கிரேக்கரும் நாமும் - நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்

இங்கு நாம் பல் இன; பல் கலாசாரங்களைக் கொண்ட மக்களுடன் வாழ்கிறோம். அதாவது Multicultural Country யில் வாழ்கிறோம். அதனால் மற்றவர்களினுடய நாகரிகத்தையும் நாம் அறிந்திருப்பது நல்லது.


பண்டைய கிரேக்கர்கள் காவிரிப்பூம் பட்டிணத்தில் வியாபாரம் செய்ததற்குச் சான்றுகள் உண்டு.  இவர்கள் தங்கள் பண்டங்களை விற்று முத்து, மிளகு போன்றவற்றை வாங்கிச் சென்றார்கள்.

இவர்கள் தமிழ் மொழியில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவர்கள் வாழ்வதற்கெனத் தனிக் குடியிருப்புகள் காவிரிப்பூம் பட்டிணத்தில் இருந்திருக்கிறது. இவர்களின் வருகையால் தமிழ் நாடகங்களும் நல்ல பயனைப் பெற்றன. ’திரிசீலை’ எனப்படும் ’எழினி’ என்ற சொல் ’யவனிக்கா’ என்னும் கிரேக்க சொல்லின் மருவலே!

Alexander The Great பஞ்சாப் வரை படையுடன் வந்தான். அதன் வழியாக இவர்களின் செல்வாக்கு இங்கு ஓங்கி இருக்க வேண்டும். பஞ்சாப் பிரதேசத்தில் இவர்கள் பெளத்த சமயக் கருத்துக்களை வைத்து நாடகம் போட்டதற்கும் சான்றுகள் உண்டு.

கிரேக்கருக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையே இருந்த கலாசார உறவைக் காட்டும் சாசனம் ஒன்று 1899ல் எகிப்தில் கண்டெடுக்கப்பட்டது. ‘பாப்பிரஸ் சுருள்’ எனப்படும் நாணற்புல் தாளில் இது எழுதப்பட்டுள்ளது. இதில், கி.பி.2ம் நூற்றாண்டைச் சேர்ந்த வேறு மொழி உரையாடல் ஒன்று எகிப்து மொழி நாடகமாகிய இதில் காணப்பட்டது. அண்மையில் எகிப்திற்கு ஆராய்ச்சிப் படிப்பிற்காகச் சென்ற தமிழ் இளைஞர் ஒருவரின் கண்ணில் இது பட்டது. அந்த 2ம் நூற்றாண்டுக் கையெழுத்துப் பிரதியில் ’வேற்று மொழி’ எனக் கருதப்பட்ட மொழி ’தமிழ்’ எனக் கண்டறிந்தார் அந்த இளைஞர். இதன் வழியாக எகிப்தியர் / கிரேக்கர்  தாம் சென்று வியாபாரம் செய்த நாட்டின் மொழியையும் தமது நாடகத்தில் எழுதத் தவறவில்லை.

கிரேக்கர்களின் பழக்கவழக்கங்களில் பல நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களை ஒத்ததே. அவை எப்படிப்பட்டது என்று பார்ப்போம். அவர்களின் கோயிலின் முன் ஒரு தொட்டியில் நல்ல நீர் வைக்கப்பட்டிருக்கும். கோயிலுக்குச் செல்வோர் இந் நீரினால் கை, கால்களைக் கழுவிச் சுத்தம் செய்த பின்பே கோயிலுக்குள் போவார்கள். நாம் செய்வது போலவே தெய்வத்துக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, நிவேதனங்கள் யாவும் ஒழுங்காக நடைபெறும்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு புராணக்கதைகளும் உண்டு. உற்சவ காலங்களில் தெய்வங்களின் திரு உலாவோடு இன்னிசைக் கச்சேரிகள் மற்றும் நாடகங்களும் நடைபெறுமாம்.

என்ன? தெய்வ வழிபாட்டில் இவர்களுக்கும் நமக்கும் எந்த ஒரு வித்தியாசமும் காண முடியவில்லை அல்லவா? கோயில்களில் கடவுளின் பிரசாதம் எனக்கூறி ஏழை எளியவர்களுக்கு உணவும் வழங்கப்படுமாம். நம் ஊர் அன்னதானம் போலவே...


இவர்களின் தெய்வங்கள் மனித உருவில் இருக்கும்.ஆனாலும் எம்மைப் போலவே பசு, நாகம் போன்றவற்றை வணங்கும் வழக்கம் அவர்களுக்கும் உண்டு. நாக சர்ப்பம் ஒன்றைக் கண்டால் அது வந்து போன இடத்தில் சிறிய கோயிலையே எழுப்பி விடுவார்களாம்.

அத்துடன் எமது கோயில்களைப் போன்றே அவர்களின் கோயில்களும் சிற்பக் கூடங்களாகவும் சித்திரச் சாலைகளாகவும் விளங்கின.

இவர்கள் அக்கினியை வணங்கும் வழக்கம் உள்ளவர்கள். இது அவர்களுக்கும் எமக்கும் இடையே உள்ள உறவை மேலும் நெருக்கமுறச் செய்கிறது. புராதன கிரேக்கருக்கும் பல தெய்வங்கள் உண்டு. கடலுக்கும் வானுக்கும் கலைக்கும் செல்வச் செழிப்பிற்கும் வெவ்வேறு தெய்வங்கள் அவர்களுக்கு உண்டு. இவர்களுக்கு பூசைகள் செய்து நிவேதனம் படைப்பார்கள்.

இவர்களுக்குக் குறி கேட்பதிலும் நம்பிக்கை உண்டு. குறி கேட்பதற்காக டெல்பிக் என்ற கோயில் பிரபலமாக இருந்தது. இதனால் இந்தக் கோயிலுக்கு நல்ல வருவாயும் கிடைத்தது. பலர் தம் நில புலன்களை இந்தக் கோயிலுக்கு எழுதி வைத்தார்கள் என்றால் பாருங்களேன்!

இவர்கள் வாழ்க்கையில் பிறப்பு, திருமணம், இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கு அதற்கேற்ப வெவ்வேறு சடங்குகள் கூட உண்டு. சுத்தத்தைப் பேணுவதிலும் இவர்கள் எம்மவரைப் போன்றே தீவிரம் காட்டுவார்கள். சாவீட்டிற்குச் சென்றவர்கள் நீராடி விட்டுத் தான் வீட்டுக்குள் செல்ல வேண்டும்.

சிட்னியில் எனது நண்பர் ஒருவர் கிரேக்கர் ஒருவரின்  வீட்டை வாங்கி உள்ளார். அந்த வீட்டில் குளியலறை ஒன்று வீட்டிற்கு வெளியே உண்டு. இவர்கள் தேவைப்படும் போது வீட்டுக்குள் நுழையாமல் முதலில் குளித்து விட்டு உள்ளே வருவதற்காக இது அமைக்கப் பட்டிருக்கிறது.

பிணமானது பாடையில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். அதன் போது பெண்கள் மாரடித்துக் கொண்டு செல்லுவார்களாம். கூலிக்கு மார் அடிப்போரும் உண்டு. பிணத்தை எரிப்பதும் அங்கு பெரு வழக்கு.

என்ன யாழ்ப்பாணத்துக்கே போய் விட்டது போல் இருக்கிறதா?

No comments: