இலங்கைச் செய்திகள்

தினகரன் முன்னாள் உதவி ஆசிரியர் சிவஜோதி காலமானார் 

காணாமலாக்கப்பட்ட உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி போராட்டம்

முஸ்லிம்களின் அதிகளவான மரணத்தில் அஸாத் சந்தேகம்

மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்திவரும் பௌத்த மதகுரு

புத்தளம் பகுதியில் திடீரென உட்புகுந்த கடல் நீர்

மாகாண சபை முறையை நானும் எதிர்க்கிறேன்தினகரன் முன்னாள் உதவி ஆசிரியர் சிவஜோதி காலமானார் 
 Wednesday, December 30, 2020 - 7:52pm 


 தினகரன் முன்னாள் உதவி ஆசிரியர் சிவஜோதி காலமானார் தினகரன் பத்திரிகையில் கடமை புரிந்த, முன்னாள் உதவி ஆசிரியரான வைத்தீஸ்வரன் சிவஜோதி (49) காலமானார். சுகவீனமுற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார். நன்றி தினகரன் 


காணாமலாக்கப்பட்ட உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி போராட்டம்

காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தாருங்கள் எனக் கோரி காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய பின்பக்க வீதியில் அமைந்துள்ள நல்லை ஆதினம் முன்பாக நேற்றுக காலை 9 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 'எங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள்', 'இனவாதத்தைக் கக்காதீர்கள்', 'எங்கள் உறவுகளை கொள்ளாதீர்கள்', 'எங்கள் பிள்ளைகள் எங்களுக்கு வேண்டும்', 'தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஒரு நீதியா', 'மனிதாபிமானத்துடன் எமது பிள்ளைகளை விடுவியுங்கள்', 'இனியும் காலம் தாழ்த்தாது பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள்', 'எமது உறவுகள் விடுதலை செய்யப்படும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்' உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் காணாமலாக்கப்பட்ட பிள்ளைகளை, கணவன்மாரை தங்களிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.   நன்றி தினகரன் 


முஸ்லிம்களின் அதிகளவான மரணத்தில் அஸாத் சந்தேகம்

கொரோனா மரணங்களின் பின்னணியில் பாரிய சந்தேகங்கள் உள்ளதால் இது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைத்து சுயாதீனமாக விசாரிக்க வேண்டும் என முன்னாள் மேல் மாகாண ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி கோரிக்கை விடுத்துள்ளார்.

22 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இலங்கையின் 10 வீத பரம்பலைக் கொண்டுள்ள முஸ்லிம் சமூகத்திலிருந்தே 80 வீதமான கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளமை பாரிய சந்தேகத்தை உருவாக்கியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இது தொடர்பில் சுயாதீன விசாரணை வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்றிருப்பதாக தனிமைப்படுத்தப்படும் மக்களுக்கு எவ்விதமான சிறப்பு மருந்துகளும் தரப்படுவதில்லையெனவும், தனிமைப்படுத்தப்படுவதைத் தவிர வேறு எதுவும் நடப்பதில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளும் ஒன்றுக்கொன்று முரண்படுவதாகவும் குணமடைந்ததாகக் கூறப்பட்டவர்கள் வீடு திரும்பி மரணித்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளமை இவ்விவகாரங்களின் பின்னணியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 
மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்திவரும் பௌத்த மதகுரு

- மதங்களை கடந்த மனிதநேயம்

இலங்கையில் மதங்களை கடந்து மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் சில நல்ல மனிதர்களும் சமூகத்தில் எடுத்துக்காட்டாக காணப்படுகின்றனர்.

அந்தவகையில், பொகவந்தலாவ ராகுல ஹிமி பெளத்த மதகுருவால் ஐயப்பன் விரதத்தினை கடைப்பிடிக்கும் சுவாமிகளுக்கு உணவளித்து மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இவரது நற்பண்புக்கு அனைத்து மக்கள் தரப்பினப்பினரிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.    நன்றி தினகரன் புத்தளம் பகுதியில் திடீரென உட்புகுந்த கடல் நீர்

முத்துபந்தி தீவு கடல்நீரால் மூழ்கியது

 புத்தளம் மாவட்டம் முத்துபந்தி தீவிலுள்ள வீடுகள் கடல் நீரில் மூழ்கியுள்ளன. சுமார் மூன்றடி உயரமான கடல் தீடீரென கரை புகுந்ததாக புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். தீவின் பாதுகாப்புக் காக அமைக்கப்பட்டிருந்த கல் வேலியில் இருந்த கற்கள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளன. கடல் அலையுடன் வந்த குப்பைகள் வீடுகளுக்கு அருகில் குவிந்து கிடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுனாமி ஏற்பட்ட போது கூட இந்தளவு கடல் நீர் தீவுக்குள் வரவில்லையென அங்கு வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர். வளிமண்டலவியல் திணைக்களம் கூட இந்தளவு பாரிய அலைகள் ஏற்படுமென முன்கூட்டிய அறிவித்திருக்கவில்லையெனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.     நன்றி தினகரன் 

மாகாண சபை முறையை நானும் எதிர்க்கிறேன்

கஜேந்திரகுமார்

தமிழ் மக்கள் எதிர்பார்த்த உரிமைகள் எதுவும் மாகாண சபை முறைமை ஊடாகக் கிடைக்கவில்லை. இதனால், நானும் மாகாண சபை முறைமையை எதிர்க்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பௌத்த பிக்குகள் மாகாண சபை முறைமைக்கு எதிராகக் கொண்டுள்ள நிலைப்பாடும் எனது நிலைப்பாடும் முற்றிலும் வேறுபாடுள்ளது.

மாகாண சபை முறைமையில் ஆரம்பத்தில் எதிர்பார்த்த நோக்கம் நிறைவேறவில்லை. மாகாண சபை முறைமைக்கு அப்பால் சென்ற அதிகார பரவலாக்கலை கொண்ட வேலைத்திட்டத்திற்கு செல்ல வேண்டுமென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். எனவே மாகாண சபைக்கு அப்பால் செல்ல வேண்டுமேயன்றி மாகாண சபை முறைமையை ஒழிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் என அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையுள்ளது.

சிங்களவர்களைத் தவிர ஏனைய இன மக்களை சமமான நிலையில் கருத முடியவில்லையென்றால், இந்த நாட்டை இனவாத நாடு என்றே அடையாளப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.    நன்றி தினகரன் 
No comments: