பாராளுமன்ற உரையில் சுமந்திரன் MP
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது பொதுமக்களும் இறந்தார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, போரில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் மற்றும் படையினர் இறந்ததை நினைவுபடுத்தியிருந்தார்.
இந்த நிலையில், பிரதமரின் உரையை அடுத்து அதற்கு பதில் வழங்கும்படியாக கருத்து வெளியிடும்போதே எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது உரையின்போது படையினர் இறந்ததை நினைவுபடுத்தியிருந்தார்.
இதில் பொதுமக்களும் உள்ளடங்குகிறார்கள். பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் இன்றைய நாளில் கொல்லப்பட்டார்கள். இராணுவம் மட்டுமன்றி பொது மக்களும் இறந்தார்கள் என்பதை நான் சபையில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என தெரிவித்தார். நன்றி தினகரன்
செந்தில் கண்டனம்; கவனமெடுப்பதாக அஜித் உறுதி
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் உட்பட, சீன நிறுவனங்களால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் போது பொருத்தப்படும் பெயர்ப் பலகைகளில், தமிழ் மொழி தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக, பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், அலரி மாளிகையில் நேற்று முன்தினம் (17) நடைபெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான்,பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இக்கூட்டத்தின் போதே, செந்தில் தொண்டமான் இந்த விடயத்தினைச் சுட்டிக்காட்டினார். இந்தக் கூட்டத்தின் போது, கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை எழுந்தபோது உரையாற்றிய செந்தில் தொண்டமான் , துறைமுக நகரத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தான் அவதானித்த விடயமாகவே, இந்தத் தமிழ் மொழிப் புறக்கணிப்பு இடம்பெற்று வருவதாகவும் சீன நிறுவனங்களின் வேலைத்திட்டங்களின் போது, விசேடமாக கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தின் போது பொறுத்தப்படும் பெயர் பலகைகளில், இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியான தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதைத் தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் எடுத்துரைத்தார். அத்துடன், நாட்டில் மும்மொழிக் கொள்கையொன்று நடைமுறையில் உள்ள நிலையில், அவற்றுக்கு மரியாதை செலுத்தி, அம்மூன்று மொழிகளையும் பயன்படுத்த உத்தரவிடுமாறும், பிரதமரிடம் செந்தில் தொண்டமான் வலியுறுத்தினார். இது தொடர்பில் கருத்துரைத்த இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் , இது தொடர்பில் உடன் அவதானம் செலுத்தி, மும்மொழிக் கொள்கையைக் கடைபிடிக்குமாறு, உரிய தரப்பினருக்கு வலியுறுத்துவதாக உறுதியளித்துள்ளார். நன்றி தினகரன்
- 3ஆம் வாசிப்பு ஆதரவு 149; எதிராக 58
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சபை சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சபை சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்புத் தொடர்பான வாக்கெடுப்பில் அதற்கு ஆதரவாக 149 வாக்குகளும், எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய மூன்றாவது வாசிப்பு 91 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு முன்னர் குறித்த சட்டமூலம் மீதான விவாதம் முடிவடைந்த பின்னர் இரண்டாவது வாசிப்பு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 148 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அதன் பின்னர் இடம்பெற்ற குழு நிலையில் அரசாங்கத்தினால் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டதுடன், எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களுக்கு ஆளும் கட்சி இணங்கவில்லை. இதனால் மூன்று சந்தர்ப்பங்களில் எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களுக்கு வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டன.
அதேநேரம், குழு நிலையில் முன்வைக்கப்பட்ட பல்வேறு திருத்தங்களில் தமது எதிர்ப்பினை பதிவுசெய்யுமாறும் எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர்.
- ஆதரவு 148; எதிர் 59
- மு.கா. உள்ளிட்ட 17 எம்.பிக்கள் வாக்களிக்கவில்லை
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது தொடர்பான சட்டமூலத்தின், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 89 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டமூலத்திற்கு ஆதரவாக 148 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டது.
17 பேர் வாக்களிக்கவில்லை
இவ்வாக்கெடுப்பில் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் உள்ளிட்ட 17 பேர் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான விவாதம் இருநாட்களாக (18 -20) இடம்பெற்றது.
நிதியமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றியிருந்தார்.
இரு நாள் விவாதம்
இச்சட்டமூலம் தொடர்பில், சீனாவின் காலணியாக இலங்கை மாறப் போகின்றது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் முன்வைத்த நிலையில், இதன் மூலம் நாட்டிற்கு பல்வேறு வழிகளிலும் நன்மைகள் கிடைக்குமென ஆளும்தரப்பு எம்.பிக்கள் வாதங்களை முன்வைத்திருந்தனர்.
அதற்கமைய, இரு நாள் விவாதத்தை தொடர்ந்து இன்று (20) பிற்பகல் விவாதம் நிறைவடைந்தது.
வாக்கெடுப்பு
இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் விஜித ஹேரத் பகிரங்க வாக்கெடுப்பை கோருவதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சட்டமூலம் மீதான பகிரங்க வாக்கெடுப்பு இலத்திரனியல் முறையில் இடம்பெற்றது.
அதற்கமைய சட்டமூலத்திற்கு ஆதரவாக 148 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் பதிவாகின.
அதற்கமைய, 89 மேலதிக வாக்குகளினால் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார்.
கொழும்பு துறைமுக நகரம்
கடந்த 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் 17ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கொழும்பு துறைமுக நகரத்திற்கான அடிக்கல் நடப்பட்டது.
காலி முகத்திடலிலிருந்து கடலில் 233 ஹெக்டயர் பரப்பை நிரப்பி உருவாக்கப்பட்ட இத்திட்டத்திற்கான சீனாவின் முதலீடு சுமார் 15 பில்லியன் டொலர்களாகும் (சுமார் ரூ. 3,000 பில்லியன்)
ஆணைக்குழு
இத்திட்டத்தின் பல்வேறு தேவைகளை உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்கும் வகையில், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு எனும் ஆணைக்குழுவொன்றை உருவாக்க அரசாங்கம் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, அதற்கான சட்டமூலமொன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றில் மனு
ஆயினும் குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு சிவில் அமைப்புகளால் உச்ச நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தன.
இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றில் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, அது தொடர்பிலான உச்ச மன்றின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டது.
அரசியலமைப்புக்கு முரண்
அதன் அடிப்படையில் குறித்த சட்டமூலத்திலுள்ள ஒரு சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணனாது என, உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில், அதனை மாற்றியமைப்பதன் மூலம் பாராளுமன்ற பெரும்பான்மையுடன் நிறைவேற்ற அமைச்சரவை அனுமதி வழங்கியது.
நிறைவேற்றம்
அதன் பின்னர், குறித்த சட்டமூலத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு விவாதத்திற்குட்படுத்தப்பட்டு 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த தமிழ் உறவுகளை நினைவுகூர்ந்து வீடுகளில் நினைவுச் சுடரேற்றி அஞ்சலி நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.
அந்தவகையில் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தனது வீட்டில் உயிர்நீத்த உறவுகள் நினைவாக புஸ்பாஞ்சலி செலுத்தி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.
கொவிட் 19 அசாதாரண சூழ்நிலை காரணமாக அமைதியாக சுகாதார முறைப்படி இந் நிகழ்வு அவரது வீட்டில் நடைபெற்றது.
மேலும் சில தமிழ்ப் பற்றாளர்களும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
(காரைதீவு குறூப் நிருபர்) நன்றி தினகரன்
ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர்,எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் முப்படைத் தளபதிகள் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி
வானிலிருந்து ஹெலிகொப்டர்கள் மூலம் பூமாரி பொழிந்து மரியாதை
படைவீரர்களின் குடும்பங்களுக்கு விஷேட சலுகை
மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய பயங்கரவாதத்திலிருந்து தாய்நாட்டை மீட்டெடுத்து மே மாதம் 18ஆம் திகதியுடன் 12 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.
2009 மே மாதம் 18ஆம் திகதி கொடிய யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதிலிருந்து நாட்டில் சமாதானம் நிலவுவதுடன், தற்பொழுது நாட்டு மக்கள் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வருகின்றனர். இதற்கு அன்றைய பாதுகாப்புச் செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அப்போதைய ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் அரசியல் தலைமைத்துவம், சரியான தீர்மானம் மற்றும் முப்படை வீரர்கள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரின் அர்ப்பணிப்பே பிரதான காரணமாகும்.
தாய்நாட்டிற்காக தனது உயிர்களை தியாகம் செய்த, தமது அவயவங்களை அர்ப்பணித்த அனைத்து முப்படை வீரர்கள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரை நினைவு கூர்ந்து கௌரவப்படுத்த வேண்டியது எமது அனைவரினதும் தலையாய கடமையாகும்.
அந்த அடிப்படையிலேயே ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள்ள தேசிய போர் வீரர்கள் நினைவுத்தூபியில் யுத்த வெற்றியின் 12ஆவது ஆண்டு நிறைவு மற்றும் தேசிய படைவீரர் ஞாபகாரத்த தின நிகழ்வு ஆகியன முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்றுமுன்தினம் மாலை (மே, 19) அனுஷ்டிக்கப்பட்டன. ஜனாதிபதி தனது வீரப்பதக்கங்களுடன் படைவீரர்களின் நினைவுத் தூபிக்கு மரியாதை செலுத்தியமை விஷேட அம்சமாகும்.
தேசிய போர் வீரர்கள் நினைவு தின நிகழ்வில் நாட்டின் 5ஆவது நிறைவேற்று அதிகாரம் கொணட ஜனாதிபதியாக பதவி வகித்தவரும் தற்போதை பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டு போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
2009 மே மாதம் வரை இடம்பெற்ற மிலேச்சத்தனமான பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் உச்ச கட்ட தியாகம் செய்த அனைத்து போர் வீரர்களும் இந்த நிகழ்வின் போது அவர்களின் வீரச் செயல்களுக்காக மரியாதையுடன் நினைவு கூரப்பட்டனர்.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் ரணவிரு சேவா அதிகார சபையின் ஏற்பாட்டில் பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவின் நேரடி மேற்பார்வையின் கீழ் நடைபெற்ற தேசிய போர் வீரர்கள் நினைவு தின நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்னர், தாய்நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த போர் வீரர்களை நினைவு கூர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் போர் வீரர்களின் துணிச்சலை பறைசாற்றும் வாசகங்கள் அடங்கிய பத்திரமும் வாசிக்கப்பட்டது.
சமய அனுஷ்டானங்கள், ‘ரண பெர’ ஒலிப்பு, அதைத் தொடர்ந்து ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதி, சபாநாயகர், எதிர்க் கட்சித் தலைவர், பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உட்பட முக்கியஸ்தர்கள் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்துத்தியதுடன் வானிலிருந்த ஹெலிகொப்டர்கள் மூலம் பூமாரியும் பொழியப்பட்டது.
இந்த நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்திய ரணவிரு சேவா அதிகார சபையின் பதில் தலைவி திருமதி சோனியா கோட்டேகொட, போர்வீரர்கள் தொடர்பான எமது எண்ணம் எல்லைக்கு அப்பாற்பட்டது எனவும் நாங்கள் இப்போது போர்வீரர்களின் குடும்பங்களை அவர்களின் வாழ்நாள் முழுவதும் கவனித்துக் கொள்வதில் உறுதியாக இருக்கிறோம் எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, தற்போதைய அரசாங்கம் படைவீரர்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றமைக்கு பின்வரும் விடயங்கள் சான்றாகும்.
இதுவரை காலம் நிவாரணம் வழங்கப்படாத நிலையில் பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக உயிரிழந்த முப்படை வீரர்கள் மற்றும் பொலிஸாரை சார்ந்த உறவினர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.
இதற்கமைய முப்படை வீரர்கள் மற்றும் பொலிஸாரின் நெருங்கிய உறவினர்களான 23 ஆயிரம் பொற்றோர்கள் மற்றும் 7 ஆயிரம் மனைவிமார் என்ற அடிப்படையில் 30 ஆயிரம் பேர் இதன் மூலம் நன்மையடைய உள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக் காட்டினார்.
பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக உயிரிழந்த முப்படை வீரர்கள் மற்றும் பொலிஸாரை சார்ந்த உறவினர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 10.09.2020 அன்று அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்ட பத்திரத்திற்கே மிக நீண்ட கால செயற்பாடுகளுக்கு பின்னர் ஏப்ரல் மாதம் இடம்பெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக உயிரிழந்த முப்படை மற்றும் பொலிஸ் வீரர்களுக்கு 55 ஆண்டுகள் நிறைவடையும் வரை வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளின் மொத்த தொகையை திருமணமான முப்படை மற்றும் பொலிஸ் வீரர்களின் மனைவிமார் தமது ஆயுட்காலம் வரை பெற்றுக் கொள்ள தகுதியடைவர்களாவார்
பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக உயிரிழந்த திருமணமான/ திருமணமாகாத முப்படை மற்றும் பொலிஸ் வீரர்களின் பெற்றோர்களுக்கு 55 ஆண்டுகள் நிறைவடையும் வரை வழங்கப்படும் ரூ. 25,000.00 கொடுப்பனவினை, குறித்த பெற்றோர்கள் தமது ஆயுட்காலம் வரை பெற்றுக்கொள்ள தகுதியடைவர்களாவார்.
பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக அங்கவீனமுற்ற முப்படை மற்றும் பொலிஸ் வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், அங்கவீனமுற்ற முப்படை மற்றும் பொலிஸ் வீரர்களின் மரணத்தின் பின் அவர்களில் தங்கி வாழ்வோர்களுக்கு அவர்களின் ஆயுட்காலம் வரை வழங்கப்படும்.
இவை போன்ற பல சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இவை வரலாற்றில் எந்த அரசாங்கமும் செய்யாத பாரிய நன்மையான விடயங்களாகவே கருதப்படுகின்றன.
சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இடம்பெற்ற ஞாபகார்த்த நிகழ்வில், அமைச்சர்கள், அட்மிரல் ஒப் த பிளீட் வசந்த கரன்னாகொட, மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயார் போஸ் ரொஷான் குணதிலக்க, பாராளுமன்ற உறுப்பினர்கள், முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்புப் படை பணிப்பாளர் நாயகம், கடலோர பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம், உயிரிழந்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
ஸாதிக் ஷிஹான்...நன்றி தினகரன்
- தொடர்புடைய எம்.பிக்களை தனிமைப்படுத்தல்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனைவி ஜலனி பிரேமதாஸவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தனது பேஸ்புக் மற்றும் ட்விற்றர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள சஜித் பிரேமதாஸ,
கொவிட்-19 அறிகுறிகள் தொடர்பில், நேற்றையதினம் (22) தனது மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு PCR சோதனையில் கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து, சுகாதார வழிகாட்டலுக்கமைய, தனக்கு மேற்கொண்ட PCR சோனையில் தனக்கும் கொவிட்-19 தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆயினும் தனக்கு கொவிட்-19 தொடர்பான எந்தவொரு அறிகுறிகளும் இல்லை எனவும், தாங்கள் இருவரும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் எனும் பாரிய பொறுப்புக்கு மத்தியில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியவாறு, தற்போது காணப்படும் மிக கடினமான காலப் பகுதியில், தனது ஒன்றிணைந்த பணியை தொடர்ந்தும் மேற்கொள்ளவுள்ளதாக அவர், உறுதியளித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தெரிவித்துள்ள அவர், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி, ஒரே தேசமாக இத்தொற்று அலைக்கு எதிராக போராடுவோம் எனவும், இதனை வெற்றி கொள்ள எம்மால் முடியும் எனவும் அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் நெருங்கிய தொடர்பை பேணி அனைத்து எம்.பிக்களையும் தனிமைப்படுத்துமாறு, பாராளுமன்ற படைக்கல சேவிதர் அறிவித்தல விடுத்துள்ளார்.
இதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் சென்று வந்த இடங்களை CCTVயில் பார்வையிடவுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment