……… பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்
தமிழ்மொழியைக் கற்பதனால் பயன்தான் ஏதெனச்
சரிபாதி கைவிட்டார் அறிந்துகொள் வீரே!
அழுகின்றேன் மேலுமொரு இருபது வீதம்
ஆங்கிலத்தைத் தமிழுடனே கலக்கின் றாரே!
நெகிழ்கின்றேன் கொச்சைத்தமிழ் பேசிடும் இவர்கள்
நிச்சயமாய்த் தமிழ்எழுதி வாசிக்க மாட்டார்!
மகிழ்கின்றேன் முப்பதுசத வீதப் பிள்ளைகள்
மனதாரத் தமிழ்தன்னைப் படிக்கின் றாரே!
இந்தக்கால கட்டத்தில் இந்நிலை என்றால்
இனிமேலே தமிழின்கதி எந்நிலை அடையும்!
சொந்தபந்த மெலாங்கூடிச் சபத மேற்றுத்
தூயமொழி கலாசாரம் பண்பை எல்லாம்
சந்ததமும் பேணிடவே புலம்பெயர் தமிழர்
சரித்திரம்ப டைப்போமெனச் சூழு ரைக்கச்
செந்தமிழை மாந்திமகிழ் செவ்வேள் முருகா
திருவருளால் எம்மவர் கண் திறந்தி டாயோ?
அந்தமில்நல் வாழ்வியலை என்றோ உலகில்
அறிந்துணர்ந்து ஓம்பியவர் தமிழர் அன்றோ?
முந்தையரின் நாகரிகம் எடுத்துக் காட்டாய்
முடிசூடி நின்றகாலம் மறக்கப் போமோ?
வந்தவிளஞ் சமுதாயம் மறந்திடா(து) ஒம்பி
வாழ்வதற்கு அறநூல்கள் வகுத்துப்; போந்த
விந்தைமிகு நெறிதொடர அருள்வி ரிக்க
வெற்றிவேலா யுதனேநீ கடைக்கண் திறவாய்!
சங்ககாலத் தமிழர்கள் சந்ததி வந்த
தரமான கலாசார விழுமி யங்கள்
மங்கியின்று புலம்பெயர்ந்து வாழும் நாட்டில்
வலுமிக்க உளிதேய்ந்து பிடியே யான
வங்கநாட்டுக் கதைபோன்று ஆகாது காத்து
வரவிருக்கும் சந்ததிக்கு எடுத்துச் செல்ல
எங்கள்இளஞ் சிறார்களையே வழிந டத்த
இளமுருகா வழியருளக் கடைக்கண் திறவாய்!
பைந்தமிழின் பழம்நூல்கள் அழியா தென்றும்
பாரதனில் தமிழ்மொழியே சிறந்த தென்றும்
செந்தமிழின் சுவைதேனின் இனிமை என்றும்
தெரிந்திருந்தும் கொடுந்தமிழை வளர்க்கின் றாரே!
சந்ததமும் வேற்றுமொழி கலந்து தமிழைச்
சந்தைதனில் விற்கின்றார்! தடுத்தாட் கொண்டு
தரமான தூயதமிழ் வளர்த்தே அருளத்
தமிழ்மாந்தும் திருமுருகா கடைக்கண் திறவாய்!
எத்தனையோ இனிமைமிகு தமிழ்ச்சொல் கூட்டி
எதுகையொடு மோனையாய் இணைந்து கேட்போர்
சித்தமது கிறங்கிடவே சீருந் தளையும்
சேர்ந்ததோர் நடையழகுஞ் செவிக்கே இனிய
சொத்தெனவே பொருளுவமை அணிகள் தவழச்
சுவைபில்கும் புலமையொடு மெய்க்கவி யாக்கும்
வித்துவத் திறன்மிக்கோர் மரபைக் காக்க
வேதசிவ தமிழ்முருகா விழிகள் திறவாய்!
நான்காணும் தமிழர்வாழ் திருநாட் டிலென்றும்
நறுந்தமிழே வீடுதொறும் கமழ வேண்டும்
வான்புகழ்கொள் தமிழணங்கை ஒருதிரு நாட்டில்
வடிவிருத்தி முடிகவித்து வணங்க வேண்டும்!
தேன்பாகின் இனிமையென அன்பு பில்கத்
தேசத்தோர் ஒற்றுமைகாத் துயர வேண்டும்
ஏன்முருகா இவற்றையெலாம் மலரச் செய்ய
இனியென்ன தாமதமோ? கடைக்கண் திறவாய்!
வேறு
மகிழச் சுவைகள் மும்மூன்றும்
மரபின் வனப்பு ஈர்நான்கும்
மாறாக் குணங்கள் ஐயிரண்டும்
மன்னும் வண்ணம் ஓர்நூறும்
அழகாய்ப் பொருட்கோள் அன்றுதொட்டு
அளக்கும் முறைமை நாலிரண்டும்
அளவாய்க் கணிக்கச் செய்யுளிற்சீர்
அணியாய் முப்பதும் கொண்டிலங்கி
வளமே கொழிக்கச் செந்தமிழும்
வடிதேன் எனவே பெருமையொடு
வற்றாப் புகழ்மிக மலர்ந்ததமிழ்
வாலைக் குமரி பொலிவிழந்து
இளமையில் வாடிய மணப்பெண்போல்
எல்லா அணிகளும் இழந்தின்று
இடருறும் நிலைதனை மாற்றிடவே
எழிலார் முருகா கண்திறவாய்!
கலைகள் மும்மூன்று ¬ (9) பெருமிதம் அச்சம் இனிவரல் வியப்பு உவகை அவலம் ஈகை நடுவுநிலை வெகுளி
வனப்பு ஈர்நான்கு – (8) அம்மை அழகு தொன்மை தோல் விருந்து இயைபு புலன் இழைபு
குணங்கள் ஐயிரண்டு – (10) செறிவு தெளிவு சமநிலை இன்பம் ஒழுகிசை உதாரம் உய்த்தலிற் பொருண்மை காந்தம் வலி சமாதி
வண்ணம் ஓர் நூறு (100) தூங்கிசை முதலாகத் தமிழுக்கு வண்ணங்கள் நூறு
பொருட்கோள் - நாலிரண்டு – (8) ஆற்றுநீர் மொழிமாற்று நிரநிறை விற் பூட்டு தாப்பிசை அளைமறிபாப்பு கொண்டுகூட்டு அடிமறிமாற்று
செய்யுளிற் சீர் முப்பது (30) இரண்டு ஓரசைச் சீர்கள் - நான்கு ஈரசைச்சீர்கள் - எட்டு மூவகைச் சீர்கள் - பதிறாறு நூலசைச் சீர்கள் -
கலங்கும் தமிழர் வாழ்நிலத்தைக்
கன்னித் தமிழின் உரிமைதனைக்
கடிதே இழக்கும் குடிமைதனைக்
காத்திட எதிரிபுன் மதிவென்று
இலங்கைத் தீவின் வடகிழக்கு
இணைந்த ஈழத் திழருநாட்டில்
ஏற்ற மாநில ஆட்சியொன்றை
இனியும் அமைத்திடத் தாமதமேன்?
விலங்கெனத் தமிழரைப் பூண்டோடு
வேட்டை ஆடி அழிக்குமுன்னர்
‘கலங்கா தீர்’என அறம்பாடிக்
கயவரை மாய்த்திட மாட்டாயா?
புலம்பிக் கதறிடும் எழைமக்கள்
போற்றியுன் விரைமலர் தொழுகின்றார்
போதாக் காலம் வருமுன்னர்
புங்கவா கடைக்கண் திறவாயோ?
--------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment