எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 39 கொழும்பு கலை – இலக்கிய – பத்திரிகை நண்பர்கள் அமைப்பு வெட்ட வெட்ட தழைத்த வாழை மரங்கள் ! முருகபூபதி


 


எங்கள் தத்தா  குரக்கன் மா பிட்டு சாப்பிட்டார்.

எங்கள் அப்பா அரிசிமா பிட்டு சாப்பிட்டார்.

நாங்கள் பாண் – ரொட்டி சாப்பிடுகிறோம் !

எங்கள் தம்பி பாப்பா என்ன சாப்பிடுவான்…?

 

எங்கள் தாத்தா மாட்டுவண்டியில் சென்றார்.

எங்கள் அப்பா  கார் – பஸ்ஸில்  சென்றார்.

நாங்கள்  விமானத்தில்  பறந்தோம்.

எங்கள் தம்பிப் பாப்பா எதில் செல்வான்…?

 

எங்கள் தாத்தா கடவுளுக்குப் பயந்தார்.


எங்கள் அப்பா தாத்தாவுக்கு பயந்தார்.

நாங்கள் ஆர்மி, பொலிஸுக்கு பயப்படுகிறோம்.

எங்கள் தம்பிப் பாப்பா  எவருக்கும் பயப்படமாட்டான்…!

 

இந்தத்  தலைமுறை இடைவெளி கவிதையை ஒரு வடபகுதி மகளிர் கல்லூரி மாணவி எழுதி வீரகேசரிக்கு அனுப்பியிருந்தார்.

இதனை மித்திரன் நாளிதழில் பணியற்றிய நண்பர் மயில் தவராஜா எனக்கு காண்பித்தார்.  அக்கவிதையை இற்றைவரையில் என்னால் மறக்கமுடியவில்லை.

அச்சமயம் 1980 காலப்பகுதி, போர்மேகங்கள் படிப்படியாக சூழும் காலகட்டம்.   அந்தக்கவிதை எழுதிய மாணவி அப்போது எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார்.

இறுதியாக அக்கவிதையில் இடம்பெற்ற வரியில்  “ தம்பி  “ என்ற சொல்லுக்கு அவர் அழுத்தம் கொடுத்திருக்கவில்லை. ஆனால், பின்னாளில் ஈழத்தமிழ் சமூகமும் புலம்பெயர் தமிழ் சமூகமும் அந்தச்சொல்லுக்கு அழுத்தம் கொடுத்துப்  பேசியது!


அந்தத்தம்பிதான்  1980 இற்குப்பின்னர், தமிழ் ஈழப்போரை 2009 வரையில் முன்னெடுத்தவர்.

இன்றும் அந்தத்தம்பியை வைத்து  இலங்கையில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் அரசியல் நடந்துகொண்டிருக்கிறது !

புகலிடத்தில் அந்தத்தம்பியின் படத்தை தாங்கிய பதாதைகளுடன் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன.  அந்தப்படம்  ஊடகங்களிலும் வரக்கூடாது என்று சமகால இலங்கை அரசு கடுமையாக எச்சரிக்கிறது !?

அந்த மாணவி  1980  காலப்பகுதியில்  எழுதிய அக்கவிதை வீரகேசரியிலோ மித்திரனிலோ வெளியாகவில்லை. ஆனால், எனது மனதில் நிலைத்துவிட்டது.

தலைமுறை இடைவெளி குறித்து அன்றைய காலகட்டத்தையும் பிரதிபலித்து எழுதப்பட்டிருந்தமையால் இன்றளவும் என்னால் மறக்கமுடியாதிருக்கிறது.

அந்த மாணவியின் பெயரும் மறந்துவிட்டது. தற்போது அவர்


எங்கிருக்கிறார் என்பதும் தெரியாது.

கொழும்பில் அக்காலப்பகுதியில் சில கலை, இலக்கிய அமைப்புகள் உற்சாகமாக இயங்கிக்கொண்டிருந்தன.

எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், வலம்புரி கவிதா வட்டம்,  தமிழ்க்கதைஞர் வட்டம்,  மூத்த ஊடகவியலாளர் எஸ். திருச்செல்வத்தின் முன்னெடுப்பில்  இயங்கிய கலை – இலக்கிய – பத்திரிகை நண்பர்கள் அமைப்பு என்பன குறிப்பிடத்தகுந்தன.

எமது இ.மு. எ.ச. கொழும்பில் மாதாந்தம் பௌர்ணமி தினங்களின்போது கருத்தரங்குகளை நடத்தியது.

வலம்புரி கவிதா வட்டம் - வகவம் - என்ற பெயரில் கவியரங்குகளை நடத்தியது.

தமிழ்க்கதைஞர் வட்டம் - தகவம் - என்ற பெயரில்


இயங்கியவாறு,  மாதாந்தம் வெளியாகும் சிறுகதைகளை தேர்வுசெய்து சிறந்தவற்றுக்கு பரிசும்  சான்றிதழும்  வழங்கிக்கொண்டிருந்தது.

கொழும்பில் பெரும்பாலன கலை, இலக்கிய சந்திப்புகளும் கவியரங்குகளும் தமிழ்ச்சங்கம், கிறீன்லண்ட்ஸ் உணவுவிடுதி, கோட்டை தப்ரபேன் ஹோட்டல் ,  கொள்ளுப்பிட்டி  தேயிலை பிரசார சபை மண்டபம், கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள பாடசாலைகள், பிரதான வீதியில் அமைந்த முஸ்லிம் லீக் வாலிப முன்னணி கட்டிடம் என்பனவற்றில் நடக்கும்.

அந்த முஸ்லிம் லீக் வாலிப முன்னணி  மாடிக் கட்டிடம் அன்றைய சபாநாயகர் பாக்கீர் மார்க்கருக்கு சொந்தமானது.  அவரை நாம் அங்கே அடிக்கடி காணமுடியும். பழகுவதற்கு இனியவர். எளிமையான மனிதர். சில சந்தர்ப்பங்களில் அவரும் எமது நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவார்.

கொழும்பைச்சேர்ந்த கவிஞர் நிதானிதாஸன் என்பவரது


கவிதை நூலும் அந்தக்கட்டிடத்தில் ஒரு நாள் நடைபெற்றபோது,  நவசமாஜக்கட்சியின் தலைவர் தோழர் வாசுதேவ நாணயக்காரவும் அழைக்கப்பட்டிருந்தார்.

அப்பொழுது அவர் 1977 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் தோற்றவராகவும் இருந்தார்.  அவரை மலே வீதியில் அவரது தொழிற்சங்கத்திலும் காணமுடியும்.

கவிஞர் நிதானிதாசன், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அபூயூசுப்பின் மருமகனாவார்.

அபூயூசுப் ஆங்கிலத்திலும் அரசியல் கட்டுரைகள் எழுதுபவர். அத்துடன் பாடசாலை ஆசிரியர்.  இலக்கிய ஆர்வலர்.

இந்தப்பதிவின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்டிருக்கும் கவிதை வாசுதேவாவுக்கும் புரியவேண்டும் என்பதற்காக  அன்றைய கூட்டத்தில் சிங்களத்தில் மொழிபெயர்த்துச் சொன்னேன்.

அவர் அதனைக்கேட்டுவிட்டு உரத்துச்சிரித்தார். பின்னர் அவர் உரையாற்றும்போது,   “ இனப்பிரச்சினை  எரியத் தொடங்கிவிட்டது. தீர்வு காண்பதில் அரசு அக்கறையற்றிருந்தால்,  நிலைமை மோசமாகும்,  அதற்கான அறிகுறிதான் அக்கவிதை  “  என்றார்.


எமது இ.மு. எ.ச.வின் கொழும்புக்கிளையின் செயலாளராகவும் நான் இயங்கியமையாலும், வீரகேசரி வாரவெளியீட்டில்  இலக்கியப்பலகணி பத்தியை  ரஸஞானி என்ற புனைபெயரில் எழுதிவந்தமையாலும், கொழும்பில்  வாராந்தம் நடக்கும் கலை, இலக்கிய நிகழ்வுகளையும்  தவறவிடமாட்டேன்.

அந்நிகழ்வுகளில்  இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் நண்பர் எஸ். திருச்செல்வம் அவர்கள் One Man Army யாக இயங்கியதைப்பார்த்து நான் மட்டுமல்ல,  எமது சங்கத்தைச்சேர்ந்தவர்களும் வியந்தோம்.

இவரைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும்,  இவரது எழுத்துக்களை தினகரனில் படித்திருந்தாலும், முதல் முதலில் சந்தித்தது நண்பர் பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராசன் இல்லத்தில்தான்.

சில்லையூர்தான் எனக்கு இவரை அறிமுகப்படுத்தினார்.  இவர் தினகரன் வாரமஞ்சரியில் அறுவடை என்ற பத்தியையும் மூத்த


பத்திரிகையாளர் எஸ். டி. சிவநாயகம் சிந்தாமணியில் இலக்கிய பீடம் என்ற பத்தியையும் எழுதிவந்தனர்.

சிவநாயகத்திற்கு எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்மீது  ஒவ்வாமை இருந்தது. அத்துடன் அவரது பத்திகளில் குசும்புத்தனத்திற்கும் குறைவில்லை.

தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கு அருந்தத் தரப்பட்ட பாலில் விஷம் கலந்திருந்தது என்ற செய்தியை பரப்பியதுடன், அதனை வலியுறுத்தியதிலும் விடாக்கண்டராக திகழ்ந்தவர் சிவநாயகம்.

எஸ்தி, என நாம் அழைக்கும் எஸ். திருச்செல்வத்தின் அறுவடை பத்தியில்  இலக்கிய புலனாய்வுத்தகவல்களும் இடம்பெற்றிருக்கும். இவர், இலக்கிய அமைப்புகளுக்குள் துப்புத்துலக்கி எழுதிவிடுவார்.

தினகரன் ஆசிரியர் ஆர். சிவகுருநாதன் இவருக்கு பூரண சுதந்திரம் வழங்கியிருந்தார்.

எனினும்,  கலை, இலக்கியவாதிகளையும் படைப்பாளிகளையும்  நேசிக்கும் எஸ்தி,  வரம்புமீறாமல் எழுதுவதையும் பார்த்திருக்கின்றேன்.

அத்துடன், சிவகுருநாதனை காப்பாளராகவும்  வளிமண்டலத் திணைக்களத்தில் பணியாற்றிய  ஓவியர் சுதாவையும் தன்னோடு இணைத்துக்கொண்டு இவர் தலைநகரத்தில் நடத்திய பல நிகழ்ச்சிகளை மறக்கமுடியாது.

தினகரனில் சிரேஷ்ட ஊடகவியலாளராக விளங்கிய எஸ்தி, அந்தப்பணியில் எவ்வாறு சுறுசுறுப்பாக இயங்கினாரோ, அவ்வாறே தாம் தனிமனதராக தொடக்கிய கலை இலக்கிய, பத்திரிகை நண்பர்கள் அமைப்பினையும் அதிவேகத்துடன்


இயக்கினார்.

எஸ்தியிடம் ஒரு ஸ்கூட்டர் இருந்தது.  இவர் தனது பணிகளில் காண்பித்த வேகத்தை அந்த ஸ்கூட்டரில் காண்பிக்கமாட்டார். அவ்வளவு நிதானம்!

ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு சுறுசுறுப்பு மிக மிக அவசியம். எதனையும் நாளைக்கு செய்யலாம், எழுதலாம் என்று ஒத்திவைத்திருக்கமுடியாது.

எஸ்தி Tomorrow Never Come என்ற சிந்தனைவயப்பட்டவர். இத்தருணத்தில் இவருக்கு வலதுகரமாக இயங்கிய ஓவியர் சுதாவின் பதிவொன்றிலிருந்து சில பகுதிகளை இங்கே குறிப்பிடுவது அவசியம் எனக்கருதுகின்றேன்.

 “ கொழும்பு வை.எம்.சி.ஏ.யில் கூட்டமொன்றுக்கு வருமாறு என்னை திரு அழைத்திருந்தார். இலங்கை வானொலியில் பணியாற்றிய இசைக்கலைஞர் குலசீலநாதன், ஒளிப்படக் கலைஞர் சலாஹ-டீன் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்குபற்றிய மற்றிருவர்.

 கொழும்பில் தமிழ்மொழிக் கலை இலக்கியவாதிகளுக்கு உரிய மதிப்பளிக்கவும், அவர்களை வளர்க்கவும், பத்திரிகைக்காரருடன் இணைந்த ஒரு அமைப்பின் அவசியத்தை விளக்கி அதற்கென ஒரு அமைப்பை உருவாக்க


வேண்டியதன் தேவையை திரு இங்கு எடுத்துக் கூறினார்.

 மேலும் சிலரை இதில் இணைத்துக் கொண்டால் நல்லது                    “ என்று நாங்கள் ஆலோசனை கூறியபோது,  “ பல எலிகள் கூடினால் எதுவும் நடக்காது " என்று பதிலளித்த அவர்,  இப்போதைக்கு நான்கு பேரும் போதும், அடுத்த ஐந்து வருடங்களுக்கு நாங்கள் உருப்படியாக ஏதாவது செய்தால் அதன் பின் நிரந்தரக் குழுவை அமைத்து மேலும் பலரை இணைக்கலாம் என்று தெரிவித்த ஆலோசனை எல்லோருக்கும் சரியாகப்பட்டது. திரு அவர்களை அமைப்பாளராக வைத்து,  “ கலை இலக்கிய பத்திரிகை நண்பர்கள்" என்று அமைப்புக்கு பெயர் சூட்டப்பட்டது. தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன் இவ்வமைப்பின் காப்பாளராக செயற்பட்டார். கட்டிடக் கலைஞர் வி.எஸ்.துரைராஜா, பிரபல வணிகர்களான எஸ்.பி.சாமி, மெய்கண்டான் இரத்தினசபாபதி, செனட்டர் நீதிராஜா, எழுத்தாளர் செ. கணேசலிங்கன்,  இரத்தினக்கல் வியாபாரி சாஜஹான், சுங்கத் திணைக்கள அதிகாரிகளான கே.கே.சுப்பிரமணியம், எஸ். வல்லிபுரம் ஆகியோர் உட்பட கொழும்பின் பல பிரமுகர்களும் தமிழ் ஆர்வலர்களும் திரு அவர்களின் நட்பினாலும் தொடர்பினாலும் இவ்வமைப்பின் புரவலர்களாகினார்கள். “

சுதாவின் இந்தப்பதிவின் மூலம்  குறிப்பிட்ட அமைப்பின் தங்கு தடையற்ற தொடர்ச்சியான  பணிகளின்   ரிஷிமூலம் எமக்குத் தெரிந்தது.

பல எலிகள் கூடினால் எதுவும் நடக்காது என்ற வார்த்தை எவ்வளவு யதார்த்தமானது.  அர்த்தம்பொதிந்தது.  பல அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஜனநாயகம் என்ற போர்வையில் எலிகளாக தம்மைத்தாமே அரித்துக்கொண்டதையும் அரித்துக்கொண்டிருப்பதையும் பார்த்துவருகின்றோம்.

1983 கலவரம் வரும்வரையில் எஸ்தியின் அந்த அமைப்பு உற்சாகமாக இயங்கியது.

அதன் பல நிகழ்ச்சிகளுக்கும் நான் சென்றிருக்கின்றேன்.   கலை, இலக்கியவாதிகள், பத்திரிகையாளர்களுக்காக மாத்திரம் இயங்காமல்,  வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களையும் அழைத்து பாராட்டி கௌரவித்தது இந்த அமைப்பு. அதில் ஒன்று ஆழிக்குமரன் ஆனந்தனுக்காக கிறீண்ட்லன்ஸ் விடுதியில் நடந்த வைபவம்.

சிரேஷ்ட பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம்,  தாயகம்                      ( இந்தியா ) திரும்பத்தயாரானபோது அவருக்காக சாந்திவிகார் விடுதியில் நடத்திய கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ஆர். சிவகுருநாதன் பேசிய பேச்சை இன்றளவும் என்னால் மறக்கமுடியாது. 

அந்த அரங்கையே அதிரவைத்த சிரிப்பொலியை எவ்வாறு மறக்க இயலும் !

கல்முனை அரசியல் பிரமுகரும் செனட்டருமான மசூர் மௌலானா பேசும்போது, அந்த அரங்கில் நடமாடியவாறு படங்கள் எடுத்துக்கொண்டிருந்த பிரபல ஒளிப்படக்கலைஞரும் ஒரு திரையரங்கின் பெயரை தனது பெயருக்கு முன்னால் இணைத்திருந்தவருமான  “அவரை” யும் அவரது ஒளிப்படக்கலைச்சேவையையும் இந்த அமைப்பு பாராட்டி விழா எடுக்கவேண்டும் என்று சொன்னார்.

சபையோர் கைதட்டினர். தலைமை தாங்கிய சிவகுருநாதன் சொன்னார்:  ஆமாம்… பாராட்டத்தான் வேண்டும். நான் அவர் எமது தினகரனுக்காக எடுத்துவரும் படங்களும் பார்த்துள்ளேன்.  அவர் எடுத்த மற்றும் வேறு    “ படங்களும்  “ பார்த்துள்ளேன்.  “

விடயம் தெரிந்த பலரும் அட்டகாசமாக சிரித்தனர்.  அந்த ஔிப்படக்கலைஞர் தலையில் கைவைத்தவாறு சபைக்கு வெளியே ஓடினார்.

சிவகுருநாதன், இந்த அமைப்பின் கூட்டத்தில் மட்டுமல்ல,  வேறு எந்தவொரு பொது நிகழ்வில் பேசினாலும் இவ்வாறு அங்கதமாகவும் குசும்புத்தனமாகவும் பேசுவதில் வல்லவர்.

ஒரு சமயம் ரண்முத்து விடுதியில் நடந்த ஒரு கூட்டத்தில், என்னை இறுதிப்பேச்சாளராக அழைக்கும்போது,                                       “  இரவாகிவிட்டது, கெதியா வந்து பேசிவிட்டு, நீர்கொழும்பு பஸ்ஸை பிடிக்க ஓடிப்போம்  “ என்றார்.

நண்பர் எஸ்தி, தலைநகரத்தில் 1983 ஆம் ஆண்டு கலவரம் வரும்வரையில் அங்கு மேற்கொண்ட பணிகள் பற்றி குறிப்பிடாமல் எனது எழுத்தும் வாழ்க்கையும் தொடரை கடந்து செல்லமுடியாது.

இறுதியாக அவரை 1983 தொடக்கத்தில் கதிரேசன் மண்டபத்தில் நடந்த எமது சங்கத்தின்  பாரதி நூற்றாண்டு விழாவில்தான் எழுத்தாளர்  செ. யோகநாதனுடன் சந்தித்தேன். அந்த விழாவில் யோகநாதன் இலக்கியப்போட்டியில் பரிசுபெற்றார்.

அதன்பிறகு எஸ்தியை யாழ்ப்பாணத்தில் நல்லூர் இராமலிங்கம் வீதியில் முடமாவடி என்ற இடத்தில் அவரது இல்லத்தில் இடம்பெயர்ந்தவராக கண்டேன்.

நானும்  குடும்பத்துடன் இடம்பெயர்ந்து அவருடைய இல்லத்திற்கு சமீபமாக வயலின் கலைஞர் வி.கே. குமாரசாமி அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்தேன்.

அந்தக்கலவரம் தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வையே புரட்டிப்போட்டது.

ஆனால், வெட்ட வெட்ட தழைக்கும் வாழைமரம் போன்று மீண்டும் தொடங்கும் மிடுக்குப்போன்று எழுந்து நின்றார்கள்.

அவர்களை பார்க்கும்போதெல்லாம், மகாகவி பாரதியின்  “வீழ்வேனென்று நினைத்தாயோ “ என்ற வைரவரிகள்தான் எனது  நினைவுக்கு வரும்

யாழ்ப்பாணம் இடம்பெயர்ந்த எஸ்தி, அங்கிருந்துகொண்டு தினகரனுக்கு செய்திகளை அனுப்பிக்கொண்டிருந்தார். இரவுவேளையில் யாழ். பஸ் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிச்செல்லும் இரவு பஸ்வண்டிகளின் சாரதிகள் நடத்துனர்கள் அவரது நண்பர்களாயினர்.  அவர்கள் ஊடாக செய்திகளை அனுப்பிக்கொண்டிருந்தார்.

அத்துடன் ஈழமுரசு, முரசொலி ஆகியவற்றினை தொடக்கி நடத்தினார்.  எஸ்தி, இலங்கைப்பத்திரிகை உலகில் சவால்களையும் சங்கடங்களையும் மட்டுமல்ல  உயிர் அச்சுறுத்தலுக்கும் ஆளாகியவர். இந்தியாவிலிருந்து அமைதிகாக்க  வந்தவர்களினால் தடுத்து வைக்கப்பட்டவர்.
அந்தப்படைக்கு ஆதரவாக இயங்கிய ஒரு ஆயுதக்குழுவினால் தமது ஏகபுத்திரன் அகிலனையும்  பறிகொடுத்தவர்.

அதன்பிறகு கனடாவுக்கு புலம்பெயர்ந்து  தமிழர் தகவல் என்ற இதழையும் நீண்ட காலமாக நடத்திவருவதுடன்,  வருடாந்தம்  ஆளுமைகளின் சேவைகளைப்பாராட்டி  விருது வழங்கி கௌரவித்து வருபவர்.
1991 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல்  தொடர்ச்சியாக, தங்குதடையின்றி,  மாதாந்தம்  கனடாவில்  வெளியாகும்                  மூத்த தமிழ் இதழ்தான் தமிழர் தகவல்.  

இந்தப்பதிவில் எஸ்தியின் கலை, இலக்கிய , பத்திரிகையாளர் அமைப்பு நடத்திய சில நிகழ்வுகளின் படங்களை வாசகர்கள் பார்க்கலாம்..

அவற்றில் பங்குபற்றி சிறப்பித்த பலர் இன்று எம்மத்தியில் இல்லை. இந்தப்படங்களை பார்க்கின்றபோது சோகம் மனதை அழுத்துகிறது.

நினைவாகிப்போன அவர்கள் குறித்து பேசுவதற்கும் எழுதுவதற்கும் ஏராளமான விடயங்கள் இருக்கின்றன.

அவர்களின் நினைவுகளை கடந்து செல்லாமல்,  எமது தாயகத்தின் கலை, இலக்கிய, பத்திரிகை உலகத்தை எழுத்தில் பதியமுடியாது.

நினைவுகளுக்கு மரணமே இல்லை.

( தொடரும் )

letchumananm@gmail.com

 

 

 

 

  

No comments: