உலகச் செய்திகள்

 பைடனின் போர் நிறுத்த அழைப்புக்கு இடையே தொடர்ந்து உக்கிர தாக்குதல்

பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக உலகெங்கும் பாரிய பேரணி

இஸ்ரேலின் காசா மீதான உக்கிர தாக்குதல் நீடிப்பு; பலி எண்ணிக்கை 200ஐ நெருங்கியது

போர் நிறுத்தத்திற்கான சமிக்ஞை இன்றி தொடர்ந்து உக்கிர மோதல்

போர் நிறுத்த எதிர்பார்ப்பு அதிகரிப்பு; மோதல் தணிவின்றி தொடர்ந்து நீடிப்பு

இஸ்ரேல் மற்றும் காசாவில் போர் நிறுத்தம் அமுல்: பலஸ்தீனர் வெற்றி கொண்டாட்டம்


பைடனின் போர் நிறுத்த அழைப்புக்கு இடையே தொடர்ந்து உக்கிர தாக்குதல்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருக்கும் நிலையிலும் காசா மீது இஸ்ரேல் நேற்றும் உக்கிர வான் தாக்குதல்களை தொடர்ந்தது.

கடந்த மே மாதம் மோதல் வெடித்தது தொடக்கம் மூன்றாவது முறையாக கடந்த திங்கட்கிழமை இஸ்ரேல் பிரதமர் பென்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்த பைடன், போர் நிறுத்தம் ஒன்றுக்கான தமது ஆதரவை வெளியிட்டுள்ளார். எனினும் வன்முறைகளை நிறுத்துவதற்கான கோரிக்கையை விடுக்க பைடன் தவறியுள்ளார்.

காசா மீதான தாக்குதல்கள் ஆரம்பித்தது தொடக்கம் அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை நேற்றுக் காலை வரை 212 ஆக அதிகரித்திருந்தது. இதில் 61 சிறுவர்கள் அடங்குகின்றனர். சுமார் 1,500 பலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல் தரப்பில் இரு சிறுவர்கள் உட்பட பத்து பேர் கொல்லப்பட்டிருப்பதோடு குறைந்தது 300 பேர் காயமடைந்துள்ளனர்.

போரை நிறுத்துவதற்கு எகிப்து மற்றும் ஏனைய நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா செயற்பட்டு வருவதாக நெதன்யாகுவிடம் பைடன் தெரிவித்துள்ளார்.

எனினும் வன்முறையை நிறுத்துவதற்கு அழைப்பு விடுக்கும் பாதுகாப்புச் சபை அறிக்கையை வெளியிடுவதற்கு அமெரிக்கா மீண்டும் ஒரு முறை முட்டுக்கட்டை போட்டுள்ளது. இந்த பின்னணியில் இஸ்ரேல்-காசா மோதல் தணிவதற்கான எந்த சமிக்ஞையும் இன்றி இரண்டாவது வாரத்தை தொட்டுள்ளது.

இதற்கிடையே, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் உடனடியாக இரு தரப்பும் சண்டை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இரு தரப்பு மோதல்களால் அமைதியாக வாழும் மக்கள்தொகையில் சிறார்கள் உட்பட பலரும் இறப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோனும் போர்நிறுத்தம் ஒன்றுக்காக எகிப்து ஜனாதிபதி மற்றும் ஜோர்தான் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். இது பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் நேற்று அவசரக் கூட்டத்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

மோதல்கள் நாளுக்கு நாள் தீவிரமாகி உயிர் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும்போது, தமது இராணுவ நடவடிக்கையை முடித்துக் கொள்ளும் அழுத்தம் இஸ்ரேலுக்கு பல நிலைகளில் இருந்தும் வருகின்றன.

இதேவேளை, ஹமாஸ் தரப்பில் இருந்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், இம்முறை முன்பை விட தீவிரமாக உள்ளது. அவர்களால் இஸ்ரேலின் தாக்குதலை தாக்குப்பிடிக்கவும் முடிகிறது. இத்தகைய சூழலில்தான் போர் நிறுத்தம் செய்யுமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பைடன் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த வகையில் இது இஸ்ரேல், காசா விவகாரத்தில் அமெரிக்கா கடைப்பிடிக்கும் புதிய அணுகுமுறையின் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.

எனினும் போர் நிறுத்தத்திற்கான எதுவும் தற்போது முன்வைக்கப்படவில்லை என்று மூத்த இஸ்ரேல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது பற்றி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதிலில், “இப்போதைக்கு அது போன்ற ஒன்று இடம்பெறவில்லை. அது பற்றி எந்த பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை. எந்த முன்மொழிவுகளும் முன்வைக்கப்படவில்லை. எதுவும் முன்வைக்கப்படவில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் நேற்று சூரியோதயத்திற்கு முன்னர் இஸ்ரேல், காசா மீது தனது வான் தாக்குதல்களை தொடர்ந்தது. இதில் அங்குள்ள இரு கட்டடங்கள் தரைமட்டமாகின.

புதிய நடவடிக்கையில் ஹமாஸின் 15 கிலோமீற்றர் தூரம் கொண்ட மற்றொரு சுரங்கப்பாதை அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்பில் உடன் உறுதி செய்யப்படவில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இடம்பெற்ற இதுபோன்ற வான் தாக்குதல்களில் காசா பகுதியின் வீதிகள், மின்சார அமைப்பு மற்றும் வீடுகள் சேதமாக்கப்பட்டதோடு ஏழு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களின் உடல்களை வைப்பதற்கு போதுமான பிரேத அறைகள் கூட எம்மிடம் இல்லை என்று காசாவைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவர் முஹமது அபூ ரெய்யா பி.பி.சி தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

‘காசாவில் இப்போது ஏற்பட்டிருக்கும் அழிவுகளை சரிசெய்ய எமக்கு குறைந்தது 10 ஆண்டுகள் தேவைப்படும்’ என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்றுக் காலை காசாவில் உள்ள பலஸ்தீன போராளிகள் இஸ்ரேலை நோக்கி ரொக்கெட் குண்டுகளை வீசியதை அடுத்து இஸ்ரேலின் தெற்கு நகரங்களில் சைரன் ஒலி எழுப்பப்பட்டதோடு மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓட்டம் பிடித்தனர். எனினும் முந்தைய இரவை விடவும் ரொக்கெட் தாக்குதல்கள் குறைவாக இருந்ததாக பிராந்தியத்தில் இருக்கும் ரோய்ட்டர்ஸ் செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒரு வாரத்திற்குக் 3,000க்கும் அதிகமான ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாக குறிப்பிடும் இஸ்ரேல், காசா மீதான நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதாக கடந்த திங்கட்கிழமை கூறியிருந்தது.

இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பான அயர்ன் டோம் 90 வீதமான ரொக்கெட்டுகளை இடைமறித்தாக கூறுகிறது. இந்த ரொக்கெட் தாக்குதல்களால் ஆறு பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாகியும், மூன்று குழந்தையின் தந்தையுமான எலிடன் சிங்கர் நிலைமை குறித்து பி.பி.சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘தொடர்ச்சியாக ஏழு நாட்களான நாம் உறங்கச் செல்லும்போது ஒவ்வொரு மாலையும், ஒவ்வொரு இரவும் குழந்தைகளை படுக்கையில் இருந்து எழுப்பி பாதுகாப்பு இடத்தை நோக்கி ஓடுவது இலகுவானது அல்ல. 30 தொடக்கம் 60 வினாடிகளுக்குள் அவ்வாறான பாதுகாப்பு இடத்தை நாம் அடைய வேண்டும்’ என்றார்.

காசாவுக்கு அப்பாலும் இஸ்ரேல் நெருக்கடியை சந்தித்து வருகிறது. லெபானானில் இருந்து இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலை நோக்கி ஆறு ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டன.

ஜோர்தான் எல்லைக்கு அருகில் ஆளில்லா விமானம் ஒன்றை இஸ்ரேல் நேற்று சுட்டுவீழ்த்தியது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் துப்பாக்கி மற்றும் வெடி பொருட்களைக் கொண்டு தாக்குதல் நடத்த முயன்றதாகக் கூறி பலஸ்தீனர் ஒருவரை இஸ்ரேல் படை சுட்டுக் கொன்றுள்ளது. இதனால் அங்கு பதற்றம் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஏற்கனவே இந்த பதற்றத்தை ஒட்டி மேற்குக் கரையில் 23 பலஸ்தீனர் இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு ஜெரூசலத்தில் இருக்கும் அரபு நகரங்கள் மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் நேற்று பொது வேலை நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் பலஸ்தீன நகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

கிழக்கு ஜெரூசலத்தில் கடந்த சில வாரங்களில் நிலவிய பதற்றத்தை அடுத்தே காசா போராளிகள் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதல் வெடித்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி தினகரன் 

 



பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக உலகெங்கும் பாரிய பேரணி

காசா மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதல் உக்கிரமடைந்திருக்கும் நிலையில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலகெங்கும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இஸ்ரேலின் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவரும்படி அழுத்தம் கொடுத்து வட அமெரிக்காவின் பல நகரங்களிலும் பேரணிகள் இடம்பெற்றன.

நியூயோர்க், பொஸ்டன், வொசிங்கடன், மொன்ட்ரியல் மற்றும் டேர்போர்ன், மிச்சிகன் நகரங்களில் கடந்த சனிக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. பலஸ்தீன கொடியை சுமந்தபடி இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்கள், பலஸ்தீனர்களின் சுதந்திரத்திற்காக அழைப்பு விடுத்தனர்.

லண்டன், பேர்லின், மெட்ரிட் மற்றும் பாரிஸ் உட்பட ஐரோப்பாவின் பிரதான நகரங்களிலும் பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

அதேபோன்று ஈராக்கின் பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதோடு லெபனான், கட்டார், காஷ்மிரிலும் பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.   நன்றி தினகரன் 





இஸ்ரேலின் காசா மீதான உக்கிர தாக்குதல் நீடிப்பு; பலி எண்ணிக்கை 200ஐ நெருங்கியது

பாதுகாப்பு சபையில் அமெரிக்கா முட்டுக்கட்டை

காசா மீது இஸ்ரேல் நேற்றும் உக்கிர வான் தாக்குதல்களை நடத்தியதோடு பலஸ்தீன போராளிகள் இஸ்ரேலிய நகரங்கள் மீதான ரொக்கெட் குண்டுகளை வீசி வரும் நிலையில் இந்த மோதல் இரண்டாவது வாரத்தை தொட்டுள்ளது.

நேற்று சூரியோதத்திற்கு முன்னர் இந்த மோதலில் இதுவரை இல்லாத அளவுக்கு காசா மீது இஸ்ரேல் சரமாரித் தாக்குதல்களை நடத்தியது.

ஹமாஸ் குழுவுக்கு சொந்தமான தளங்கள் மற்றும் அதன் தளபதிகளின் வீடுகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியபோதும் காசாவின் பிரதான வீதிகள் மற்றும் மின்சார வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை போர் நிறுத்தம் ஒன்றுக்கான சர்வதேச அழைப்பும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பில் ஐ.நா பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதோடு, இந்த மோதல் தொடர்ந்தால் கட்டுப்படுத்த முடியாத பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் எச்சரித்துள்ளார்.

இந்த பயங்கர வன்முறையை முடிவுக்கு கொண்டுவரும்படி அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மறுபுறம் போர் நிறுத்தம் ஒன்றை அடைவதற்கு தமது நாடு நீண்ட முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் அதற்கான வாய்ப்பு இன்னும் இருப்பதாக எதிர்பார்ப்பதாகவும் எகிப்து ஜனாதிபதி அப்துல் பத்தாஹ் அல் சிசி நேற்று தெரிவித்தார்.

எனினும் இந்த மோதல் தணிவதற்கான எந்த சமிக்ஞையும் இதுவரை வெளியாகவில்லை.

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலத்தில் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன பதற்றத்தை அடுத்தே தற்போதைய மோதல் வெடித்தது. புனித அல் அக்ஸா பள்ளிவாசலை ஒட்டி பலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் இஸ்ரேல் பொலிஸார் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து அந்த பகுதியில் இருந்து இஸ்ரேல் பொலிஸாரை வெளியேறும் படி காசவை ஆளும் ஹமாஸ் அமைப்பு கெடு விதித்திருந்தது. அந்தக் காலம் முடிவுற்றதை அடுத்து ஹமாஸ் இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல்களை நடத்த அது இஸ்ரேல் வான் தாக்குதல்களை மேற்கொள்ள தூண்டியது.

நேற்று சூரியோதயத்திற்கு முன்னர் காசா மீது 50 போர் விமானங்கள் 20 நிமிடங்கள் வான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.

35 தீவிரவாத இலக்குகள் மற்றும் ஹமாஸின் 15 கிலோமீற்றர் சுரங்கப்பாதையை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் இராணுவம் மேலும் தெரிவித்தது.

ஒன்பது உயர்மட்ட ஹமாஸ் தளபதிகளின் வீடுகளும் இலக்கு வைக்கப்பட்டதாக அது குறிப்பிட்டது.

இந்த தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றி உடன் உறுதி செய்யப்படவில்லை. எனினும் இந்தத் தாக்குதால் காசாவில் பரந்த அளவில் மின் வெட்டு ஏற்பட்டிருப்பதாகவும் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் ஏனைய கட்டடங்கள் சேதம் அடைந்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

‘இந்த அளவில் இதற்கு முன்னர் தாக்குதல் இடம்பெறவில்லை’ என்று காசா குடியிருப்பாளர் ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலின்போது பயம் மற்றும் அச்சத்தை சந்தித்ததாகவும் 39 வயதான மாத் அபத் ரப்போ குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு குடியிருப்பாளரான சாரா மஹ்மூத் கூறும்போது, ‘நாம் தொடர்ந்து உயிர்வாழ்கின்றபோதும் நன்றாக இல்லை. போர் விமானங்கள் காசாவின் அழகான வீதிகளை அழித்து விட்டன’ என்றார்.

இஸ்ரேலின் தாக்குதல்களால் காசாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நேற்று காலை வரை 198 ஆக அதிகரித்துள்ளது. இதில் 58 சிறுவர்கள் மற்றும் 34 பெண்களும் அடங்குகின்றனர். இதுவரை 1,300 பேர் காயம் அடைந்திருப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை அதிகாலையில் தெற்கு இஸ்ரேலிய நகரங்களான பீர்ஷபா மற்றும் அஷ்கெலோன் நகரங்கள் மீது பலஸ்தீனிய போராளிகள் சரமாரியாக ரொக்கெட் குண்டுகள் வீசினர்.

இந்த ரொக்கெட் தாக்குதல்களில் கடந்த ஒரு வாரத்தில் இஸ்ரேலில் இரு குழந்தைகள் உட்பட பத்துப் பேர் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் இருந்து இதுவரை 3,000க்கும் அதிகமான ரொக்கெட் தாக்குதல்கள் இடம்பெற்றதாக இஸ்ரேல் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இதில் 90 வீதமான ரொக்கெட்டுகள் இடைமறிக்கப்பட்டதாக இஸ்ரேலின் வான் பாதுகாப்பு முறையான அயர்ன் டோர்ம் அமைப்பு தெரிவித்தது. எனினும் இந்த ரொக்கெட் குண்டுகளால் யூதர்களின் மதத் தலம் ஒன்று உட்பட கார் வண்டிகள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காசாவில் அதிக உயிரிழப்பு பதிவான நாளாக மாறியது. நள்ளிரவுக்கு சற்று நேரத்திற்கு பின் காசாவில் பரபரப்பான வீதி ஒன்றின் மீது வான் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது மூன்று கட்டடங்கள் இடிந்தன.

அந்த கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கு மீட்பாளர்கள் போராடினர். அந்த விமானத் தாக்குதல்களில் 16 பெண்கள் மற்றும் 10 சிறுவர்கள் உட்பட 42 பேர் கொல்லப்பட்டதாக காசா அதிகாரிகள் அறிவித்தனர்.

காசாவில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மருத்துவமனைகள் மற்றும் ஏனைய வசதிகளில் மின்சார துண்டிப்புக்கு காரணமாகலாம் என்று ஐ.நா எச்சரித்துள்ளது.

இந்த மோதல் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிடுவதில் இணக்கம் ஒன்றை எட்ட பாதுகாப்பு சபை தவறி வரும் நிலை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அவசரக் கூட்டத்திலும் இந்த நிலை தொடர்ந்தது.    

இஸ்ரேலின் நெருக்கமான நட்பு நாடாக இருக்கும் அமெரிக்கா அவ்வாறான அறிக்கை ஒன்றை வெளியிடுவதில் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.

பாதுகாப்பு சபை ஒரே குரலாக ஒலிப்பதற்கு இடையூறு செய்வது பற்றி அமெரிக்காவை சீனா எச்சரித்துள்ளது.

இஸ்ரேலின் தற்காப்பு உரிமை பற்றி வெளிப்படையாக தனது உறுதியான ஆதரவை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்ட நிலையில், மோதலை நிறுத்துவதற்கு அனைத்து தரப்புடன் இணைந்து செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளதார்.   நன்றி தினகரன் 





போர் நிறுத்தத்திற்கான சமிக்ஞை இன்றி தொடர்ந்து உக்கிர மோதல்

காசா மீது நேற்று அதிகாலையிலும் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரி தாக்குதல் நடத்தியதில் குடியிருப்புக் கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டதோடு ஊடகவியலாளர் ஒருவர் உட்பட நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

தெற்கு இஸ்ரேலிய நகரங்களை நோக்கி பலஸ்தீன போராளிகள் ரொக்கெட் குண்டுகளை வீசிய நிலையிலேயே இந்த புதிய தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ரொக்கெட் தாக்குதல்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடன் எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

முன்னதாக ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களில் இஸ்ரேல் படையினரால் நான்கு பலஸ்தீனர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

கடந்த மே 10 திகதி மோதல்கள் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் காசாவில் நேற்றுக் காலை வரை 63 சிறுவர்கள் உட்பட குறைந்தது 219 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 1,500 பேர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல் தரப்பில் இரு சிறுவர்கள் உட்பட பன்னிரண்டு பேர் கொல்லப்பட்டிருப்பதோடு குறைந்தது 300 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த வன்முறைகள் பத்தாவது நாளை எட்டும் நிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆளும் காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான இராஜதந்திர முயற்சிகள் பெரிதாக முன்னேற்றம் இன்றி தோல்வி அடைந்துள்ளன.

இந்த மோதலை நிறுத்த வலியுறுத்தும் ஐ.நா பாதுகாப்புச் சபையின் கூட்டு அறிக்கையை வெளியிடுவதில் வீட்டோ அதிகாரம் பெற்ற அமெரிக்கா தொடர்ந்து முட்டுக்கட்டையாக உள்ளது. இந்த அறிவிப்பு பதற்றத்தை தணிக்க உதவாது என்ற அமெரிக்கா இதற்கு நியாயம் கூறி வருகிறது.

புதிய போர் நிறுத்த தீர்மானம் ஒன்று தொடர்பில் இஸ்ரேலின் அண்டை நாடுகளான எகிப்து மற்றும் ஜோர்தானுடன் இணைந்து பணியாற்றி வருவதாக பிரான்ஸ் கூறியுள்ளது. பிரான்ஸின் இந்தத் திட்டத்திற்கு சீனா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.

முஹமது தைப் இலக்கு

ஹமாஸ் தளபதிகளின் வீடுகளை இலக்கு வைத்து இஸ்ரேல் நேற்று வான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹமாஸ் இராணுவத் தளபதி முஹமது தைபை படுகொலை செய்ய பல தடவைகள் முயற்சித்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரு போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

காசா நகரில் நேற்று இஸ்ரேல் போர் விமானங்கள் 70க்கும் மேற்பட்ட தடவைகள் குண்டு வீசியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காசாவின் தெற்கு நகரான கான் யூனிசில் போராளிகளின் பயிற்சி நிலையம், ஹமாஸின் பாதுகாப்பு வளாகம் மற்றும் விவசாய நிலங்களில் இஸ்ரேல் சுமார் 50 குண்டுகளை வீசி உள்ளது.

‘தான் உறங்கி எழும்போது நாம் இறந்திருப்போம் என்று பயப்படுவதாக எனது நான்கு வயது மகன் கூறுகிறான்’ என காசா நகரைச் சேர்ந்த ஏழு குழந்தைகளின் தாயான 45 வயது ரன்டா அபூ சுல்தான் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

நேற்றுக் காலையும் தொடர்ந்த இஸ்ரேல் தாக்குதல்களில் நிலத்தடி சுரங்கப் பாதைகளை இலக்கு வைத்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

‘இந்த நடவடிக்கைகள் முழுவதிலும் முஹமது தைபை படுகொலை செய்ய முயன்றோம். அவரை கொல்ல பல தடவைகள் நாம் முயற்சித்தோம்’ என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் ஹிதாய் சில்பர்மான் தெரிவித்துள்ளார்.

முஹமது தைப் ஹமாஸ் ஆயுதப் பிரிவான இசதீன் அல் கஸ்ஸாம் படையின் தலைவராவார். 2014 மோதல் உட்பட பல முறை படுகொலை முயற்சிகளில் இருந்து உயிர்தப்பியவராவார். வெளியுலகுக்கு தோன்றாத அவர் எங்கே இருக்கிறார் என்பது ரகசியமாக உள்ளது.

இந்நிலையில் காசாவில் பலஸ்தீன ஆயுதக் குழுக்களுக்கு எதிராக வான் தாக்குதல்களை நிறுத்துவதற்கான சரியான நேரம் பற்றி இஸ்ரேல் மதிப்பிட்டு வருவதாகவும் ஆனால் மேலும் சில நாட்கள் தாக்குதல் நடத்துவது அவசியம் என்றும் இஸ்ரேல் இராணுவ தரப்பு கூறியதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

‘போர் நிறுத்தம் ஒன்றுக்கான சரியான தருணம் எது என்பது பற்றி நாம் ஆராய்ந்து வருகிறோம்’ என்று பெயரை வெளியிடாத இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காசாவின் ஹமாஸ் ஆட்சியாளர்களின் திறனை குறைக்கும் இலக்கை அடைவது மற்றும் இஸ்ரேலை நோக்கி வீசப்படும் அதன் ரொக்கெட் குண்டுகள் நுழைய முடியாது என்ற செய்தியை ஹமாஸ் புரிந்து கொண்டதா என்பதை இஸ்ரேல் பதிப்பீடு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

ரொக்கெட் மழை தொடர்கிறது

அஷ்கலோன் மற்றும் அஷ்தோத் நகர் உட்பட தெற்கு இஸ்ரேலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவிலும் சைரன் ஒலி எழுப்பப்பட்டது. பல்மசின் விமானத் தளத்தின் மீது இரண்டாவது முறையான ரொக்கெட் தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. எந்த ஒரு இராணுவத் தளமும் தாக்கப்படவில்லை என்று இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

இதில் ரிஹோவொட், நெஸ் சியோனா மற்றும் பல்மசிம் உட்பட மத்திய இஸ்ரேலிலும் சைரன் ஒலி எழுப்பப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை விவசாய நிலத்தில் விழுந்து வெடித்த ரொக்கெட் குண்டில் சிக்கி இரு தாய்லாந்து தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மோதல் ஆரம்பித்தது தொடக்கம் காசாவில் இருந்து 3,750 ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டிருப்பதாகவும் அவைகளில் 550 குண்டுகள் இலக்கை எட்டாது காசாவுக்குள்ளேயே விழுந்திருப்பதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை நேற்று தெரிவித்தது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு முறையான அயர்ன் டோம் 90 வீதமாக ரொக்கெட் குண்டுகளை நடுவானிலேயே இடைமறித்து அழித்திருப்பதாகவும் அது தெரிவித்தது.

ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் குழுக்களிடம் சுமார் 12,000 ரொக்கெட் குண்டுகள் மற்றும் மோட்டார் குண்டுகள் இருப்பதாக இந்த மோதலின் ஆரம்பத்தில் இஸ்ரேல் இராணுவம் கணித்திருந்தது.

இஸ்ரேல் நடவடிக்கையால் ஹமாஸ் பல ஆண்டுகள் பின்தங்கி இருப்பதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார். எதிர்பாராத இழப்பை அது சந்தித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். எனினும் பலஸ்தீன போராளிகள் தொடர்ந்து தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளமை இஸ்ரேலுக்கு நெருக்கடியாக பார்க்கப்படுகிறது.

மறுபுறம் இஸ்ரேலுக்குள்ளும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்திலும் பதற்ற சூழல் நீடிப்பது இஸ்ரேலுக்கு மற்றுமொரு பிரச்சினையாக மாறியுள்ளது.

இதேவேளை ஜோர்தான் நாட்டில் இருந்து இஸ்ரேலில் உள்ள கரேம் சலோன் வழியாக காசாவுக்கு நிவாரணப்பொருட்கள் செல்வது வழக்கம். அந்த பாதையை இஸ்ரேல் அடைத்துள்ளது.

இதன் காரணமாக நிவாரண பொருட்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பொருட்கள் மற்றும் மருந்துகள் தட்டுப்பாட்டால் மக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இந்தநிலையில் முக்கிய பாதையை அடைத்து விட்டதால் மக்கள் இன்னும் மோசமாக பாதிப்பை சந்திக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இராஜதந்திர இழுபறி

நியூயோர்க்கில் கடந்த செவ்வாய்க்கிழமை ஐ.நா பாதுகாப்புச் சபை மீண்டும் ஒருமுறை கூடியபோதும் இணக்கம் ஒன்றை எட்ட தவறியுள்ளது.

மறுபுறம் எகிப்து தலைவர் அப்துல் பத்தாஹ் அல் சிசி மற்றும் ஜோர்தான் மன்னர் இரண்டாவது அப்துல்லாவுடனான வீடியோ மாநாடு ஒன்றின்போது தீர்மானம் ஒன்று வகுக்கப்பட்டதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

பாதுகாப்புச் சபையில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுப்பதில் தோல்வி கண்டிருப்பது வெட்ககரமானது என்று ஐ.நாவின் பலஸ்தீன தூதுவர் ரியாத் மன்சூரி தெரிவித்துள்ளார்.

மோதலை முடிவுக்குக் கொண்டுவரும்படி அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிம் மற்றும் ஏனைய சக்திகள் அழைப்பு விடுத்துள்ளன.

இதேவேளை இஸ்ரேல் தொடர்பில் துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் யூத எதிர்ப்பு கருத்தை வெளியிட்டதாக அமெரிக்கா சுமத்திய குற்றச்சாட்டை துருக்கி நேற்று மறுத்தது.

பலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் தீவிரவாதத்தை கட்டவிழ்த்துவிடுவதாக எர்துவான் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.  நன்றி தினகரன் 




போர் நிறுத்த எதிர்பார்ப்பு அதிகரிப்பு; மோதல் தணிவின்றி தொடர்ந்து நீடிப்பு

காசா மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான தாக்குதல்கள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் ஓரிரு தினங்களுக்குள் போர் நிறுத்தம் ஒன்று எட்டப்படும் என்று எதிர்பார்ப்பதாக ஹமாஸ் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் ‘இஸ்ரேல் மக்களுக்கு அமைதி மற்றும் பாதுகாப்பு நிலைநாட்டப்படும் வரை’ தாக்குதல்களை தொடர தீர்மானித்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த புதனன்று தெரிவித்திருந்தார்.

நேற்று வியாழக்கிழமை காலையிலும் காசா மீது இஸ்ரேல் 100க்கும் அதிகமான வான் தாக்குதல்களை நடத்தியது. பலஸ்தீன போராளிகளின் ரொக்கெட் தாக்குதல்களும் தொடர்ந்தன.

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலத்தில் பல வாரங்கள் நீடித்த பதற்றத்தை தொடர்ந்து காசா மோதல் வெடித்தது. கிழக்கு ஜெரூசலத்தின் புனித அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் இருந்து இஸ்ரேலிய பொலிஸாரை வெளியேற ஹமாஸ் விடுத்த கெடு முடிவடைந்ததை அடுத்து இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதோடு அது இஸ்ரேலை வான் தாக்குதல்களுக்கு தூண்டியது.

கடந்த 11 நாட்களாக இடம்பெறும் வன்முறைகளில் காசாவில் 65 சிறுவர்கள் மற்றும் 39 பெண்கள் உட்பட குறைந்தது 230 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1,710 பேர் காயமடைந்துள்ளனர். இதில் காசாவில் உள்ள வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் விசேட தேவையுடைய ஒருவர், அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் மூன்று வயது மகள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மோதல்களில் இஸ்ரேல் தரப்பில் இரு சிறுவர்கள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் இருந்து 4,000க்கும் அதிகமான ரோக்கெட் குண்டுகள் இஸ்ரேலை நோக்கி வீசப்பட்டிருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பு

‘தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் போர் நிறுத்த முயற்சி வெற்றிபெறும் என்று நான் நினைக்கிறேன்’ என ஹமாஸ் அரசியல் பிரிவின் மூசா அபூ மர்சூக் லெபனானின் ‘அல் மயதீன்’ தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.

‘ஓரிரு நாட்களுக்குள் போர் நிறுத்தம் ஒன்றை எதிர்பார்க்கிறேன். இரு தரப்பு உடன்படிக்கை அடிப்படையில் இந்தப் போர் நிறுத்தம் இருக்கும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோதல்களை நிறுத்துவது குறித்து இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன தரப்புகளுக்கு சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்திருக்கும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்தியஸ்த பேச்சுவார்த்தைகள் மூலம் போர் நிறுத்தத்திற்கான அடிப்படை தொடர்பில் இரு தரப்பும் இணக்கத்தை வெளியிட்டிருப்பதாக எகிப்து பாதுகாப்பு தரப்பினர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். எனினும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இன்று வெள்ளிக்கிழமைக்குள் போர் நிறுத்தம் ஒன்று எட்டப்படலாம் என்றும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் தரப்புகளை மேற்கோள்காட்டி வோல் ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

ஹமாஸ் தலைமைகள் மற்றும் இஸ்ரேல் இராணுவத்துடன் எகிப்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த நோக்கம் கிட்டத்தட்ட நிறைவு பெறும் நிலையில் இருப்பதாக அமெரிக்க மற்றும் வெளிநாட்டு அதிகாரிகள் மேற்படி பத்திரிகைக்கு தெரிவித்துள்ளனர்.

இந்த வாரத்தில் போர் நிறுத்தம் ஒன்று ஏற்படும் என்று பைடன் நிர்வாகம் நம்பிக்கையில் இருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த புதன்கிழமை நான்காவது தடவையாக நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்து பேசினார். அதில் போர் நிறுத்தம் ஒன்றுக்கு வழிவகுக்கும் வகையில் தாக்குதல்களை குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக நெதன்யாகுவிடம் பைடன் கூறியதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் போர் நிறுத்தம் ஒன்றை கொண்டுவருவது தொடர்பில் பிரான்ஸ் கடந்த புதன்கிழமை பாதுகாப்பு சபையில் கொண்டுவந்த தீர்மானமும் தோல்வி அடைந்தது. இந்தத் தீர்மானம் மோதலை குறைக்கும் முயற்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா குறைகூறியுள்ளது. இஸ்ரேல் - காசா மோதலை தணிப்பதற்கு பாதுகாப்புச் சபை மேற்கொண்டு வரும் முயற்சிகள் அனைத்துக்கும் அமெரிக்கா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா மத்திய கிழக்கு அமைதித் தூதுவர் டோர் வென்னசலான்ட், கட்டாரில் உள்ள ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியேஹ்வை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கட்டாரைத் தளமாகக் கொண்ட அல் ஜசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

மோதல் தொடர்கிறது

நேற்று அதிகாலையில் இஸ்ரேல் காசா மீதான தனது வான் தாக்குதல்களை ஆரம்பித்த நிலையில் இரு வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. கான் யூனிஸில் இடம்பெற்ற வான் தாக்குதல்களில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

ரொக்கெட் வீசும் தளங்கள் மற்றும் ஹாமாஸுக்கு சொந்தமான பாதுகாப்பு வளாகங்கள் இலக்கு வைக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த வான் தாக்குதல்களில் குறைந்தது ஒரு பலஸ்தீனர் கொல்லப்பட்டதாகவும் மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் தாக்குதலில் காசா புறநகர் பகுதியான சப்ராவில் 14 வயதான அமீரா எஸ்லீம் என்ற சிறுமியும் மூன்று குடும்ப உறுப்பினர்களும் காயமடைந்தனர்.

‘ஏவுகணை விழும்போது நாம் சோபா ஒன்றில் அமர்ந்திருந்தோம். கடுமையான புகை மூண்டதால் எம்மால் எதனையும் பார்க்க முடியாமல்போனது’ என்று மருத்துவமனை படுக்கையில் இருந்து அந்த சிறுமி தெரிவித்தார்.

இஸ்ரேலின் தாக்குதல்களால் காசாவில் சுமார் 450 கட்டிடங்கள் அழிக்கப்பட்டு அல்லது சேதமடைந்துள்ளன. இதில் ஆறு மருத்துவமனைகள் மற்றும் ஒன்பது ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையங்களும் அடங்குவதாக ஐ.ந மனிதாபிமான நிறுவனம் தெரிவித்துள்ளது. 52,000க்கும் அதிகமானவர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதோடு பெரும்பாலானவர்கள் காசாவில் ஐ.நாவினால் நடத்தப்படும் பாடசாலைகளில் அடைக்கலம் பெற்றுள்ளனர். மறுபுறம் இஸ்ரேலின் பீர்ஷபா மற்றும் காசா எல்லையை ஒட்டிய பகுதிகளில் ரொக்கெட் குண்டுகள் வருவதை எச்சரிக்கும் சைரன் ஒலி எழுப்பப்பட்டது. புதன் நள்ளிரவில் காசாவில் இருந்து 80 ரொக்கெட் குண்டுகள் மற்றும் மோட்டார் குண்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது.

இஸ்ரேல் இராணுவ வாகனம் ஒன்றின் மீது பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்த ஏவுகணை காசா எல்லையில் காலியாக இருந்த பஸ் மீது விழுந்ததாகவும் அருகில் இருந்த வீரர் ஒருவருக்கு சிறு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்துள்ளது.

மேற்குக் கரையிலும் வன்முறைகள் நீடித்து வருகின்றன. கடந்த மே 10 ஆம் திகதி தொடக்கம் இஸ்ரேலின் தாக்குதல்களில் அங்கு இதுவரை 21 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காசாவில் 322 மில். டொலர் சேதம்

இஸ்ரேலின் தற்போதைய தாக்குதல்களால் காசாவில் 322 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான பொருட்சேதம் ஏற்பட்டிருப்பதாக காசாவின் அரச ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. குறைந்தது 184 அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் மற்றும் 33 ஊடக மையங்கள் முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இதனால் 92 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. தவிர 1,335 வீட்டு அலகுகள் முழுமையாக அல்லது மோசமான சேதத்திற்கு உள்ளாகி இருப்பதோடு 13,000 கட்டடங்கள் பகுதி அளவு அழிக்கப்பட்டுள்ளன.    நன்றி தினகரன் 




இஸ்ரேல் மற்றும் காசாவில் போர் நிறுத்தம் அமுல்: பலஸ்தீனர் வெற்றி கொண்டாட்டம்

மற்றொரு போருக்கு தயார் என ஹமாஸ் எச்சரிக்கை

எகிப்தின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல் மற்றும் காசாவில் ஹமாஸ் போராளிகளுக்கு இடையிலான போர் நிறுத்தம் நேற்று வெள்ளிக்கிழமை அமுலுக்கு வந்தது.

எனினும் மற்றொரு போருக்கு தயாராக இருப்பதாக எச்சரித்திருக்கும் ஹமாஸ், ஜெரூசலத்தில் இஸ்ரேலின் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இந்த மோதல்களில் காசா பகுதியில் ஏற்பட்ட சேதங்கள் சரிசெய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

‘நிபந்தனையற்ற போர் நிறுத்தம் ஒன்றுக்கான எகிப்தின் முயற்சியை பாதுகாப்பு அமைச்சரவை வியாழக்கிழமை பின்னேரத்தில் ஒருமனதாக ஏற்றுக்கொண்டது’ என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

காசாவில் ஏற்பட்ட அழிவுகளை சரிசெய்வதாக அமெரிக்க ஜனாதிபதி ஜொ பைடன் உறுதி அளித்துள்ளார். மக்கள் செறிந்து வாழும் இஸ்ரேலின் முற்றுகையில் உள்ள காசா பகுதி மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் 232 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு. காசாவில் இருந்து இஸ்ரேல் மீது வீசப்பட்ட ரொக்கெட் தாக்குதல்களில் 12 பேர் பலியாகினர்.

இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்களால் காசாவில் உள்ள மக்கள் கடந்த 11 நாட்களாக அச்சத்துடனேயே வாழ்ந்தனர். இந்த நிலையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் வீதிகளில் திரண்டு வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ‘(இஸ்ரேல்) ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் வெற்றிபெற்றது’ என்று அங்கு பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் கூறப்பட்டது.

கிழக்கு ஜெரூசலத்தின் செய்க் ஜர்ராஹ் பகுதியில் நேற்றுக் காலை பலஸ்தீன கொடிகளை அசைத்தபடி கார் வண்டிகளில் சென்ற பலஸ்தீனர்கள் ஹோர்னை ஒலிக்கச் செய்து வெற்றியை கொண்டாடினர்.

கடந்த வியாழக்கிழமை அதிகாலை 2 மணிக்கு போர் நிறுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக, பலஸ்தீன ரொக்கெட்டுகள் இஸ்ரேலை நோக்கி தொடர்ந்து வீசப்பட்டதோடு இஸ்ரேல் குறைந்தது ஒரு வான் தாக்குதலை நடத்தியது.

அடுத்த தரப்பினால் மீறப்படும் போர் நிறுத்தத்திற்கு பதில் கொடுக்க தயாராக இருப்பதாக இரு தரப்பும் குறிப்பிட்டுள்ளன. இந்த போர் நிறுத்தத்ததை கண்காணிப்பதற்கு இரு தூதுக்குழுவை அனுப்பி இருப்பதாக எகிப்து குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு ஜெரூசலத்தில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட பதற்ற சூழலை அடுத்து இந்த மோதல் வெடித்தது. குறிப்பாக நோன்பு காலத்தில் புனித அல் அக்சா பள்ளிவாசல் வளாகத்தில் இஸ்ரேல் பொலிஸார் நுழைந்தது மற்றும் பலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்களுடனான மோதல் சம்பவங்களும் இதில் அடங்கும். இந்த மோதல் காரணமாக காசாவின் பெரும்பாலான மக்களுக்கு நோன்புப் பெருநாளைக் கொண்டாட முடியாமல் போனது. இந்நிலையில் பிற்போடப்பட்ட நோன்புப் பெருநாள் உணவு காசா எங்கும் நேற்று பகிரப்பட்டது.

இஸ்ரேல் வானொலிகள் வழக்கத்திற்கு திரும்பியதோடு அதன் மணித்தியால செய்திகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் மீண்டும் ஒலிபரப்ப ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

உயிரிழப்புகள்

கடந்த 11 நாட்களாக இடம்பெற்ற மோதல்களில் காசாவில் 232 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு இவர்களில் 65 சிறுவர்களும் அடங்குவதாக அந்த பகுதியின் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். வான் தாக்குதல்களில் அங்கு மேலும் 1,900 பேர் காயமடைந்துள்ளனர். காசாவில் தாம் 160 போராளிகளை கொன்றதாக இஸ்ரேல் கூறியபோதும் அதனை உறுதி செய்ய முடியவில்லை.

பலஸ்தீன போராளிகளின் ரொக்கெட் தாக்குதல்களில் இஸ்ரேல் தரப்பில் 12 பேர் கொல்லப்பட்ட நிலையில் மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த ரொக்கெட் குண்டுகள் இஸ்ரேலியர்கள் தூக்கத்தை இழந்து அச்சத்தில் இரவை கழிக்கச் செய்தது. அடிக்கடி ஒலிக்கும் சைரன் ஒலியால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பு இராணுவ மற்றும் பொருளாதார ரீதியில் வலுவான எதிரியுடன் வெற்றிகரமாக போராடியதாக குறிப்பிட்டுள்ளது.

‘இன்று போர் முடிகிறது என்பது உண்மையே, ஆனால் போருக்கு நாம் தயாராகவே இருக்கிறோம் என்பதையும் இந்தப் போராட்டத் திறனை நாம் தொடர்ந்து வளர்த்துக்கொள்வோம் என்பதையும் (இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்) நெதன்யாகு மற்றும் முழு உலகமும் அறிந்துகொள்ள வேண்டும்’ என்று ஹமாஸ் அரசியல் பிரிவின் மூத்த உறுப்பினர் ஒருவரான இஸத் எல் ரெஷிக் தெரிவித்துள்ளார். டோஹாவில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேசிய அவர், ஜெரூசலத்தில் அல் அக்ஸா பள்ளிவாசல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கிழக்கு ஜெரூசலத்தில் பலஸ்தீனர்கள் அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியதோடு, இவை ‘ஒரு சிவப்பு கோடு’ என்று குறிப்பிட்டார்.

‘ஜெரூசலத்தின் வாள் என்ற இந்த போரின் முடிவு என்பது இதற்கு முன்னர் போன்றதல்ல. ஏனென்றால் பலஸ்தீன மக்கள் போராட்டத்தை ஆதரிப்பதோடு தமது நிலம் மற்றும் புனித தலங்களை பாதுகாப்பதற்கு எவ்வாறு போராடுவது என்பதை அறிந்துள்ளனர்’ என்றும் ரெஷிக் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலியர் ஆதங்கம்

‘மோதல் முடிவுக்கு வந்தது நல்லது. ஆனால் துரதிருஷ்ட வசமாக அடுத்த மோதலுக்கு அதிக காலம் எடுக்காது என்று எமக்குத் தோன்றுகிறது’ என்று டெல் அவிவில் வசிக்கும் 30 வயதான மென்பொருள் பொறியியலாளர் ஈவ் இசேவ் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்த நிலையிலேயே, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மோதலை நிறுத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வலியுறுத்தினார் என்பதோடு எகிப்து, கட்டார் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டியது.

அமெரிக்க நேரப்படி கடந்த வியாழக்கிழமை தொலைக்காட்சியில் உரையாற்றிய பைடன், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனர்கள் எதிர்கொண்ட துயரங்களுக்கு தனது அனுதாபத்தை வெளியிட்டார். காசாவின் புனரமைப்புக்காக விரைவான மனிதாபிமான உதவியை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய சர்வதேச பங்காளர்களுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்றும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

இந்த உதவிகள் ஹமாஸ் அமைப்பின் போட்டி நிர்வாகமான ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் பலஸ்தீன அதிகார சபையுடன் ஒருங்கிணைக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் என்று பைடன் குறிப்பிட்டுள்ளார். பலஸ்தீன அதிகாரசபை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை தளமாகக் கொண்டு செயற்படுகிறது.

ஹமாஸ் அமைப்பை அமெரிக்கா பயங்கரவாதக் குழுவாக அறிவித்திருக்கும் நிலையில் அமெரிக்கா அதனை அங்கீகரிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பலவீனமான போர் நிறுத்தம்

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன தலைவர்கள் அமைதியை நிலைநிறுத்துவதற்கு அப்பால் சென்று மோதல் ஏற்படுவதற்கான காரணிகள் பற்றி தீவிர பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் என்று ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் வலியுறுத்தியுள்ளார். எனினும் இணக்கம் எட்டப்பட்டிருக்கும் இந்த போர் நிறுத்தத்தில் அவ்வாறான காரணங்கள் பற்றி கருத்தில் கொள்ளப்பட்டதாக தெரியவில்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

போர் நிறுத்தத்ததை வரவேற்பதாகக் குறிப்பிட்டிருக்கும் பலஸ்தீன முன்னணி இராஜதந்திரியான ரியாத் அல் மலிக்கி, வன்முறை வெடித்ததற்கான முக்கிய காரணிகள் பற்றி பேசப்படாத நிலையில் அது போதுமானதாக இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அல் அக்ஸா பள்ளிவாசலில் இஸ்ரேலின் அத்துமீறல் மற்றும் கிழக்கு ஜெரூசலத்தின் செய்க் ஜர்ராஹ் பகுதியில் பலஸ்தீன குடும்பங்கள் அவர்களின் சொந்த வீட்டில் இருந்து வெளியேற்ற முயற்சிப்பது போன்ற காரணங்களே இந்த மோதலைத் துண்டியமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் இந்த இரண்டு விடயங்கள் தொடர்பிலும் இஸ்ரேலிடம் இருந்து சலுகையை வென்றதாக ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் தொலைக்காட்சிக்கு ஹமாஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூற்றை இஸ்ரேல் அதிகாரிகள் மறுத்துள்ளனர். இராணுவ நடவடிக்கைகளை உடன் நிறுத்துவதற்கு மாத்திரமே போர் நிறுத்தத்திற்கு இணக்கம் எட்டப்பட்டதாகவும் இது ஒரு ‘பரஸ்பரம் நிபந்தனையற்ற போர்நிறுத்தம்’ என்றும் இஸ்ரேல் விபரித்துள்ளது.

ஆனால் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த உடன் ஹமாஸ் அதிகாரிகள் பலரும் வெற்றி அறிவிப்பை வெளியிட்டனர். ‘இது மகிழ்வூட்டும் வெற்றி’ என்று காசா நகரில் கூடிய ஆயிரக்கணக்கானவர்களின் முன்னிலையில் ஹமாஸ் அரசியல் பிரிவின் மூத்த உறுப்பினரான கலீல் அல் ஹய்யா தெரிவித்தார்.

போர் நிறுத்தம் ஆரம்பமான அதிகாலை இரண்டு மணிக்கே காசா மக்கள் வீதிகளில் இறங்கி கொண்டாட ஆரம்பித்தனர். துப்பாக்கி வேட்டுகளை வானத்தில் செலுத்தியும் கார்களின் ஹோர்ன்களை ஒலிக்கச் செய்தும் தமது மகிழ்ச்சியை வெளியிட்டனர்.

மேற்குக் கரை நகரங்களான நப்லுஸ், ஜெனின், ரமல்லாஹ் மற்றும் ஹெப்ரோனிலும் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு ஜெரூசலத்திலும் பலஸ்தீனர்கள் பட்டாசு கொழுத்தியும் வாகனங்களில் ஹோர்ன் ஒலியை எழுப்பியும் கொண்டாடினர்.

இஸ்ரேலிய வான் தாக்குதல்களில் குறைந்தது 46 பாடசாலைகள் உட்பட குறைந்தது 51 கல்வி நிலையங்கள் சேதமடைந்திருப்பதாக ஐ.நாவின் மனிதாபிமான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காசாவில் ஐ.நாவினால் நடத்தப்படும் 58 பாடசாலைகளில் குறைந்தது 66,000 பேர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இஸ்ரேலிய தாக்குதல்களால் அங்கு ஆறு மருத்துவமனைகள் மற்றும் 11 ஆரம்ப சுகாதார நிலையங்கள் சேதமடைந்துள்ளன. இதில் காசாவில் இருக்கும் ஒரே கொரோனா சோதனை ஆய்வுகூடமும் சேதமடைந்துள்ளது.

காசா மின்சார கட்டமைப்பு சேதமடைந்திருப்பதால் அங்கு நாளாந்தம் 20 தொடக்கம் 21 மணி நேரம் மின் வெட்டு கடைப்பிடிக்கப்படுகிறது. இது நீர் மற்றும் துப்புரவு வசதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 250,000 பேர் வரை குடிநீரை பெற முடியாத நிலை எற்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 




No comments: