சிங்கப்பூர் தமிழ் மொழி விழா 2021ல் - தமிழ்கூறும் நல்லுலகம்


தமிழன்னையை ஆட்சிக்கட்டிலில் ஏற்றி அழகு பார்த்த சிங்கப்பூர்த் தமிழர்கள் அவ்வன்னைக்குச் சூட்டிய மணிமகுடம் தான் தமிழ் மொழி விழா. ஓவ்வொரு ஆண்டும் தமிழை நேசிப்போம் தமிழில் பேசுவோம்’ என்ற முழக்க வரியோடு வளர்தமிழ் இயக்கம் மற்றும் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிகுழுவின் ஆதரவோடு இவ்விழா சிறப்பாக அரங்கேறி வருகிறது. இத்துணை ஆண்டுகள் தீவெங்கும் ஒலித்த தமிழ்


முழக்கம் கடந்தாண்டு கொரோனா நோய்தொற்றுக் காரணமாக இணையத்தின் வழியே உலகெங்கும் ஒலித்தது. அதுபோல இவ்வாண்டும் மெய் நிகர் தொழில் நுட்பத்தின் வழியாகத்தமிழோசைப் பாரெங்கும் ஒலித்து வருகின்றது.இவ்விழாவில்2014 ஆண்டு முதல் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ச்சியை முன்னெடுத்துவருகிறது. இதன் தொடர்ச்சியாக இவ்வாண்டும் ஏப்ரல் 24 ஆம் தேதி “தமிழ்கூறும் நல்லுலகம்” என்ற தலைப்பில் நிகழ்ச்சியை இணையத்தில் நடத்தியது. ‘வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி’ என்ற பாரதியின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலோடு நிகழ்வு சரியாக ஆறு மணிக்குத் தொடங்கியது. இந்த நிகழ்வின் நிகழ்ச்சி நெறியாளர்களாக நின்று நிகழ்ச்சியை வழி நடத்தினார்கள் திரு முத்து மாணிக்கம் மற்றும் திருமதி பிரதீபா அவர்கள்.

அடுத்த அங்கமாக வரவேற்புரையை வழங்கினார் சங்கத்தின் தலைவர் திரு.சௌந்தரராஜன் அவர்கள். ஆறு தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி இன்று உலகின் பல்வேறு கண்டங்களில்


பேசப்பட்டு வருகின்றது. அதனை அனைவரும் அறிந்துகொள்ளும் பொருட்டு ‘தமிழ்கூறும் நல்லுலகம்’ என்ற தலைப்புத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்று இந்நிகழ்வின் நோக்கத்தைப்பற்றி எடுத்துரைத்தார். மேலும், இந்த நிகழ்விற்குத்தளம் அமைத்துக் கொடுத்த வளர் தமிழ் இயக்கம் மற்றும் கற்றல் வளச்சிக் குழு உறுப்பினர்கள், சிங்கப்பூரின் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், சிறப்புப் பேச்சாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என்று நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்று வரவேற்புரையை வழங்கினார்.


தமிழ்மொழிவிழாவின் முக்கிய நோக்கம் சிங்கப்பூரில் தமிழ் மொழியை வாழும் மொழியாக நிலை பெற செய்வதோடு மாணவர்களிடையே தமிழ்ப் புழக்கத்தை அதிகரிக்கச் செய்வதே ஆகும். அந்த வகையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கமும் மாணவர்களிடையே தமிழ் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளில் மாணவர்களுக்குப் போட்டிகளை நடத்திவருகின்றது. தமிழ் மொழியின் இலக்கியச் சிறப்புகளை நடைமுறை வாழ்வியலோடு பொருத்திப் பார்க்கும் வகையில் தலைப்புகள் கொடுக்கப்படுகின்றன. இதன் மூலம் மாணவர்களிடையே மொழியின்பால் ஆர்வத்தையும் ஈர்ப்பையும் உருவாக்குவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் இந்த ஆண்டும் "பிறமொழிகளில் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் செல்வாக்கு" என்ற தலைப்பில் ஆய்வு செய்து தங்களது படைப்பை படைக்க உயர்நிலை மற்றும் தொடக்கக்கல்லூரி மாணவர்களிடையே போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் பதினான்கு பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 56 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது பங்களிப்பினை வழங்கினர். உயர்நிலை1&2, உயர்நிலை3&4 மற்றும் தொடக்கக் கல்லூரி என்று மூன்று பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களைப்பற்றிய  விவரங்கள் முதலில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசைப்பெற்ற மாணவர்கள் தங்கள் படைப்பைப் படைத்தார்கள்.

முதலில் உயர்நிலை1&2, பிரிவில் முதல் பரிசு பெற்ற தெமாசெக் தொடக்கக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி சித்வியா சிதம்பரம் ‘ஜப்பானிய மொழியிலே தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் செல்வாக்கு ’என்ற தலைப்பில் தன்னுடைய படைப்பைப் படைத்தார்.  தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் இடையே உள்ள மொழியியல் கூறுகள், இலக்கியம், கலாசாரம், விழாக்கள், உணவு என்று பல நிலைகளில் இரண்டுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளைப் பற்றி எடுத்துரைத்தார். இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே நெடுந்தொலைவு இருந்தபோதும் தமிழின் செல்வாக்கு ஜப்பானிய  மொழியில் காணும்போது தமிழின் தொன்மையும், தமிழின் செம்மையும் நன்கு புலப்படுகின்றது. அடுத்தாக உயர்நிலை3&4 பிரிவில் முதல் பரிசு பெற்ற தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவர் விஷால் அருண்குமார் ‘கொரிய மொழியிலே தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் செல்வாக்கு’ என்ற தலைப்பில் தன்னுடைய படைப்பைப் படைத்தார். முதலாம் நூற்றாண்டிலே வாணிகத்தின் பொருட்டு உருவான தொடர்பின் தாக்கத்தால் தமிழின் பல படிமகூறுகள் அம்மண்ணில் வேரூன்ற தொடங்கிய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். மேலும், இரண்டு மொழிகளுக்கிடையே உள்ள சொற்களின் ஒலிப்புமுறை, கலாசாரம், பழக்கவழக்கம், நடனம் ஆகிய வற்றில் காணப்படுகின்ற ஒற்றுமைகளைப் பற்றிக் குறிப்பிடபோது நம் பண்டைய தமிழர்களின் மரபும், பண்பாட்டு சிறப்பும் எத்தகைய நிலைப்பாட்டினைக் கொண்டு இருக்கிறது என்பதை நம்மால் கண்கூடாக அறிய முடிந்தது. நிறைவாகதொடக்கக் கல்லூரி பிரிவில் முதல் பரிசு பெற்ற டி.பி.எஸ் (D.P.S) சர்வதேசப் பொதுப் பள்ளியில் படிக்கும் மாணவி அனுஷாசந்திரன் ‘தமிழ் மொழிக்கும் தாய் மொழிக்கும் இடையிலான உன்னத உறவு’ என்ற தலைப்பில் தன்னுடைய படைப்பை படைத்தார். கங்கை கொண்ட சோழனால் தொடங்கப்பட்ட கலாசாரப் புரட்சியின் விளைவால் தாய்லாந்து மக்களின் கலை, கலாசாரம், கடவுள் வழிபாடு மற்றும் அரசியல் என்று அனைத்து தளங்களிலும் முத்தமிழின் முத்திரையைப்பற்றி எடுத்துரைத்தார். "பிறமொழிகளில் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் செல்வாக்கு" என்ற தலைப்பு மாணவர்களின் சிந்தனையைத் தூண்டியதோடு, தமிழ் மொழியின் செல்வாக்கை அறிய ஏதுவாக அமைந்திருந்தது என்பதை அவர்களின் படைப்பின் வழி அறிய முடிந்தது. அடுத்த அங்கமாக அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னால்  மாணவர்கள் சங்கம்  2014 முதல் 2020வரை தமிழ் மொழி விழாவில் கடந்து வந்த பாதையைப் பற்றிய கண்ணோட்டம் இடம் பெற்றது. இதனைத் தொடர்ந்து விழா சிறப்பாக நடைபெற நிதி உதவி நல்கிய ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

அடுத்த அங்கமாகச் சிறப்புப் பேச்சாளர்களின் சிறப்புரை தொடங்கியது. ‘திரை கடலோடியும் திரவியம் தேடு’ என்ற பழமொழிகேற்ப கடல் தாண்டி திரவியம் தேட சென்ற புலம் பெயர்ந்த தமிழர்கள் பொருளைத் தேடுவதில் மட்டும் நாட்டம் கொள்ளவில்லை. அதனோடு தங்கள் மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு போன்ற வற்றைத் தாங்கள் வாழ்ந்த மண்ணில் வேரூன்றுவதற்குத் தங்களால் முயன்ற முயற்சிகளைப் பன்னெடுங் காலமாகத் தொடர்ந்து  முன்னெடுத்து வருகின்றனர். அவர்களின் அரும்பெரும் பணியால் பலநாடுகளில் இன்று தமிழ் மொழியின் மணம் கமழ்ந்து கொண்டிருக்கிறது.  அங்ஙனம் மணம் வீசும் ஐந்து கண்டத்திலிருந்து அனுபவமிக்கப் பேச்சாளர்கள்“ தமிழ்கூறும் நல்லுலகம்” என்ற தலைப்பில் தங்கள் உரையை ஆற்றினார்கள். முதலில் அமெரிக்கா கண்டத்திலிருந்து முனைவர் சோமலெ சோமசுந்தரம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அமெரிக்காவில் அடுத்த தலைமுறையினருக்குத் தமிழைக் கொண்டு சேர்க்க இசை, நடனம், சமயம் என்று பல்வேறு வழிகளில் அவர்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பற்றி எடுத்துரைத்தார். அடுத்ததாகஆசிய கண்டத்திலிருந்து பேராசிரியர் முனைவர் நா. கண்ணன் அவர்கள் இன்றைய தொழில் நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் பல்வேறு தடைகளைக் கடந்து இன்று இணைய உலகில் பீடு நடை போடும் தமிழ் மொழிக்கு ஏற்பட்ட சவால்களைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அடுத்ததாக, ஆப்பிரிக்கா கண்டத்திலிருந்து திரு லயன் ஜி. சிவசன்முகம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். சீஷெல்ஸ் நாட்டில் வாழும் இன்றைய பிள்ளைகளிடம் நம்முடைய கலாசாரத்தையும், பண்பாட்டையும் தாய் மொழியின் வழியே கொண்டு சேர்க்க முடியும் என்பதை உணர்ந்து அதற்காக அவர்கள் முன்னெடுத்து முயற்சிகளைப் பற்றி எடுத்துரைத்தார். அடுத்ததாக, ஐரோப்பா கண்டத்திலிருந்து முனைவர் அலெக்சிஸ் தேவராஜ் சேன்மார்க் அவர்கள் உரையாற்றானார். இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்காட்லாந்து, போலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் தமிழின் வளர்ச்சிக்குப் பல்வேறு அறிஞர்கள், தமிழ்ச்சங்கங்கள், அமைப்புகள், கழகங்கள் போன்றவை அரும் பாடுபட்டு வருவதைப்பற்றிப் பகிர்ந்துகொண்டார். நிறைவாக, ஆஸ்திரேலியா கண்டத்திலிருந்து நாகை கா.சுகுமாரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தாய் மொழி சிந்தனையைப் பெற்றவன் தரணி ஆள்வான் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் ஆஸ்திரேலியா தமிழர்கள் கல்வி, அரசியல், பொருளாதாரம், பொழுது போக்கு என்று பலதுறைகளில் சிறந்து விளங்குவதைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார். மேலும் பன்முகக்கலாசாரமிக்க ஆஸ்திரேலியாவில் தமிழை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்க அவர்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப்பற்றிப் பகிர்ந்துகொண்டார்.

அடுத்ததாக, தலைமை பொறுப் பேற்று சிறப்பாக இந்நிகழ்வை நடத்திய ஏற்பாட்டுக்குழு தலைவர் திரு சந்தோஷ் அவர்கள் ஏற்புரை வழங்கினார். இந்தநிகழ்ச்சியைப் பொறுப் பேற்று நடத்தியதன் மூலம் புதிய அனுபவத்தைப் பெற்றதோடு மட்டட்ற்றமகிழ்ச்சியும் பெருமையும் கொள்வதாகக் கூறினார்.

நிறைவாக, நன்றியுரை ஆற்றினார் செயலாளர் செல்வி ஸ்வர்ணா வீரப்பன் அவர்கள். ஏற்பாட்டுக் குழுவினர், ஆதரவாளவர்கள், சிறப்புப் பேச்சாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என்று இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். ‘தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்’ என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப பல்வேறு கண்டங்களில் தமிழ் முழங்கி வருகின்றது என்பதன் எதிரொலியாக ஐந்து கண்டங்களிலிருந்து பேசிய பேச்சாளர்களின் உரை அமைந்திருந்தது. ‘தமிழ்கூறும் நல்லுகம்’ என்ற தலைப்பு உலகளவில் பிறமொழி மற்றும் கலாசாரங்களில் தமிழ் மொழியின் செல்வாக்கைப் பற்றி அறிந்துகொள்ள ஏதுவாக அமைந்திருந்தது என்று தான் சொல்ல வேண்டும். எட்டாம் ஆண்டு நிகழ்ந்த இந்நிகழ்வு இணைத்தின் வாயிலாக எட்டுதிக்கும் பயணித்ததோடு இதனைக் கண்டு களித்ததமிழர்களின் நெஞ்சம் தமிழால் நிறைந்தது என்றால் மிகையில்லை.

செய்தி : பிரதீபா வீரபாண்டியன்

No comments: