'மாதவந்தான் செய்தோமோ இயற்கை தந்த வளந்தன்னை எடுத்தியம்ப வார்த்தை யேதோ?.

 


..........பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்










இயற்கை - 1


இயற்கையதன் அழகைநீங்கள் ரசித்தது முண்டோ?  

  இறைவனவன் அளித்தபெருங் கொடையது அன்றோ?  

வியக்கவைத்தே எம்மனதைக் கிறங்க வைக்கும்   

  வித்தையெலாம் காட்டியபின் பித்தன் ஆக்கும்  

மயக்கிநின்;று மெய்யதனைச் சிலிர்க்க வைக்கும்  

  மனதினிலே கிளர்ச்சிதனை உண்டு பண்ணும்  

செயற்கையெலாம் இயற்கைக்கு ஈடு செய்யுமோ?  

  தினமதனைக் காப்பதெங்கள் கடமை அல்லவோ?

              


கடற்பரப்பில் இருந்தேபொற் பந்தாய் மெல்லக்

  கதிரவனும் குணதிசையில் உதிக்குங் கோலம்!

சுடரொளியோன் உச்சிதனை அடைந்த போது

  சூட்டினையும் சிந்திநிற்கும் வெப்பக் கோலம்!

இடம்மாறி மேற்கதனில் இறங்கிடத் தோன்றும்

  எழில்மிகுமோர் பலவண்ணச் செக்கர் வானம்!

குடதிசையிற் சூரியனும் கடலில் மறையக்  

  குடிகொள்ளும் இருள்சூழ இரவுந் தோன்றும்!.


சீதந்தரு இளம்பிறையாய்த் தோன்றி நின்று

  சிந்தைமகிழ் முழுநிலவாய் மலர்ந்து இனிதே

பூதலத்தில் தண்ணொளியைப் பரப்பி நெஞ்சைப் 

  புளகாங்கிதம் அடைந்திடவே செய்யுங் கோலம்

காதலர்க்கு ஏற்றவரப் பிரசாத மன்றோ?

  கண்களுக்கு உகந்தபெரு விருந்து மீதோ? 

மாதவந்தான் செய்தோமோ இயற்கை தந்த

  வளந்தன்னை எடுத்தியம்ப வார்த்தை யேதோ?.



 




No comments: