படித்தோம் சொல்கின்றோம்: நடேசன் எழுதிய அந்தரங்கம் கதைத் தொகுதி மாயாவாதமும் அவிழ்க்கவேண்டிய முடிச்சுகளும் கொண்ட கதைகள் ! முருகபூபதி


னித வாழ்வில் அந்தரங்கங்களுக்கு குறைவிருக்காது.  அந்தரங்கம் அவரவர்க்கு புனிதமானது. ஜெயகாந்தனும் அந்தரங்கம் புனிதமானது என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதியவர்.

அவுஸ்திரேலியாவில் மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக வதியும்  நடேசன்,  இங்கு வந்தபின்னரே இலக்கியப்பிரதிகளும் அரசியல் பத்தி எழுத்துக்களும் எழுதத் தொடங்கியவர்.

சிறுகதை, நாவல், பயண இலக்கியம், அரசியல் பத்தி எழுத்து மற்றும் தான் சார்ந்த விலங்கு மருத்துவத்துறை அனுபவங்கள் சார்ந்த பதிவுகள் என்பனவற்றை தொடர்ச்சியாக எழுதிவரும் நடேசனின்  சிறுகதைகளும், நாவல்களும் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும்


மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இவ்வாறு படைப்பிலக்கியத்துறையில் ஈடுபட்டுவரும் நடேசனுக்கு இதழாசிரியர் என்ற முகமும் உண்டு. சிலவருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் உதயம் என்ற மாத இதழின் நிருவாக ஆசிரியராகவும் பணியாற்றியிருப்பவர்.

சிறுகதையாகட்டும், நாவலாகட்டும், அரசியல் பத்திகளாகட்டும், இவர் எழுதும் எந்தவொரு படைப்பிலும்   அங்கதம் இழையோடியிருக்கும்.

அந்தரங்கம் கதைத்தொகுதியும் விலக்கல்ல.

இதனை வெளியிடுவதற்கு முன்னின்றுழைத்த கருணாகரன், இந்நூலுக்கு  அசாதாரணங்களின் கதை என்ற தலைப்பில் மிகவும் பொருத்தமான அருமையானதோர் முன்னுரையை வழங்கியிருக்கிறார்.

2010 ஆம் ஆண்டு,  முதல் முதலில் நடேசனை யாழ்ப்பாணத்தில் சந்தித்தது தொடக்கம்,  இத்தொகுதி வெளியாகியிருக்கும் இந்தத் தருணம் வரையில் தான் அவதானித்த நடேசன் பற்றியும்,  நடேசனின் இலக்கியம், மற்றும் சமூக அரசியல் பணிகள் பற்றியும்   விளக்கியிருக்கிறார்.

தமிழகத்தின் மூத்த இதழாளரும் இலக்கியப்படைப்பாளியுமான மாலன் இத்தொகுதியில் இடம்பெறும் கதைகள் தொடர்பான தமது வாசிப்பு அனுபவத்தை  முன்னுரையாக எழுதியுள்ளார்.

 “ நடேசனுடைய புனைவுகளின் பொதுத்தன்மை என்ற ஒன்றை வகுக்கமுடியுமானால், அது மனிதனின் பாலுணர்வு அவனை ஆட்டிவைக்கும் தருணங்களைப் பற்றியதாக இருக்கும். அந்தத் தருணங்களில் நிகழும்   அகப்போராட்டங்களைப்பற்றியதாகவோ அல்லது அந்த அகப்போராட்டங்களின் காரணமாக நிகழும் புறநிகழ்வுகள் பற்றியதாகவோ இருக்கும்.  “  என்று கூறுகிறார் மாலன்.  இது நடேசனின் கதைகளில் இடம்பெறும் பாலுணர்வு சம்பந்தமான விடயங்களை அவதானிக்கும் வாசகர்களுக்கு  முன் தீர்மானத்தையும் தரும்.

இலங்கை எழுத்தாளர்கள் இலங்கையிலிருந்து எழுதினாலென்ன, அந்நிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றபின்னர் எழுதினால் என்ன, இலங்கைக்கு வெளியே குறிப்பாக தமிழகத்தில் அதிகம் பாவிக்கப்படாத சொற்களுக்கு  அடிக்குறிப்பு இடலாம் என்ற தொனியில் மாலன் சொல்லும் ஆலோசனைதான் சற்று நெருடுகிறது.

இது பற்றி இந்தப்பதிவின் இறுதியில் மேலும் தெரிவிப்பேன்.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள    கதைகளும் இலங்கையையும்  அவுஸ்திரேலியாவையும் பகைப்புலமாக கொண்டிருப்பவை.

அவுஸ்திரேலியாவுக்கு மாத்திரம் அல்ல,  கனடா,  அமெரிக்கா, நியூசிலாந்து உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்ற பல இலங்கை எழுத்தாளர்கள்   கடந்த மூன்று தசாப்தகாலமாக -  இற்றைவரையில்  தாயகத்தின் நினைவுகளுடன் எழுதிவருகிறார்கள்.  நடேசனும் அவ்வாறே இன்னமும் முற்றாக விடுபடாமல்,  இலங்கைப் பின்னணியிலும் அவுஸ்திரேலியப் பின்னணியிலும்  எழுதி இத்தொகுப்பினை சமச்சீராக்கியிருக்கிறார்.

நடேசன்  தினமும் உறக்கத்தில் அதிகம் கனவு காண்பவர் என்ற முடிவுக்கும் வாசகர்கள் வரக்கூடும். அவரது கதைகளில் பெரும்பாலும் கனவுகள் வந்திருக்கும்.

அதனூடாக மாயாவாத கதைகளையும்  மர்ம முடிச்சுகளைக்கொண்ட கதைகளையும் எழுதிவருகிறார். 

இத்தொகுதிக்கு அந்தரங்கம் என்ற தலைப்பினை வைத்திருப்பதுடன்,  தொகுதியின் முகப்பு ஓவியம் காண்பிக்கும் படிமத்தின் ஊடாகவும் வாசகரை ஈர்க்கும் முயற்சியும் நிகழ்ந்திருக்கிறது.

மற்றவர் அந்தரங்கங்களை ஆராய்வதில் ஆர்வம் கொண்டவர்களுக்கு விருந்து படைக்கும் கதைகள் அல்ல இவை என்பதை உள்ளே சென்று பார்த்து படித்தபின்னர்தான் புரிந்துகொள்ளமுடியும்.

முப்பது ஆண்டு கால ஈழவிடுதலைப்போர்,  முடிவுக்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகளாகப்போகின்றன.  அதன் தொடக்க காலத்தில்  அங்கிருந்து வெளியேறி தமிழ்நாட்டில் தனது குடும்பத்துடன் தஞ்சமடைந்து, ஈழப்போராளிக்குழுக்களுடனும் நெருங்கிய உறவைப்பேணியவாறே,  அங்கு வந்து சேர்ந்த ஈழ அகதிகளின்  கல்வி,  மருத்துவம்  மற்றும் போரிலே கால் ஊனமுற்றவர்களின் அத்தியாவசிய தேவைகளை கவனிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டவர் நடேசன்.

( இதுபற்றி அவர் எழுதியிருக்கும் எக்ஸைல் நூல் விரிவாக பேசுகிறது )

நீடித்தபோர் முடிவுக்கு வந்தபின்னரும் பாதிக்கப்பட்ட  மக்களின் வாழ்வாதாரப்பணிகளிலும், சரணடைந்த போராளிகளின் தேவைகள் தொடர்பான புனர்வாழ்வுப்பணிகளிலும் ஈடுபட்டவர்.  அதற்காக தோற்ற தரப்புக்கும் வென்ற தரப்புக்கும்  மத்தியில்  பேச்சுவார்த்தை அடிப்படையில்  காயங்களை ஆற்றுவதற்கான காரியங்களையும் மேற்கொண்டவர்.

இந்த அனுபவங்களின் பின்னணியில் நடேசன் எழுதிய கதைகளும் ( ருத்ரம் – கரும்புலி – பதுங்கு குழி – வெம்பல் – அலைந்து திரியும் ஆவிகள்  )  இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

இக்கதைகளைப்படித்தபோது, பேசாப்பொருளை பேசத்துணிந்தவராக நடேசன் காணப்படுகிறார்.

நடேசன்,  தனது கதைகளில் வேதாகமம், மகாபாரதம், இராமாயணம், சகுந்தலம்  முதலானவற்றில் வரும் உப கதைகளையும் தேவைக்கேற்ப பயன்படுத்தியுள்ளார்.

இத்தொகுதியில் இடம்பெறும் சில கதைகளின் தொடர்ச்சியை அவதானித்தபோது,  அவற்றை இணைத்து முழுநாவலாக்கவும் முடியும்  என்ற மதிப்பீடும் வருகிறது.

ஒன்றுக்கொன்று தொடர்புபட்ட கதைகளாக அவை அமைந்திருப்பதும்,  நடேசனின்  தொழில் சார்ந்து அவை வெளிப்பட்டிருப்பதும் புலனாகிறது.

நடேசனின் கதைகளில் கனவு பொதுப்பண்பாகியிருப்பதையும்,   கடந்த காலத்தை அசைபோடும்  தன்மைகளை கொண்டிருப்பதையும்  வாசகர்கள் அவதானிக்கலாம்.  

சமகாலத்தில்  இத்தகைய எழுத்துக்கள், குறிப்பாக கடந்த காலம் பற்றிப்பேசுவது -  பழைய உத்தி என்றுதான் மாலனும் இந்நூலுக்கான முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

 

ஹிஸ்டிரியா முதலான மனக் கோளாறுகளுக்கு சிகிச்சை செய்யத் தொடங்கிய  மனோ தத்துவ நிபுணர் ஃ பிராய்ட்,  இந்த சிகிச்சை முறையின் ஆரம்ப நிலையிலே மனவசியம் முக்கியமான சாதனமாக இருந்தது எனக்கருதியிருந்தாலும், அது  முற்றிலும் திருப்தியாக இல்லையென்று அநுபவத்தில் கண்டதாகவும்,  அதன்பிறகு கனவுப் பகுப்பு முறை முதலியவற்றை வகுத்தாரென்றும், அவற்றைப் பயன்படுத்தும்போது,   ஒவ்வொருவர்  மனதிலும்  நனவிலிமனம் என்ற பகுதியிருப்பதைக் கண்டறிந்தாரென்றும் படித்திருக்கின்றோம். 

மனித வாழ்வில் கனவு காண்பது  இயல்பாகியிருந்தாலும்,  அது ஆழ் மனதுடன் தொடர்புடையது என்பதையும் அறிவோம்.   உறங்கச்செல்லும்போது, ஆழ் மனம் ஒரு நனவான நிலையில் இருப்பதால்,  அந்த ஆழ் மனதின்    நினைவகத்தில் தேங்கியிருக்கும் எந்தவொரு  எதிர்பார்ப்பும்,  ஏக்கமும்,  தோல்வி, ஏமாற்றங்களும்   கனவுகளின் வடிவத்தில் தோன்றிவிடுகின்றன. 

இவற்றுள் பாலியல் வேட்கை ,  காதல் , பழிவாங்கும் உணர்வு உட்பட பலதும் பத்தும்  அடங்கிவிடுகிறது.  அதனாலும் நடேசனின் பிரதிகளில் நனவிடை தோயும்  உத்தியும் தூக்கலாகத் தெரிகிறது.

நடேசன், தனது தாயகமான இலங்கையிலும்,  பின்னர் தமிழ்நாட்டில் சிறிது காலமும், அதற்குப்பிறகு அவுஸ்திரேலியா கண்டத்தில் தனது வாழ்க்கையை நிரந்தரமாக்கிக்கொண்டு,  உலகெங்கும் சுற்றிவந்து, தனது பயண அனுபவங்களை எழுதிவருவதனாலும்,  அவரது ஆழ்மனம் சேமித்து வைத்துள்ள செய்திகள்,  சம்பவங்கள்,  மற்றும் மாந்தர்களின் இயல்புகள்   சிறுகதைகளாகிவிடுகின்றன.

அதனால்,  அவரது கதைகளில்  Flashback  உத்தி தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது.

இலங்கையின் போர்க்காலம்,  தமிழகத்தில் தஞ்சமடைந்த காலம்,  அந்நிய புகலிடவாழ்வுக்காலம் என்பன இத்தொகுப்பின் கதைகளின் பின்புலமாகியிருப்பதனால்,  இவற்றில் வரும் மாந்தர்களின் அலைந்துழன்ற வாழ்வுக்கோலங்களும் வெளிப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கதையைப்பற்றியும் தொடர்ச்சியாக பேசமுடியும். அவ்வாறு பேசுவதற்கு தேவையான உறைபொருளும் மறைபொருளும் கொண்ட கதைகள் இவை.

இறுதியாக இந்நூலுக்கு முன்னுரை வழங்கியிருக்கும் மாலன் அவர்கள் பதிவுசெய்துள்ள கருத்துக்கு வருகின்றேன்.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கை வந்த கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன் என்ன சொன்னாரோ, அதனைத்தான் மாலனும் இத்தனை வருடங்களுக்குப்பின்னர் சொல்கிறார்.

 “ஈழத்து படைப்புகளில் இடம்பெறும் பல சொற்கள் தமிழக வாசகர்கள் – எழுத்தாளர்கள்  -  இதழ்களுக்கு புரியவில்லை. அவற்றின் அர்த்தம் தெரிந்துகொள்ள அடிக்குறிப்பு அவசியம்  “  இவ்வாறு அன்று அரைநூற்றாண்டுக்கு முன்னர் சொன்ன கி.வா. ஜகந்நாதன் மட்டுமல்ல  பின்னாளில் இலக்கிய விமர்சகர் சிட்டி சுந்தரராஜனும்,  இதே அறிவுறுத்தலைத்தான் சொன்னார்.

ஈழத்து வாசகர்கள், எழுத்தாளர்கள் தமிழ்நாட்டின் திருநெல்வேலித்தமிழையும், தஞ்சாவூர் – கும்பகோணம் தமிழையும்,  சென்னைத்தமிழையும்  கரிசல் இலக்கியத்தமிழையும் எவ்வாறு புரிந்துகொண்டு,  புதுமைப்பித்தனையும் , ரகுநாதனையும், வண்ணதாசனையும், ஜெயகாந்தனையும்,  தி. ஜானகி ராமனையும்,  கி. ராஜநாராயணனையும்  இமயத்தையும்  கொண்டாடினார்கள்…?

ஜெயகாந்தன் முழுக்க முழுக்க மெட்ராஸ் பாஷையில்தானே சினிமாவுக்குப்போன சித்தாளு படைத்தார். !

மாத்தையா என்ற மகேந்திரராஜாவின் புலிச்சீருடை அணிந்த படத்தை  தமிழக இந்தியா டுடே , ஒரு காலத்தில் அட்டையில் பிரசுரித்துள்ளது என்ற செய்தியையும்  இந்தியா டுடேயின்  முன்னாள் ஆசிரியரான எமது நண்பர் மாலன் அவர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் நினைவூட்டுகின்றேன்.

தமிழில் அய்யா என்ற சொல்லின்  சிங்கள அர்த்தம் மாத்தையா.  இந்தியாவில்   “ சார்   “ என்பார்கள். இலங்கையில்  “ சேர்   “ என்பார்கள் !

 நடேசனுக்கு எமது வாழ்த்துக்கள்.

( கடந்த மே 01 ஆம் திகதி தமிழ்நாடு வேலூர் மாவட்ட வாசிப்பு இயக்கமும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர் சங்கமும் இணைந்து நடத்திய இணையவழி காணொளி அரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட உரை )

letchumananm@gmail.com

 

 

1 comment:

மாலன் said...

இலன்கைத் தமிழ் எழுத்தாளர்கள் அவர்களது வட்டார வழக்கைப் பயன்படுத்தி எழுதுவதைக் குறையாகச் சொல்லவில்லை. ஆனால் எல்லோருக்கும் பொதுவான அல்லது பொதுவாக்கிக் கொள்ள கூடிய அனுபவங்களின் அடிப்படையில் பொதுவாக்கிக் கொள்ள வேண்டுமென்ற விருப்பில் எழுதுப்படும் படைப்புகள் பொதுமொழியில் எழுதப்படுவது நல்லது. வட்டாரப் பிரசினைகள் (நிலவியல், ஜாதி ஆகியவற்றின் காரனமாக வட்டாரத்தோடு தொடர்புடைய பிரசினைகள்) குறித்து எழுதும் போது வட்டார வழக்கைப் ப்யன்படுத்துவதிலொரு தர்க்க ரீதியான நியாயம் உண்டு. மற்றவைகளுக்கு அது பொருந்தாது. ஆம். மாத்தையா படத்தை வெளியிட்டிருக்கிறோம். அதைப் பெயர் என்றே எண்ணி வந்திருக்கிறோம். அது ஐயாவிற்கான வட்டார வழக்குச் சொல் என்று அறியோம். நன்றி