'மீண்டும் தொடங்கிய நாட்டிய மிடுக்கு', வாழ்த்துகின்றோம்! -ஜெய்ராம் ஜெகதீசன்-

நோக்கம்

மிக இளவயது முதல் ஒரு புலம்பெயர் தேசத்தில் வளர்ந்து,
கலை பயின்றுகொண்டிருக்கும் இளைஞர்களின் நலம்பயக்கும் புதிய முயற்சியை,
நாம் தமிழ்ச் சமூகமாக அறிந்து; அவர்தம் நன்முயற்சிகளும் கலைப் பயணமும்,
மென்மேலும் வளர வாழ்த்தவேண்டும் என்ற விருப்பத்தோடு,
இப்பதிவை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.




🌺 🌺 🌺
முடக்கம்
உலகெங்கும் கொள்ளை நோயால் ஸ்தம்பித்து, அச்சத்தோடு கழிந்தது 2020ஆம் ஆண்டு.
நல்ல கலையாட்சிமிக்க சிட்னி சபாக்களிலும் சதங்கைகளின் நாதம் நிசப்தமாய்ப்போன வேளையிது.
அல்லற்பட்ட பலரையும்போல, விழா அமைப்பாளர்களிடமும் எழுந்த,
நிகழ்வுகளை நடாத்தலாமா? இல்லையா?
கட்டிய முற்பணம் மீண்டு வருமா? இல்லையா?
மண்டபங்களை மாநகர சபையினர் பாவனைக்குத் தருவார்களா? தந்தாலும் இரசிகர்கள் வருவார்களா?
எத்தனை பேர்வரை உள்ளடக்க முடியும்? ஊர் முடக்கம் திடீரென அறிவித்தால் என்னாவது? என,
இத்தியாதி உலகியற் கேள்விகளோடு முடிந்தது ஆண்டு.



🌺 🌺 🌺
சற்றே வெளிச்சம்.
ஆகூழாய்க் கங்காறு தேசத்தார்க்குப் புதிதாய் மலர்ந்த 2021ஆம் ஆண்டில்,
சற்றே வெளிச்சம் கிட்டியதற்குக் காரணம், இறையருள் என்றுதான் கூறவேண்டும்.
மீண்டும் 2021ஆம் ஆண்டு - ஜனவரியின் நிறைவிலிருந்து,
பரதநாட்டிய அரங்கேற்றங்களும் கலை நிகழ்வுகளும், குறித்த சுகாதாரக் கட்டுப்பாடுகளோடு,
மண்டபங்களை அலங்கரிக்கத் தொடங்கிய தருணத்தில்;
சிட்னியில், தாமும் தம் கன்னி முயற்சியில் துணிச்சலோடு களம் இறங்கினர் ‘நிறைவதி' நங்கையர் இருவர்.




🌺 🌺 🌺
நிறைவதி
செல்விகள் ஆருதி குமணனும் துர்க்கா சிவாஜியும்,
தாம்பயின்ற பரதக்கலைமீது கொண்ட தீராக் காதலால்,
2020ஆம் ஆண்டில், பரதத்திற்கெனப் புதிய 'நிறைவதி' நுண்கலை அமைப்பை உருவாக்கிய பின்னர்,
சக பரதக்கலை நண்பிகள் ஐவரையும் அணி சேர்த்துக்கொண்டு;
கொள்ளை நோய்ச் சமூகக் கட்டுப்பாடுகள், தம் பல்கலைக்கழகப் படிப்பு,
வேலை, குடும்பம் என அனைத்தையும் மதித்துப் பேணி, எல்லாவற்றிற்கும் மேலாக,
இசைக்கலைஞர், மண்டபம், ஒலி ஒளியமைப்பு, விளம்பரம், எனச் சகலமும் ஒழுங்கமைத்து,
ஆடலமைப்புகளையும் ஆய்ந்து பயின்று, நுழைவுச் சீட்டுகளை ஒவ்வொன்றாக விற்றுத் தள்ளி,
'மார்க்கம்' என்ற பரதநாட்டிய நிகழ்வொன்றினை 2021ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் - ஆடி அரங்கேற்றி,
இந்நிகழ்வின் மூலம் நல்லதொரு தொண்டார்வச் சேவைக்கு ஊக்கமளிக்கும் வகையில்,
நிதி திரட்டியளித்தனர் என்றால்...
அப்பப்பா…!
சபாஷ்! சபாஷ்!
சிங்கப் பெண்கள்தான் போங்கள்!
பெற்றோருக்கும் துணை நின்றோருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்.

🌺 🌺 🌺
குரு-சிஷ்யை
சிட்னியில் பரதக்கலை பயிற்றுவிக்கின்ற அனுபவம்மிக்க நடன ஆசிரியர்களான,
திருமதி அனுஷா தர்மராஜா, திருமதி கிருஷ்ணா சேகரம், திருமதி மிர்ணாளினி ஜெயமோகன் மற்றும்
திருமதி அபிராமி குமரதேவன் ஆகியோரின்,
சிரேஷ்ட மாணவிகளான (முறையே) துர்க்கா சிவாஜி, ஸ்ரீபைரவி மனோகரன் | அபிராமி வசீகரன் | பாலகி பரமேஸ்வரன் |
ஆருதி குமணன், கேசவி ஜெயசீலன், மற்றும் சங்கரி ஜெயசீலன் என்போரே,
தம் ஆசிரியர்களின் அனுமதியைப் பெற்று, நண்பர்களாக ஒன்றிணைந்து, ‘மார்க்கத்தை’ அரங்கேற்றியவர்களாவர்.
தம் மாணாக்கர், பரதக்கலை மீது கொண்ட ஆர்வத்தால்,
ஏனைய நடனப்பள்ளி மாணாக்கரோடு இணைந்து,
பொதுநோக்கிற்காக ஒரு பரத நிகழ்வை அரங்கேற்ற விரும்புகின்றார்கள் என்ற அவர்களின் எண்ணத்தை,
ஆதரித்தமைக்காக ஆசிரியர்களைப் பாராட்டியே ஆகவேண்டும்.

🌺 🌺 🌺
மார்க்கம்
மொத்தம் ஏழு பாடல்களை உள்ளடக்கி, மேற்கூறிய ஏழு நடனப் பெண்கள் ஒன்றாய் இணைந்தும்,  
மூவராயும், இருவராயும், தனி நடனமாயும் அமைத்த - இரு மணிநேர 'மார்க்கம்' என்ற பரத நிகழ்வு,
பெப்ரவரி 20ஆம், 21ஆம் திகதிகளில் இருநாள் நிகழ்வுகளாய்,
சிட்னியில், 'பாங்க்ஸ்டவுன் - பிரயன் பிரவுன்’ மண்டபத்தில் அரங்கேறியிருந்தது.
இரண்டாவது நாள் நிகழ்விற்கு சென்றிருந்த போது சமூக இடைவெளியோடு கூடிய,
நல்ல இரசிகர் கூட்டத்தைக் காணவும் முடிந்தது.

🌺 🌺 🌺
குரு வணக்கம்
இரண்டாம்நாள் நிகழ்வைப் பொறுத்தவரை,
ஏனோ தெரியவில்லை... 
நிறைவதியினர் தமக்குரிய நடன ஆசிரியர்களை,
இணைந்துகொண்ட ஏனைய மாணவர்களின் ஆசிரியர்களை,
'We thank our teachers' என்பதைத் தாண்டி,
அவர்தம் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களுக்குரிய மரியாதையை முழுமையான நன்றியாய்க் கூறத்தவறியிருந்தமை மனதை நெருடியது.
மாணவர்களை ஆற்றுப்படுத்தியவர்களை, குருபக்தியை,
 
சபையினரோடும் பகிர்ந்திருந்தால், நாம் அனைவரும் ஆசிரியர்களை, அறிந்தும் மகிழ்ந்தும் இருந்திருப்போமல்லவா?
எம்மிடம் விழா மடல்களும் கூட இருக்கவில்லை.
அடுத்தமுறை சரிசெய்து கொள்வார்கள் என நம்புகின்றோம்.

🌺 🌺 🌺
இரசிகர்களின் மகிழ்ச்சி
ஆடல் நங்கையர் எழுவரும், பார்வையாளர் இரசிக்கும்வகையும் நிருத்த நிருத்தியங்கள் புரியும் வகையும் நடனமாடினர்.
அங்கிருந்த, பரத நாட்டியம் பயிலும் மாணவர் மற்றும் பெரியோர்கள், தம் கரவொலிகளால் அவ்வப்போது பாராட்டி மகிழ்ந்தனர்.
அழகுணர்ச்சி மிக்க வண்ணமயமான பரத உடைகள், ஒளியமைப்பின் வண்ணங்கள்,
இவற்றோடுகூடிய நாட்டிய அமைப்பு என,
இளநங்கையரின் பெருமுயற்சிக்குப் பாராட்டுகள்.
அரங்கில் நாட்டியப் பெண்கள் ஆடிய, பரதக்கலையின் வித்துவம் பற்றிய என் தகுதியின்மை கருதி,
ஆடல்களைப் பற்றி மேலும் விரிக்காமல் விடுகின்றேன்.

🌺 🌺 🌺
இசைகூட்டிய கலைஞர்
அண்மைக்காலமாக சிட்னியினுடைய பரத நிகழ்வுகளில்,
சாஸ்திரீய சங்கீதத்தை முறையே பயின்ற, பயின்றுவரும் இம்மாநிலத்து வளரிளம் இசைக் கலைஞர்கள்,
அதிக அளவில் இசைகூட்டி அலங்கரித்து வருகின்றமை சிறப்பு!
நிறைவதியினரும், தம் 'மார்க்கத்திற்கு' அணி செய் இசைக்கலைஞர்களாக,
இவ்விளைஞர்களில் சிலரை அரங்கேற்றியிருந்தார்கள், நல்லதொரு தேர்வும் கூட.
வாய்ப்பாட்டையும் இடையிடையே நிகழ்ச்சி ஒருங்கிணைப்பையும் திரு. அர்ச்சுனன் புவீந்திரன் கச்சிதமாக இயற்ற,
நட்டுவாங்கத்தை,
ஆர்வம்மிகு பரதக் கலைஞர் திரு. சேரன் ஸ்ரீபாலன் - தன் ஏற்ற இறக்கத் தொனிசேர் குரலிசையோடு ஆற்ற,
இலய வாத்தியமான மிருதங்கத்தில்,
வித்துவான் பல்லவன் நாகேந்திரன் தன் விற்பன்னத்தை,
ஜதிக் கோர்வைகளோடு அழகுற முழங்கியிருந்தார்.
கடந்த இரு வருடங்களில் நடந்தேறிய தமது அரங்கேற்ற நிகழ்வுகளில்,
பலரும் பாராட்டும் வகையில் தம் திறமைகளை, நரம்புக்கருவியினூடும் துளைக் கருவியினூடும் காண்பித்த இளவல்கள்,
செல்வி அகல்யா பாவலன் மற்றும் செல்வன் ஜதூஷன் ஜெயராசா முறையே,
வயலினிலும் புல்லாங்குழலிலும் இணைந்திசைத்து வாய்ப்பாட்டிற்கு  அணி சேர்த்திருந்தனர்.
அனைவர்தம் திறனைப் பாராட்டி இரசிகர்களும் மகிழ்ந்து ஊக்குவித்திருந்தார்கள்.
 
அனைவரதும் கலைப் பயணம் செவ்வனே தொடர, இறை துணை நிற்கட்டும்!
எம் வாழ்த்துகள்.
🌺 🌺 🌺
மார்க்கம் பரத நிகழ்வில் பின்வரும் பாடல்களுக்கு நங்கையர் ஆடியிருந்தனர்.

'தோடைய மங்களம்' - இராகம்': இராகமாளிகை, தாளம்: தாளமாளிகை
நடன அமைப்பு: அடையார் கே. இலட்சுமணன்

'நந்திச் சொல்' - இராகம்: வசந்தா,  தாளம்: ஆதி.
நடன அமைப்பு: அடையார் கே. இலட்சுமணன்

வர்ணம்: 'ரூப முஜுச்சி' - இராகம்: தோடி,  தாளம்: ஆதி.
நடன அமைப்பு: ருக்மணிதேவி அருண்டேல்

'நிறைவதி' - இராகம்: இரசிகப்பிரியா, தாளம்: ஏகம்
நடன அமைப்பு: ஆருதி குமணன்

பதம்: 'வருகலாமோ ஐயா' - இராகம்: மாஞ்சி, தாளம்: மிஸ்ர சாப்பு
நடன அமைப்பு: வி.பி. தனஞ்செயன்

கீர்த்தனம்: 'நீ உரைப்பாய்' - இராகம்: இராகமாளிகை, தாளம் - ஆதி
நடன அமைப்பு: ருக்மணிதேவி அருண்டேல்

தில்லானா - இராகம்: ஹிந்தோளம், தாளம்: கண்ட ஏகம்
நடன அமைப்பு: ருக்மணிதேவி அருண்டேல்

🌺 🌺 🌺
படங்கள்: 8Letters' மது தாசன்

No comments: