எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 42 வாழும்போதும் மறைந்த பின்பும் தமிழ் எழுத்தாளருக்கு கிடைக்கும் அங்கீகாரம் ! இனக் கலவரங்கள் கலையும் மேகங்களா…? முருகபூபதி



எமது மரியாதைக்குரிய  மூத்த படைப்பாளி    கி. ரா. அவர்கள் மறைந்திருக்கும்  காலப்பகுதியில் இந்த 42 ஆவது அங்கத்தை எழுதுகின்றேன்.

அவர் வாழும்போதும், மறைந்தபின்னரும் எவ்வாறு கொண்டாடப்பட்டார் என்பதை ஊடகங்கள் மற்றும் காணொளி வாயிலாக பார்த்திருப்பீர்கள்.

கி.ரா. தனக்கு எழுத்துலக அங்கீகாரம் வேண்டி அலைந்தவர் அல்ல.  மக்களின் மொழியில் எழுதி அவர்களின் ஆத்மாவை பிரதிபலித்து அவர்களின் வாழ்வை இலக்கியமாக்கியவர்.  மக்களின் அங்கீகாரம் பெற்ற, கல்லூரிகளில் படிக்காத மேதை.

ஒவ்வொருவரும் தமது பணியிலிருந்து ஓய்வுபெறும் காலம்  60 வயது எனக்கணக்கிட்டாலும்,  கி.ரா. அவர்களை அந்தவயதில்தான் ஒரு பணி, அதுவும் மாணவர்களுக்கு நாட்டார் இலக்கியம் பற்றி விரிவுரையாற்றுமாறு  கோரும் பணி புதுச்சேரி பல்கலைக்கழக நிருவாகத்திடமிருந்து வருகிறது.

அதற்காக அவர் ஆழமாக நேசித்த தனது கரிசல் மண்ணான இடைசெவல் கிராமத்தையும் விட்டு விடைபெற்றார்.  இறுதியில், அவர் மறைந்த பின்னர் அவரது பூதவுடல், அதே இடைசெவலில் தமிழக அரசின் மரியாதையுடன் தகனமாகியிருக்கிறது.

கி.ரா. வாழ்ந்த காலத்தில் அவரைத்தேடிச்சென்று பேசியவர்கள்,  அவரது படைப்புகள் குறித்த வாசிப்பு அனுபவங்களை பதிவேற்றியவர்கள், நேர்காணல் எழுதியவர்கள், அவர் பற்றிய  ஆவணப்படம் எடுத்தவர்கள் பலர்.

சாதாரண வாசகர் முதல், எழுத்தாளர்கள்,  கலைஞர்கள்,


அரசியல், சினிமா பிரபலங்கள் என்று பலரும் அவரைத்தேடிவந்தனர்.

அவரது கதைகளை பேசிக்கொண்டாடினர். இத்தனைக்கும் அவருக்கும் இன்றைய நவீன தொழில்நுட்ப ஊடக சாதனங்களுக்கும் வெகு தூரம். அவர் அவற்றிலிருந்து அந்நியப்பட்டவர்.  குறிப்பாக மின்னஞ்சல் – முகநூல் பரிச்சியம் அற்றவர்.

தொடர்ந்தும் கையாலே எழுதிவந்தவர். 

அத்தகைய விந்தையான மனிதர் வாழ்ந்த காலத்தில், மேற்சொன்ன சகல வசதி வாய்ப்புகளுடனும் நாம் இயங்கி வருகின்றோம்.

எனது எழுத்தும் வாழ்க்கையும் தொடரின் இந்த 42 ஆவது அங்கத்தை கி.ரா அவர்களுக்கு சமர்ப்பணமாகவே தொடருகின்றேன். 

எனது தொடரை தொடர்ந்து படித்துவரும், தற்போது அமெரிக்காவில் வதியும் இலக்கியத்தோழர் கலாநிதி ரவீந்திரன் அவர்களுக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பிவிட்டே இந்த அங்கத்திற்குள் வருகின்றேன்.

நான் அவருக்கு எழுதிய மின்னஞ்சலில், அன்புள்ள தோழருக்கு வணக்கம்.  நலம்தானே..? கி.ரா.வுக்கு தமிழக அரசு மரியாதை செலுத்தியிருக்கிறது.  முன்னர் மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு புதுச்சேரி அரசு மரியாதை செலுத்தியது.  அதுபோன்று கேரள அரசு வைக்கம் முகம்மது பஷீர், தகழி சிவசங்கரன் பிள்ளை ஆகியோருக்கும் மரியாதை செலுத்தியது.


ஆனால் எமது இலங்கையில்  சிங்கள எழுத்தாளர்கள் கலைஞர்கள் - மார்டின் விக்கிரமசிங்கா, மற்றும் மககமசேகர - லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் ஆகியோரைத்தவிர ஏனைய தமிழ் எழுத்தாளர்களுக்கு அத்தகைய மரியாதையை தரவில்லை. அதற்கான உந்துதலையும் அங்கிருக்கும் தமிழ்த்தலைவர்கள் வழங்கவில்லை.

இதற்கான காரணம் உங்கள் பார்வையில் எப்படி இருக்கிறது ?

 

 கி.ரா. மறைந்தவுடன் எனது அஞ்சலிக்குறிப்பு ஆக்கத்தை வெளியிட்ட ஒரு  இலங்கை ஊடகத்தின் பிரதம ஆசிரியருக்கும் ஒரு மின்னஞ்சலை எழுதியபோது, இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்:

 

 “ கி.ரா. பற்றிய எனது


கட்டுரையை தாங்கள்  வெளிவரச்செய்தமைக்கு                            மனமார்ந்த நன்றி.

அவருக்கு தமிழ் நாடு அரசும் புதுவை அரசும் வழங்கும் மரியாதையையும் முக்கியத்துவத்தையும் கவனித்திருப்பீர்கள். ஆனால்,  எமது இலங்கையில்....????!!!!  அரசு மட்டுமல்ல எமது தமிழ்த்தலைவர்களும் ஈழத்து இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களை கவனிப்பதேயில்லை.   இதுபற்றியாவது உங்கள்  ஊடகத்தில் ஆசிரியர் தலையங்கம் எழுதுங்கள்.  “

 


இதற்கு அவரிடமிருந்து உடனடியாகவே பதில் இவ்வாறு வந்திருந்தது:

 

 “ இலக்கியமா…?  அது என்ன…? எங்கே கிடைக்கும்…?  என்று கேட்கும் தகுதி நிலையின்  கீழே இன்றைய எமது உமது தலைவர்கள்.  “

 

இந்தப்பதில்தான் எனது ஆதங்கத்திற்கு பதிலாக கிடைத்த  எமது ஈழத் தமிழ் சமூகம் பற்றிய  பதச்சோறு !

 

-------

 

துன்ப மேகங்களும் சமகால துயரங்களும் என்ற தலைப்பில்


மல்லிகையில் 1983 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நான் எழுதியதன் பின்னர், குடும்பத்தினரை யாழ்ப்பாணம் அரியாலையில் செம்மணிவீதி வாடகை வீட்டில் விட்டுவிட்டு, ஊருக்குத் திரும்பினேன்.

படிப்படியாக வீரகேசரி மீண்டும் வழமைக்குத் திரும்பியது.  பத்திரிகை வெளிவரத்தொடங்கியது.

அலுவலகத்தில் சில நாட்கள், அந்தக்கலவர காலத்து அனுபவங்களே பேசுபொருளாக இருந்தன.  சிரிக்கவும் சிலிர்க்கவும் வைத்த அனுபவங்கள்.

அதில் ஒன்று:  ஒரு இளம் குடும்பம் ஒரு சிங்கள அன்பரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தது.  நிலைமை மோசமடைந்ததும் அந்த அன்பர் அந்த இளம் தம்பதியை வீட்டின் கூரைக்கு கீழே சிலீங்கில் மறைத்து வைத்துள்ளார்.  அவர்கள்  சிரமபரிகாரம் செய்யவும் சிரமப்பட்டுள்ளனர்.


மாற்றுவழியாக மிளகாய்த்தூள்,  அரிசி மா பத்திரப்படுத்திவைக்கும் தகர பேணிகளைத்தான் அந்த சிங்கள அன்பர் கொடுத்து உதவியிருக்கிறார்.

எமது நண்பர்கள் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தனது அனுபவங்களை நாம் பாவிகளாக இருக்கிறோம்” அல்லது 1983 என்ற  நாவலையும்,  நடேசன் உனையே மயல்கொண்டு என்ற நாவலையும்  வ. ந. கிரிதரன்  1983 என்னும் தலைப்பில் ஒரு தொடர்கதையை கனடா தாயகம் இதழிலும்,   குடிவரவாளன் நாவலில் முதல் ஐந்து  அத்தியாயங்களில்  1983 கலவர அனுபவங்களையும் எழுதியிருக்கிறார்கள்.

மேலும் சிலர் தத்தமது அனுபவங்களை இலக்கியப்படைப்புகளாக ( கவிதை – சிறுகதை – நாவல் ) பதிவுசெய்துள்ளனர். அவற்றின் பெயர்கள் உடனடியாக நினைவுக்கு வரவில்லை.

மல்லிகை ஜீவா எனது கட்டுரையை அதன் மூலப்பிரதியிலேயே படித்துவிட்டு ஒரு தீர்மானத்திற்கு வந்திருக்கவேண்டும். ஆனால்,   அவர் என்னிடம் எதுவும் சொல்லாமலேயே தனக்கு


நேரம் கிடைக்கும் போதெல்லாம் அரியாலைக்குச்சென்று எனது குடும்பத்தை பார்த்துவந்துள்ளார்.

எனது இளைய மகள் சுகவீனமுற்றபோது மருந்து வாங்குவதற்கும் பணம் கொடுத்து உதவியுள்ளார். அத்துடன் அவர் நிற்காமல், யாழ்ப்பாணம் ஈழநாடு அதிபரும் கிழக்கிலங்கை காகித ஆலைக்கூட்டுத்தாபனத்தலைவருமான கே. சி. தங்கராசா யாழ்ப்பாணம் வந்தவேளையில் அவரை நேரில் சந்தித்து என்னைப்பற்றிச் சொல்லியிருக்கிறார்.

அவரது கொழும்பு புல்லர்ஸ் வீதி இல்லம்தான் யாழ். ஈழநாடுவின் கிளை அலுவலகம்.  அதன் நிருபர்கள் அங்கிருந்துதான் கொழும்பு செய்திகளையும் நாடாளுமன்ற அமர்வுச்செய்திகளையும் அனுப்புவார்கள்.

ஒரு தடவை மல்லிகை அட்டைப்பட அதிதி கட்டுரைக்காக புலவர்மணி பெரிய தம்பிப்பிள்ளையையும் அதே இல்லத்தில் சந்தித்துத்தான் எழுதியிருக்கின்றேன். அக்கட்டுரை மல்லிகையில் 1977 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியானது.

அதனால் எனது பெயர் தங்கராசா அய்யாவுக்கு நினைவிலிருந்துள்ளது.

ஜீவா,  அவரிடம் எனது நிலைமையைச்சொல்லி, எனக்கு அவரது யாழ். ஈழநாடு பத்திரிகையில் ஒரு வேலை… ஏதாவது ஒரு வேலை தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடும்பம் ஓரிடம், நான் ஓரிடம் என்றிருப்பதை ஜீவாவின் நல்ல மனம் விரும்பவில்லை.

ஜீவா அத்துடன் நில்லாமல், எனக்கு ஒரு அஞ்சலட்டையும் அனுப்பியிருந்தார்.

தங்கராசா அய்யாவை கொழும்பில் தாமதிக்காமல் சென்று சந்திக்குமாறும், எனக்கு அவர் நிச்சயம் வேலை தருவார் என்றும் அதில் எழுதியிருந்தார்.

எனக்கு அக்கடிதம் சற்று தர்மசங்கடமாகிவிட்டது.  அப்பாவும் இறந்தநிலையில்,  அம்மாவை விட்டுச்செல்ல மனம் இல்லை.  குடும்பத்தை பிரிந்திருக்கவும் மனக்கஷ்டம்.

வீரகேசரியில் எனது நெஞ்சத்துக்கு நெருக்கமானவர்களிடம் எனது தர்மசங்கடத்தை சொன்னேன்.  ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக ஆலோசனை சொன்னார்கள்.

செய்தி ஆசிரியர் நடராஜா மாத்திரம் தனியே என்னை அழைத்து,  “ எங்கும் செல்லவேண்டாம்.  இங்குதான் உமக்கு எதிர்காலம் இருக்கிறது..? நான் என்ன சொல்லவந்தேன். என்பதை பின்னர் தெரிந்துகொள்வீர்…!  “ என்றார்.  அதற்கு முன்னரும் நான் ஓப்புநோக்காளர் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது,  தினபதி – சிந்தாமணி ஆசிரியர் எஸ். டி. சிவநாயகம், அங்கு பணியாற்றிய எனது நண்பரும் ஊடகவியலாளருமான செ. செல்வரத்தினம் ஊடாக என்னை அங்கே வருமாறு தூது அனுப்பியிருந்தார். அத்துடன் அந்தப்பத்திரிகைகளில் செய்தி ஆசிரியராக பணியாற்றிய இரத்தினசிங்கமும் கடிதம் எழுதி என்னை அழைத்திருந்தார்.

அதனை எமது செய்தி ஆசிரியர் நடராஜாவுக்கு காண்பித்தபோது,  “ செல்லவேண்டாம்..? தினபதி – சிந்தாமணி வெளியிடும் குணசேனா நிறுவனம் முன்னரும் அரசின் கண்காணிப்பிலிருந்து சிறிதுகாலம் தடைப்பட்டிருந்தது. மீண்டும் ஏதும் நடக்கலாம்.  அதனால்,  பொறுமையாக இரும்.  “ என்று என்னை தடுத்தாட்கொண்டார்.

இறுதியில் அவர் தீர்க்கதரிசனமாகச் சொன்னதுதான் நடந்தது. அந்தப்பத்திரிகை நிறுவனம் தமிழ், சிங்களம், ஆங்கிலத்தில் பதினைந்திற்கும் மேற்பட்ட பத்திரிகைகளை வெளியிட்ட பெரிய நிறுவனம். அதிபர் பிரேமதாசவின் நேரடி ஆசீர்வாதம் பெற்ற ஸ்தாபனம். தென்னிலங்கை எங்கும் குணசேனா புத்தக நிலையங்கள்  பிரபல்யமானது.

இந்த நிறுவனம்  வெளியிட்ட  ராதா என்ற வார இதழின் சார்பாகத்தான் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும்  1965  இல் இலங்கை வந்தார்கள்.

அந்த ஊடகங்களில் முன்னர் பணியாற்றிய சிலர் இன்றும் ஊடகவியலாளர்களாக கோலோச்சுகின்றனர்.

ஜீவாவின் அஞ்சலட்டைக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒருநாள் மாலை கொழும்பு இல்லத்தில் பெரியவர் கே. சி. தங்கராசாவை சந்தித்தேன். அவர் எனக்கு தேநீர் வரவழைத்து உபசரித்துவிட்டு, நேரத்தைப்  பார்த்தார். அப்போது மாலை ஆறுமணி.   “ இலங்கை வானொலி செய்தியை கேட்டுவிட்டு பேசுவோம்.  “  என்றார்.  அவ்வாறே நான் வந்த விடயத்தை சொன்னேன்.

ஜீவா அவரை நேரில் சந்தித்து சொன்ன தகவலையும் குறிப்பிட்டார்.  நான் எனது தர்மசங்கடங்களை சொன்னேன். அதனை ஏற்றுக்கொண்டார்.  

அவர் இலங்கையில் ஏற்கனவே நடந்த கலவரங்களை பார்த்தவர். அவருடை யாழ். ஈழநாடுவும் 1981 இல் தாக்கப்பட்டது. 

அதிர்ந்தே பேசத்தெரியாதவர்.  நிதானமானவர்.  அவரது நிருவாகத்தின் கீழ் கிழக்கிலங்கை காகித ஆலைக்கூட்டுத்தாபனம் வெகு சிறப்பாக இயங்கியதாக ஒரு சந்தர்ப்பத்தில் நிதியமைச்சராகவிருந்த கலாநிதி என். எம். பெரேராவே நாடாளுமன்றத்தில் விதந்து குறிப்பிட்டுள்ளார்.

அன்று அவர் என்னிடம் , “   இலங்கையில் கலவரங்கள்  Passing Clouds ( கலையும் மேகங்கள் )  குடும்பத்தை மீண்டும் அழைத்துக்கொள்ளும். அதுதான் சரி.  தொடர்ந்தும் வீரகேசரியிலேயே பணியை தொடரும்.  உமக்கு எதிர்காலம் நன்றாக இருக்கும்  “ என்று  சொல்லி ஆசிர்வதித்து அனுப்பினார்.

இறுதியில் அவர் சொன்னதும்,  வீரகேசரி செய்தி ஆசிரியர் நடராஜா சொன்னதும்தான் பலித்தது.  தினபதி – சிந்தாமணி உட்பட அங்கிருந்து வெளியான அனைத்து பத்திரிகைகளும் நின்றன. அந்த பெரிய நிறுவனம் மூடப்பட்டது.

ஈழநாடுவும் இந்தியப்படையின் பிரவேசத்துடன் நின்றது. மீண்டும் சமகாலத்தில் வெளிவருகிறது.

எனது இனிய நண்பர்கள் எஸ். எஸ். குகநாதன்,  மாலி மகாலிங்க சிவம் ஆகியோரின் மேற்பார்வையில் யாழ். ஈழநாடு இணையம் வழியாக உலகெங்கும் செல்கிறது.  இவர்களும் முன்னர் குறிப்பிட்ட கலவர காலத்தில் யாழ். ஈழநாடுவில் பணியாற்றியவர்கள்.  பின்னர் இவர்களும் இங்கிலாந்து,  பிரான்ஸ் சென்று பத்திரிகைகளை நடத்தியவர்கள்.

குகநாதன் பாரிஸ் ஈழநாடுவும்,  “ மாலி  “ மகாலிங்கசிவம்  நாழிகையும் ஈ.கே. ராஜகோபால் ,  காசிலிங்கம் ஆகியோர் தமிழன், ஈழகேசரி, லண்டன் புதினம், முதலனவற்றையும், எஸ். திருச்செல்வம் கனடாவிலிருந்து தமிழர் தகவலும் வெளியிட்டார்கள்.

இவர்களுக்கெல்லாம் தாய் வீடு அன்று கே.சி தங்கராசா – டாக்டர் கே.சி. சண்முகரத்தினம் சகோதரர்கள் ஸ்தாபித்த ஈழநாடு விருட்சம்தான்.

அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்தபின்னர், இலங்கை தமிழ் இதழ்களில் தொடர்ந்தும் எழுதிக்கொண்டிருக்கின்றேன். அவை:  வீரகேசரி, தினக்குரல், தினகரன்,  யாழ். காலைக்கதிர், யாழ். ஈழநாடு, மற்றும் தமிழன், தமிழருவி, சுபீட்சம், அரங்கம், இவை தவிர சில இணைய இதழ்கள், மற்றும் ஒன்லைன் இதழ்கள்.

காலம்தான் எப்படி மாறிவிட்டது. நானும் அதற்கேற்ப மாறிவிட்டேன்.

------

நண்பர் காவலூர் ஜெகநாதன் சொன்னவாறு குடும்பத்துடன் தமிழகம் சென்றார்.  நான் மீண்டும் எங்கள் நீர்கொழும்புக்கு குடும்பத்துடன் திரும்பி வந்தேன்.

கலையும் மேகங்களாக அந்தக்கலவரங்கள் இருந்தபோதிலும்,  என்னை யாரோ தேடுகிறார்கள் என்ற பிரமை தொடர்ந்தது. 

நான் நெருங்கிப்பழகிய மக்கள் விடுதலை முன்னணித்தோழர்கள் பலரும் தலைமறைவாகியிருந்தனர்.

செயலாளர் லயனல்போப்பகே கைதாகி தடுத்துவைக்கப்பட்டிருந்தார். அவரது மனைவி சித்ரா அவ்வப்போது  சென்று அவரைப் பார்த்துவந்தார்.

அவ்வியக்கத்தின் பணிமனையிலிருந்த தோழர் கலுமல்லியை ஆமர்வீதியில் சந்தித்து பேசுவேன். அவரும் பதட்டத்துடன்தான் நடமாடினார்.  யார்… யார்… எங்கெங்கே இருக்கிறார்கள்..? என்பதும் தெரியாது.

சேமவன்ஸ அமரசிங்க தமிழ்நாட்டுக்கு தப்பிச்சென்றுவிட்டார். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவரும் ரோகண  விஜேவீராவின் மனைவி சித்ராங்கனியின் அண்ணனுமான எச். என். பெர்னாண்டோ யாழ்ப்பாணம் சென்று தலைமறைவானார்.

புலனாய்வுப்பிரிவினர்  தொடர்ந்தும் அமைதியாக தேடுதல்வேட்டையில் ஈடுபட்டனர்.  1983 கலவரத்துடன்  எதிர்க்கட்சித்தலைவர் அமிர்தலிங்கம் உட்பட பல தமிழ்த்தலைவர்கள் தமிழகம் சென்று அடைக்கலம் தேடிக்கொண்டனர்.

தெகிவளையிலிருந்து மயிரிழையில் தப்பிய எனது நண்பர் எழுத்தாளர் மு. கனகராஜனும் அவரது மனைவி அசுந்தாவும் சென்னைக்குச்சென்று அண்ணா நகரில் தங்கினர்.

முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன்,  தமது குடும்பத்தினரை திருச்சியில் விட்டுவிட்டு திரும்பி வந்தார். எமது ஊரிலிருந்த உறவினர்கள் சிலரும் திருச்சிக்கே சென்றனர்.

வீரகேசரி பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசமும் விடைபெற்றார். அவருக்கு அமெரிக்கத்தூதரகத்தின் தொடர்புகள் இருந்தமையால்,  எளிதாக அவருக்கும் குடும்பத்தினருக்கும் அங்கே செல்ல விசா அனுமதி கிடைத்தது.

அவரும் கொழும்பில் அகதிமுகாமில் தஞ்சமடைய  நேரிட்டது. எனக்கு நீர்கொழும்பு பிரதேச நிருபர் பணியைத்தந்தவர். அத்துடன் ஓப்புநோக்காளர் பணிக்கு விண்ணப்பித்தபோது,  1977 இல் அங்கே அந்த நேர்முகத்தேர்விலும் என்னையும் தனபாலசிங்கத்தையும் தெரிவுசெய்தவர்.

அதற்கு முன்னர்,  சிரேஷ்ட உதவி செய்தி ஆசிரியர் கார்மேகமும்,   இனிமேல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிர்காலம் இல்லை என நினைத்தாரோ என்னவோ தமிழகம் சென்றுவிட்டார்.

இந்த இருவரதும் பிரிவுபசார நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டேன். 

அந்தக்கலவரத்தினால் நாம் பாதிக்கப்பட்டது சிங்கள மக்கள் மத்தியிலிருந்த தீய சக்திகளினால். வீரகேசரியிலும் சிங்கள ஊழியர்கள் பணியிலிருந்தார்கள்.  அவர்களும் இணைந்திருந்த அமைப்புத்தான் வீரகேசரி ஊழியர் நலன்புரிச்சங்கம். அதன் தலைவர் பிரதம ஆசிரியர் சிவப்பிரகாசம். அதன் நிதிச்செயலாளராகவிருந்தவர் கார்மேகம். அச்சங்கத்தின் செயற்குழுவில் நானும் அங்கம் வகித்தேன்.

அச்சங்கம் பல பயனுள்ள சேவைகளை ஊழியர்களுக்குச்செய்துள்ளது. முக்கியமாக அதன் உறுப்பினர்களின் குடும்ப உறவுகள் மறைந்தால், இறுதிச்சடங்குகளுக்காக  நிதியுதவி வழங்கும். அத்துடன் ஊழியர்களுக்கு துவிச்சக்கர வண்டி தேவைப்பட்டால், அச்சங்கத்தின் ஊடாக விண்ணப்பித்து குறைந்த வட்டியில் கடன் அடிப்படையில் பெறமுடியும்.

அவ்வாறு நானும் ஒரு புதிய துவிச்சக்கர வண்டியை பெற்று கொழும்பிலிருந்து நீர்கொழும்புக்கு இரண்டு மணிநேரத்தில் வந்துசேர்ந்தேன்.

எங்கள் அப்பா மறைந்தபோது அச்சங்கம் எனக்கும் உதவி செய்தது.  சங்கத்தின் முக்கிய தூண்களாக விளங்கிய கார்மேகமும், சிவப்பிரகாசமும்  அடுத்தடுத்து விடைபெற்றபோது மனம் கலங்கினேன்.

சிவப்பிரகாசம் அவர்களுக்காக ஆசிரியபீடத்தில் நடந்த பிரிவுபசாரக்கூட்டத்தில் அங்கே பணியாற்றிய சிங்கள ஊழியர்களையும் கவனத்தில்கொண்டு,  சிங்கள மொழியிலும் உரையாற்றினேன்.

நண்பர் காவலூர் ஜெகநாதன் தமிழ்நாடு மேற்கு அண்ணா நகரில் குடும்பத்தினருடன் தங்கியிருந்தவாறு அவ்வப்போது இலங்கை வருவார். அப்போது தலைமன்னார் பியரிலிருந்து இராமேஸ்வரத்திற்கு இராமானுஜம் கப்பல் சேவை நடைபெற்றது. 

அங்கிருந்து இங்கும், இங்கிருந்து அங்குமாக பலர் வியாபார நிமித்தமும் சென்று திரும்பிக்கொண்டிருந்தனர்.

காவலூர் ஜெகநாதன் ஒவ்வொரு தடவையும் வரும்போதும் எனக்கு தமிழகத்திலிருந்து இலக்கிய புதினங்களையும் எடுத்துவருவார்.

வீரகேசரி வாரவெளியீட்டில் இலக்கிய பலகணி பத்தியை எழுதிக்கொண்டிருந்த எனக்கு,  அவர் தந்த புதினங்கள் பெரிதும் உதவின. அவரும் வாராந்தம் தனது தமிழக இலக்கிய அனுபவங்களை எழுதிவந்தார்.

அக்காலப்பகுதியில் தமிழ் நாட்டில் வெளியான பல வணிக ஜனரஞ்சக இதழ்களிலும் மற்றும் இலக்கிய சிற்றிதழ்களிலும் அவர் எழுதிக்கொண்டிருந்தார்.

ஒருநாள் என்னையும் தமிழ்நாட்டிற்கு வருமாறு அழைத்தார்.  என்னிடம் கடவுச்சீட்டும் இல்லை. அதற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்றும் சொல்லித்தந்தார்.

அவரையும் எனது இலக்கிய வாழ்வில் மறக்கமுடியாது.  எனக்கு தமிழகத்தை காண்பித்தவர் அவர்தான்.

இறுதியில் 1985 இல் அவர் காணாமலே போய்விட்டார் என்பது தீராத சோகம் !

( தொடரும் )

No comments: