உலகச் செய்திகள்

கட்டுக்கடங்காத கொரோனா பரவல்: பிரிட்டன் மருத்துவமனைகள் திணறல் 

யெமன் விமான நிலைய குண்டுத் தாக்குதலில் 26 பேர் பலி

ரொஹிங்கியர்களை ஆபத்தான தீவுக்கு அனுப்பிய பங்களாதேஷ்

சவூதி பெண் செயற்பாட்டாளருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை

உலகெங்கும் வேகமாகப் பரவும் புதிய கொரோனா வைரஸ் திரிபு

 பிரிட்டன்-ஐ.ஒன்றியத்தின் வர்த்தக ஒப்பந்தம் அமுல்

பிரான்ஸ் குடியுரிமை கோரும் பிரிட்டன் பிரதமரின் தந்தை

பாக். இந்து கோவிலில் குண்டர்கள் தாக்குதல்

டொனால்ட் ட்ரம்ப் மீது ஐ.நா சபை குற்றச்சாட்டு


கட்டுக்கடங்காத கொரோனா பரவல்: பிரிட்டன் மருத்துவமனைகள் திணறல் 

பிரிட்டனில் கொவிட்–19 நோயாளிகளின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக உயர்ந்து வருவதால் மருத்துவமனைகள் கடுமையாகப் போராடுகின்றன.

தலைநகர் லண்டனிலும், நாட்டின் தெற்குப் பகுதியிலும் உள்ள சில வட்டாரங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

சில மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டன. மருத்துவ உதவி வாகனங்களில் வரும் நோயாளிகளை அங்கு சேர்க்க முடியாத இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் ஊழியர் பற்றாக்குறை, ஊழியர்களில் பலரும் நோய்வாய்ப்பட்டுள்ளனர் அல்லது தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இடப் பற்றாக்குறையால் மருத்துவமனைகளுக்கு வெளியே கூடாரங்கள் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸின் புதிய திரிபு அதிகம் பரவுவதால் நிலைமை மோசமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதை முன்னிட்டு பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் கடுமையாக்குவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சர் மட் ஹன்காக் அதுகுறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை 53,135 புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவானதோடு 414 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த திங்கட்கிழமையே அந்நாட்டில் தினசரி நோய்த் தொற்று எண்ணிக்கை முதல் முறை 40,000ஐ தாண்டியமை குறிப்பிடத்தக்கது.

தேசிய சுகாதாரத் துறை முன்னெப்போதும் சந்திக்காத அழுத்தத்தை எதிர்கொண்டிருப்பதாக ஹன்காக் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மருத்துவமனைகளில் வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்த கடந்த ஏப்ரல் மாதத்தை விடவும் அதிகமான தொற்றாயளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.    நன்றி தினகரன் 

யெமன் விமான நிலைய குண்டுத் தாக்குதலில் 26 பேர் பலி

யெமன் விமான நிலைய குண்டுத் தாக்குதலில் 26 பேர் பலி-Yemen Airport Blast Killed at Least 26 People

யெமன் நாட்டின் ஏடன் விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.

யெமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் அரச படையினருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் இடம்பெற்று வருகிறது.

யெமன் விமான நிலைய குண்டுத் தாக்குதலில் 26 பேர் பலி-Yemen Airport Blast Killed at Least 26 People

ரச படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளிக்கிறது. அதேவேளை ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

சவூதி ஆதரவுடன் புதிதாக அமைக்கப்பட்ட யெமன் அரசின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கம் அமைச்சர்கள் உள்ளடங்கிய விமானமொன்று சவூதி அரேபியாவிலிருந்து யெமன் நாட்டின் ஏடன் விமான நிலையத்திற்கு நேற்று (30) வந்திறங்கி ஒரு சில நிமிடங்களில் இக்குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

யெமன் விமான நிலைய குண்டுத் தாக்குதலில் 26 பேர் பலி-Yemen Airport Blast Killed at Least 26 People

ந்த வகையில், இத்தாக்குதலை ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களே மேற்கொண்டுள்ளதாக, அந்நாட்டு பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் இத்தாக்குதலில் தமது அமைச்சரவையிலுள்ள எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இத்தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் அடிப்படையில், ஏடன் விமான நிலையத்தில் பாரிய குண்டுவெடிப்பொன்று இடம்பெறுகின்றது. இதன்போது விமான நிலையத்திலிருந்த பயணிகள் அங்கமிங்கும் தப்பியோடுகின்றனர்.

 


இக்குண்டுவெடிப்பு தாக்குதலில் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

புதிதாக அமைந்துள்ள அரசை சீர்குலையச் செய்யவே ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த தககுதலை நடத்தியுள்ளதாக யெமன் அரசு குற்றம் சுமத்தியுள்ளது.

 ரொஹிங்கியர்களை ஆபத்தான தீவுக்கு அனுப்பிய பங்களாதேஷ்

பங்களாதேஷ் நான்கு கடற்படை கப்பல்கள் மூலம் பெரும் எண்ணிக்கையான ரொஹிங்கிய அகதிகளை நேற்று ஆபத்தான தொலைதூர தீவை நோக்கி அழைத்துச் சென்றது.

மியன்மார் வன்முறைகளால் தஞ்சமடைந்து தற்போது பங்களாதேஷ் முகாம்களில் இருக்கும் 1,800 அகதிகள் புதிய வாழ்வை தேடி பஷான் சார் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பங்களாதேஷ் அரசு அறிவித்தது. இந்தத் தீவில் ஏற்கனவே இந்த மாத ஆரம்பத்தில் 1,600 அகதிகள் குடியமர்த்தப்பட்டனர்.

பங்களாதேஷ் முகாம்களில் இருக்கும் சுமார் 100,000 ரொஹிங்கிய அகதிகளை இந்தத் தீவில் மறுவாழ்வு அளிக்க பங்களாதேஷ் அரசு எதிர்பார்த்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வங்காள விரிகுடாவில் உருவெடுக்கும் சூறாவளியால் இந்தத் தீவு மோசமாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அகதிகள் தமது உடைமைகளுடன் கப்பல்களில் மூன்று மணி நேரம் பயணித்து இந்தத் தீவை அடைந்தனர்.

புதிதாக வருகை தரும் அகதிகளுக்காக தீவில் வீடுகள் அமைக்கப்பட்டிருப்பதாக வெளியுறவு அமைச்சர் ஏ.கே. அப்துல் மோமன் தெரிவித்தார். அவை அழகான குடியிருப்புகள் என்றும் அவர் வர்ணித்தார்.

மியன்மாரில் இருந்து தப்பிவந்த ஒரு மில்லியன் ரொஹிங்கிய அகதிகள் பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 

சவூதி பெண் செயற்பாட்டாளருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை

சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு உரிமை கோரி பிரசாரம் செய்த முன்னணி பெண் செயற்பாட்டாளர் ஒருவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த இரண்டரை ஆண்டுகளாக கடுங்காவலில் இருக்கும் 31 வயதான லுஜைன் அல் ஹத்லுல் என்பவருக்கே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

“தம்மை தீவிரவாதியாக அடையாளப்படுத்தப்பட்டதன் காரணமாக தீர்ப்பைப் பார்த்து அவர் அழுதார்” என்று அவரது சகோதரர் வலீத் அல் ஹத்லுல் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார். “சவூதி நீதித் துறை மீது எமக்கு எந்த நம்பிக்கையும் இல்லாதபோதும் இந்தத் தீர்ப்புக்கு எதிராக நாம் மேன்முறையீடு செய்வோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

சவூதி அரேபியாவுக்கு விரோதமான அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்தது உட்பட குற்றச்சாட்டுகளில் 2018 ஆம் ஆண்டு அவர் உட்பட மேலும் சில செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவரை விடுதலை செய்யும்படி சர்வதேச மனித உரிமைக் குழுக்கள் தொடர்ச்சியாகக் கோரி வந்தன.

எனினும் பயங்கரவாத வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் ஹத்லுல் கடந்த திங்கட்கிழமை குற்றங்காணப்பட்டார். இதில் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்க முயன்றது மற்றும் வெளிநாட்டு திட்டங்களை செயற்படுத்திய குற்றங்களும் உள்ளடங்கும். இதன்படி அவருக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதில் இரண்டு ஆண்டுகள் மற்றும் பத்து மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.

ஹத்லுல் போராடி வந்த பெண்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கு சவூதி அனுமதிப்பதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னரே அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  நன்றி தினகரன் 

உலகெங்கும் வேகமாகப் பரவும் புதிய கொரோனா வைரஸ் திரிபு

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் புதிய திரிபு உலகெங்கும் தொடர்ந்தும் வேகமாக பரவி வருகிறது.

அனைத்து வைரஸ்களும் மரபு மாற்றங்களை பெற்று பரவுவது போன்றே கொவிட்–19 தொற்று திரிபுக்கு உள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு மாதத்திற்கு வைரஸ்கள் ஒன்று அல்லது இரண்டு மரபு மாற்றங்களுக்கு உட்படுவதாக நம்பப்படுகிறது.

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் திரிபு 14 மாற்றங்களுக்கு உட்பட்டு புரதத் தொகுதியில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதோடு மரபணு குறியீட்டின் மூன்று நீக்கங்கள் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் அந்த வைரஸ் வேகமாக பரவும் திறனை பெற்றிருப்பது விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டபோதும் உயிராபத்து அதிகம் எற்பதற்கு ஆதரங்கள் எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வைரஸின் புதிய திரிபு இந்தியாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து திரும்பிய 6 பேரிடமே இந்த வைரஸ் திரிபு இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் பயணம் செய்தவர்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் மும்முரமாய் இறங்கியுள்ளனர்.

இந்த புதிய வைரஸ் திரிபு தற்போது 20 நாடுகள் மற்றும் ஆட்புலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐரோப்பாவில் பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி உட்பட 12 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் தற்போது கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மற்றுமொரு வைரஸ் திரிபு தென்னாபிரிக்காவில் வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 

பிரிட்டன்-ஐ.ஒன்றியத்தின் வர்த்தக ஒப்பந்தம் அமுல்

பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான பிரெக்சிட்டுக்கு பின்னரான வர்த்தக உடன்படிக்கை சட்டமாக கைச்சாத்தான நிலையில் இன்று ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்து கடந்த புதன்கிழமை பிரிட்டன் பாராளுமன்றம் விரைவாகச் செயற்பட்டு ஒப்புதல் அளித்தது. கிறிஸ்மஸ் தினத்தன்றே இரு தரப்புக்கும் இடையே வர்த்தக உடன்படிக்கை எட்டப்பட்டது.

இதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தை மற்றும் சுங்க அமைப்பில் இருந்து பிரிட்டன் விலகுவதோடு, இந்த ஒப்பந்தம் பொருட்களுக்கான சுங்க வரியை முடிவுக்குக் கொண்டுவருவதாக அமைகிறது.

குறிப்பாக பிரிட்டன் அதன் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியான ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தகம், பாதுகாப்பு போன்றவற்றில் புதிய உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள இந்த ஒப்பந்தம் வகைசெய்யும். எம்.பிக்களுக்கு நன்றி தெரிவித்த பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், ‘இந்த சிறந்த நாட்டின் விதி தற்போது உறுதியாக நம் கைகளில் உள்ளது’ என்றார். இதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்து நான்கரை ஆண்டுகளுக்கு பின்னர் அது தற்போது முழுமையாக விலகியுள்ளது.   நன்றி தினகரன் 

பிரான்ஸ் குடியுரிமை கோரும் பிரிட்டன் பிரதமரின் தந்தை

பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் தந்தை, பிரான்ஸ் நாட்டு குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான தமது உறவைத் தொடரும் நோக்கில், அந்த முடிவை எடுத்துள்ளதாக 80 வயதாகும் ஸ்டான்லி ஜோன்சன் கூறினார்.

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினரான அவர், 2016ஆம் ஆண்டில் பிரிட்டன் ஒன்றியத்தை விட்டு வெளியேறக் கூடாது என்று வாக்களித்தார்.

தமது தாய், தாத்தா, பாட்டி உள்ளிட்ட முன்னோர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், பிரெஞ்சுக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதன் மூலம் தமக்குச் சொந்தமானதை மீட்டுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

அவருடைய மகனான பிரதமர் பொரிஸ், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டும் என்று பிரசாரம் செய்ததில் முன்னணி வகித்தார்.

அதிகாரக் கெடுபிடி மிக்க ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகி, பிரிட்டன் தனி அரசுரிமை பெற்ற நாடாக மாறினால் அதிக நன்மைகளைப் பெற முடியும் என்று அவர் பிரசாரம் செய்துவந்தார். பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக நேற்று ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும்.   நன்றி தினகரன் 

பாக். இந்து கோவிலில் குண்டர்கள் தாக்குதல்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணம் கரக் மாவட்டத்தில் உள்ள இந்து கோவில் ஒன்றை 100க்கும் மேற்பட்ட மத அடிப்படைவாதிகள் தீ வைத்து எரித்துள்ளனர்.

உள்ளூர் முஸ்லிம் அமைப்பினர் திரண்டு வந்து கோவிலுக்கு தீ வைத்த போது பொலிஸார் தடுக்க முயற்சி செய்யாமல் ஓடி ஒளிந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதில் அக்கோவில் முழுவதும் தீயில் கருகி சாம்பலானது. “உள்ளூர் மதத் தலைவர் ஒருவரால் தூண்டப்பட்ட சுமார் 1,000 தொடக்கம் 1,200 வரையான கும்பல் ஒன்று இந்து கோவிலை உடைத்து அழித்தது” என்று அந்த மாவட்ட பொலிஸ் தலைவர் இர்பானுல்லா கான் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

வீடியோ ஆதாரத்தைக் கொண்டு இந்தத் தாக்குதல் தொடர்பில் 20 பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதச்சிறுபான்மையினர் மீதான பாகுபாடு மற்றும் வன்முறைகள் பாகிஸ்தானில் அதிகமாகும். அங்கு முஸ்லிம்கள் 97 வீதமும் இந்துக்கள் 2 வீதமும் உள்ளனர். குறிப்பாக பாகிஸ்தானில் வாழும் சுமார் எட்டு மில்லியன் இந்துக்களில் பெரும்பான்மையினர் இந்திய எல்லையை ஒட்டிய தெற்கு மாகாணமான சிந்திலேயே உள்ளனர்.   நன்றி தினகரன் 

டொனால்ட் ட்ரம்ப் மீது ஐ.நா சபை குற்றச்சாட்டு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பிளக்வோட்டர் பாதுகாவல் நிறுவனத்துக்காகச் சேவை வழங்கியோருக்குப் பொது மன்னிப்பு வழங்கியிருப்பது சர்வதேச சட்டத்தை மீறுவதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.

பாக்தாத்தில் போர்க்களங்களில் சேவை வழங்கிய குத்தகையாளர்கள், இராணுவப் படையினர் அல்லாதோர் மீதும் பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.

அவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்களில் 14 பேர் உயிரிழந்தனர். அவர்கள் மீது சுமத்தப்பட்ட கொலை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. தனியார் பாதுகாவல் சேவை குத்தகையாளர்களாக இருந்தாலும், அவர்கள் புரியும் குற்றங்களுக்கு எதிராகத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜெனீவா உடன்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே மன்னிப்பு வழங்கியது சட்டத்தை மீறும் செயல் என ஐ.நா குறிப்பிட்டது.  நன்றி தினகரன் 


No comments: