ஜனாதிபதி - சீன பாதுகாப்பு அமைச்சர் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை
இலங்கையின் முதல் தமிழ் பெண் வேந்தர் பேராசிரியர் யோகா இராசநாயகம் காலமானார்
ரிசாட் பதியுதீன் எம்.பியை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்
சிவராமின் நினைவு தினம் அனுஷ்டிப்பு
கிளிநொச்சி நகர் இராணுவத்தினர் கண்காணிப்பில்
ரிஷாட்டின் கைதுக்கு எதிராக நிந்தவூர் பிரதேச சபையில் கண்டன தீர்மானம்
ஜனாதிபதி - சீன பாதுகாப்பு அமைச்சர் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பிங் (Wei Fenghe) அவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த சீன பாதுகாப்பு அமைச்சரை ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர மற்றும் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் வரவேற்றனர்.
ஜனாதிபதிக்கும் தனக்குமிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்ததாக சீன பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்ததாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அதேபோன்று இருநாடுகளுக்குமிடையிலான உறவுகள் இந்த விஜயத்தின் மூலம் பலமடைந்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பிங் (Wei Fenghe) தனது வருகையை நினைவுகூரும் வகையில் விசேட விருந்தினருக்கான நினைவுப் புத்தகத்தில் கைச்சாத்திட்டார்.
இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong), சீன மக்கள் இராணுவத்தின் ஒன்றிணைந்த பணிக்குழாம் திணைக்களத்தின் தலைவரும் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் ஷாஓ யென்மின்ங் (Lt. Gen. Shao Yuanming), மேஜர் ஜெனரல் சீ கோவை (Ci Guowei) உள்ளிட்ட சிரேஷ்ட பிரதிநிதிகள், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நன்றி தினகரன்
இலங்கையின் முதல் தமிழ் பெண் வேந்தர் பேராசிரியர் யோகா இராசநாயகம் காலமானார்
இலங்கை வரலாற்றில் முதலாவது பல்கலைக்கழக பெண் பீடாதிபதியும் இலங்கையின் முதலாவது தமிழ் பெண் பல்கலைக்கழக வேந்தருமான வாழ்நாள் பேராசிரியர் யோகா இராசநாயகம் கொழும்பில் திங்கட்கிழமை காலமானார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பட்டதாரியான இவர் அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியபடி முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டதுடன் தொடர்ந்து பிரித்தானியாவின் கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார்.
கொழும்பு பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளராகவும், துறைத்தலைவராகவும் நீண்ட நாட்கள் கடமையாற்றிய பேராசிரியர் யோகா இராசநாயகம், கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடாதிபதியாக நியமனம் பெற்றதன் மூலம், இலங்கையின் முதலாவது பெண் பீடாதிபதி என்ற பெருமையைப் பெற்றுக் கொண்டார்.
கொழும்பு ஹவ்லொக் வீதியில், வாழ்நாள் பேராசிரியர் யோகா இராசநாயகம் வேந்தராக நியமிக்கப்பட்டதை கௌரவித்து வேந்தர் வீதி என்று விசேட பெயர் சூட்டப்பட்ட வீதியில், 413/2C என்ற இலக்கத்தில் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு வாழ்ந்து வந்தார். நன்றி தினகரன்
ரிசாட் பதியுதீன் எம்.பியை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டம் வவுனியா மாவட்ட செயலகம் முன்னால் நேற்றுக் காலை 9மணியில் இருந்து 10மணிவரை இடம்பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கைது ஒரு அரசியல் பழிவாங்கல் எனவும், ரிஷாட் பதியதீன், அசாத்சாலி உள்ளிட்டவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் இந்த போராட்டம் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'அரசுக்கு ஆதரவு வழங்காததற்காக இந்த கைதா, சிறுபான்மை தலைமைகளை விடுதலை செய், அரசே உண்மையான சூத்திரதாரிகளை கைது செய், தமிழ் பேசும் உறவுகளே அநீதியான கைதுக்கு எதிராக ஒருமித்து குரல் கொடுப்போம், இன, மத பாகுபாடு இன்றி பணியாற்றிய சேவகனை விடுதலை செய்,சிறுபான்மையினரின் குரலை விடுதலை செய், என எழுத்தப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியவாறு கோசமும் எழுப்பினர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் வவுனியா நகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரி, லரீப், ரி.கே. இராஜலிங்கம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாள்ர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். நன்றி தினகரன்
வவுனியா விசேட நிருபர் -
சிவராமின் நினைவு தினம் அனுஷ்டிப்பு
ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினம் வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நினைவு நிகழ்வில் யாழ். ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் மாலை அணிவித்து , மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
ஊடகவியலாளரான தராக்கி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து இனம்தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பின்னர் பாராளுமன்றத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
அதேபோல், ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் உதயன் பத்திரிகையின் அலுவலகச் செய்தியாளராகக் கடமையாற்றி வந்த வேளை கடந்த 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் திகதி காலை 10 மணியளவில் ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதவர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
இந் நினைவு நிகழ்வில் கொரோனோ தொற்றினால் உயிரிழந்த ஊடகவியலாளர்கள் மற்றும் மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் கொரோனோ தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலம்பெற வேண்டி பிரார்த்தனையும் நடைபெற்றது. நன்றி தினகரன்
கிளிநொச்சி நகர் இராணுவத்தினர் கண்காணிப்பில்
கிளிநொச்சி நகருக்கு வருகின்ற பொது மக்கள் முகக்கவசம் அணியாதும் கொவிட் 19 சுகாதார நடைமுறைகளுக்கு மாறாகவும் வருகின்றவர்களை வழி மறித்து அவர்களை மீண்டும் திருப்பி அனுப்பும் செயற்பாடுகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி பெரும்பாலான வீதிகளில் இராணுவத்தினனர் நிறுத்தப்பட்டு பொது மக்களின் நடவடிக்கைகள் அவதானிக்கப்பட்டு வருகிறது. இதன் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு விளக்கமளிக்கப்படுவதோடு,எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பி வருகின்றனர்.
கிளிநொச்சி குறூப் நிருபர் - நன்றி தினகரன்
ரிஷாட்டின் கைதுக்கு எதிராக நிந்தவூர் பிரதேச சபையில் கண்டன தீர்மானம்
- கறுப்பு சால்வை அணிந்து உறுப்பினர்கள் பங்கேற்பு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நிந்தவூர் பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு வியாழக்கிழமை (29) நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மத அனுஸ்டானம் இடம்பெற்ற பின்னர் 2021 மார்ச் மாதத்திற்கான கூட்டறிக்கை உறுதிப்படுத்தல், 2021 மார்ச் மாதத்திற்கான கணக்கறிக்கை உறுதிப்படுத்தல், தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் உரை, என்பன தொடர்ச்சியாக இடம்பெற்றன.
குறித்த அமர்விற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் 6 பேர் கருப்புச்சால்வை அணிந்து வருகை தந்திருந்ததுடன், ஏனைய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் இவ்வாறு அணிந்து சபைக்கு வருகை தந்திருந்தனர்.தவிசாளர் உட்பட சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களான ஏ.அஸ்பர், ஏ.அப்துல் வாஹிது ஆகியோர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் கண்டனம் தெரிவித்து உரையாற்றினர்.
இதன் பின்னர் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் விடுதலை செய்யப்பட வேண்டும் என சபையில் ஏகமனதாக கண்டனத் தீர்மானமும் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை சபையின் உப தவிசாளர் வை.எல் சுலைமாலெப்பை முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் கைது நடவடிக்கை தொடர்பில் உரையாற்றியதுடன், அது தொடர்பில் ஏனைய உறுப்பினர்களின் கண்டனத் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்காமல் மௌனமாக இருந்ததை காண முடிந்தது.
சபை நடவடிக்கையின் போது திண்மக் கழிவுகளை தரம் பிரித்து அகற்றுவது தொடர்பாக தவிசாளரினால் உறுப்பினர்களுக்கிடையே வினவப்பட்ட ஆலோசனைக்கமைய உறுப்பினர் கே.எம்.ஜெஸீமா ஆக்கபூர்வமான விடயங்களை சுட்டிக்காட்டினார்.
பாறுக் ஷிஹான் - நன்றி தினகரன்
No comments:
Post a Comment