எழுத்தும் வாழ்க்கையும் -- அங்கம் 22 சனிபகவான் அச்சில் வந்து ஆட்கொண்ட அதிபர் ! போரும் சமாதானமும் பேசப்பட்ட இலங்கை நாடாளுமன்றம் ! ! முருகபூபதி


வீரகேசரியில் ஒப்புநோக்காளர் பணிக்கு விண்ணப்பித்துவிட்டு,  பதிலுக்கு காத்திருந்தேன்.

  தபால்சேவகர் வரும் மதிய வேளையில் வழிமேல் விழிவைத்து அவருக்காக காத்திருந்தேன். அதற்கு முன்பு நான் அவ்வாறு காத்திருக்காமலேயே இன்ப அதிர்ச்சியூட்டிய கடிதங்களை பெற்றிருக்கின்றேன். அதில் ஒன்று எனக்கு பத்து வயதாக இருக்கும்போது,  எமது பாட்டி தையலம்மா கதிர்காமத்திலிருந்து எனக்கு எழுதிய கடிதம்.

இதுபற்றி எனது பாட்டி சொன்ன கதைகள் நூலின் முன்னுரையிலும் குறிப்பிட்டுள்ளேன்.

அந்தப்பருவத்தில் பாட்டியின் கடிதத்திற்கு பதில் எழுதியதுதான் எனது முதலாவது படைப்பிலக்கியம். அதன் பின்னர் பன்னிரண்டு வருடங்கள் கடந்து,  1972 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதியன்று


எனது முதல் சிறுகதை            ( கனவுகள் ஆயிரம் ) வெளியான மல்லிகை இதழ் தபாலில் வந்து இன்ப அதிர்ச்சியூட்டியிருக்கிறது.

வீரகேசரியிலிருந்து  ஒப்புநோக்காளர் பணிக்காக நடத்தப்படவிருக்கும் நேர்முகத்தேர்வுக்கு வருமாறு கடிதம் வந்ததும், மனதில் கலக்கமும் தோன்றியது.

இந்தவேலையாவது எனக்கு நிரந்தரமாகக் கிடைக்கவேண்டும்.  அக்காலப்பகுதியில் எனது தங்கைக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன.

தங்கையின் திருமணத்திற்கான செலவுகளுக்கு பெற்றோர் என்னைத்தான் நம்பியிருந்தார்கள்.

எனக்கு வீரகேசரியில் வேலை கிடைக்கவேண்டும் என்று எனது தங்கையும் வேண்டாத தெய்வமில்லை.

1976 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் எமது விஜயரத்தினம் வித்தியாலயத்தின் அபிவிருத்திச்சங்கம்  ரிதம் 76 என்ற கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.  சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஜெயமோகன் கொழும்பில் பணியாற்றிய காலத்தில்  திரைப்பட வானொலி கலைஞர்களின்  அமைப்பொன்றின் காப்பாளராகவும் இருந்தவர்.

அந்தத்  தொடர்புகளினால்,  நீர்கொழும்பு மாநகர சபை


மண்டபத்தில்  தமிழ், சிங்கள, முஸ்லிம் கலைஞர்களை அழைத்து மேடையில் ஏற்றி மெல்லிசை நிகழ்ச்சிகளுடன் பெரிய விழாவுக்கு ஏற்பாடு செய்தார்.

நடு இரவுப்பொழுதில் அவருடன் சேர்ந்து விழாவுக்கான விளம்பர சுவரொட்டிகளும் ஒட்டினோம்.

ரிதம் 76 கலை நிகழ்ச்சியில் மரைக்கார் ராமதாஸ்,  உபாலி செல்வசேகரன்,  அப்புக்குட்டி  ராஜகோபால்,  சிங்கள திரைப்பட நடிகர்கள் ரவீந்திர ரந்தெனிய, எடி ஜயமான்ன, டொனி ரணசிங்க, நடிகைகள்  ஶ்ரீயானி அமரசேன, சாந்திலேகா உட்பட பலர் வருகை தந்தனர்.

சாந்திலேகா, வி. எஸ். துரைராஜாவின் குத்துவிளக்கு திரைப்படத்திலும் நடித்திருந்தவர்.  பாடசாலையின் அபிவிருத்திக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியென்பதால் அவர்கள்  அனைவரும்  எந்தச்சன்மானமும் பெறாமல் இலவசமாகவே வந்து கலந்து சிறப்பித்தனர்.

இவ்வாறு சிறுகச்சிறுக நிதிசேகரித்து எமது வித்தியாலயத்தை


முன்னேற்றினோம்.  அதற்குப்பாடுபட்டவர்களை நினைவுகூர்ந்து, எழுதவேண்டியதும் எனது கடமை. 

ன்று மழைக்காலம்.  வீரகேசரிக்கு  நீர்கொழும்பு நிருபராக சென்றுவந்தபோது இருந்த மனநிலைக்கும், அன்றைய தினம் நேர்முகத்தேர்வுக்கு சென்றபோது இருந்த மனநிலைக்கும் இடையே வேறுபாடு அதிகம்.

நேர்முகத்தேர்வை யார் நடத்தப்போகிறார்கள்..? எழுத்துப்பரீட்சையில் எத்தகைய கேள்விகள் வரும்..? யார் யார் தேர்வுக்கு வரப்போகிறார்கள்..? முதலான கேள்விகளை மனதில் தேக்கியவாறு  சென்றேன். வீரகேசரி அலுவலக வாயிலில் கடமையிலிருந்த பாதுகாவலரிடம் கடிதத்தை காண்பித்துவிட்டு, வரவேற்பு அறைக்குச்சென்றேன்.

இருபதுக்கும் மேற்பட்டவர்கள் தேர்வுக்கு வந்திருப்பதைக்கண்டதும் எனக்குள்  தளர்வுவந்துவிட்டது.  அப்போது மெலிந்த தோற்றத்துடன் தலைகுனிந்தவாறு வந்த இளைஞர் ஒருவர் தன்வசம் கொண்டுவந்த குடையை மடித்து எடுத்துச்சென்று உள்ளே விளம்பரப்பிரிவில்


கடமையாற்றிக்கொண்டிருந்த கந்தசாமி என்பவரிடம் கொடுத்துவிட்டு திரும்பி வந்து எனக்கு அருகில் அமர்ந்துகொண்டார்.

கந்தசாமியை ஏற்கனவே நன்கறிவேன்.  எங்கள் ஊர் விளம்பரங்கள், பிறந்தநாள் – மரண அறிவித்தல் விளம்பரங்களை முன்னர் அவரிடம் கொடுத்து வெளிவரச்செய்திருக்கின்றேன்.

கந்தசாமியைத் தெரிந்த ஒருவர் உரிமையுடன் தான் கொண்டுவந்த குடையை ஒப்படைக்கிறார் என்றால்,  நிச்சயமாக  இந்த நேர்முகத்தேர்வில் தெரிவாகிவிடுவார் என்ற மனக்கணக்கினை நான் போட்டுக்கொண்டேன்.

முதலில் எமக்கு எழுத்துப்பரீட்சை நடந்தது.  அச்சிடப்பட்ட ஒரு பிரதியை தந்து அதிலிருந்த எழுத்துப்பிழைகளை திருத்தச்சொன்னார்கள்.  திருத்திக்கொடுத்தோம். அதன்பிறகு ஒப்புநோக்காளரின் கடமைகள் பற்றி ஒரு கட்டுரை எழுதச்சொன்னார்கள்.

மற்றவர்கள் எப்படி எழுதினார்கள் என்பது எனக்குத் தெரியாது.


எழுத்துப்பிழைகள் கருத்துப்பிழையாகிவிடலாம். அதனால் ஒப்புநோக்காளர்களின்  பணி பத்திரிகைக்கு மிக முக்கியமானது.  அதிலும் அரசியல் சார்ந்த செய்திகளில் மிகுந்த அவதானம் தேவை எனச்சாரப்பட கட்டுரையை எழுதியிருந்தேன்.

அதனையும் ஒப்படைத்துவிட்டு நேருக்கு நேர் நடக்கவிருந்த தேர்வுக்காக காத்திருந்தேன்.

எனது முறை வந்தது.  ஆக்கத்துறை மேலாளரின்                                         ( Administrative Officer – A . O ) அறையில் வீரகேசரி பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசம், ஆக்கத்துறை மேலாளர் எஸ். பாலச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் பவ்வியமாக அமர்ந்தேன்.

அவர்கள் இருவரையும் ஏற்கனவே அறிந்திருந்தமையால் அவர்களுடன் பேசுவதில் தயக்கம் இருக்கவில்லை.  அந்த நேர்முகத்தேர்வுக்கு சில வருடங்களுக்கு முன்னர் வீரகேசரி பிரசுரமாக வெளிவந்த எழுத்தாளர் தெணியானின் விடிவைநோக்கி நாவலின் அறிமுகவிழாவை எங்கள் ஊரில் எமது இலக்கிய வட்டம் சார்பாக நடத்தியிருந்தேன். அவரையும்


அதற்காக நேரில் சந்தித்து அழைப்பிதழும் கொடுத்திருக்கின்றேன்.

அவர் இறுதிநேரத்தில் தம்மால் வரமுடியவில்லை என்று எனக்கு தந்திமூலமும் அறிவித்திருந்தார். அந்த விழாவில் தெணியான், மற்றும் அவருடன் கரவெட்டியிலிருந்து வருகை தந்த இலக்கிய ஆர்வலர்கள் சதானந்தன் மாஸ்டர், தேவரையாளி இந்துக்கல்லூரி இலிகிதர் ( கிளார்க்கர் அய்யா) இராஜேந்திரம் ,  மல்லிகை ஜீவா, தெளிவத்தை ஜோசப், மு. கனகராஜன், எம். ஏ. கிஸார்  ஆகியோரும் வந்து உரையாற்றியிருந்தனர்.  அச்செய்திகளும் வீரகேசரியில் என்னால் எழுதப்பட்டிருந்தன.

நீர்கொழும்பு நிருபராகவும் இருந்தமையால் ஆசிரியர் சிவப்பிரகாசமும் என்னை நன்கு அறிந்திருந்தார். எனினும் எனக்கு அந்த ஒப்புநோக்காளர் பதவி கிடைக்குமா..?  என்பதில் ஐயப்பாடு இருந்தது. 

கைவசம் எடுத்துச்சென்ற எனது முதலாவது கதைத்தொகுதி சுமையின் பங்காளிகள் நூலையும் அவர்களுக்கு


காண்பித்தேன். அத்துடன் 1976 ஆம் ஆண்டு அதற்கு,  அச்சமயம் ஜனாதிபதியாக பதவியிலிருந்த வில்லியம் கொப்பல்லாவவிடம் சாகித்திய விருது வாங்கும் படமும் செய்தியும் முன்பக்கத்தில் பிரசுரமான வீரகேசரியின் பிரதியையும் காண்பித்தேன். இருவரும் புத்தகத்தையும் புரட்டிப்பார்த்துவிட்டு, அந்த  வீரகேசரியையும் நோட்டம்விட்டுவிட்டு  என்னை ஏறெடுத்துப்பார்த்தனர்.

அந்தப்பார்வையில் புன்னகை தவழவில்லை என்பது ஏமாற்றமாகவே இருந்தது.  முடிவை அறிவிப்போம் என்றார்கள். வெளியே வந்தேன்.

அடுத்து,  விளம்பரப்பிரிவு கந்தசாமியிடம் குடையை ஒப்படைத்தவர் உள்ளே அழைக்கப்பட்டார்.

நான் அங்கிருந்து புறப்பட்டு, ஆமர்வீதிக்கு வந்து பஸ் எடுத்து ஊர்வந்து சேர்ந்தேன்.

நாட்கள் நகர்ந்தன.  நேர்முகத்தேர்வின் முடிவு தெரியவில்லை. தினமும் மதியவேளையில் தபால்சேவகருக்காக காத்திருந்து ஏமாந்தேன்.

வீரகேசரியில் ஒப்புநோக்காளர் தேவை என்ற அந்த விளம்பரத்தையும் அதன்பின்னர் காணமுடியவில்லை.


1977 நடுப்பகுதியில்  கலவரம் வந்தது.  யாழ்ப்பாணத்தில் சென். பற்றிக்ஸ் கல்லூரியில் நடந்த களியாட்ட விழா அதற்கு கால்கோள் இட்டது. அங்கு பொலிஸார் நடத்திய சேட்டைகளின் எதிரொலியால் பிரச்சினை விஸ்வரூபமெடுத்து தென்னிலங்கை, மலையகம் எங்கும்  பரவியது.

அதற்குச்  சில மாதங்களுக்கு முன்னர் நடந்த பொதுத்தேர்தலில்தான் ஜே.ஆர். ஜெயவர்தனா தலைமையில் ஐக்கிய தேசியக்கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றியீட்டி அரசு அமைத்திருந்தது.

1983 இல் கலவரம் வெடித்தமைக்கு யாழ். திருநெல்வேலிச்சம்பவம்தான் காரணம் என்று அரசியல் ஆய்வாளர்கள் எழுதிவருகிறார்கள். அதுபோன்று அதற்கு முன்னர் 1977 இல் நடந்த கலவரத்திற்கு யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி அசம்பாவிதம் காரணமாகியது.

1981 இல் யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டதும் அதே ஜே.ஆரின் பதவிக்காலத்தில்தான்.

1977 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தின்போதுதான் அவர் நாடாளுமன்றத்தில் போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்று திருவாய்மலர்ந்த செய்தி இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியது.

மூவினமக்களும் செறிந்து வாழ்ந்த எங்கள் நீர்கொழும்பூரிலும்


சில தமிழர்களின் கடைகள் சூறையாடப்பட்டன. எரிக்கப்பட்டன. எங்கள் ஊர் தமிழ் அரசியல் பிரமுகர்கள் கட்டுநாயக்காவிலிருந்து ஒரு விசேட விமானத்தை ஏற்பாடு செய்தனர்.  அதற்கு நீர்கொழும்பு எம்.பி. டென்ஸில் பெர்ணான்டோவும்,  கட்டான எம்.பி. விஜயபாலமெண்டிஸும்  அனுசரணை வழங்கினார்கள்.

அவர்கள் இருவரும் ஜே.ஆரின். ஐ.தே.க.வைச்சேர்ந்தவர்கள். எங்கள் பிரதேச தமிழ் மக்களில் பெரும்பான்மையினர் ஐ.தே.க. ஆதரவாளர்கள். அவர்களிடமிருந்த பதட்டத்தை தணிக்கவேண்டிய தேவை அந்த இரண்டு அரசியல்வாதிகளுக்கும் இருந்தது.

தினகரனில் துணை ஆசிரியராக பணியிலிருந்த எனது நண்பன் ஈ.கே. ராஜகோபால் தனது மனைவி ராகினியுடன் எங்கள் வீட்டுக்கு அருகில்தான் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தான்.  ராகினி எங்கள் பாடசாலையில் நடன ஆசிரியராக நியமனம் கிடைத்து வந்திருந்த காலம். அத்துடன் அவர் அப்போது நிறைமாதக்கர்ப்பிணி.  கலவரம் பரவியதனால் ராகினி – ராஜகோபால் பெரும் பதட்டத்திலிருந்தனர்.

பலாலிக்குப்புறப்பட்ட விசேட விமானத்தில் ராகினி – ராஜகோபாலை ஏற்றி அனுப்பினோம். அவர்களுடன் மேலும் பல யாழ்ப்பாண குடும்பங்களை அனுப்பிவிட்டோம்.

எனக்கு ஏழுவயதாக இருக்கும்போது, 1958 ஆம் ஆண்டு கலவரம் வந்தவேளையில்  ,   எங்கள் ஊரிலிருந்து சில விசேட பஸ்களில்  வடபகுதி  தமிழ்மக்களை  எங்கள் ஊர் தமிழ் பிரமுகர்கள் அனுப்பியதுதான் அப்போது நினைவுக்கு வந்தது.

1977 கலவர அமளியினால்,   வீரகேசரி ஒப்புநோக்காளர் பணிக்கு விண்ணப்பித்து நேர்முகத்தேர்வுக்கு சென்றதையும்  மறந்துவிட்டு, ஊர் நண்பர்களுடன் சேர்ந்து,  கலவரப் பதட்டத்திலிருப்பவர்களின் பயத்தை தணிக்கும் சமூகசேவையை மேற்கொள்ளநேர்ந்தது.

கம்பகா மாவட்டத்தில்  இயங்கிய ஒரே ஒரு இந்து தமிழ் வித்தியாலயத்தின் அபிவிருத்திக்காக  சிங்கள கலைஞர்கள் வந்து ஆதரவு வழங்கிய ஊரில்,  அதே இனத்தைச்சேர்ந்த கயவர்கள் மேற்கொண்ட  கொள்ளை, தீவைப்பு அட்டகாசங்களையும் நேருக்கு நேர் பார்க்கமுடிந்தது.

தார்மீக சமுதாயம் அமைப்பேன், இலங்கையை சிங்கப்பூராக்குவேன் என்றெல்லாம் தேர்தல்காலத்தில் பேசிய தலைவர்,   “  போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்   “ என்று சொன்னதும்,  இவரது ஆட்சியின் தொடக்ககாலமே இப்படியென்றால், இனிவரப்போகும் இவரது காலத்தில் இனிமேல் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ… ? என்ற பதட்டம் மனதில் உருவாகத்தொடங்கியது.

ஒருநாள் தபால்சேவகர் வீரகேசரி நிருவாகத்தினால் எனக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை தந்தார்.  வாங்கிப்பார்த்தபோது, இனிமேல் இந்தத் தலைவர் பற்றிய செய்திகளை ஒப்புநோக்கப்போகிறேன் என்ற எண்ணம் மனதில் துளிர்விட்டது.

நான் ஒப்புநோக்காளராக தெரிவாகியிருக்கும் தகவலுடன், வந்து கடமையை பொறுப்பேற்குமாறும்  ஆக்கத்துறை மேலாளர் எஸ். பாலச்சந்திரனின் கையொப்பத்துடன் தட்டச்சுசெய்யப்பட்ட நியமனக்கடிதம் அது.

முதல்நாள் பணிக்குச்சென்றபோதும் மழைநாள்தான்.  அன்று நேர்முகத் தேர்வுக்கு குடையுடன் வந்தவரும் தெரிவாகி இருப்பார் என்ற நம்பிக்கையுடன் சென்றேன்.

ஒப்புநோக்காளர் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த அன்பர் என அழைக்கப்பட்ட பொன்னுத்துரை,  “ இன்னுமொருவர் தெரிவாகியிருப்பதாகவும், கலவரம் நடந்திருப்பதனால், அவர் யாழ்ப்பாணத்திலிருந்து வருவதற்கு தாமதமாகிறது   “ என்றும் சொன்னார்.

அவர் குறிப்பிடும் நபர்தான் அன்று  குடையுடன் வந்தவர் என்பது எனக்கு ஊர்ஜிதமானது பின்னர்தான்.

அவர்தான் இன்றும் என்னுடன் நட்பு பாராட்டும் பின்னாளில் வீரகேசரியின் துணை ஆசிரியராகவும் அதற்குப்பின்னர் தினக்குரலில் முதலில் செய்தி ஆசிரியராகவும் அதற்குப்பிறகு பிரதம ஆசிரியராகவும் வளர்ந்து, தற்போது வீரகேசரியில் சிரேஷ்ட  பத்திரிகையாளராக பணியாற்றும் வீரகத்தி தனபாலசிங்கம்.

நானும் அவரும் 1977 இல் வீரகேசரியில் ஒப்புநோக்காளராக இணைந்து,  பின்னாளில் பத்திரிகையாளர்களாக உருமாறினோம்.

ஒப்புநோக்காளர் வாழ்க்கை குறித்து எனது சொல்லத்தவறிய கதைகள் நூலில் ஒரு அங்கமே எழுதியிருக்கின்றேன்.

எமது பணிக்காலத்தில் , தார்மீகத்தலைவர் ஒரு சமயம் வெளிநாடு சென்றபோது, - அவர் சென்ற நாள் சனிக்கிழமை -  சனியன்று ஜனாதிபதி பயணமானார் என்று வரவேண்டிய செய்தியில் – சனியன்று என்ற சொல்லில்  அந்த  ‘ று  ‘ எழுத்து இல்லை.

அதனால்,  அச்சிடப்பட்ட  வீரகேசரி பத்திரிகையில் சுமார் இரண்டாயிரம் பிரதிகள் தீயிட்டு எரிக்கப்பட்டது. 

அந்த அச்சுத் தவறைச் செய்த அச்சுக்கோப்பாளர் ஸ்டீவன் என்பவர்  ஒரு வாரம் தற்காலிகமாக பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.

செய்தி வந்த பக்கத்தினை இறுதியாகப்பார்த்த பிரதம ஒப்புநோக்காளர் அன்பர் பொன்னுத்துரை நிருவாகத்தால் எச்சரிக்கப்பட்டார். அவருக்கு நெஞ்சு நோவும் வந்தது.

இத்தனைக்கும்  அந்த ஜனாதிபதி   1906 ஆம் ஆண்டு பிறந்த இல்லத்திலிருந்துதான் வீரகேசரி வெளியானது.  அவர் அங்கே பிறந்திருப்பது அவருக்குத் தெரியும்.

தன்னையும் சனிபகவான் ஆட்கொண்டார் என்பதை அவர் அறியவேயில்லை !  

( தொடரும் ) 

No comments: