் தொடுத்துள்ளது.

உரிய காரணமின்றித் தொடரப்பட்டுள்ள அந்த வழக்கில் தனது தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் வலுவாக முன்வைக்கவிருப்பதாக அஸ்ட்ரா செெனகா தெரிவித்துள்ளது. ஏற்கனவே உறுதியளித்திருந்த 120 மில்லியன் தடுப்பு மருந்தில் 31 மில்லியனை அஸ்ட்ரா செெனகா, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு விநியோகித்து விட்டது. அதேபோன்று ஜூன் மாதத்துக்குள் வழங்க உறுதியளித்த 180 மில்லியன் தடுப்பு மருந்தில், 70 மில்லியனை மட்டும் வழங்கப்போவதாக அந்நிறுவனம் கூறியிருந்தது.

அவ்வளவு குறைவான மருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தடுப்பூசி போடும் பணியைக் கடுமையாகப் பாதிக்கலாம் என்று கருதப்படுகிறது. உற்பத்தி பிரச்சினையால் தடுப்பு மருந்து விநியோகம் குறைக்கப்படக்கூடும் என்று அஸ்ட்ரா செெனகா இந்த ஆண்டு ஆரம்பத்தில் கூறி இருந்தது. அந்த நிறுவனம் 2021இன் முதல் காலாண்டில் 80 மில்லியன் டோஸ்களை விநியோகிக்க திட்டமிட்டிருந்தபோதும் அதனால் 30 மில்லியன் டோஸ்களையே வழங்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 

பைசர் தடுப்பூசி போட்டவர்கள் இடையே இதய வீக்கப் பாதிப்பு

பைசர் - பயோஎன்டெக் நிறுவனங்கள் தயாரித்த கொவிட்–19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட சிலருக்கு இதய வீக்கம் ஏற்பட்டது குறித்து ஆராய்ந்து வருவதாக இஸ்ரேலின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்பார்த்ததைவிட அதிகமான விகிதத்தில் மக்களிடம் இதய வீக்கம் அடையாளம் காணப்படவில்லை என்று பைசர் கூறியது.

தடுப்பூசி போட்ட சுமார் 5 மில்லியன் பேரில், இதயத் தசையழற்சி என்ற அந்த மருத்துவ நிலை 10க்கும் மேற்பட்டோரிடம் ஏற்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக இஸ்ரேலின் வைரஸ் தொற்று முறியடிப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, 2ஆவது முறை தடுப்பூசி போட்ட பின், அது ஏற்படுவதாக அவர் கூறினார்.

அதற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இருக்கிறதா, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வழக்கத்துக்கு மாறாக அதிகமா ஆகியவை பற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று அவர் விபரித்தார்.

அது குறித்து அந்நாட்டின் சுகாதார அமைச்சு ஆராய்ந்து வருகிறது. 30 வயதுக்கும் மேற்பட்டோரிடையே பெரும்பாலான சம்பவங்கள் தென்பட்டன.  நன்றி தினகரன் 


டெல்லியில் உடல்களை தகனம் செய்வதற்கு இடப்பற்றாக்குறை

கொரோனாவினால் தினமும் 300இற்கு மேல் உயிரிழப்புகள்

இந்தியாவில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நிலைமையை சமாளிக்க நாய்களைத் தகனம் செய்யும் இடத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்ய டெல்லி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா 2ஆம் அலையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக டெல்லி உள்ளது.

டெல்லியில் தினமும் 4,149 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. அதே போல கொரோனா உயிரிழப்புகளும் தினமும் 300 ஐ தாண்டியுள்ளது. இதன் காரணமாக உயிரிழப்பவர்களைத் தகனம் செய்வதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. நிலைமையைச் சமாளிக்க தெற்கு டெல்லியில் உள்ள துவாரகா செக்டர் -29 இல் தற்காலிக ஏற்பாடாக, உயிரிழக்கும் கொரோனா நோயாளிகளைத் தகனம் செய்ய டெல்லி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இது நாய்களை தகனம் செய்ய திட்டமிடப்பட்டிருந்த இடமாகும். செக்டர் -29 இல் சுமார் 3.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இடத்தில் இன்னும் சடலங்கள் எரிக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை. மாநிலத்தில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதால் நிலைமையை சமாளிக்க இந்த இடம் உதவும் என டெல்லி அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெல்லியில் கடந்த வாரம் தினமும் 650 பேரின் உடல்களுக்கு இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த எண்ணிக்கை தற்போது 882ஆக உயர்ந்துள்ளது. எதிர்வரும்நாட்களில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதால் குழப்பத்தைத் தவிர்க்கத் தினசரி 1,000 உடல்கள் வரை தகனம் செய்ய தயாராக இருக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். யமுனை நதிக்கரையில் உடல்களை தகனம் செய்ய ஏதுவான இடங்களையும் அடையாளம் கண்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.  நன்றி தினகரன் 

இந்திய வகை கொரோனா 17 நாடுகளில் கண்டுபிடிப்பு

இந்திய வகையைச் சேர்ந்த இருமுறை உருமாறிய கொரோனா வைரஸ் 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த வாரம் மேலும் 57 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் பல லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு பி.1.617 என்ற வகையைச் சேர்ந்த இந்திய வகை கொரோனா வைரஸ் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ஏப்ரல் 27ஆம் திகதி வரை 17 நாடுகளில் இருந்து 1,200 முறை பி.1.617 வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து அதிகம் இந்த வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

இந்தியாவில் பரவும் மற்ற வகை கொரோனா வைரஸை விட பி.1.617 வகை வைரஸ் வேகமாக வளர்ந்து பரவும் தன்மை கொண்டது. இதனால்தான் இந்தியாவில் முதல் அலையைக் காட்டிலும் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும், பொது சுகாதார விதிகளைப் பின்பற்றாமல் இருப்பது, கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றாமல் தேர்தல், திருவிழா, கலாசார நிகழ்ச்சிகளுக்கு மக்கள் ஒன்றாகக் கூடுவதும் கொரோனா பரவலுக்கு காரணமாக இருக்கலாம்.

இவை தொடர்பாக மேலும் பல ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நன்றி தினகரன் 


இந்தியாவில் தற்போது பரவுவது கொவிட் வைரஸின் 3ஆவது திரிபு

2019 டிசம்பரிலிருந்து கொவிட்19 தொற்று உலகில் சுமார் 30,58, 500 மரணங்களை ஏற்படுத்தியுள்ளது, இது உலகளவில் 143,588,000 பேரை பாதித்துள்ளது. கொவிட் -19 யாரையும் பாதிக்கலாம், இதனால் இலேசானது முதல் மிகக் கடுமையானது வரை அறிகுறிகள் தோன்றும். சிலருக்கு மற்றவர்களை விட கடுமையான நோய் அறிகுறி ஏற்பட வாய்ப்புள்ளது.

சமீபத்திய அறிக்கைகளின்படி இந்தியாவில் சுமார் மூன்று இலட்சம் தொற்றுகள் மற்றும் 24 மணி நேரத்தில் 2,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளன. இது தொற்றுநோய் வெடித்ததிலிருந்து மிகப் பெரிய அளவாகும்.

இதற்கிடையில், பி 1.618 எனப்படும் SARS-CoV-2 வைரஸின் புதிய திரிபு இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் மேற்கு வங்கத்தில் பரவுகிறது. இதனை மூன்றாம் திரிபு என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள்.

மூன்றாம் பிறழ்வு(Triple Mutation) என்றால் என்ன? இரட்டை பிறழ்வுக்குப் பிறகு, இது இப்போது மூன்றாவது பிறழ்வு ஆகும். அதாவது, ஒரு புதிய மாறுபாட்டை உருவாக்கும் மூன்று வெவ்வேறு கொவிட் திரிபுகள் இந்தியாவின் சில பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா, டெல்லி, சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்த பிறழ்வு இந்தியாவில் காணப்பட்டாலும் அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, பின்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உலகளவில் புதிய எழுச்சிகள் புதிய வகைகளால் இயக்கப்படுகின்றன என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். புதிய மாறுபாடு மிகவும் பரவக் கூடியது. இது நிறைய பேரை மிக விரைவாக நோய்வாய்ப்படுத்துகிறது என்று வைரஸை ஆராய்ச்சி செய்யும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிறழ்வுகள் உலகெங்கிலும் புதிய தொற்று அதிகரிப்புகளை அதிகரிப்பதாக வல்லுநர்கள் நம்புகின்றனர். இதை நன்கு புரிந்து கொள்ள, மேலும் ஆய்வுகள் தேவை. இப்போதைக்கு, இந்தியா முழுவதும் பத்து ஆய்வகங்கள் மட்டுமே வைரஸ் மரபணு ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளன.

மூன்றாம் பிறழ்வில் உள்ள மூன்று வகைகளில் இரண்டு நோயெதிர்ப்பு தப்பிக்கும் பதில்களைக் கொண்டுள்ளன. அதாவது, அவை நோயெதிர்ப்புகளை எதிர்க்கின்றன. புதிய மாறுபாடு உடலின் இயற்கையாகவே பெறப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி COVID இலிருந்து தப்பிக்க சில திறன்களைக் கொண்டுள்ளது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளபடி, ஒரு வைரஸ் எவ்வளவு அதிகமாகப் பரவுகிறதோ, அவ்வளவு அதிகமாக அது நகலெடுக்கிறது, மேலும் அது பிறழ்வடைகிறது.  நன்றி தினகரன் 


இடு காடாக மாறும் இந்தியா; இறந்த உடல்கள் கொத்து கொத்தாக தகனம்

- ஒட்சிசன் இன்றி கைவிரித்து நிற்கும் இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்று
- அடையாளம் : 349,691 பேர்
- மரணம்: 2,767 பேர்
- குணமடைவு : 215,962 பேர்

இதுவரை
- அடையாளம் : 16,960 172 (17 மில்லியன்) பேர்
- மரணம் : 192,311 பேர்
- குணமடைவு : 14,085,110 பேர்
- சிகிச்சையில் : 2,681,378

நன்றி தினகரன் 

இந்தியாவில் நாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினமும் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலைவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு, கடந்த 24 மணி நேரத்தில்(நேற்றுக் காலை வரை) 3,79,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்திய நாள் பாதிப்பை விட 18297 அதிகம் ஆகும். மொத்த பாதிப்பு 1,83,76,524 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 3645 பேர் கொரோனா பாதிப்பினால் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,04,832 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,50,86,878 ஆக உயர்ந்துள்ளது. நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 2,69,507 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 30,84,814 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் நேற்றுமுன்தினம் வரை 15,00,20,648 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  நன்றி தினகரன் 


இஸ்ரேலில் சமய விழாவில் நெரிசலில் சிக்கி 44 பேர் பலி

வடகிழக்கு இஸ்ரேலில் சமய விழா ஒன்றில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி குறைந்தது 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

மெரோன் மலை அடிவாரத்தில் வருடாந்தம் இடம்பெறும் லாக் ஓமர் விழாவின்போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதில் பலரும் காயமடைந்துள்ளனர்.

இதனை ஒரு பேரழிவு என்று விபரித்திருக்கும் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு, காயமடைந்தவர்களுக்காக பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று ஆரம்பமானது தொடக்கம் இஸ்ரேலில் இடம்பெற்ற மிகப்பெரிய நிகழ்வான இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பழைமைவாத யூதர்கள் பங்கேற்றனர்.

இஸ்ரேலில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில் அங்கு பல கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு வருகின்றன. எனினும் இந்த விழா ஆரம்பிப்பதற்கு முன்னரே கொவிட்–19 அச்சுறுத்தல் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.

இந்த விழா இடம்பெறும் பகுதியில் கட்டுமானம் ஒன்று இடிந்து விழுந்ததாக ஆரம்பக்கட்ட செய்திகள் தெரிவித்தன. உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை இந்த விபத்து நேர்ந்திருப்பதாக அவசரப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது பங்கேற்பாளர்கள் சிலர் படிகளில் தடுக்கி விழுந்த நிலையில் அதனைத் தொடர்ந்து மேலும் பலர் ஒருவர் மேல் ஒருவர் விழ ஆரம்பித்ததாக பொலிஸாரை மேற்கோள் காட்டி ஹாரட்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

'சில வினாடிகளில் அது நிகழ்ந்தது. மக்கள் விழுந்து, ஒருவருக்கு ஒருவர் மிதித்துக்கொண்டனர். அது ஒரு பேரழிவாக இருந்தது' என்று சம்பவத்தை பார்த்த ஒருவர் மேற்படி பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின்போது, குறுகலான பாதை ஒன்றால் ஆயிரக்கணக்கானவர்கள் நுழைய முயன்றதால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

மக்களை வெளியேறும்படி ஒலிபெருக்கியில் கூறியபோது குண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக நினைத்தே என்று ஒரு யாத்திரிகர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அந்தத் தலத்தில் இருக்கும் அனைவரையும் வெளியேறும்படி பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.

'இவ்வாறான ஒரு நிகழ்வு இங்கு நடந்திருக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்' என்று அவர் சென்னல் 12 தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

பல டஜன் அம்புலன்ஸ் வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததோடு உடல்கள் தரையில் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. காயமடைந்தவர்கள் ஹெலிகொப்டர்கள் மூலம் அழைத்துக் செல்லப்பட்டதோடு, தேடுதல் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக இராணுவம் தெரிவித்தது.

இந்த சம்பவத்தில் குறைந்தது 103 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 38 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

'அங்கே பெரும் கூட்டம் இருந்தது. நகர்வதற்கு இடம் இருக்கவில்லை. மக்கள் தரையில் விழ ஆரம்பித்தார்கள். அதிகமானவர்கள் தரையில் விழுந்தார்கள்' என்று அந்த நிகழ்வில் பங்கேற்க வந்த ஒருவர் பி.பி.சி தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.

'1000க்கும் அதிகமானவர்கள் மிக மிக சிறிய இடத்தின் வழியாக குறுகலான பாதையில் ஒன்றாக செல்ல முயன்றபோது ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர்' என்று ஓர்தடொக்ஸ் ஜூஸ் இணையதளத்தின் செய்தியாளர் பெஹட்ரே ஹரடிம் குறிப்பிட்டுள்ளார்.

பெரும் கூட்டம் காரணமாக குறித்த தலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை செயற்படுத்த முடியவில்லை என்று அதிகாரிகள் முன்னதாக கூறி இருந்தனர்.

இந்த அனர்த்தம் இடம்பெறுவதற்கு முன்னர் ஒழுங்கு விதிகளை பேணுவதில் இடையூறு செய்த இருவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.  நன்றி தினகரன் 


உயிரிழக்கும் பொலிஸாரை வீடியோ எடுத்தவருக்கு 10 மாதங்கள் சிறை

வாகன விபத்தில் உயிரிழந்து கொண்டிருந்த பொலிஸ் அதிகாரிகளை வீடியோ எடுத்து கேலி செய்த ஆடவர் ஒருவருக்கு அவுஸ்திரேலியாவில் 10 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரிச்சர்ட் புசி என்ற அந்த ஆடவர் மீதான பொது ஒழுக்கத்தை மீறியது மற்றும் ஏனைய குற்றச்சாட்டுகளில் கடந்த மாதம் அவர் குற்றங்காணப்பட்டார்.

42 வயதான அவர் ஏற்கனவே சுமார் 300 நாட்கள் தடுப்புக் காவலில் இருக்கும் நிலையில் ஒரு சில நாட்களில் தமது தண்டனைக் காலத்தை பூர்த்தி செய்ய வாய்ப்பு உள்ளது.

அவரது செயல், “இதயமற்ற, கொடிய மற்றும் வெட்ககரமானது” என்று தீர்ப்பளித்த நீதிபதி தெரிவித்தார்.

இந்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் வழங்கப்பட்டிருக்கும் சிறைக்காலம் பற்றி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். கடந்த ஆண்டு மெல்போர்னில் வேகமாக காரை செலுத்தியதற்காக நான்கு பொலிஸ் அதிகாரிகள் ரிச்சர்ட் புசியை நிறுத்தினார்கள். அப்போது அந்த நான்கு பொலிஸாரும் லொரி மோதி சம்பவ இடத்தலேயே உயிரிழந்தனர். சில மீற்றர் தொலைவில் விபத்தில் இருந்து தப்பிய புசி, தனது கைபேசியை எடுத்து பொலிஸ் அதிகாரிகளை வீடியோ எடுத்ததோடு அந்த வீடியோவில் அவர்களை கேலி செய்துள்ளார்.   நன்றி தினகரன் 

No comments: