உழைப்பை மதித்திடுவோம் ஓரணியாய் வாருங்கள் !

 


மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா  மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்  மெல்பேண் ... அவுஸ்திரேலியா 

       

ஊசிமுதல் உணவுவரை

உழைப்பாலே வருகிறது

உழைக்கின்றார் வாழ்வெல்லாம்

உயர்வுபெற மறுக்கிறது

காசுள்ளார் கைகளிலே

உழைப்பெல்லாம் போகிறது

கவலையுறும் உழைப்பாளி

கண்ணீரில் மிதக்கின்றான் !

 

சமத்துவங்கள் பேசுகிறார்

சங்கங்கள் அமைக்கின்றார்

நினைத்தவுடன் மாநாடு

நிறையவே வைக்கின்றார்

அனைத்துமே உழைக்கின்றார்

அனுசரணை என்கின்றார்

ஆனாலும் உழைக்கின்றார்

அல்லலிலே இருக்கின்றார் !


வியர்வையிலே தொழிலாளி

வேதனையில் தொழிலாளி

நலமிழந்து கிடக்கின்றான்

நயமெதுவும் காணவில்லை

முதலீட்டும் முதலாளி

தலைநிமிர்ந்து நிற்கின்றான்

முழுதுழைக்கும் தொழிலாளி

நிலையிழந்து தவிக்கின்றான் !பணமெண்ணும் மனமகன்று

மனமெண்ணும் நிலைவேண்டும்

உழைப்பதனை உயர்வென்று

உணர்த்தியே விடவேண்டும்

உழைத்திடுவார் இருப்பிடங்கள்

உயரவெண்ணும் உளம்வேண்டும்

உழைப்பாளி முதலாளி

ஓரணியாய் வரவேண்டும் !

 

வளமாக வாழ்வதற்கு

வழிசமைக்கும் தொழிலாளி

நிலமீது நிம்மதியாய்

தலைநிமிர வழிவேண்டும்

வளமீட்டும் முதலாளி

மனமகிழ வைத்துவிடும்

வாழ்வளிக்கும் தொழிலாளி

வாழும்நாள் வரவேண்டும் !

 

உழைக்கும் கைகளென்றும்

உயர்வினைப் பெறவேண்டும்

உழைப்பினை மதித்திடும்

உளமது எழவேண்டும்

உழைப்பினால் உலகமே

உயர்ந்திடும் தன்மையால்

உழைப்பவர் நலத்தினை

உயர்த்தியே போற்றுவோம் !

 

உழைப்பை மதிக்கும்நாள்

உன்னதமே உலகினுக்கு

உழைப்பை மதிக்கும்நாள்

உயர்வினையே உணர்த்திவிடும்

உழைப்பை மதிக்கும்நாள்

உழைப்பாளர் மகிழ்ந்திடுவார்

உழைப்பை மதித்திடுவோம்

ஓரணியாய் வாருங்கள் !

No comments: