கொரனாவை விட கோரமான பொது மக்கள் மீதான தாக்குதல்

 .



உலகம் முழுவதும் அது இலங்கை இந்தியா என்று பிராணவாயு இல்லை மருந்து இல்லை என்று அவலக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த கொலைத் தாக்குதல் பற்றியும் பேசவேண்டி இருக்கின்றது என்ற மனவருத்தத்துடன் இந்த பதிவை தொடங்குகின்றேன். கூடவே இந்த பதிவிற்காக பயன்படுத்தப்படும் புகைப்படம் கூட எனக்கு கோரத்தின் தீவிரத்தை எடுத்துக் காட்டவே பயன்படுத்துகின்றேன். மற்றயபடி இந்தக் கருவிகள் உள்ள புகைப்பங்களை வெளியிடுவதில் அதிகம் உடன்பாடற்றும் இருக்கின்றேன். இனி விடயத்திற்குள் வருவோம்....
பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காஸா பகுதியில் ஆட்சி செய்யும் ஹமாஸ் என்ற அடிப்படைவாத இயக்கம் நடாத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி என்று இஸ்ரேல் நடாத்திய தாக்கும் 140 இற்கும் மேற்பட்ட பாலஸ்தீன அப்பாவி மக்களை கொன்றொழித்துள்ளது. மூன்று குடியிருப்புக் கட்டத் தொகுதியை முழுமையாக தரை மட்டமாக்கிய தாக்குதலாக இது இருக்கின்றது.
உலகமே கொரானா என்னும் பேரிடரில் இருந்து மனித குலத்தைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கும் வேளையில் மக்களின் கவனம் எல்லாம் மருத்துவம்.. சிகிச்சை... வாழ்வாதாரம்... கொரனாத் தாக்குதலால் இறந்தவர்களை அடக்கம் செய்தல் என்று அல்லாடிக் கொண்டிருக்கும் வேளையிலும் இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் ரொம்பவும் வெறுக்கத்தக்கது கண்டனத்திற்குரியது.
மனித உரிமை பற்றி பேசும் பலரும் இது ஹமாஸ் என்ற 'பயங்கரவாத" இயக்கத்திற்கு எதிரான இஸ்ரேலின் 'நியாமான' தாக்குதல் என்று அப்பாவி மக்களின் கொலைகளை கடந்து செல்லும் வருதம் ஏற்படும் செயற்பாட்டை அதிகம் கொண்டிருக்கின்றனர்.
'பலமானவன்" சொல்வதே நியாயம் என்ற அறம் செத்த செயற்பாடாகவே இதனை நாம் பார்க்க முடியும். சில தினங்களுக்கு முன்புதான் இதே பாலஸ்தீன மக்களின் அவலம் பற்றிய ஒரு பதிவை இட்டிருந்தேன் அந்த அலை ஓய முன்பே இந்த மரண ஓலங்கள் ஏற்பட்டிருக்கின்றது. இதில் ஸ்தலத்தில் மரணமானவர்களுக்கு அப்பால் பல நூறு மக்கள் குற்றுயிராக வாழ்க்கை பூராக அங்கவீனர்களாக வாழப்போகும் அவலத்தை மனித குலம் பார்த்துக் கொண்டுதான் இருக்கப் போகின்றதா..?
இத் தாக்குதல் பாலஸ்தீனத்தில் மட்டும் அல்ல ஒட்டு மொத்த மத்தியதரைப் பகுதியிலும் மனித அழிவுகளை ஏற்படுத்தும் செயலாகவே நாம் பார்க்க முடியும். இது நமக்கு வரலாறு கூறி நிற்கும் செய்தியாகவும் இருக்கின்றது.
சற்று இந்த இஸ்ரேல் மத்திய கிழக்கு வரலாற்றையும் பார்ப்போம்....
தனது மூலதனத்தை சுரண்டல் மூலம் பெருக்க உலகம் பூராகவும் யுத்தங்களைச் செய்யும் ஏகாதிபத்திய சிந்தனையின் வெளிப்பாடாக மத்தியதரை பகுதியின் பிரதான வளமான எண்ணை வளங்களை சுரண்டுவதே இதற்கான முக்கிய காரணமாகும் இந்த யுத்தங்கள். இதற்கு மத்தியதரைப் பகுதியில் தமது செல்லப் பிள்ளையாக உருவாக்கி பாலூட்டி தாலாட்டி வளர்க்கப்பட்டதே சியோனிசம் என்ற இஸ்ரேல் ஆளும் வர்க்கமும் அது கையாளும் அணுகுமறையுயாகும்.


இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜிச நடைவடிக்கையின் ஒருபகுதியாக கொல்லப்பட்ட யூதர்களின் மீதான அனுதாபங்களை இஸ்ரோலால் அவ்வப் போது முன்னிறுத்தி தாம் புரியும் கொலைகளை சமப்படுத்தும் அருவருக்கத்தக்க செயற்பாடுதான் சியோனிசம் ஆகும்.
ஹிட்லரால் யூத மக்களை விட சோவியத்துகள் அதுவும் கம்யூனிஸட்டுகளே அதிகம் இரண்டாம் உலகப் போரில் அதிகம் கொல்லப்பட்டார்கள். இவர்களின் தியாகம் தான் மனித குலத்தை அன்று காப்பாற்றிது. அவர்கள், அவள்களின் வழித்தோன்றலாக இருகும் இடதுசாரிகள் கம்யூனிஸ்ட்டுகள் இதுவரை இது போன்ற எந்தப் படுகொலைகளையும் பதிலடியாக கொடுத்து தமது இரண்டாம் உலகப் போரில் செய்த தியாகத்தால் அவற்றை மறைத்ததாக வரலாறு இல்லை இனியும் அவ்வாறு ஏற்படப் போவதும் இல்லை.
இரண்டாவது உலக யுத்த காலத்தில் ஹி;ட்லரின் நாஜிவாதிகளின் துன்புறுத்தல்களுக்கு ஆளாகிய யூதர்கள், மத்திய கிழக்கில் பிரித்தானிய ஆளுகையின் கீழிருந்த “பிரித்தானிய பாலஸ்தீனத்திற்கு” (British Palestine) குடிபெயர்ந்தவர்கள். அவர்களில் பெரும்பான்மையோர் இராண்டாவது உலக யுத்த காலத்தில் யூதப் படுகொலைகளுக்குப் பின்னர் அனாதைகளாக வந்தவர்களாவர்.
பின்னர் அராபியர்களுக்கும் யூதர்களுக்குமிடையில் மோதலை திட்டமி;டு உருவாக்கிய பிரித்தானியர்கள் 1947ல் பாலஸ்தீனத்தை விட்டுச் சென்றனர். உலகம் பூராகவும் பிரித்தானிய ஏகாதிபத்தியம் கை கொண்ட பிரித்தாளும் கொள்கை இது. இதன் வடிவங்;கள்தான் இலங்கையிலும் உள்ளது.
அதன் பின்னர், யுத்தத்தின் ஊடாக கைப்பற்றிய பாலஸ்தீனத்தின் பாரம்பரிய இந்த பகுதியை 1948 மே 14ம் திகதி யூதர்களின் நாடு என்று இஸ்ரேல் பிரகடனப்படுத்தப்பட்டது. தொடர்ந்தால் போல் மேலும் யுத்தங்கள் மூலம் அருகில் தரையால் இணைக்கப்பட்ட நாடுகள் மீது நில ஆக்கிரப்பை இஸ்ரேல் செய்தது. 1948, 1967 களில் எகிப்து, சிரியா மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளிடமிருந்தும் இன்னும் மேலதிகமாக பாலஸ்தீனத்திலிருந்தும் பிரதேசங்களை கைப்பற்றி இஸ்ரேல் தனதாக்கிக் கொண்டது.
மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் அராபியர் அல்லாத நாடொன்றை அமைப்பதும் அதை தனது கைப் பொம்மையாக பயன்படுத்தி எண்ணெய் வளங்களினால்; செல்வந்தம் மிக்க மத்திய கிழக்கை தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதுதான் உலக முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் நோக்கமாக இருந்து வருகின்றது.
இந்த ஏகாதிபத்திய நோக்கத்தின் வழியாக இன்று பாலஸ்தீனம் என்ற மிகப் பெரிய நாடு இன்று மேற்குக் கரையோரம், காசா என்ற சிறய பிரதேசத்திற்கள் ஓடுக்கப்பட்டு சுருங்கிவிட்டது. இதனை இலங்கையில் தமிழர்களின் வாழ்நிலங்கள் சிலாபத்தில் இருந்து அம்பாறை வரை என்று ஒரு காலத்தில் விரிந்திருந்த பகுதி இன்று சுருங்கி போயுள்ளதுடன் இணைத்துப் பார்க்க முடியும். இதற்கான யுத்தமே இன்று வரை இஸ்ரேலால் நடாத்தப்பட்டு வருகின்றது.
உலகத்தில் சிங்கள மக்களுக்கான ஒரு நாடாக மட்டும் சிறீலங்கா இருக்க வேண்டும் என்பது போன்ற அணுகு முறையின் முழுமையை உலகத்தில் யூதர்களுக்கான ஒரு நாடாக இஸ்ரேல் அமைய வேண்டும் என்ற விஸ்தரிப்பு வாதமே இந்த யுத்தங்களை கொலைகளை முழு மூச்சாக விருப்புடன் இஸ்ரேல் மேற்கொள்வதற்கான காரணம். இஸ்ரேலின் இந்தப் போக்கு பாலஸ்தீனம் என்ற நாட்டை முழுமையாக இல்லாமல் செய்வதில் முடிவடையலாம் என்ற அச்சம் புறந்தள்ளக் கூடியது அல்ல.
இதற்கு அமெரிக்காவின் முழமையான ஆதரவும் அதுவரை தனது செல்லப் பிள்ளையாக இஸ்ரேலை கையாளுதல் என்ற செயற்பாடும் உலக அரசியலுமே இரண்டாம் உலக மகாயுத்தத்திற்கு பின்பு நடைபெற்று வருகின்றன.
அமெரிக்காவின் டொனால் டிரம்பினால் 2020ல் முன் வைக்கப்பட்ட மேற்குக் கரையின் நிலத்தை இஸரேலுடன் இணைத்துக் கொள்ளும் திட்டமாகிய “நூற்றாண்டின் ஒப்பந்தம்” (Deal of the Century) என்பதாகும். அது ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வேதேச மரபுநெறிகளுக்கு முரணான வஞ்சக முயற்சியாகும்.
ஆனாலும் அமெரிக்காவிற்கு பயந்து உலகமே இந்த அநியாத்திற்கு எதிராக பலமான குரல் கொடுப்புகள் இன்றி மௌனம் காக்கின்றது
பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாகிய காஸா பகுதியில் அதிகாரம் ஹமாஸ் இயக்கத்தின் கையிலிருப்பதுடன், மேற்குக் கரையின் அதிகாரம் அல்-பதாவின் கையில் உள்ளது. இஸ்ரவேலைப் போன்றே அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் அனைத்தும் பாலஸ்தீனத்தின் தலைவராக அல்-பதாவின் தலைவரும் பாலஸ்தீன ஜனாதிபதியுமான மொஹமட் அப்பாஸை மாத்திரமே ஏற்றுக் கொள்கின்றனர்.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கு எதிராக ஹமாஸை உருவாக்கும் கைங்காரியத்தை அமெரிக்கா மேற்கொண்டதையும், 2007ம் வருடம் பாலஸ்தீனத்தின் பிரதான அரசியல் அமைப்புகள் இரண்டிற்குமிடையில் எழுந்த யுத்தத்த்தில் காஸா பகுதியின் முழு அதிகாரத்தையும் ஹமாஸ் இயக்கம் கைப்பற்றிக் கொண்டதையும் இதன் பின்புலத்தில் அமெரிக்கா செயற்பட்டதையும் நாம் மறந்துவிடக்கூடாது.
பாலஸ்தீன மக்களின் ஐக்கிய முன்னணி அமைப்பை பலவீனப்படுத்தவே இந்த ஹமாஸ் என்ற அடிப்படைவாத அமைப்பை உருவாக்கினர் மேற்குலகத்தினர். இதுவும் ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஓட்டத்துடன் ஒத்தே இருக்கின்றது. ஈழ விடுதலைப் போராட்டத்திலும் ஆரம்பத்தில் பல்வேறு விடுதலை அமைப்புகளை உடைய ஐக்கிய முன்னணி இல்லாது ஒழிக்கப்பட்டு ஒரு இயக்கத்தின் ஏகபோகம் உருவாக்கப்பட்டது. இதுவும் 'ஒரு' பின்புலத்தினாலேயே உருவாக்கப்பட்டது.
இறுதியில் ஏக போக ஒற்றைத் தலமையும் அழித்துவிட்ட செயற்பாடு இலங்கையில் நடைபெற்றது போன்று இன்றுவரை பாலஸ்தீனத்தில் நிகழ்த்த முடியாது இருப்பதற்கு பாலஸ்தீன விடுதலை அமைப்புகளிடையே நிலவும் இறுக்கமான ஐக்கிய முன்னணி அமைப்பு முக்கிய காரணமாகும்.
கூடவே ஒரு குறைந்த புரிந்துணர்வுடன் செயற்படும் ஹமாஸ் என்ற அடிப்படைவாத இயக்கத்திற்கும் ஏனைய பாலஸ்தீன விடுதலை அமைப்புகளும் தமக்கிடையே அதிகம் சண்டையிட்டுக் கொள்ளாத செயற்பாடுகளும் இங்கு கவனத்தை பெறுகின்றது.
அல்கைதா மற்றும் தாலிபான் இயக்கங்களைப் போன்றே இப்போது ஹமாஸ் இயக்கம் தொடர்பிலும் ஏகாதிபத்தியவாதிகளின் கொள்கையானது தாமே உருவாக்கிய அமைப்புகளை பகைவர்களாகக் கொண்டு கொள்ளைக்கார யுத்தத்தை முன்னெடுப்பதுதான். அதன் ஒருவடிவம் ஹமாஸை பயங்கரவாத் இயக்கம் என்று சொல்லி தாக்குதலை மேற்கொள்வது ஆகும்.
பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்குமுறை செய்ய இஸ்ரவேல் பொலிஸ் நடவடிக்கை எடுத்தமையினால் ஏற்பட்ட குழப்ப நிலை சமீபத்திய மோதலுக்குக் காரணமாக இருந்தது என்ற பொது போக்கு பார்வை சரியானது அல்ல.
பாலஸ்தீன மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடும் ஏகாதிபத்திய திட்டத்திற்கு எதிர்வினையாற்றுவதற்காக மத அடிப்படைவாதத்தை அடிப்படையாகக் கொள்வது பிரச்சினைக்கு தீர்வாக மாட்டாது, மாறாக அழிவை உக்கிரப்படுத்துவதாகும். இந்த நெருக்கடிக்கு இரு நாடுகளினதும் ஆளும் வர்க்கத்தின் இனவாத மதவாத திட்டத்திற்குள் நுழையாமல் உழைக்கும் மக்களின் பரவலான ஒற்றுமையின் வாயிலாகவே இந்தப் பிரச்சினைக்கு உண்மையான தீர்வைக் காண முடியும்.
இதன் ஒரு பகுதியை ஐக்கிய முன்னணியாக இருக்கும் பாலஸ்தீன விடுதலை அமைப்பில் உள்ள பலவேறு விடுதலை அமைப்புகள் மேற் கொள்கின்றன. இது நம்பிக்கை தரும் ஒரு முக்கிய செயற்பாடு ஆகும்.
பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக கொடுக்கும் குரல் என்பது உலகெங்கும் சிறுபான்மையினராக வாழும் மக்களின் உரிமையிற்காக நில ஆக்கிரமிப்பு, பண்பாட்டு ஆக்கிரமிப்பிற்கு எதிரான குரலாக நாம் உணர வேண்டும். மரணங்களை எற்படுத்தும் யுத்தத்தை நிறுத்த குரல் கொடுப்போம்.

Nantri - Siva Murukupillai FB

No comments: