மரபுரிமையா..? மரவுரிமையா..? மாறியது நெஞ்சம்…! மாற்றியது யாரோ….? அவதானி


யாழ்ப்பாணம் மாநகர மேயர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் மேற்கொண்ட முயற்சியால் சில அங்கத்தவர்களைக் கொண்ட  யாழ்ப்பாணம் மரவுரிமை மையம் என்ற அமைப்பு கடந்த வாரம் அமைக்கப்பட்டதாகவும், இதன் தலைவராக வரலாற்றுத்துறை பேராசிரியர் பரமு. புஸ்பரட்ணம் அவர்கள் தெரிவுசெய்


யப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியாகியிருக்கிறது.

இந்த மையம், யாழ்ப்பாணத்தில் நீண்டநெடுங்காலமாக காணப்படும் மந்திரிமனை, சங்கிலியன் அரண்மனை முகப்பு , யமுனா ஏரி முதலானவற்றை பாதுகாத்து மீள் நிர்மாணம் செய்யும் நோக்குடன் செயல்படவிருப்பதாகவும் அந்தச்செய்தி  மேலும் கூறியிருந்தது.

இந்த அமைப்பின் அங்குரார்ப்பணக்கூட்டத்தின் படமும் வெளியாகியிருந்தது.

இது இவ்விதமிருக்க,  கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர்  மாதமும் மற்றும் ஒரு செய்தி படங்களுடன்  வெளியானதை யாழ். மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்

 “ தமிழ் மக்களின் கலை, கலாசாரங்களை வெளிக்கொண்டு வரும் வகையில், வடக்கில் “மரபுரிமை மையம்”  வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.  “  என்றும் ஒரு செய்தி ஊடகங்களில்  2018 இல் வெளிவந்தது.

முன்னையது மரபுரிமை மையம், பின்னையது மரவுரிமை மையம்.

ஒரு எழுத்துத்தான் வித்தியாசப்படுகிறது.

முன்னையதை  சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் அங்குரார்ப்பணம் செய்துவைத்தவர் முன்னாள் வடமாகாண முதல்வர் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன்.

பின்னையதை கடந்த வாரம் அங்குரார்ப்பணம் செய்துவைத்திருப்பவர் சமகால யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன்.

“ தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்வியலில் பயன்படுத்தப்பட்ட


பொருள்கள் மற்றும் கலாசாரங்கள் என்பன அருகி வருவதாகவும் தமிழர்களின் புராதன அடையாளங்களை, போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர்கள் அழித்தனர். அத்துடன், இவர்களுக்கு இணையாக, இலங்கை அரசாங்கமும், தமிழர்களின் புராதன அடையாளங்களை அன்று தொட்டு இன்று வரை அழித்து வருவதாகக் குற்றஞ்சாட்டிய நீதியரசர், , தமது எதிர்காலச் சந்ததியினருக்கு, இவற்றை எடுத்துக் கூறும் வகையில் “மரபுரிமை மையம்” மற்றும் “தமிழர் நாகரிக மையம்” எனும் தொனிப்பொருள்களிலான கருத்திட்டங்களை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கவுள்ளது.  “ என்றும்  அன்று கூறினார்.

அவர் தொடக்கிவைத்த அந்த  மரபுரிமை மையம் யாழ்ப்பாணம் - நல்லூர்க் கோவிலுக்கு அண்மையிலுள்ள சாதனா பாடசாலையின் ஒரு பகுதியில் அன்று கண்காட்சியுடன் ஆரம்பமானது என்றும் அன்றைய செய்தி கூறியது.

வடமாகாணசபை கலைக்கப்பட்டுவிட்டது.  நீதியரசரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று தனது குரலை ஒலிப்பதற்கு தென்னிலங்கை சென்றுவிட்டார்.

தற்போது யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் மற்றும் ஒரு மரவுரிமை மையம்  என்ற பெயரில் ஒன்றைத்  தொடக்கியிருக்கிறார்.

முன்னையதும் பின்னையதும் இணைந்துதான்


இயங்கவிருக்கிறதா..? அல்லது பெயரில் ஓரெழுத்து வித்தியாசத்துடன் வெவ்வேறு அமைப்புகளாக செயல்படவிருக்கிறதா..? என்பது பொதுமக்களுக்குப் புரியவில்லை.

பின்னையது பொதுமக்களின் பங்களிப்புடன் இயங்கும் என்றும் சொல்லப்படுகிறது.

அவ்வாறாயின் முன்னையது யாருடைய  பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டது..? தொடர்ந்தும் அது இயங்குகிறதா..? என்பதை வடக்கின் முன்னாள் முதல்வரும் வடக்கின் முன்னாள் கல்வி அமைச்சரும்தான் தெளிவுபடுத்தவேண்டும்.

இரண்டுதரப்பினரும் இணைந்து இயங்கினால் தமிழ்மக்களின் வரலாற்றுச்சின்னங்களை பாதுகாக்க உருப்படியான திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம்.

எமது தமிழ்த்தலைவர்களைப்பொறுத்தவரையில் எந்தவொரு சாதாரண விடயத்திலும் ஒற்றுமையை காணமுடியாது என்பது வரலாற்றுண்மை.

இந்நிலையில் வரலாற்றுச்சான்றுகளை பேணிக்காப்பதில் இவர்கள் ஒன்றுபட்டுவிடுவார்களா..? என்ற சந்தேகம் வருகிறது.


யாழ்ப்பாணம் – பருத்தித்துறைவீதியில் சட்டநாதர் கோயிலுக்கு சமீபமாக அமைந்துள்ள மந்திரிமனையை அந்தப்பாதையால் செல்லும் எவரும் காணத்தவறமாட்டார்கள்.

 அதுபோன்று சங்கிலியன் தோப்பு வளைவையும் யமுனா ஏரியையும் தரிசிப்பார்கள்.

ராஜபக்‌ஷக்களின் அரசு பதவிக்கு வந்தபின்னர்,  வடக்கு – கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்தின் கவனம் தீவிரமாக திரும்பியபின்னர்தான்  எமது தமிழ்த்தலைவர்கள் தரப்பிலும்  வடக்கின் தமிழர்களின் வரலாற்றுச்சின்னங்கள் குறித்த அக்கறை மேலோங்கியிருக்கிறது.

எமது தமிழர்தரப்பு அரசியல் தலைவர்கள் காலம் காலமாக அதிகாரம் குறித்தே பேசிவந்தவர்கள்.  1944 ஆம் ஆண்டுமுதல்  அவர்கள் ஆரம்பித்த அரசியல் கட்சிகள் காலத்துக்காலம் கோலம் மாறியிருக்கிறது.

அதாவது,  “  மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ…?  “  என்ற திரைப்பட பாடல் வரிகளைப்போன்று மாறியது.

1944 ஆம் ஆண்டு தமிழ்க்காங்கிரஸ் கட்சி தோன்றியபோது அதில் அங்கம் வகித்தவர்கள்தான் ஜி.ஜி. பொன்னம்பலமும்


எஸ்.ஜே.வி. செல்வநாயகமும். பின்னர் 1949 இல் காங்கிரஸிலிருந்து பிரிந்து தமிழரசுக்கட்சியை செல்வநாயகம் ஸ்தாபித்தார்.

1972 இல் ஶ்ரீமாவின் ஆட்சிக்காலத்தில் புதிய அரசியலமைப்பு வந்தபோது,  அதனை எதிர்த்து சட்டத்திற்கு முன்னால் தளபதி அமிர்தலிங்கம் நின்றபோது, செல்வநாயகம் அழைத்து நீதிமன்றில் வாதாட வந்த ஜி. ஜி. பொன்னம்பலம் ( ட்ரயல் அட்பார் முறையில் நடந்த விசாரணை ) வெற்றியை பெற்றுக்கொடுத்ததையடுத்து இரண்டு கட்சிகளும் தொண்டமான், கல்குடா தேவநாயகம் ஆகியோருடன் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணியை அமைத்தனர்.  வட்டுக்கோட்டை தீர்மானம் – தமிழ் ஈழக்கோரிக்கை என்பன அந்த முன்னணியில் உருவானதும், அது தமக்குச்சரிப்பட்டு வராது என்று சொல்லிக்கொண்டு தொண்டாவும் தேவாவும் ஜே. ஆர். அரசுடன் சேர்ந்து அமைச்சர்களானார்கள்.

தமிழர் விடுதலைக்கூட்டணி உருவானது.  தருமலிங்கம், ஆலாலசுந்தரம், அமிர், யோகேஸ்வரன் கொல்லப்பட்டபின்னர்                         ( இவர்கள் பேரினவாதிகளால் கொல்லப்படவில்லை என்பதையும் கவனிக்கவும் )  தமிழர் விடுதலைக்கூட்டணியும் அதன் தேர்தல் சின்னம் உதயசூரியனும் ஆனந்தசங்கரி வசமானது.

புலிகளின் தலைவர்,   தமிழரசுக்கட்சியையும் தமிழ்க்காங்கிரஸையும் ஆயுதம் ஏந்திய ஏனைய இயக்கங்களையும்  இணைத்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை உருவாக்கினார்.

அவருக்குப்பின்னர் கூட்டமைப்பும் சீர்குலைந்து,  அதில் உள்வாங்கப்பட்டு வடக்கு முதல்வர் பதவியும் பெற்ற விக்னேஸ்வரனும்,   மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் பிரிந்து சென்றனர். விக்னேஸ்வரன் புதுக்கட்சி தொடங்கி எம். பி. ஆகிவிட்டார்.  ஜி.ஜி.யின் பேரன் கஜேந்திரகுமாரும் மீண்டும் தாத்தாவின் கட்சிக்கு உயிரூட்டி நாடாளுமன்றம் சென்றுவிட்டார்.

இவர்களையெல்லாம் இவ்வாறு மாற்றியது யார்…?  என்று பார்த்தால், இவர்களின் பொது எதிரிகள்தான்.  அவர்கள் யார் என்பதை அரசியல் ஆய்வாளர்கள் நன்கு அறிவார்கள்.

இவர்கள் ஒன்றுபடுவதும் அந்த அரசியல் எதிரிகளால்தான் பிளவுண்டுபோவதும் அதே எதிரிகளினால்தான்.

இப்போது, பொது எதிரியான சிங்கள பேரினவாதிகள், தமிழர்களின் மரபுவழித்தாயகத்தின் தொன்மையான வரலாற்றுச்சின்னங்களையும் பூர்வீக பிரதேசங்களையும் கபளீகரம் செய்யப்போகிறது என்பதை அறிந்து அச்சின்னங்களை பாதுகாக்கப் புறப்பட்டுள்ளனர்.

இதுவரை காலமும் வடக்கில் இயங்கிய மாகாணசபை  என்ன செய்தது..?  அதன் ஆளுகைக்குள் இருந்த மந்திரிமனை, சங்கிலியன் தோப்பு, யமுனா ஏரி முதலானவற்றை பேணிப்பராமரிப்பதற்கு ஏதும் உருப்படியான திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தியதா..?
2018 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தோற்றம் பெற்ற மரபுரிமை மையமும் அண்மையில் தோன்றியிருக்கும் மரவுரிமை மையமும் இனி என்ன செய்யப்போகின்றன..?

இவர்கள் மாறியது எங்கனம்..?  மாற்றுவது யார்..?

( நன்றி : யாழ்ப்பாணம் தீம்புனல் இதழ் )

---0---

 

 

 

 

 

No comments: